Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Thirupathi Sree Venkateswarar -7

$
0
0

சாந்திப்பிரியா 


விஷ்ணு பெற்ற சாபமும் பிருகு முனிவர் 
ஆணவம் அழிந்த  கதையும் 

தமது நிலையை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டவாறு விஷ்ணுவை பார்க்க சென்ற பிருகு முனிவர், வைகுண்டத்தில் விஷ்ணு பகவான் தூங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டார். அவர் காலடியில் அமர்ந்து இருந்த லஷ்மி தேவி விஷ்ணு பகவானின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டு இருந்தாள்.  பிருகு முனிவர் அங்கு  சென்றதும், அவரை திரும்பிப் பார்த்த லஷ்மி தேவி அவர் வந்ததைக் குறித்து  சற்றும் கவலைப்படாமல் விஷ்ணுவின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டு  அமர்ந்திருந்தாள். அவளைப் பொறுத்தவரை விஷ்ணுவே அனைத்தும்.
ஆனால் யாரோ வந்த சப்தத்தைக் கேட்டு சற்றே கண் விழித்த விஷ்ணுவும், பிருகு முனிவர் நிற்பதைக் கவனிக்காதது போல இருந்தவாறு எழுந்து அமர்ந்து கொண்டு லஷ்மியுடன் பேசத் துவங்கினார். வந்திருந்த பிருகு முனிவரை அவரும் கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே எரிச்சலில் இருந்த பிருகு முனிவருக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகியது. தான் வந்து நின்றிருந்ததை  பார்த்து விட்டப்  பின்னரும் தன்னை கவனிக்காதது போல இவர்களும் பேசிக் கொண்டு  இருக்கிறார்களே என ஆத்திரம் பொங்க தான் என்ன செய்கிறோம் என்று சற்றும் யோசனை செய்யாமல் வேகமாக விஷ்ணுவின் அருகில் சென்றார். அவர் மனைவி லஷ்மி தேவி அமர்ந்து இருக்கிறாளே என்று கொஞ்சம் கூடக் கூச்சப்படவில்லை. தனது காலால் விஷ்ணுவின் படுக்கையை வேகமாகத் உதைத்து விஷ்ணுவின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதைக் கண்ட  லஷ்மி தேவி திடுக்கிட்டு  எழுந்தாள். தன் கணவரை தன் கண் எதிரிலேயே ஒரு முனிவர் அவமானப்படுத்துவதா என்று கோபமுற்றாள்.
ஒரு சிலர் விஷ்ணுவின் இதயத்தில் பிருகு முனிவர் உதைத்ததினால் விஷ்ணு எழுந்ததாகக் கூறுவார்கள். அது சரியான செய்தி அல்ல.  அப்படிக் கூறியதற்கான காரணம்  ஒரு சாதாரண முனிவர் லஷ்மி தேவியின்  இதயத்தையே உடைத்து விட்ட  நிலையை, தன்  காலினால் அவர் படுத்திருந்த ஆதிசேஷனை உதைத்ததின் மூலம்  ஏற்படுத்தினார் என்பதே  உடைத்தது என்பது உதைத்தது   என  மாறி  வந்துள்ளதாகவும்  சில பண்டிதர்கள்  கூறுவார்கள்.  பகவானின் ஜீவ சரித்திரமே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையிலும், கிராமிய வாய்மொழிக் கதைகள் மூலமுமே  பரவி எழுத்து வடிவில் அமைந்தது என்றும்  நம்புகிறார்கள். இதற்குக் காரணமும் ஒன்று உண்டு. ஏழுமலையான் அவதரித்தக் கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  நைமிஷாரண்யா ஷேத்திரத்தில் அவ்வப்போது நடைபெற்று வந்திருந்த  ரிஷி முனிவர்களின் சத்சங்கத்தில் கூறப்பட்டக் கதை என்பது புராண அடிப்படையிலான நம்பிக்கையாக இருந்தது என்பதே. 
பிருகு முனிவர் விஷ்ணு படுத்திருக்கையில் 
லஷ்மி தேவி அவர் கால்களை பிடித்து விட்டுக் 
கொண்டு இருந்ததைக் கண்டார் 

ஆனால் அதற்குள் எழுந்த வந்த விஷ்ணுவோ, பிருகு முனிவரிடம் அவர் வந்ததைக் தான் கவனிக்காமல் இருந்து விட்டதற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு, பிருகு முனிவரின் கண்ணியமற்ற செய்கைக்கு கோபப்படாமல்  பிருகு முனிவர் சற்றும் எதிர்பாராத விதமாக தடாலென பிருகு முனிவரின் முன்னால்  அமர்ந்துக் கொண்டதும் அல்லாமல் அடுத்த ஷணத்தில்  பிருகு முனிவரின் காலில் இருந்த அறிவு  நாணை பிடுங்கி எரிந்து விட்டார். பிருகு முனிவருக்கு காலில் ஆறாவது விரல் இருந்தது என்றும், அதில்தான்  அவர் ஞானக் கண்ணின் சக்திகள் அனைத்தையும் அடக்கி வைத்திருந்தார் என்றும், அந்த ஆறாவது விரலே அறிவு நாண்  என்றும் சில  பண்டிதர்கள் கூறுவார்கள். பிருகு முனிவருடைய சக்திகளை  அழித்து விட்ட பின்  ஒன்றுமே நடக்காதது போல எழுந்த விஷ்ணு   'வாரும் முனிவரே, அமரும்' என்று சர்வ சாதாரணமாகக் கூறினார்.   சக்தியை எல்லாம் திரட்டி காலில் ஒளித்து  வைத்து இருந்த இடத்தில் இருந்து அது பிடுங்கி எறியப்பட்டதும்  அனைத்து சக்தியும் அந்தக் கணமே பிருகு முனிவரை விட்டு அழிந்தது.
முன்னரே நான் கூறி இருந்தபடி  இந்த நாடகம் நடைபெற வேண்டும். அதன் மூலம்   பிருகு முனிவரின்  கர்வபங்கம் அடக்கப்பட வேண்டும்  என்று எண்ணிய மும்மூர்த்திகள் நடத்திய நாடகத்தின் ஒரு அங்கம்தான் அந்த நிகழ்ச்சியும்.
தன் ஞான சக்தி அனைத்தும் தன்னிடம் இருந்து போய் விட்டதை உணர்ந்த பிருகு முனிவரும் அடுத்த கணமே  தனது தவறை உணர்ந்து  அப்படியே விஷ்ணுவின் கால்களில் தடாலென விழுந்து வணங்கி விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு தான் அகம்பாவத்தினால் செய்த தவறை மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டார். அவர் பாதங்களில் தனது தலையை வைத்துக் கொண்டு தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டு அழுதார்.

தனது காலில் விழுந்த  பிருகு முனிவரை ஆறுதல் 
கூறி  எழுப்பினார் விஷ்ணு பகவான் 

அவரை எழுப்பி அமர வைத்த விஷ்ணுவோ தன்னை அவமானப் படுத்திய  நிகழ்ச்சியை நடக்காத நிகழ்ச்சிப் போலக் கருதி அவர் வந்த காரியத்தைக் குறித்துக் கேட்டார். பிருகு முனிவரும் தான் வந்த நோக்கத்தைக் கூறிவிட்டு, அவர் யாக முடிவில் அதித்தியாக வந்து யாக அவிர் பாகத்தை  ஏற்றுக் கொண்டு உலக மக்களின் ஷேமத்திற்காக அருள்  புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள   தான் நிச்சயமாக யாக முடிவில் வந்து அதித்தியை ஏற்பதாக  விஷ்ணு அவருக்கு  வாக்கு கொடுத்து அனுப்பினார்.
பிருகு முனிவரும் அவரிடம் மீண்டும் தன் பிழையை மன்னிக்குமாறு  மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டப் பின் தனது சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்ட நிலையில் யாக சாலைக்கு திரும்பினார். ஆனால் போகும் முன் மறந்து போய் லஷ்மி தேவியிடம் மன்னிப்பைக் கேட்கவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருந்துள்ளது.  அப்படி  அவர்  லஷ்மி தேவியிடம் மன்னிப்பைக் கேட்டு இருந்தால் வெங்கடாசலபதியின் அவதாரமே இருந்திராது!
 'தன் கணவரை தன் எதிரில் அவமானப்படுத்திய முனிவரை தன் இஷ்டத்துக்கு மன்னித்து அனுப்பி விட்டார் தன் கணவர்,  ஆனால் ஒரு பெண் எதிரில் அவமரியாதையாக நடந்து கொண்ட பிருகு முனிவரை தன்னிடம் மன்னிப்பைக் கேட்க சொல்லி இருக்க வேண்டாமா ? ஆண்களே சுயநலவாதிகளாக இருக்கிறார்களே' என வருந்தியவள், தனது ஆத்திரத்தை விஷ்ணுவிடம் காட்டியப் பின் இனி தான் அவருக்கு மனைவியாக இருக்க விரும்பவில்லை என்று  கூறி விட்டு கோபமாக  விடுக்கென எழுந்து அங்கிருந்து சென்று விட்டாள்.

 கோபமுற்ற லஷ்மி தேவி விஷ்ணுவை 
விட்டு விலகிச் சென்றாள் 

அதன் பின் விஷ்ணு பகவான் தான் வாக்கு கொடுத்தது போல பூமிக்குச் சென்று முனிவர்களின் யாகத்தை நிறைவு செய்து தந்தப் பின், விரைவில் மீண்டும் தான் பூமியில் அவதரித்து உலகைக் காப்பேன் என ரிஷி முனிவர்களுக்கு உறுதி  கூறி விட்டு வைகுண்டம் சென்று விட்டார்.
காலக் கோள் தனது ஆட்டத்தை துவக்கியது.  அதுவே திருப்பதி ஏழுமலையானின் ஜீவ சரித்திரத்தின் முக்கிய முதல் கட்டம். விஷ்ணு பகவான் மீண்டும் உலக மக்களின் நன்மைக்காக, கிருஷ்ணாவதாரம் எடுத்ததைப் போல கல்கி அவதாரத்துக்கு முன்னால் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். அது இனி நடக்கும். லஷ்மி தேவியானவள் தனக்கேற்பட்ட சாபத்தின் காரணமாக பூமியில் இன்னொரு பிறவி எடுத்து விஷ்ணுவை மீண்டும் மணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான காரணமும் அமைந்து விட்டது. ஆனால் அந்த புதிய பிறவியில் விஷ்ணுவும் வேறு அவதாரத்தில் இருப்பார், லஷ்மி தேவியும் வேறு அவதாரத்தில் இருப்பாள். ஆனாலும் அந்த அவதாரத்துக்குப் பிறகும் அவர்கள்  விஷ்ணு மற்றும்  லஷ்மியாகவே மீண்டும் இருப்பார்கள். இப்போது நடந்தது உலக ஷேமத்திற்காகத்தான்.  அது நடக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால்தான் நடந்துள்ளது என்று நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த நாரதர் நினைத்தார். அது நடைபெற தானும் ஒரு முக்கிய நாடக பாத்திரமாக இருந்ததை எண்ணிப் பெருமைக் கொண்டார்.
நிற்க, சம்மந்தமே இல்லாமல் எதற்காக லஷ்மி தேவி கோபமடைந்து விஷ்ணுவை விலகிச் செல்ல வேண்டும்? அதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் எனில் அவளது பூர்வ ஜென்மக் கதையை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே இப்போது நீங்கள் படிக்க உள்ள கதை. ராமாயணம் நடந்து கொண்டு இருந்த கால கட்டம் அது. அந்த நேரத்தில் விஷ்ணு பகவானும், லஷ்மி தேவியும் வேறு பிறவி எடுக்க வேண்டி இருந்தது. விஷ்ணு பகவான் ராமராக பிறவி எடுத்து விட்டார். அது போலவே லஷ்மி தேவியும் சீதையாக பிறப்பு எடுத்திருந்தாள்.  ஒருவருக்கொருவர் அதைப் பற்றி   அறிந்திருக்கவில்லை.  ஆனால் இருவருமே பின்னர்  கணவன் மனைவியாகி இருந்தார்கள்.
........தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>