Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Kshethrapalapuram Bairavar Temple - 2

$
0
0

சாந்திப்பிரியா 

பைரவரைப் பற்றி கூறப்படும் அனைத்துக் கதைகளிலும் ''பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால்  ஏற்பட்ட  பிரும்மஹத்தி தோஷத்தை தொலைக்க, அந்த தலையின் கபாலத்தை பைரவர் கையில் ஏந்தியவண்ணம் உலகெங்கும் சுற்றி பிட்சை பெற்றுக்  கொண்டு காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைக்க வேண்டும்' என சிவபெருமான் பைரவரிடம் கூறியதாகவும், அதனால் பைரவரும் கபாலத்தை (பிரும்மாவின் தலை) எடுத்துக் கொண்டு மூவுலகமும் சுற்றிய வண்ணம் பிட்சை எடுத்தார் என்றும், சிவபெருமான் பைரவருக்கு அவ்வாறு கூறிய உடனேயே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்றி பைரவர் பின்னால் அவரை பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்ற வண்ணம் இருக்க, பைரவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்திக் கொண்டு சென்றப் பெண்ணும் மறைந்து விட காசியில் நுழைந்த பைரவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். அங்கு பைரவருடைய தோஷமும் விலகியது'' என்று கூறப்படுகிறது.
ஆலய சன்னதியில் பைரவர்- ஒரு படக் காட்சி

ஆனால் ஷேத்திரபாலபுரத்தில் உள்ள ஆலயத்தின் கதை மேலே உள்ள கதையில் இருந்து மாறுபட்டு இருக்கின்றது. இங்குள்ள கதையின்படி பிரும்மஹத்தி தோஷத்தை பைரவர் ஷேத்திரபாலபுரத்தில் தான் களைந்து கொண்டார் என்பதாக   குறிப்பிட்டு உள்ளது.

அது குறித்து  சில பண்டிதர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் கூறினார்கள் ''இதில் என்ன சந்தேகம் உள்ளது? கதைகளுமே சரியானவைதான். பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் விலகியது ஷேத்ரபாலபுரத்தில்தான். ஆனால் பைரவரின் கையில் ஒட்டிக் கொண்டு இருந்த பிரும்மாவின் கபாலம் காசியில்தான் முக்தி பெற்றது. ஷேத்ரபாலபுரத்தில் பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்ட பைரவரும், காசிக்குச் சென்று அங்கு பிரும்மாவின் ஐந்தாவது தலையின் கபாலத்திற்கு மோட்ஷம் கொடுக்க வேண்டி இருந்தது என்பது விதியாக இருந்ததினால் பைரவர் காசிக்குச் சென்று அதை செய்து முடித்தார் என்பதையே காசியில் பைரவருக்கு தோஷம் தொலைந்தது என்பார்கள். பைரவரின் விரலில் ஒட்டிக் கொண்டு இருந்த கபாலம் கீழே விழும்வரை  அந்த தோஷம் பைரவர் விரலில் ஒட்டிக் கொண்டு இருந்தது.  ஆகவேதான் பைரவரின்  முழுமையான பிற தோஷங்களும் காசியில் விலகின.

பிரும்மா தனது தலையை பூலோகத்தில் மனித உருவில் இருந்தபோது இழந்ததினால் பூலோகத்தில் இருந்து அந்தக் கபாலத்திற்கு விமோசனம் கிடைக்க தக்க இடத்துக்குப் போக வேண்டும்.  அந்த புனித இடம் காசி என்பது விதி.   எப்படி ஒருவர் இறந்தவர்களுக்கு இறுதி காரியத்தை காசியில் செய்து மோட்ஷத்தை  தருகிறார்களோ அது போலத்தான்  பூமியிலே உயிரை இழந்த பிரும்மாவின்  ஐந்தாவது  தலைக்கும் மோட்ஷம் தர வேண்டி இருந்தது.  காசிக்கு சென்றதும் கபாலம் தானாகவே கீழே விழ அவரது ஐந்தாவது தலையும் தேவலோகத்துக்குச் சென்றது.  அந்த ஐந்தாவது தலையும் பிரும்மாவின் ஒரு மாய உருவே.   அதன் கதை என்ன ? அதன் பின்னணி  தத்துவம் என்ன? 

பிரும்மா தனது ஐந்தாவது தலையை படைத்துக் கொண்டதும், அதை அழித்துக் கொள்ள சாபம்  பெற்றதற்கான காரணம் சிவபெருமானின் துணை அவதாரமான பைரவர் அவதரிக்க வேண்டும் என்பதற்காகவே. அப்போதுதான் பைரவர்  சிவபெருமானின் மனைவி பார்வதி குடியிருக்கும் ஆலயங்களில் அவளுக்கு  காவலாக இருக்க முடியும்.  மேலும் அந்த பைரவர் அவதாரத்தின் மூலமே காசி என்பது மோட்ஷத்தை  தரும் பூமி என்ற பெருமையை காசிக்கு  தர வேண்டும். அதே நேரத்தில் சபிக்கப்பட்ட பிரும்மாவின் ஐந்தாவது தலைக்கும் மோட்ஷம் தர வேண்டும்.

பிரும்மாவிற்கு ஐந்து தலை வந்தது  ஏன்? அவர் அதில் ஒன்றை இழந்தது  ஏன்? இதைக் குறித்த ஒரு புராணக் கதை  உண்டு.  உலகைப் படைக்கத் துவங்கிய பிரும்மாவிற்கு முதலில் ஒரே ஒரு தலைதான் இருந்தது. ஆனால் உலகைப் படைக்கத் துவங்கியதும் அவர் ஒரு அழகிய பெண்ணையும் படைக்க விரும்பினார்.  தனது உடலில்  இருந்தே சிறிது பகுதியை எடுத்து அதற்கு ஒரு தேவலோகப் பெண் உருவைக் கொடுத்தார். ஆனால் அவரே படைத்த அந்தப் தேவலோகப் பெண்ணின் அழகில் மயங்கிய அவர்  அவள் சென்ற இடங்களில் எல்லாம் அவளையே திரும்பிப்  பார்த்தபடி இருந்து அவளது அழகை ரசிக்கலானார். அவளோ நான்கு திக்குக்களில் எங்கு ஓடி ஒளிந்தாலும்  அவளை தொடர்ந்து சென்று அவளது அழகை ரசிக்கத் துவங்கியவருக்கு ஒவ்வொரு திசையில் திரும்பியபோதும் ஒவ்வொரு தலை முளைத்தது. இவாறாக நான்கு திசைகளிலும் திரும்பியதினால் நான்கு புதிய முகங்கள் தோன்றின. 
ஆகவே இனி செல்வதற்கு வேறு திசை இல்லை என்பதினால் அவரது பார்வையில் இருந்து தப்புவதற்காக அந்தப் பெண்ணும்  தேவ லோகத்தை நோக்கி  ஓடத் துவங்க அவரும் தன்னுடைய உண்மையான முதல் முகத்தினால் மேலே பார்க்க அது  ஐந்தாம் தலை ஆயிற்று  அதைக் கண்ட  அந்த பெண்  பிரும்மனைப் படைத்தது உலகை உருவாக்கவே எனும்போது, அதை மறந்து  அவரே பெண் மீது  மோகம் கொண்டு அலைகிறாரே என கோபமுற்றவள் பிரும்மனுக்கு சாபம் கொடுத்தாள்.  'இனி உன்னுடைய நான்கு முகமும் நான்கு பக்கங்களைப் பார்த்தபடியே  இருக்கும்.  எந்த ஐந்தாவது தலையினால்  நீ தேவலோகத்தை நோக்கியும் என்னைப்  பார்த்தவாறு தவறு செய்தாயோ அது மீண்டும் தேவலோகத்துக்கே திரும்பட்டும்.  எந்த பராசக்தி உன்னைப் படைத்தாளோ  அவள் மூலமே நீயும் உன் ஐந்தாவது தலையை இழப்பாய். உலக மக்களைப்  படைத்த  கடவுளான நீயே மோகத்தினால் நீ ஒரு பெண்ணான என்னை நோக்கி உன் மனத்தால் காமத்தை  செலுத்தியதினால் தனித் தன்மை வாய்ந்த கடவுளாக உன்னை மனிதர்கள் மதிக்க மாட்டார்கள்.  எந்த ஒரு பெண்ணின் நிலையை தவிப்புக்கு உள்ளாக்கினாயோ, அதே பெண் இனம் இன்னுடன் இருந்தால் மட்டுமே  உனக்கு பெருமையும் கிடைக்கும். உனக்கென இனி தனித் தன்மை இருக்காது ' என்று சபித்து விட , பிரும்மா தன் தவறை உணர்ந்தார். அதற்குப் பிராயசித்தமாகவே தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக அவர் பூலோகத்துக்கு வந்து பராசக்தியை துதித்து வேண்டலானார்.
........தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>