Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Moodevi /Jhesta Devi - 3

$
0
0
- 3 -
எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பல்லவ  மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது  பல தமிழர்களின் குல தெய்வமாக மூதேவி இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஏன் நந்திவர்ம பல்லவ மன்னர் குடும்பத்திற்கும் இவளே குலதெய்வமாக இருந்துள்ளாள். பல்லவ மன்னனான ராஜசிம்மன் என்பவர் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் நிர்மாணித்த கயிலாசநாதர் ஆலயத்தில் அவள் சிலையை வைத்து வழிபட்டுள்ளார்.  அது போல ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற ஊரில் மகேந்திர வர்ம பல்லவ மன்னன் கட்டியுள்ள குடைவரைக் கோவிலிலும் மிகப் பெரிய மூதேவியின் சிலை உள்ளது. அதன் பின் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்கள் காலத்திலும் மூதேவிக்கு சிறப்பான வழிபாடுகள் இருந்துள்ளன என்பது அவர்கள் நிர்மாணம் செய்த பல ஆலயங்களில் மூதேவியின் (அவளை ஜேஷ்டா தேவி என்பார்கள்) சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளதில் இருந்து தெரிய வரும். இந்த இரு பிரிவு மன்னர்கள் காலத்தைத் தவிர சமண மதம் மேலோங்கி இருந்த காலத்திலும் மூதேவியானவள்  சமணர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளாள் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

பல சிவன் ஆலயங்களிலும் மூதேவியை பரிவார தேவதையாக அமைத்து இருந்ததாகவும் அவளது சன்னதியை அல்லது சிலையை எங்கு, எந்த திசையில் அமைக்க வேண்டும்  என சிற்ப சாஸ்திர  நூல்கள்  சிலவற்றில் கூறப்பட்டு இருந்ததாகவும் மூதேவி வழிபாடு என்பது  பத்தாம் அல்லது பதினோராம்   நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும் பரவலாக இருந்துள்ளது என சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மூதேவி வழிபாடு மெல்ல மெல்ல பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறைய ஆரம்பித்து உள்ளது.  அதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்பதை கடைசி பகுதியில்  விவரிக்கிறேன்.

இப்படியாக பத்தாம் நூற்றாண்டுவரை பரவலாக வழிபடப்பட்டு வந்திருந்த மூதேவியின் தோற்றத்துக்கும், அவள் வசிக்கும் இடங்களுக்கும், அவளுடைய சக்திக்கும் சம்மந்தமே கிடையாது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மூதேவி எனும் ஜேஷ்டா தேவியின் தோற்றத்தைக் குறித்து விளக்க  வேண்டும் எனில் அவளது வாகனங்களையும், தோற்றத்தின் தத்துவங்களையும் வர்ணிப்பது அவசியம். முதலில் அவளது தோற்றம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

எந்த ஒரு கடவுளையும் ஓவியமாகவோ இல்லை சித்திரமாகவோ தீட்ட வேண்டும் என்றால் அதற்கு சில விதி முறைகள் உள்ளன, அந்த உருவங்கள் இப்படித்தான் அமைந்து இருக்க வேண்டும் என்பதாக விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியான விஷ்ணுதர்மோத்தரா என்ற நூலில் கூறப்பட்டு உள்ளது. அதில் மார்கேண்டேய முனிவர் தன்னிடம் சந்தேகங்களைக் கேட்ட வாஜ்ரா என்ற முனிவருக்கு கடவுட்களின் உருவம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறினாராம். மார்கண்டேய முனிவர் அனைத்து கடவுட்களின் பல்வேறு ரூபங்களையும் நேரடியாக பார்த்து உள்ளவர் என்பதினால் கடவுளின் ரூபங்கள் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை அவரால் எடுத்துக் கூற முடிந்தது.  ஆகவே அவர் வாஜ்ரா எனும் மன்னனுக்கு விளக்கிய தோற்றத்தில்தான் மூதேவி இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

லிங்க புராணக் கதையின்படி அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த தேவியின் உருவம் அமங்கலமாக இருந்தது. அப்போது முதலில் வெளிவந்த அவளை யார் மணப்பது என்ற கேள்வி எழுந்தபோது துச்சாஹா என்ற முனிவர் அவளை மணக்க வேண்டும் என்பது முடிவாயிற்று என்று அந்த புராணம் தெரிவிக்கிறது. இன்னொரு கதையின்படி அவளை மணக்க இருந்தவரின் பெயர் பிரபவன் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ, முதலில் வெளிவந்த தேவியை விஷ்ணு மணக்கவில்லை. ஆனால் அவரே அவளது திருமணத்துக்கு தேவையானதை செய்தப் பின் அவளுடைய இளைய சகோதரியான லஷ்மி தேவியை மணம்  புரிந்து கொண்டார் என்பது புராணக் கதை.
காஞ்சீபுரம் ஆலயத்தில் 
ஜேஷ்டா தேவியின் சிலை

துச்சாஹா முனிவரின் திருமணம் தொடர்ப்பான புராணக் கதையின்படி ''மூதேவியை  மணந்து கொண்டப் பின் அந்த முனிவர் அவளுடன் தொடர்ந்து நல்ல முறையில் வாழ முடியாமல் போயிற்று. அவளால் வேத மந்திர ஒலிகளையும், நல்லவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதினால் விஷ்ணுவிடம் சென்று அவர் அவளைப் பற்றி முறையிட விஷ்ணு பகவானும் அவள் அமங்கலமான இடங்களில் வசிக்கவே அவதரிக்கப்பட்டதினால் அவள் இருக்கும் இடங்கள் அதற்கு ஏற்ற முறையில் அமைந்து இருக்கும், மங்களகரமான மரங்களுக்கு அடியிலும் கூட அவளுக்கு இடமிருக்காது''என்று கூறி விட்டு அவரை அனுப்பினார். அதைக் கேட்ட அந்த முனிவரும் உடனடியாக ஜேஷ்டா தேவியை விட்டு விலகினார். அதனால் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியும் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை போடப்படும் இடங்கள், சாக்கடைப் போன்ற இடங்களில் வரும் நீரைக் கொண்டு வாழும் இடங்களில் வாழும் மனிதர்களுடனும், வீடுகளை சுத்தமாக்க பெருக்கப்படும் விளக்குமாற்றின் புழுதி, மயிர் குப்பை, கழுதை, நாய்கள் சண்டையிடும் இடங்கள், மிருகங்களின் கழிப்புக்கள் போன்ற இடங்களில் வாழ  முடிவு செய்தாள். இந்த ஏற்பாடு எதற்காக ஏற்பட்டது?

உண்மையில் ஜேஷ்டா தேவியானவள் உலகில் உள்ள அறுபத்தி நான்கு வகைகளிலான தரித்திரங்களை நாசம் செய்து அமங்கலங்களை அழிக்கவே அவதரித்தவள் என்பதினால் அந்தந்த இடங்களில் அவள் வாழ்ந்தவாறு அவற்றை தூய்மைப்படுத்தும் காரியத்தை செய்ய வேண்டி வந்தது. அதனால்தான் அவளது தோற்றத்தை வர்ணிக்கையில் அவள் கன்னங்கரிய நிறத்தைக் கொண்டவளாகவும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் ஆயுதத்தைக் கொண்டவளாகவும் (விஷ ஜந்துக்கள் பொதுவாக சாக்கடை நிறைந்த இடங்களில் வசிக்கும்), அழுக்கு மூட்டைகளை ஏந்திச் செல்ல பயன்படும் கழுதையை வாகனமும் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.

அவள் அழுக்கு படிந்த உடலோடும், கோரமாக காணப்படும் தலை முடி சீவப்படாமல் அசிங்கமாக பறந்தவண்ணம் இருக்கும் வகையிலும், அதி நீளமாக அமைந்த ஒட்டிய வயதுடன், வற்றிய மார்பகங்களைக் கொண்டவளாகவும், பார்க்கவே பயங்கரமான தோற்றத்தை தரும் கண்களைக் கொண்டவளாகவும், துடைப்பத்தைக் கையில் ஏந்தியவளாகவும் காட்சி அளிக்கிறாள். அவளது கையில் காணப்படும் கொடியில் காக்கையின் உருவமும் உள்ளது. அவளது தேரையும் கூட காக்கை இழுத்துச் செல்வதாக காணப்படும். இந்த காட்சியில்தான் தச வித்யாவில் வணங்கப்படும் தூமர தேவியும் காணப்படுவதினால் அவளே ஜேஷ்டா தேவியே என்பதும் விளங்கும்.

ஆமாம் இப்படியாக அனைத்து அமங்களையும் உள்ளடக்கிய அந்த வணங்கப்பட்ட தேவியின் ரூப தத்துவம் என்ன?
..........தொடரும் : 4

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>