Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Moodevi /Jhesta Devi - 5

$
0
0
 
- 5 -
மூதேவியின் கழுதை வாகனம் எதைக் வெளிப்படுத்துகிறது? துணியை துவைக்கும் வண்ணான் அழுக்கு மூட்டைகளை பொதி சுமக்கும் கழுதைகள் மீது வைத்து அவற்றை நதிக்கரையில் சென்று அவற்றை சுத்தம் செய்து துவைத்தப் பின், சுத்தம் செய்த துணிகளை மீண்டும் அதை அதன் மீதே ஏற்றிக் கொண்டு திரும்பி வருவார்கள். இன்னும் சிலர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய பளுவான சாமான்களையும் கழுதை மீது வைத்துக் கொண்டு செல்வார்கள். அந்த காலங்களில் இதனால்தான் 'பொதி சுமக்கும் கழுதைப் போல'என்ற வார்த்தை ஜாலம் உண்டு. அந்தக் கழுதைப் போலத்தான் மூதேவி தன்னை வணங்கித் துதிக்கும் பாவாத்மாக்களை தன் மீதே சுமந்து அவர்களுடைய மன அழுக்குக்களை விலக்கி  நல வழிக்கு அழைத்துச் செல்கிறாள்.

துணியை கல் மீது அடித்து, கசக்கித் துவைத்து சுத்தம் செய்வதைப் போலவே அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களையும், தீராத துன்பங்களையும் தந்து பொதி சுமப்பதைப் போல கஷ்ட நஷ்டங்களை சுமந்து கொண்டு செல்லும் வாழ்கை எப்படிப்பட்டது என்பதை அனுபவிக்கும்  வகையில் அவற்றின் வலியை அவர்களுக்கு உணர்த்தி துன்பம் எத்தனை நரகமானது என்பதையும்  உணர வைக்கிறாள். அப்போதுதான் அவர்களுக்கு பூரணமான தெய்வ நம்பிக்கை ஏற்படத் துவங்கி வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் விலகத் துவங்கும்.  அவர்கள் தெய்வங்களை முற்றிலும் நம்பத் துவங்குகிறார்கள். இப்படியான வழியில் தெய்வீகத்தை ஒருவர்  வாழ்க்கையில் உணர வைப்பதே அவளுடைய அவதார தத்துவம் என்பதினால் மூதேவி உள்ள இடத்தில் கஷ்டங்கள் இருக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் அவள் கஷ்ட நஷ்டங்களை உணரவைத்து நல்வழிப்படுத்துகிறாள் என்பதே சத்தியம். இதை எடுத்துக் காட்டும் வகையில் அவளுடைய ஒரு சின்னமாக கழுதை வாகனம் உள்ளது .

மூதேவி என்பவள் தூமா தேவி என்ற அவதாரத்தில் உள்ளபோது காகத்தின் உருவம் கொண்ட கொடியை தன் தேரில் வைத்து இருப்பாள். அந்த தேரை இழுப்பதும் காகங்களே.  அவளுக்குப் பிடித்த வாசனை சுடுகாட்டில் இருந்து வரும் புகையின் மணம். சுடுகாட்டில் உள்ள பிணங்களைக் கூட தின்பாள் என்பதும் நம்பிக்கை. கையிலோ எருமைக் கிடாவின் தலைக் கொம்புகள். இப்படிப்பட்ட ஸ்மசான (சுடுகாடு) சின்னங்களைக் கொண்ட இந்த தேவியான மூதேவியை ஏன் தச வித்யா எனும் தாந்த்ரீக முறையில் வழிபடுகிறார்கள்? இந்த தேவியின் சின்னமான காக்கை எதைக் காட்டுகிறது ?

காக்கையை யமலோகத்தின் தூதுவராக நினைக்கிறார்கள். அதனால்தான் சிரார்த்தம் போன்ற இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளில் பிண்டதானங்கள் செய்யும் வேளையில் 'காக்கை எனும் பறவையே, இந்த பிண்டதானத்தை ஏற்றுக் கொண்டு யமபெருமானின் லோகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஆத்மாக்களின் பசியை தீர்த்து வை'என்று வேண்ட வேண்டும் என்பார்கள். அப்போது தன்னுடைய தூதுவரான காக்கை  வயிறார உண்டதும் அந்த வீட்டில் உள்ளவர்களது ஆத்மா சாந்தியடைய யமராஜர் அருள் புரிகிறார் என்பது நம்பிக்கை. இந்த செய்தியை நதி மற்றும் குளக் கரைகளில்  இறந்தவர்களுக்கு செய்யப்படும் இறுதி காரியங்களை செய்யும் பண்டிதர்கள் கூறுவதைக் கேட்கலாம்.
அதனால்தான்  தன்னை ஆராதித்தவர்கள் இறந்த பின் அவர்களது ஆத்மா யம லோகம் சென்றாலும் அங்கும் தன்னுடைய பக்தர்கள் யமனுடைய கொடுமையை அனுபவிக்கக் கூடாது என்பதினால் மயானத்தில் மூதேவியான ஜேஷ்டா தேவி சென்று அந்த ஆத்மாக்கள் திருப்தியோடு செல்ல வேண்டும் என்பதற்காக தனது தேரை இழுக்கும் காக்கையை அனுப்பி அங்கு போடப்படும் பிண்டங்களை தின்னச் செய்து, ஆத்மாக்களின் பசியைப் போக்கி, அதன் மூலம் யம தர்மராஜரையும்  திருப்தி செய்து அந்த ஆத்மாக்களை மேலுலகத்துக்கு அனுப்புகிறாளாம். ஆகவே காக்கை மூதேவிக்கும் சேவகம் செய்யும் பறவை, யமதர்மராஜரின் தூதுவர் கூட என்பதினால்தான் மூதேவியை வழிபட்டால் யம பயம் விலகும் என்று அந்த காலங்களில் நம்பினார்கள். அந்த தத்துவத்தைக் காட்டும் வகையில் அவளது கொடியில் (யமன், சனி பகவான் மற்றும் மூதேவி என மூவருடனும் தொடர்ப்பு கொண்டுள்ளபறவை காக்கையாகும்) காக்கையின் சின்னம் உள்ளது என்று பழங்குடியினர் நம்பினார்கள் என்பதினால்தான்   மூதேவியை  அவர்கள் பெரிதும் வணங்கி வந்துள்ளார்கள்.

சனி பகவானுக்கும் வாகனம் காக்கைதான். அதே காக்கைதான் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியின் தேரை இழுக்கும் பறவையும்  ஆகும். அவளது கொடியிலும் காக்கையின் உருவம் உள்ளது. சனியின் தொல்லை இன்றி இருக்க வேண்டும் எனில் ஆலயங்களில் சென்று ஜேஷ்டா தேவியை ஆராதிப்பது உண்டு என்று முன்னர் கூறினேன் அல்லவா, அது எதனால் என்பது தெரியுமா? ராவணணினால் சனீஸ்வரருக்கு ஏற்பட்ட சங்கடத்தை மூதேவி தீர்த்து வைத்ததினால் மூதேவி அமர்ந்து வரும் கழுதையைத் தவிர மூதேவியின் வாகனத்தையும்  இழுக்கும் வகையில் அவருடைய வாகனமான காக்கையையே  சனி பகவான் அனுப்பினாராம்.  ஆகவே இதன் மூலம் சனியும் தன்  கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தவே அவள் தனது கொடியில் காக்கையின் சின்னத்தை வைத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. யமபெருமானும் சனி பகவானும் சகோதரர்கள் ஆவர்.  தனது சகோதரரான சனீஸ்வரனை யமபெருமான் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதாக புராணங்கள் கூறுகின்றன.
 
இறந்தவர்களது உடல் எரிக்கப்பட்டதும் அதில் இருந்து  வெளியேறும்  ஆத்மா அந்த சுடுகாட்டில் எரிக்கப்பட்ட உடலின் மேற்பகுதியிலேயே சில காலம் சுற்றித் தெரிந்தப் பின் தேவலோகம் செல்லும். ஆகவே அவை மேலுலகம் செல்வதற்கான பாதையின் முதல் தளம் சுடுகாடு ஆகும். அந்த சுடுகாட்டில் சுற்றித் திரிந்தவண்ணம் இருக்கும் ஜேஷ்டா தேவி அந்த ஆத்மாக்கள் உயிருடன் இருக்கையில் தம்மை வணங்கித் துதித்ததினால் அந்த ஆத்மாக்களை  நல்ல பிறவி எடுக்கும் வகையில் அங்கிருந்து  அனுப்பி வைக்கிறாள்.
மூதேவி சுடுகாடுகளில் ஏன் சுற்றுகிறாள்? புராணங்கள் சுடுகாடுகளில் சுற்றுபவர் யார் என்று கூறுகின்றன? அவரே ஸ்மசானவாசி எனும் சிவபெருமான் அல்லவா? அங்கு அவருக்கு துணையாக அந்த இடத்தில் யார் இருக்கிறாள்கள்?  சிவபெருமானின் துணைவியான பார்வதி அல்லவா? ஆகவே மூதேவி பார்வதியின் ஒரு அவதார தேவ கணமே என்பது இதன் மூலம் வெளிப்படும். அதனால்தான் அமிர்தம் கடைந்தபோது முதலில் வெளியான இவரை விஷ்ணு பகவான் மணக்கவில்லை. அவளை சிவபெருமானே தன்னுடைய பரிவார தேவதையாக ஏற்றுக் கொண்டு தான் அமர்ந்துள்ள பல ஆலயங்களில் பார்வதிக்கு காவலாக இவளையும் வைத்து உள்ளார் (மூதேவி எனும் ஜேஷ்டா தேவியின் சிலைகள் பெரும்பாலும் சிவன் ஆலயங்களிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது என்பது இதைக் காட்டுகிறது).

சற்றே சாம்பல் நிறத்துடன் காணப்படும் வெண்மை உடை அணிந்து விதவைப் போல அமங்கலமான தோற்றத்தை தந்தபடி வசிக்கும் மூதேவியின் விதவைக் கோலம் எதைக் காட்டுகிறது? விதவை என்பது வீட்டிலும் சரி, சுற்றத்தாருடனும் சரி உலக ஆசைகளிலும் சரி அவை அனைத்தையுமே துறந்து நிற்கும் நிலை ஆகும் (முன் காலங்களில் கணவனை இழந்து விட்டப் பெண்கள் தமது அழகை உருக்குலைத்துக் கொண்டு, யாராலும் விரும்பப்படாத தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றும், உணவில் இருந்து ஆடைகள்வரை எந்த ஆசைக்கும் அடிமையாகி தம்மை மீண்டும் இழக்கலாகாது என்பதை கட்டாயப்படுத்தவே வண்ண ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும் வெண்மை அல்லது சாம்பல் நிற ஆடையை மட்டும் அணிய வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டார்கள். அதாவது அவர்கள் வீட்டிலும் சரி வெளியிலும் சரி அனைத்து பற்றையும் துறந்தவர்கள் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற சம்பிரதாயங்களை வைத்து இருந்தார்கள்). ஆகவே அவளை வணங்கித் துதிப்பத்தின் மூலம் மெல்ல மெல்ல உலகப் பற்று அழியத் துவங்கி  தெய்வீக பற்று அதிகரிக்கும் என்பது உண்மையே.

...............தொடரும் :6

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>