Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

Naguleswara Puranam - 3


சாந்திப்பிரியா 


பாகம்-3

சூதக முனிவர் தொடர்ந்து கூறலானார். ''அனைத்து முனிவர்களுக்கும் தேவ இரகசியத்தை பிரும்ம தேவர் இவ்வாறாகக் கூறத் துவங்கினார்.
'முன்னொரு காலத்தில் விஷ்ணு பகவான் பல்வேறு காலங்களிலும் தோன்றிக் கொண்டு இருந்த பகைவர்களையும், இடையூறுகளையும் தான் எடுக்க உள்ள ஒவ்வொரு அவதாரத்திலும் அழிக்க எண்ணினார். ஆகவே அதற்கான சக்தி தனக்கு பூரணமாகக் கிடைக்க வேண்டும் என எண்ணியவர் இந்த நகுல பூமிக்கு வந்தார். அப்போது நகுலராக ( நா+குலர் = குளம் கோத்திரம் என அனைத்துக்கும்  அப்பாற்பட்டு உருவமற்ற சக்தி கொண்டவர்) இருந்த அதாவது உருவமற்ற பராசக்தியும் பரமேஸ்வரரும் கங்காசாகரசங்கமத்தில் அவ்வப்போது வந்து தங்குவதாக செய்தி கிடைக்க இங்கு வந்து கங்காசாகரசங்கமத்தில் குளித்தப் பின்னர் அதன் கரையிலேயே அமர்ந்து கொண்டு தான் விரும்பிய சக்தியை தனக்குக் கொடுக்க வேண்டும் என நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் வேண்டிக் கொண்டு அவர்களை பூஜித்து வரலானார். விஷ்ணு பகவான் நகுலேஸ்வரரை இப்படியாக  தோத்திரம் செய்யத் துவங்கினார்'.
 'ஸ்வாமி, மலையில் கிடப்பவரே, சம்புவே, உலக நாயகரே, கைலாய மலையில் வாசம் செய்யும் நீங்கள் இங்கு வந்து எனக்கு தரிசனம் தருவீரா? கருணாநிதியே, சர்வ வல்லமை படைத்தவரே, நகுலாம்பிகையுடன் கூடி இருந்து அனைவரையும் ரஷிப்பவரே, நான் எடுக்க உள்ள அவதாரங்களில் என் தொழிலை திறமையுடன் செய்து முடிக்க எனக்கு தக்க சக்தி தந்து எனக்கு  திருவருள் செய்ய வேண்டும். நான் அவதரித்தப் பின் என் தொழிலை செய்து முடித்தப் பின் அடியேன் உம்முடைய சன்னிதானத்தை விட்டு செல்லாமல் இங்கேயே வாசம் செய்து உம்மை துதித்துக் கொண்டு இருக்க எமக்கு நீவீர் அருள் புரிய வேண்டும்.
அது மட்டும் அல்ல கைலாயனாதா, மேலும் இந்த தீர்த்தத்தை காத்துக் கொள்ளுதல் என்ற அதிகாரத்தையும் எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.  எவர் ஒருவர் விதிப்படி இந்த தீர்த்தத்திலே வந்து ஸ்நானம் செய்கிறார்களோ அதன் பின் அந்த ஜனங்கள் என்னை தரிசனம் செய்தப் பின் என் அனுமதியைப் பெற்றே உம்மையும் தரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும். சாம்பசிவப் பெருமானே, என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எனக்கு அருள் புரிய வேண்டும்'. தினமும் இவ்விதமாக விஷ்ணு மனமுருகி தோத்திரம் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஒருநாள் மனம் மகிழ்ந்து போன நகுலேஸ்வரர் விஷ்ணுவின்  வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அவர் முன் தோன்றிக் கூறினார் ' மாதவா, முகுந்தா, உன் துதிக்கு நான் மயங்கி விட்டேன்.  நீ என்னிடம் வைத்துள்ள பக்திக்கும் நம்பிக்கைக்கும் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் நீ கேட்ட அனைத்து வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு நீ கேட்டபடி உனக்கு அருள் புரிகிறேன்.  மாதவா, இது கர்மபூமியாகும். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் பொருட்டே நான் இங்கு வந்து வசிக்கிறேன்.  நான் அருணாசலம் மற்றும் கேதாரத்தில் எப்படி பிரீதியுடன்  வசிக்கிறேனோ அப்படித்தான் இங்கும் வசிக்கிறேன்.
முகுந்தா,  நீயே இங்கு எனக்கு அடியவனாகவும் சக்தியுமாகவும் இருக்கிறாய். ஆகவே இனி இந்த பூமியில் நீ எனக்கு இடப் பக்கத்தில் இருந்து வருவாய். எந்த ஜனங்கள் இங்கு வந்து, இந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தப் பின் உன்னையும்  தரிசனம் செய்தப் பின் என்னை வழிபடுவார்களோ அவர்களுக்கு நான் அருள் புரிவேன்.  அவர்கள் காரிய சித்தியும் பெறுவார்கள்.  நான் இன்று முதல் இங்கு நகுலேஸ்வரனாக வசிப்பேன்.  என் மனைவியும் உன்  சகோதரியுமான பார்வதியும் இங்கு நகுலேஸ்வரி என்ற பெயருடன் என்னுடன் இருப்பாள். நீயும் எனது இடப்பக்கத்தில் இருந்தவாறு நகுல மாதவன் என்ற பெயரில் இங்கு  வந்தவர்களுக்கு  அருள் புரிந்து கொண்டு இருப்பாய்'.
இப்படியாக சிவபெருமான் அருள் புரிந்ததைக் கேட்ட விஷ்ணுவும் ஆனந்தம் அடைந்து அது முதல்  இங்கேயே  நகுல மாதவனாக வசிக்கலானார். அப்போது நகுல மாதவர் இந்த தீர்த்தத்தின் மகிமையை மற்றும் நகுலேஸ்வரர் அவருக்குக் கூறிய  எங்கள் அனைவருக்கும் எடுத்துரைத்தார். அதையும் கேளுங்கள்' என்று கூறிய பிரும்மா மேலும் தொடர்ந்து  கூறலானார்.
.............தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>