தூரதண்டி தொடர்ந்து கூறலானாள் 'நீலமேகன் எனக்கு பிறந்தபோது மயில் ராவணனுக்கு ரூபவதி என்ற பெண்ணும் பிறந்தாள். ஆகவே வயதுக்கு வந்ததும் ரூபவதிக்கும் என் பிள்ளை நீலமேகனுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமென ஏற்பாடு செய்தான். கலியாணம் செய்ய தேதி குறிக்கும்போது அசிரி ஒன்று கத்தியது ' மூடனாகப் பிறந்து விட்ட மயில் ராவணா ....... நடத்து ....இருவருக்கும் திருமணத்தை நடத்து. அந்த நீலமேகனே இந்த பாதாள இலங்கைக்கு அதிபதியாகி நிலையா இருக்கப் போறான். நீயும் வதமாகப் போகிறாய்.. இதை மனதில் வைத்து திருமணத்தை விரைவாகவே நடத்து' என்று கூறிவிட்டு சென்று விட்டது. அதனால திருமண எண்ணத்தை நிறுத்திட்டான். எங்கள அரண்மணயிலேந்தும் துரத்திட்டான்.
எமக்கு போறாத காலம். மயில் ராவணன் ராம லஷ்மணர்களை தூக்கி வந்தபோதும் வழியிலே இன்னொரு ஆகாசவாணியும் கூறிற்றாம் 'அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்வது நல்லதல்லடா.... வைகுண்டநாதர் அவதாரங்களை களவாடிக் கொண்டு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டதடா....நீர் அழிவது நிச்சயம். ..போ...போ....நீர் இத்தனை சிரமப்பட்டு ராவணனுக்காக இதை செய்கிறாயே. அவனும் ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத்தை இழக்கப் போறே. மூர்கனே, உன் சகோதரி தூரதண்டியின் பிள்ளை உன் சிம்மாசனத்தில் அமரப் போகிறான். இந்த சத்திய வாக்கை நீயும் பார்ப்பாய்....உன் சந்ததியினரும் பார்பார்கள்...போடா மூடனே....போ'.
ரெண்டாவது தடவையா என் பிள்ளை சிம்மாசனத்துல அமரப்போறான்றதைக் கேட்டு ஆக்ரோஷம் கொண்ட மயில் ராவணனும் உடனே என் கணவரை வரச் சொல்லி காரணமே இல்லாமல், என்ன காரணும்னும் சொல்லாமல் என் எதிரிலேயே அவர் கழுத்தை அறுத்துக் கொன்று போட்டான். அது மட்டும் அல்ல என் பிள்ளயையும் அவன் கொல்ல வந்தபோது 'தங்கை நான் கெஞ்ஜறேன் ....அவனை விட்டுடூன்னு' அழுதேன். அதனால என் பிள்ளையையும் என்னையும் ஆயிரம் கனம் கொண்ட விலங்கை காலிலும் கையிலும் மாட்டி ஒரு சிறையிலே தள்ளி வருஷ வருஷமாக கொடுமையில் வைத்து விட்டான். இன்றுதான் ராம லஷ்மணர்களை கொல்ல தங்கக் குடத்தில் தண்ணீர் வேணும்னு எனக்கு சிறிது விடுதலை தந்துள்ளான். அதை நான் கொண்டு தந்தால் அந்த பாவம் எனக்கும் சேருமாம். அவனுக்கு அந்தப் பாவம் வராதாம். அந்த பாவம் எனக்கு வந்ததும் என்னையும் பின்னர் கொன்று குழிதோண்டி புதைத்து விடுவானாம்.
ஆஞ்சனேயா, ஆபத்சகாயா, ராம லஷ்மணரைக் காப்பாற்றிய பின் என்னையும், எம் பிள்ளையையும் நீர்தான் காப்பாற்றணும். அதை செய்வேன்னு சத்தியம் தரணும் ' என அனுமாரிடம் வேண்டிக் கொள்ள அதைக் கேட்ட அனுமானும் அவள் உள்ளக்கையில் ஒரு சத்தியம் செய்து தந்தார். 'அம்மணி, நீ கவலைப்படாதே. நானுனக்கு சத்தியம் செய்து தந்தது போல அந்த மயில் ராவணனை வதம் செய்து உம் குடும்பத்தையும் விடுதலை செய்து உம் மகனை முடிசூட்டி அழகு பார்க்க வைப்பேன். நீ இப்ப எனக்கு உதவி செய். மயில் ராவணன் பலமென்ன? இப்ப ராம லஷ்மணர் எங்கு உள்ளார்கள்? அதையெல்லாமும் எனக்கு விவரமாக் கூறு ' என்று தைரியம் சொன்னார்.
அதைக் கேட்ட தூரதண்டி கூறலானாள் ' அனுமானே, அந்த மயில் ராவணனை சாதாரணமாக எடை போடாதேயும். அவன் பரமேஸ்வரனிடமிருந்து மூவேறு தலைமுறைக்கும் வேண்டுமான பலமும் பெற்று உள்ளவன். பராக்கிரமசாலி. தந்திரக்காரன். மாயக்காரன். அவன் கோட்டையின் நுழை வாசலிலே பல துலா யந்திரங்களை மாட்டி வைத்திருக்கான். அது யார் வருவாரோ, யார் போவாரோ அது அவனுக்கு விரோதியா, நண்பனா என்பதைக் காட்டிடும் யந்திரமாகும். அத்தனை மந்திர சக்தி உள்ளதது. உள்ளே போறவன் சத்ரு என்றால் அங்குள்ள இருபது லட்சம் வீரனும் ஒருசேர அங்கு வந்து சத்ருவை துவம்சம் செய்து விடுவார்கள். அதனால் நீர் மிக்க கவனமாக இருக்கோணும்'.
அதைக் கேட்ட அனுமானும் 'பெண்ணே நீ எனக்கொரு ஒரு உபாயம் சொல்லோணும். நான் கோட்டைக்குள்ளே அந்தப் பக்கம் நுழைந்து விட்டால் அத்தனை அசுரர்களையும் வதம் பண்ணும் அளவுக்கு எனக்கு பலம் வந்துடும். அதனால் எப்படியாவது கோட்டை மதிலுக்கு அந்தப் புறம் செல்ல ஏதேனும் ஒரு உபாயம் சொல்லோணும்' என்றவுடன் தூரதண்டி கூறத் துவங்கினாள் 'வாயுபுத்ரா, எனக்கெந்த யோசனையும் வரலே. ஆனால் நான் ஒரு விஷயம் சொல்வேன். நீ அதைக் கேட்டு உள்ளே செல்ல அந்த உபாயம் சரியானதான்னு முடிவு செய்யோணும். நான் தங்கக் குடத்தில் தண்ணீர் மொண்டு அதன் மீது ஒரு கொத்து மாவிலையும் வைத்துக் கொண்டு செல்லணும். அதையும் அந்த துலா யந்திரம் துருவித் துருவி பார்க்கும். அதனால் நான் குளத்தில் இறங்கி தண்ணீர் மொள்ளும் முன்னேயே ஏதும் உபாயத்தை சேர்த்து வைத்துக் கொள்ளும்' என்று கூறி விட்டு குடத்திலே தண்ணீர் மொள்ளச் சென்றாள்.
ஒரு ஷணம் யோசனை செய்த அனுமானுக்கு மனதில் ஒரு உபாயம் மின்னலைப் போல வந்தது. தூரதண்டி தண்ணீர் எடுத்த குடத்தில் மாவிலைக் கொத்தை வைத்ததுமே அதில் சிறு பூச்சி போல தன்னை உருமாற்றிக் கொண்டு அமர்ந்து கொண்டு அவளிடம் சொன்னார் 'அடியே பெண்ணே , நீ எந்த சந்தேகமும் இல்லாமல் தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே போய் விடு. வாசலில் யாரேனும் தடுத்தால் தடுக்கி விழுந்தது போல விழுந்து அரண்மனை நுழை வாயிலின் உள்ளே தண்ணீர் குடத்துடன் மாவிலையையும் சேர்த்துக் கொட்டிடு. அதுக்குப் பின்னே நான் பார்த்துக் கொள்கிறேன்' என யோசனைக் கூற தூரதண்டியும் பயத்துடனே தடுமாறிக் கொண்டு மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக அனுமான் அமர்ந்திருக்க தண்ணீர் நிறைந்திருந்த அந்த அந்த தங்கக் குடத்தையும் தன் தலை மீது வைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பிச் சென்றாள். நுழை வாயிலில் இருந்த துலாயந்திரத்தின் அருகில் வந்ததும் அது யாரோ சத்ரு உள்ளே வரவுள்ளதைக் காட்டியது.
..........தொடரும்