சண்டி சப்த சதி -6
சாந்திப்பிரியா
சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன அவற்றில் ஒன்றே வாகாம்ருணீய ஸூக்தம். வாக் என்பவள் பிரும்ம ரிஷி என்பதாக அறியப்படுகிறது.
வாக் என்றால் வாக் எனும் பரப்பிரும்மம் என்று பொருள் கொள்ளலாம். அவளே பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையைப் பெற்றவள். அந்த நிலையில் அவள் ஆத்மஸ்துதி செய்து கொள்ள முடியும். ஆகவேதான் தேவி ஸூக்தத்தில் கூறப்பட்டு உள்ள ஆத்மஸ்துதி என்ன என்றால் ?
''நான் உலகிற்குக் காரணமாய் வாசு ருத்திரர்களாகவும், அதித்ய விஸ்வ தேவர்களாகவும் சஞ்சரிக்கிறேன்.
பிரும்ம ஸ்வரூபமாய் இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன். உலகின் என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன்.
த்வஷ்டா முதலிய தேவர்களை உரிய ஸ்தானத்தில் அமர வைத்து தேவர்களுக்கு ஹவிஸ் மற்றும் சமரசத்தை தரும் என் எஜமானருக்கு நான் ஐஸ்வர்யத்தைத் தருவேன்.
பரபிரும்மத்தை அறிந்து என் உருவின் மூலம் அதை அனைவருக்கும் வெளிப்படுத்துவேன். அதனால்தான் நான் தேவர்களில் முதன்மையானவளாகக் கருதப்படுகிறேன். அதனால்தான் பஞ்ச பூதங்களையும் என்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ள என்னை பல இடங்களிலும் தேவர்கள் ஸ்தாபனம் செய்துள்ளார்கள்.
மனிதன் உண்பதும் பார்ப்பதும், கேட்பதும், உயிர் உள்ளவர்களாக இருப்பதும் என்னால்தான். ஐம்புலன்களும் என்னால்தான் இயங்குகின்றன. என்னை அறிந்து கொள்ளாதவனுக்கு அழிவு நிச்சயம்.
நான் விரும்பினால் எதையும் உயர்ந்த நிலையில் வைப்பேன். ஒரு மனிதனை ரிஷியாகவோ, பிரும்ம ரிஷியாகவோ, அதி மேதாவியாகவோ என்னால் ஆக்க முடியும்.
கடவுளை வெறுப்பவர்களை தண்டிக்கும் ருத்திரனுக்கு அவர் வில்லின் நாணைப் பூட்டித் தருபவளும் நானேதான். என் பக்தர்களின் விரோதிகளை அழிப்பவள் நான்.
பூமியிலும், இரவு பகலிலும் அந்தர்யாமியாக உள்ளேன். நானே இந்த உலகிற்குக் காரண ரீதியாக இருந்து சிருஷ்டிக்கிறேன். காற்றைப் போல அனைத்து இடங்களிலும் சஞ்சரிக்கிறேன். பூமியையும் ஆகாயத்தையும் கடந்து நிற்பவள் நான்''.
சப்த சதியில் காணப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு அத்தியாய தேவதை அதிபதியாக இருக்கிறாள். அவர்கள் யார் ?
- அத்தியாயம் -1 மகாகாளி
- அத்தியாயம் -2 மகா லஷ்மி
- அத்தியாயம் -3 சங்கரி தேவி
- அத்தியாயம் -4 ஜெயா துர்கா
- அத்தியாயம் -5 மகா சரஸ்வதி
- அத்தியாயம் -6 பத்மாவதி
- அத்தியாயம் -7 மாதாங்கி
- அத்தியாயம் -8 பவானி
- அத்தியாயம் -9 அர்த்தாம்பிகா
- அத்தியாயம் -10 காமேஸ்வரி
- அத்தியாயம் -11 புவனேஸ்வரி
- அத்தியாயம் -12 அக்னி துர்கா
- அத்தியாயம் -13 தாரிகா பரமேஸ்வரி
பின்னுரை
இந்த ஆறு கட்டுரைகளில் சப்த சதி என்பது என்ன, அதை பாராயணம் செய்ய வேண்டிய முறை என்ன , அதில் எத்தனை பாகங்கள் உள்ளன, தேவிகள் யார் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி உள்ளேன். இதை ஒரு அறிவு ஞானத்திற்காகவே எழுதினேன்.
தேவி சப்த சதியை நல்ல குருவிடம் தீக்ஷைப் பெற்றுக் கொண்டு பாராயணம் செய்வது ஒரு வகை. அதை நல்ல ஞானம் பெற்றவர்களினால் மட்டுமே செய்ய இயலும். அனைவராலும் அதை பாராயணம் செய்ய இயலாது. ஏன் எனில் அது மந்திர சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது. முக்கியமாக சாதனாக்களை செய்பவர்கள், மாயையில் இருந்து விலகி ஆன்மீக உச்ச நிலையை அடைய, குரு தீட்ஷைப் பெற்றுக் கொண்டு, நியமனங்களை கடுமையாக பின்பற்றிக் கொண்டு இதை சிலர் சாதனாவாக செய்வார்கள். அந்த காலத்தில் அத்தியாயத்தைப் படிக்கத் துவங்கியதும் நடுவில் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை தொடர்ந்து படிக்க முடியாமல் போனால், அதை நடுவில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்கக் கூடாது. ஆரம்பத்தில் இருந்து மீண்டும் படிக்கத் துவங்க வேண்டும் என்பது கண்டிப்பான விதியாகும். நவராத்திரி போன்ற விஷேஷ விழாக் காலங்களில் வீட்டில் நடைபெறும் நவராத்திரி பூஜைகளிலும் இதை பூஜையாக செய்வார்கள்.
ஆனால் அதே சமயத்தில் பாமரனும் தேவி மகான்மியத்தைப் படித்துப் பலன் பெரும் வகையில் தேவி மகாத்மியம் பல காலமாகவே தமிழில் கூடப் பாடலாகப் பாடப்பட்டு வந்துள்ளது. அதைப் படிப்பதினால் மன நிம்மதி கிடைக்கப் பெற்று வீட்டில் அமைதி நிலவும், வீண் மன பயம் விலகும் என்பார்கள்.
முடிந்தபோது சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் பாடலாக பாடப்பட்டு வந்துள்ள தேவி சப்த சதியை நவராத்திரி சமயத்தில் பாராயணம் செய்வதற்கு உதவியாக இருக்க வெளியிடுகிறேன்.
முற்றியது