Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

Moodevi /Jhesta Devi - 2

- 2 -
இன்னொரு புராணக் கதையின்படி பரப்பிரும்மன் மூன்று தேவிகளைப் படைத்தவுடன் அமிர்தத்தை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதில் இருந்து அனைத்து தேவிகளின் சக்தியையும் உள்ளடக்கி புகை மண்டலம் போலக் காட்சி தந்த நுரையில் இருந்து முதலாக வெளி வந்த ஒரு பெண் சிவபெருமானால் ஏற்றுக் கொள்ளப்பட்டாள். அவள் உருவம் பயங்கரமாக இருந்தது. காளியைப் போலக் காட்சி தந்து கரிய நிறத்தில் வெளி வந்ததினால் அவளை தூம்ர காலி (காலி என்றால் கறுப்பி மற்றும் தூம் என்றால் புகை மண்டலம் என்றும் பொருள் ஆகும்) என அழைத்தார்கள். அதுவே பின்னர் தூம்ர காளி என உருமாறியதாம். இதனால்தான் தசவித்யா எனப்படும் தாந்ரீக வழிபாட்டு முறையில் வழிபடப்படும் ஒரு தேவியை தூம்ர தேவி எனவும் அழைக்கிறார்கள். அவளே இந்த மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவியின் அவதாரம் என்கிறார்கள். அந்த உருவில் உள்ள ஜேஷ்டா தேவியின் வாகனமாக வராஹி இருப்பதினால் அவளை தூம்ர வராஹி என்றும் அழைத்தார்கள். தூம் என்றால் புகை மண்டலம் என்பதினால் அவள் புகை மண்டலத்தில் இருந்து வெளி வந்து அந்த புகை மண்டலத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டாள் என்பதினால் அமிர்தத்தைக் கடைந்தபோது எழுந்த புகை மண்டலம் அப்படியே மறைந்து போய் நீல வானமும், பனி போன்ற வெண்மையான கடலும் தெளிவாகத் தெரிந்தது.

அப்போது அவள் அவதாரம் குறித்துக் கூறிய விஷ்ணு பகவான் ''அனைவருக்கும் முன்னால் இந்தக் கடலுக்குள் இருந்த அமிர்தத்தில் இருந்து இவள் வெளி வந்ததினால் முதல் தேவியான கருத்த நிறம் கொண்ட தூம்ர காளிக்கு அழிவில்லை. உலகில் உள்ள அனைத்து தீமைகளும் அழித்தப் பின் நல்லவை நடக்கும் என்பதினை எடுத்துக் காட்டும் தத்துவமாக  முதலில் புகை மண்டலமாக எதுவுமே  கண்களுக்கு தெரியாமல் இருந்த நிலை மறைந்து இவள் வெளி வந்ததும் நிர்மலமாக அந்த இடம் காட்சி தந்தது என்பதின் மூலம் வெளிப்பட்டது.  முதலில் வெளிவந்த இவள் புகை மண்டலத்தை தன்னுள் அடக்கிக் கொண்டு மறைந்ததும் தொடர்ந்து செல்வம் தரும் லஷ்மியும் பிற தேவர்களும் வெளி வந்துள்ளார்கள். ஆகவே இதன் மூலம் இவளே தீமைகளை விலக்கி நல்லவற்றை தரும் நிலையை உருவாக்குகிறாள் என்பது புலனாகும்''என்று கூறினார். விஷ்ணு பகவான் அழிவற்றவள் அவள் என்று கூறியது என்ன எனில் அந்த ஜேஷ்ட தேவி வேறு யாரும் அல்ல, ஆதியும், அந்தமும் இல்லாத ஆதி பராசக்தியின் அவதாரமே என்பதே. காஷ்மீரத்தில் உள்ள தூம்ர காளி ஆலயத்தைக் குறித்து காஷ்மீர பண்டிதர்கள் சிலர் கூறும் வாய் மொழி கிராமியக் கதை இது ஆகும்.

வடநாட்டில் பல இடங்களில் மூதேவி எனும் ஜேஷ்டா தேவியை அலக்ஷ்மி என்று  கூறி வணங்குவார்கள்.  அங்கு சில இடங்களில் நிலவும் புராணக் கதைகளின்படி தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது  முதலில் வெளி வந்தவளே அலக்ஷ்மி என்றும் அவள் நாசத்தை அழிப்பவள் என்றும், நாசத்தை தருபவள் என்றும் இருவிதமாக நம்புகிறார்கள். அதனால்தான் தாந்ரீக பூஜை செய்பவர்கள் அந்த பூஜைகளில் அவள் நாசம் விளைவிக்கக் கூடாது என்று எண்ணி அவளை சாந்தப்படுத்தி வைப்பதற்கு முதலில் விநாயகரை வழிபட்டப் பின், அதை தொடர்ந்து இவளை ஆராதித்தப் பின்னரே முக்கிய பூசையினை துவக்குவார்களாம்.

மேலும் மூதேவிக்கும் பராசக்திக்கும் உள்ள தொடர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு புராணக் கதை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். இலங்கையை ஆண்டு வந்த ராவணன் ஒருமுறை நடைபெற்ற யுத்தத்தில் தேவர்களை  தோற்கடித்து நவக்கிரகங்களை அவர்கள் வசித்து வந்திருந்த  இடங்களில் இருந்து விரட்டி அடித்திருந்தான். மேலும் அந்த நவக்கிரகங்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களது சக்திகளை  தான் சிம்மாசனத்தில் ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களில் அடக்கி வைத்து இருந்ததும் அல்லாமல் தினமும் அந்த படிக்கட்டின் மீது ஏரி நடந்தே தனது சிம்மாசனத்தில் அமர்வானாம்.  அதனால் அந்த நவக்கிரகங்கள் தினமும் தமது சக்திகள் மீது கால்களை வைத்து ராவணன் ஏறிச் செல்வத்தின் மூலம்  தம் தலை மீது அவர் கால்களை வைத்து தங்களை அவமானப்படுத்துவது போல எண்ணி அதை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதன. ஆனால் ராவணனிடம் இருந்த அபார சக்தியினால் அவர்களால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த அபார சக்திகளை ராவணன் சிவபெருமானை துதித்து  அவருடைய அருளால் பெற்று இருந்தான்.

அதனால் வேதனை அடைந்த சனி பகவான் நாரத முனிவரை அணுகி தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கு விமோசனம் கிடைக்க ஒரு வழி கூறுமாறு வேண்டினார். நாரதரும் அதற்கான ஒரே வழி அப்போது பூலோகத்தில் சிவபெருமானை வேண்டிக் கொண்டு பார்வதி தவம் இருந்த  திருவானைக்காவல் ஆலய இடத்தில் சென்று அவளுக்கு காவலில் இருந்த ஜேஷ்டா தேவியை வணங்கித் துதிப்பதுதான் என்றும், அவள் எதிரில் ராவணன் சென்று விட்டால் அவனுக்கு தரித்திர தோஷத்தை தந்து அவன் சக்தியை அழித்து விடுவாள் என்றும் அவர்களை அவளால் மட்டுமே அந்த நேரத்தில் காப்பாற்ற முடியும் என்றும்  கூறினார்.

திருவானைக்காவலில் இருந்த லிங்கம் காவேரி நதியில் இருந்த நீரைக் கொண்டு பார்வதியினால் உருவாக்கப்பட்டது. பார்வதி தேவி அங்கேயே தவத்தில் அமர்ந்து இருந்தவாறு அந்த லிங்கத்தை  வழிப்பட்டு வந்தார். (அந்த காலத்தில் திருவானைக் கோவில் என்பது ஜம்பக மரங்கள் சூழ்ந்த வனப்பிரதேசமாக சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. அதற்குப் பெயர் ஜம்பக வனம் என்பதாகும்). அவள் தவம் இருந்த இடத்தின் அருகிலேயே ஜேஷ்டா தேவியும் அவளுக்குக் காவலாக இருந்தாளாம்.

நாரதர் கூறிய உபாயத்தின்படி சனி பகவான் ராவணனிடம் சென்று அவனை கேலி செய்யத் துவங்க கோபமுற்ற ராவணன் சனி பகவானை பிடிக்க ஓடிவந்தான். சனீஸ்வரரும் வேண்டும் என்றே அவன் கவனத்தைத் திருப்ப அங்கும் இங்கும் ஓடியவாறு முடிவாக திருவானைக்காவலில் இருந்த ஜேஷ்டா தேவியிடம் சென்று அவளிடம் சரண் அடைந்தார். ராவணனுக்கு மூதேவி எனும் ஜேஷ்டா தேவி அங்கு இருந்தது தெரியாது.  ஆகவே அதை  அறியாமல் சனி பகவானை துரத்தி வந்த ராவணன் சக்தி மிக்க  ஜேஷ்டா தேவி முன்னால் சென்று  நின்றதும்   அவளைக் கண்டு பயந்து நடுங்கி நின்றான். பார்வதி தவம் உள்ள இடத்தில் மூதேவி எனும் ஜேஷ்டா தேவி இருந்ததினால் அவள் பார்வதியின் ஒரு தேவ கணமாகவே இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரங்களை  நன்கு  அறிந்திருந்த ராவணன் உணர்ந்தான்.

 ஆகவேதான் அவனால் அவளை எதிர்த்து நின்று  வெல்ல முடியாது என்பதினால் சனி பகவானைப் பிடிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே திரும்பினார்.  ஆனால் அதற்குள் தன் முன் வந்து நின்ற ராவணனை ஜேஷ்டா தேவியும் கோபத்துடன் பார்க்க  அடுத்த கணம் அவனை துரதிஷ்டம் பற்றிக் கொண்டது. அதையே எதிர்பார்த்து காத்திருந்த சனீஸ்வரன் ராவணனுக்கு ஏழரை நட்டு சனித் தொல்லை துவங்கும் வகையில் அவன்  தலையில் ஏறி அமர்ந்து கொண்டதும் ராவணனின் அழிவும் ஆரம்பம் ஆயிற்று. அது முதல் சனீஸ்வரரும்  ஜேஷ்டா தேவிக்கு அடங்கி இருக்க வேண்டியதாயிற்று. ராவணனுக்கும் நவக்கிரகங்களை  கட்டி வைத்திருந்த அனைத்து  சக்தியும் அழிந்து போக அவன் தேவர்களை எதிர்க்கும் சக்தியை இழந்தான்.

அதனால்தான் அஷ்டம சனி, ஏழரை நாட்டுச் சனி மற்றும் ஜன்ம சனி போன்றவற்றினால் பீடிக்கப்பட்டவர்கள் திருவானைக்காவலில் உள்ள கோவிலில் ஜேஷ்டா தேவியுடன் எழுந்தருளி உள்ள  சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்தப் பின் ஊனமுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கினால் சனி பகவானின் தொல்லையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை சோழ மன்னார்கள் காலத்தில் இருந்தது. அது முதல் ஏழரை மற்றும் இரண்டரை சனி பிடித்தவர்கள் சனீஸ்வரரை சாந்தப்படுத்தும் விதமாக எந்தெந்த  ஆலயங்களில்  மூதேவி எனும் ஜேஷ்டா தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளாளோ  அங்கெல்லாம் சென்று அவளை வணங்கித் துதிப்பது ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பரவலாக இருந்துள்ளது.  அப்படிப்பட்ட நம்பிக்கை பத்தாவது நூற்றாண்டு வரை இருந்ததாம்.

மூதேவி என்றால் தரித்திரம் என்று தவறாக கருதப்படுகிறாளே அவளுக்கா இத்தனைப் பெருமை?? அவள் பார்வதியின் துணை அவதாரம் என்பதினால் அகிலாண்டேஸ்வரி எனும் பெயரில் திருவானைக்காவலில் உள்ள பார்வதிக்கு   காவலாக அங்கு  தேவகணமாக அமர்ந்துள்ளார் என்பதில் இருந்தே அவளை ஆராதிப்பவர்களது தீமைகளை அழிக்க வல்லவள் என்பதும் ராவணனுக்கு துரதிஷ்டத்தை துவக்கி அவனது அழிவிற்கு வித்திட்டது மூலம் கடவுளை  நிந்திப்பவர்களை தரித்திரம் பிடிக்க வைத்து அழிப்பாள் என்பதையும்  எடுத்துக் காட்டும்  தத்துவம் ஆகும்.

..........தொடரும் : 3

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>