Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Moodevi /Jhesta Devi - 1

$
0
0
- 1 -
நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி....மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் இருக்கும் என்று எண்ணுவதினால்தான்   அந்த வார்த்தையை கெட்ட  வார்த்தையாக எண்ணி உபயோகிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி திட்டுகையில் அவர்கள் மூதேவியை அவர்களை அறியாமலேயே மனதார வணங்கி துதிக்கிறார்கள் என்பதே உண்மை. மூதேவி என்பவள் யார்? புராணங்களின்படி அவள் மஹாலஷ்மியின் மூத்த சகோதரி. அவளும் லஷ்மி தேவியைப் போல ஆராதிக்கப்பட வேண்டியவளே. அவள் தீய தெய்வம் அல்ல. தீமை என்பது என்ன என்பதை எடுத்துக் காட்டி உயிரினங்களை நல் வழிப்படுத்த விஷ்ணுவினால் தோற்றம் தரப்பட்டவளே மூதேவி என்பவள். அவளைப் பற்றி  நிலவும் தவறான எண்ணங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே இந்த ஆய்வுக் கட்டுரை. மூதேவியை வடநாட்டில் ஜேஷ்டா தேவி என்று கூறுகிறார்கள். பின்னர் தென் இந்தியாவிலும் அவளை ஜேஷ்டா தேவி என்றே அழைத்து வழிபாட்டு வந்துள்ளார்கள்.

ஒரு விதத்தில் பார்த்தால் மூதேவியை பத்தாம் நூற்றாண்டுவரை மக்கள் வணங்கி வந்துள்ளார்கள். முக்கியமாக தென் இந்தியாவின் பல ஆலயங்களிலும் அவளை போற்றி ஆராதித்து உள்ளார்கள். மன்னர்களும் அவளது சிலைகளை ஆலயங்களில் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். அவளுக்கும் சன்னதிகள் இருந்துள்ளன.  இன்றைக்கும் பல முக்கியமான ஆலயங்களில், (திருச்சி திருவானைக்காவல் போன்ற பிரபலமான ஆலயத்திலும் கூட) அவளது சிலை வழிபடப்பட்டு வந்துள்ளது தெரிகின்றது. மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி என்பவள் லஷ்மி தேவிக்கு முன்பாக அவதரித்து அவளுக்கு மூத்தவளானவளாக இருந்துள்ளார். லஷ்மி தேவி அவதரிக்கும் முன்னர் பிறந்ததினால் மூத்தவள் என ஆகி,   மூல தேவி அதாவது முதலில் வந்த தேவி என்பதாக இருந்தது  மெல்ல மெல்ல வாய்மொழிப் பேச்சில் மூதேவி என ஆகி உள்ளது. அவள் தாந்த்ரீக வித்யாவில் ஒரு முக்கியமான தேவியாக (தச வித்யாவில் உள்ள தூமவாதி ) உள்ளாள். மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி யார்? இனி மூதேவியை ஜேஷ்டா தேவி என்றே அழைத்து அவள் விவரத்தைக்  கூறுகிறேன்.  

அவள் அவதாரம் குறித்து சில கதைகள் உலவுகின்றன. பத்மபுராணக் கதையின்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது முதலில் அதில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சிவபெருமான் முழுங்கியவுடன் அடுத்து அதில் இருந்து ஒரு பெண் வெளி வந்தாள் (அந்தப் பெண்ணின் தோற்றம் அமங்கலமாக இருந்தாளாம்). அவளே ஜேஷ்டா தேவி ஆகும். அவளைத் தொடர்ந்து லஷ்மி தேவியும் வெளி வந்தாள் என்று அந்தப் புராணம் தெரிவிக்கிறது.

மூதேவி எனும் இந்த ஜேஷ்டா தேவி குறித்த கிராமிய வாய் மொழிக் கதை வடநாட்டில்  சில இடங்களில் கூறப்படுகிறது. முக்கியமாக தாந்த்ரீக  வித்தைகள்  அடங்கிய (அனைத்து தாந்த்ரீக வித்தைகளும் தீமை விளைவிக்கும் கலை அல்ல. ஆத்மா ஞானம் பெறவும், ஆன்மீக சித்த சாதனாக்களை அடையவும்  அதை முறையாக அப்யாசனம் செய்வார்கள்) ஆலயங்கள் உள்ள பிரதேசங்களில் இதை நம்புகிறார்கள். அந்தக் கதையின்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தத்தைக் எடுத்தபோது அதில் இருந்து முதலில் வெளி வந்த  அமங்கலமான தோற்றம் கொண்டப் பெண் யார் என்று தேவர்கள் விஷ்ணுவைக் கேட்டபோது அவர் அப்படி அப்படி வெளி வந்தவள் லஷ்மியின் அவதாரமே என்றும், அவள் முதலில் வெளி வந்ததினால் அவள் லஷ்மி தேவிக்கு மூத்த சகோதரி ஆயினாள் என்றும் கூறினாராம். மேலும் அவள் முதலில் வெளி வந்ததினால் மூத்தவள் எனப் பொருள்தரும் வகையில் அவள் ஜேஷ்டா என அழைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். அதன் பின் நடைபெற்ற நிகழ்சிகளுக்குப் பின்னர் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்ததும், அதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூறி சர்வேஸ்வரனான  சிவபெருமானையும்,  தம்மைக் காத்த விஷ்ணுவையும் வணங்கித் துதித்தார்கள். அப்போது அங்கிருந்த தேவர்களின் சார்பாக நாரத முனிவர் விஷ்ணுவிடம் அவர் மணக்க உள்ளது லஷ்மிகரமான லஷ்மி தேவிதான் எனும்போது மூதேவி எனும் ஜேஷ்டா தேவியை ஏன் படைத்தார் எனக் கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தவர்களிடம்  விஷ்ணு பகவான் கூறலானார் :

 ''என்னுடன் வெளிவந்த பிரும்மா இந்த உலகைப் படைத்தபோது சில நியமங்களுக்கு உட்பட்டே அவரால் அதை படைக்க வேண்டி இருந்தது.  படைக்கப்பட்ட நான்கு யுகங்களிலும் வாழும் உயிரினங்கள் சில தீய செயல்களை செய்பவையாகவும், இன்னும் சில நல்லவற்றை செய்பவையாக இருக்கும்என்பதினால் -இரவும் பகலும் மாறி மாறி வருவது போல- தீமைகளும், நன்மைகளும் சேர்ந்தே வந்து கொண்டு இருந்தால்தான் உயிரினங்களில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு பிரகிதியின் தத்துவம், நன்மை தீமை என்பது என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதெல்லாம் புரியும். அனைவருமே நன்மைகளை செய்து கொண்டே இருந்தால் அவர்கள் அனைவருமே சொர்கத்தை அடைந்து விடுவார்கள். அதன் பின் மற்ற ஜீவராசிகள் இல்லாமலேயே யுகங்கள் படைக்கப்பட்டதின் அர்த்தமே இல்லாமல் போய் விடும். அந்த நிலையில் மாறி மாறி வர உள்ள யுகங்களின் தத்துவம் புரியாமல் போய் விடும் என்பதை மனதில் கொண்டே மனிதப் பிறவிகளுக்கு  அவற்றை உணர்த்துவதற்கு இரு அவதாரங்களை நான் உருவாக்க வேண்டி இருந்தது.

முதலில் நான்கு யுகங்கள் படைக்கப்பட்டன. அவை  சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் என்பன அல்லவா.   ஒவ்வொரு யுகத்திற்கும் குறிப்பிட்ட விகிதாச்சார முறைப்படி எல்லா விதமான ஜீவ ராசிகளும் வாழ வேண்டும்.  ஒவ்வொரு யுக முடிவிலும் அடுத்த யுகத்தில் பிறப்பு எடுக்கச் செல்லும் உயிரினங்கள்  அதனதன் பாவ புண்ணிய கர்மாக்களுக்கு ஏற்ப வெவேறு உருவங்களில்  பிறப்பை எடுத்தவண்ணம் இருக்கும். முதல் யுகமான சத்ய யுகத்தில் பிரும்மா படைத்த உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமே நிரந்தரமானது.  அடுத்தடுத்துப் வரும் யுகங்களில் பிரும்மா புதிய உயிரினங்களைப் படைக்க மாட்டார். சத்ய  யுகத்தில் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களே அந்த புது யுகங்களில் அவையவை செய்த பாவ புண்ணியங்களுக்கு  ஏற்ப வெவ்வேறு ரூபங்களில் நுழைகின்றன. எந்த உயிர் அணு மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதும், அது எதனால் நிகழ்கின்றது என்றும் மனித உயிரினங்களுக்கு நன்மை மற்றும்  தீமை என்பது என்ன,  அதனால் ஏற்பும் பாவ புண்ணியங்கள் என்ன, அந்த பாவ புண்ணியங்கள் எப்படி அடுத்த ஜென்மத்தில் அவர்களது வாழ்கையை நிர்ணயிக்கின்றன என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் எனில் ஒவ்வொரு ஜென்மத்திலும் அவை தீமைகளையும், நற் பயங்களையும் அனுபவித்தால் மட்டுமே முடியும் என்பதினால்தான்  நன்மை மற்றும் தீமைகளைத் தரும் ஒரு அவதாரத்தை என் மூலமே நானே படைக்க  வேண்டி இருந்தது.

அதனால்தான் என் மனைவி லஷ்மியின் உருவை இரண்டாக்கி தீமைகளை எடுத்துக் கட்டும் ஒரு அவதாரத்தை முதலில் வெளிப்பட வைத்தேன். அந்த அவதாரமான மூதேவி எனும் ஜேஷ்டா தேவி தாமே தீமைகளின் இருப்பிடமாக இருந்து கொண்டு தீமைகளை செய்பவர்களது தீமைகளை எடுத்துக் காட்டி அதன் பின் அவர்களை நல் வழியில் செல்ல வழி வகுக்க வேண்டும் என்றே தீமைகளையும் தரித்திரத்தையும் தருபவளாக இருப்பாள் என்ற அவதாரத்தில் அவளை  வெளிவர வைத்தேன் என்றாலும் அவளும் ஆராதிக்கப்படும் வகையில் இந்த பூமியில் இருப்பாள். அவள் தீமைகளை எடுத்துக் காட்டும் ஒரு ஆசானைப் போல உள்ளவளே தவிர தீய தேவதை அல்ல. ஆகவே நன்மை எது, தீமை எது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை எல்லாம் எடுத்துக் காட்டும் இந்த சத்தியமான உண்மையை  மெல்ல மெல்ல காலப் போக்கில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அவதாரங்கள் படைக்கப்பட்டன ''என்றார்.
.........தொடரும் : 2

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>