Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Moodevi/ Jheshta Devi - 6

$
0
0
 
- 6 -
'மூதேவியைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது'எனத் தவறாக எண்ணப்பட்டு பரிகாசிக்கப்படும் மூதேவி பத்தாம் நூற்றாண்டு காலம்வரை பெருமளவு ஆராதிக்கப்பட்டு வந்து இருக்கிறாள். பல இடங்களிலும் நடைபெறும் மேரு பூஜையில் ஒன்பது படிக்கட்டுக்களை அமைத்து பூஜைகள் செய்வதுண்டு. அந்த படிக்கட்டுக்களை நவாவரணம் அல்லது நவபரணம், அதாவது ஒன்பது கவசம் என்று அர்த்தம் தரும் வகையில் அமைப்பார்கள் (பரணம் என்றால் கவசம் என்று பொருள்). ஸ்ரீ சக்ர நாயகி, அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி எனப் போற்றி வணங்கப்படும் புவனேஸ்வரி தேவி ஸ்ரீ சக்கரத்தின் மேல் பகுதியில் அமர்ந்து இருப்பாள். அதை சிவன் குடி இருக்கும் மேரு மலை என்பார்கள். சாக்த வழிபாட்டு முறையில் செய்யப்படும் பூஜைகளில் மிக மேன்மையானது நவபரண பூஜையாகும் (பார்வதி தேவியினால் உருவாக்கப்பட்ட யோகினிகள் என்ற பெண் தேவதைகள் தமக்கு மேன்மேலும் சக்தி வேண்டும் என்றெண்ணி அவளையே உபாஸிக்கும் அறுபத்தி நான்கு தேவதைகள். இவர்கள் பயங்கரமான சக்தி வாய்ந்தவர்கள். ஒவ்வொரு யோகினியும் ஒவ்வொரு கலையில் சிறந்தவர்கள். அவர்களில் ஒருவளே மூதேவியும் ஆவாள்.   இந்த தேவதை வழிபாட்டில் இரண்டு வகைகள் உண்டு. அவை  யோக மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் என்பது.  குடும்பத்தில் உள்ளவர்கள் ஞான மார்க்கத்திலேயே இதை செய்து தேவியை வழிபடுவார்கள்). அதை அனைவராலும் செய்ய முடியாது. அத்தகைய உன்னதமான பூஜையில் அம்பாள் எனப்படும் புவனேஸ்வரி தேவி அமர்ந்து இருக்கும் மேரு மலை முகட்டுக்கு செல்ல ஒன்பது வாயில்கள் உள்ளன. அவற்றையே ஒன்பது படிகளாக பாவிப்பார்கள். அந்த ஒன்பது படிக்கட்டுக்களில் இரண்டாவது வாயிலில் உள்ளவளே மூதேவியான ஜேஷ்டா தேவியாகும்.  மேரு பூஜை என்பது மிக சக்தி வாய்ந்த பூஜை.  ஆசாரம் மிக்கவர்களால் செய்யப்படும் பூஜையும் கூட. இன்றைக்கும் பல ஆலயங்களில் மேருவிற்கு தனி சன்னதியே உள்ளது.  இத்தனை மகிமை வாய்ந்த மேருவின்  வாயிலில்  உள்ள   மூதேவி வணங்கப்பட வேண்டிய தேவியே என்பது இதனால் புலனாகிறது அல்லவா?

சில இடங்களில் காணப்படும் மூதேவியின் சிலையின் இருபுறமும் இரு உருவங்கள்  உள்ளதைக் காணலாம்.  அதில் ஒன்று மாட்டின் முகம் போல காணப்படும். அதை நந்திதேவர்  என்று நம்புகிறார்கள். அதை வைத்து பார்க்கும்போது அந்த மாட்டு முகத்தைக் கொண்டவரை, தமிழகப் பகுதிகளில் கிராமத்தினர் பலர் வணங்கும் (முக்கியமாக வண்ணார் எனும் இனத்தவர் வணங்கும்)  மாடன் எனப்படும் மாடசாமியாக இருக்கலாம் என்பது  சிலரது கருத்தாக உள்ளது. ஏன் எனில் மாடசாமியும் சிவபெருமானால் படைக்கப்பட்டவரே என்பதும்,  நந்தி தேவர் சிவபெருமானின் வாகனம் என்பதும் ஐதீகமாக உள்ளது.  இன்றைக்கும் கூட கிராமப்புறங்களில் சில கிராம தேவதை ஆலயங்களில் காணப்படும் பெண் சிலை ஒரு கழுதையோடு இருப்பதைக் காணலாம். கழுதை என்பது மூதேவியின் வாகனமாகவும் உள்ளது.  ஆகவே அந்தப் பெண்ணின் உருவம் மூத்த தேவியான மூதேவியாக இருக்கக் கூடும் என்பதும் ஒரு கருத்தாக உள்ளது.

இரண்டாவது உருவத்தில் உள்ளது ஒரு இளம் பெண்ணின் தோற்றத்தில் காணப்படுகிறது. அந்த உருவத்தை வாக்கின் தேவதையான வாக் தேவதை என்று கூறுகிறார்கள். வாக்வாதினி மந்திரம் என்பது வாக்கு வலிமையைக் கொடுக்கும் மந்திரமாகும். அதைதான் காளி தேவி உஜ்ஜயினியில் காளிதாசனுக்குக் கொடுக்க அவர் நா வன்மை பெற்றார் என்பது நம்பிக்கை. அந்த வாக்கு வன்மையைத் தருபவளே மகா வித்யாவில் உள்ள ஒன்பதாவது தேவியான  மாதங்கி தேவி. மாதங்கி உபாசனை செய்வதின் மூலம் சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை வெகு விரைவில் அடைய முடியும். அப்படிப்பட்ட வலிமையைக் கொண்ட மாதாங்கி தேவி என்பவள் மூதேவிக்கு அருகில் அமர்ந்திருப்பது எதைக் காட்டும்? மூதேவி தள்ளி வைக்கப்பட வேண்டியவள் என்பதையா இல்லை அவளும் வணகப்பட வேண்டியவளே என்பதையா?

 

மூதேவியின் இப்படிப்பட்ட தோற்றங்களின் தத்துவங்களை நன்கு அறிந்திருந்ததினால்தான், பண்டைக் கால ரிஷி, முனிவர்கள் ராஜா மகாராஜாக்களுக்கு அவற்றை எடுத்துரைத்திருந்ததினால்தான் மூதேவியின்  வழிபாடு அந்த மன்னர்கள் நிர்மாணித்த ஆலயங்களிலும் இருந்தது  என்பதே உண்மை.

ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் மூதேவியின் வழிபாடு தென் இந்தியாவில், முக்கியமாக தமிழ் நாட்டில் பெருமளவு இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்டா தேவிக்கு சிலைகள் உள்ளதில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.  சோழ மன்னர்கள் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியின் வழிபாடு பரவலாக இருந்துள்ளது.  நந்தி வர்மபல்லவன் என்ற மாபெரும் பல்லவ மன்னனின் குல தேவி இவளே என்பது ஆச்சர்யத்தைத் தரும் செய்தியாகும். பல்லவர்கள் ஆண்ட காலத்தில் பெருமளவிலான தமிழர்கள் மூதேவியை தமது குல தெய்வமாக போற்றி வணங்கி உள்ளார்கள்.

இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் மூதேவியை மூதேவி என்று கூறாமல் பல்வேறு பெயர்களில் அழைத்து அவளை தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கிராம தேவதையாகவும், குல தெய்வமாகவும் வணங்கி  வந்துள்ளார்கள். அப்படி அவர்கள் வணங்கி வந்துள்ள உருவங்களை  பார்த்தாலே மூதேவியின் உருவுடன் உள்ள ஒற்றுமை தெரியும். அவளது வழிபாடு பரவலாக இருந்துள்ளதை அவற்றின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
..................தொடரும்: 7

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>