சாந்திப்பிரியா
பாகம்-5
சூதக முனிவர் கூறலானார் ''முன் ஒரு காலத்திலே சுதாம முனிவர் என்றொரு மாமுனிவர் இருந்தார். அவர் மேரு மலையின் அடிவாரத்திலே இருந்த வனம் ஒன்றில் கடும் தவத்தில் இருந்தார். புதருக்குள் இருந்த அவரை பார்க்காமல் காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த வேடன் ஒருவன் மதியம் களைப்பினால் உந்தப்பட்டு மிருகங்கள் வந்து தம்மை தாக்காமல் இருக்க அவர் அமர்ந்திருந்த அந்த மரத்தின் மீது ஏறி படுத்து உறங்கி விட்டான் . தன்னை மறந்து உறங்கியவன் வாயில் இருந்து எச்சில் வெளி வந்து அந்த முனிவரின் நெற்றியில் விழுந்தது. அதையும் அறியாமல் அவன் உறங்கிக் கொண்டு இருக்க, தன் நெற்றிப் பொட்டில் வந்து விழுந்த எச்சிலால் கண் விழித்த முனிவர் யார் தன் மீது எச்சிலை உமிழ்ந்தார் என்று நோக்கினார். அப்போது அந்த மரத்தின் மீது இருந்து கீரிப்பிள்ளை ஒன்று வேக வேகமாக வெளி வந்தது. வெளிவந்த கீரிப்பிள்ளை முனிவரின் பாதங்களில் வணங்கி தான் அதை செய்யவில்லை என்றும், அந்த வாய் நீர் வெளியே வந்தது மேலே படுத்துள்ள வேடன் வாயில் இருந்து ஆகும் என்று கூறி அந்த வேடனைக் காட்ட சுதாம முனிவரும் கடும் கோபத்துடன் அந்த வேடனை கீழ் இறங்கி வருமாறு சப்தமிட்டு அழைத்தார் .
மரத்தின் மீது இருந்து கீழ் இறங்கி வந்த வேடனும் நடந்ததை தெரிந்து கொண்டப் பின் தன் தவறை உணர்ந்தான். முனிவரிடம் மன்னிப்புக் கேட்டான். ஆனால் அதற்குள் அந்த முனிவரோ அவனுக்கு ஒரு கடும் சாபம் இட்டுவிட்டார். தான் கண் விழித்தபோது முதலில் தான் கண்ட கீரிப்பிள்ளையின் முகம் அவர் மனதில் வர அந்த வேடனை சபித்தார் ' என் மீது எச்சலிட்ட மூடனே இனி நீ கீரிப்பிள்ளையின் முகம் கொண்ட மனிதனாகப் பிறக்க வேண்டும்'.
உடனே அந்த மனிதன் அவர் கால்களில் விழுந்து வணங்கி மீண்டும் மன்னிப்பைக் கோர சுதாம முனிவர் தன் நிலைக்கு வந்தார். அப்போது அவர் அருகில் இருந்த கீரிப்பிள்ளையும் மனித உருவை அடைந்து ஒரு தேவகணமாயிற்று. அந்த தேவகணத்தை கண்ட சுதாம முனிவர் அவரை வணங்கி நின்றபோது அந்த வேடனும் அந்த தேவகணத்தைக் கண்டு தன் நிலையை எடுத்துக் கூறி தனக்கு அந்த சாபத்தில் இருந்து விடுதலைக் கிடைக்க வேண்டும் என வேண்டினான். அப்போது சுதாக முனிவர் மற்றும் அந்த வேடனைப் பார்த்து அந்த தேவகணம் கூறியது ' வேடனே, உன் இந்த நிலைக்குக் காரணம் உன்னுடைய பூர்வ ஜென்மப் பலனே ஆகும். உனக்கு இந்த முனிவரால் பூர்வ ஜென்மத்தின் அந்த சாபத்திற்கு சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என்று உள்ளது. அதனால்தான் இது நிகழ்ந்துள்ளது' என்று கூற அதைக் கேட்ட அந்த வேடன் தான் பூர்வ ஜென்மத்தில் யாராக இருந்தேன் என்பதையும், தான் செய்த பாவம் என்ன என்பதையும் கூறுமாறும் பணிவுடன் அந்த தேவகணத்தைக் கேட்க, அந்த தேவகணமும் அவனுடைய பூர்வ ஜென்மக் கதையைக் கூறத் துவங்கியது.'வேடா, முன் ஒரு காலத்தில் நேபாள நாட்டிலே நீ ஒரு புழுவாகப் பிறந்து இருந்தாய். அப்போது அதே நேபாள ராஜ்யத்திலே ஒரு பாவாத்மா இருந்தான். அவன் செய்யாத அக்கிரமங்கள் கிடையாது. அவன் வீட்டு முற்றத்தில்தான் நீ புழுவாக நெளிந்து கொண்டு இருந்தாய். அவன் வீட்டில் சமைக்க வெட்டி வைத்திருந்த மாட்டு இறைச்சி ஒன்றை ஒரு காகம் கௌவிக் கொண்டு போயிற்று. அது பறந்து செல்லும்போது அதன் நிழல் உன் மீது விழுந்தது. உடனேயே புழுவாக இருந்த நீ சாப விமோசனம் பெற்று மரணம் அடைந்து மனிதனாகப் பிறந்தாய். அந்தக் காகம் அதற்கு முன் பிறவியில் ஒரு முனிவராக இருந்தது. நீயும் ஒரு பெரிய யோகியாக இருந்தாய். ஆனால் ஏதோ ஒரு சிறு காரணத்துக்காக உனக்கு அந்த முனிவரிடம் இருந்து சாபம் பெற்று அவர் மூலமே விமோசனமும் கிடைக்கும் என்று விதி இருந்தது. ஆகவேதான் அது காகமாகப் பிறந்தபோது அதன் நிழல் புழுவாகப் பிறந்து இருந்த உன் மீது பட்டு அதன் மூலமே நீ சாப விமோசனமும் அடைந்தாய். ஆனால் காகம் தனது வாயில் இறைச்சியை வைத்துக் கொண்டு உனக்கு சாப விமோசனம் தந்ததினால் நீ இறைச்சிகளை தின்னும் வேடனாகப் பிறக்க வேண்டி இருந்தது. அதனால்தான் நீயும் மிருகங்களைக் கொன்று இந்த ஜென்மத்திலும் பாபத்தை சுமக்க வேண்டி இருந்தது. ஆனால் நீ முனிவராக இருந்தபோது பெற்று இருந்த வரத்தினால் உனக்கு இந்த ஜென்மத்துடன் அனைத்து பிறப்புக்களும் அழிந்து மோட்ஷம் பெற உள்ளாய். ஆகவேதான் உனக்கு மோட்ஷம் கிடைக்க இங்கு வந்து இந்த முனிவரிடம் சாபத்தைப் பெற்று கீரிப்பிள்ளை முகத்துடனானவராக மாற உள்ளாய். இதுவும் நல்லதற்கே ஆகும். வேடனே உனது கர்ம யோகத்தின் பலனாக உனக்கு மீண்டும் மனித முகம் திரும்ப வரும். அப்படியே யோகிகளுக்கும் உண்டான மோட்சமும் உனக்குக் கிடைக்கும். அப்போது நீயும் நகுலேஸ்வரரை துதித்து சாப விமோசனம் பெற முடியும்'.
அதைக் கேட்ட வேடன் அந்த முனிவரிடம் ' ஸ்வாமி , மகா யோகியானவரே, கரும யோகத்தை அனுஷ்டிக்க வல்லதும், விரைவில் சித்தி கிடைக்கவும் கூடிய பூமி எது என்று எனக்கு உறைத்தால் உடனே அங்கு சென்று நான் சாப விமோசனம் பெற இயலும் என்பதினால் அடியேன் எனக்கு அவ்விடம் குறித்துக் கூற முடியுமா ?' என்று கேட்டான். அவன் கேட்டதைக் கண்ட தேவகணமும் அவனுக்கு அந்த இடத்தைப் பற்றிக் கூறத் துவங்கியது.
.........தொடரும்