Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 11

பவழக் கோட்டைக்கு உள்ளே இருந்து வெளியே வந்த ராக்ஷசர்கள் எல்லாமே சரியாக இருக்கிறதா எனப் பார்த்தப் பின் தாரை தம்பட்டங்களை அடித்து வெளியில் காவலில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை தந்தப் பின் மீண்டும் கோட்டைக்குள் சென்று விட்டார்கள். அவர்கள் சென்றப் பின் யாருமில்லை என்பதை அறிந்து கொண்டவுடன் அனுமார் நந்தவனத்தில் இருந்த மரத்தில் இருந்து கீழிறங்கி வந்து நாலாபுறமும் பார்த்தார். 
 
அனுமான் நின்றிருந்த இருந்த இடங்களேல்லாமே மந்திர சக்தியால் கட்டப்பட்டு இருந்ததால் அவருடைய பலமும் அங்கே குறைந்து இருந்தது. அதே சமயத்தில் மயில் ராவணன் தன் சேனைகளுக்கெல்லாம் சக்தி உள்ள தாயத்தைக் கட்டி இருந்ததால் அவர்களுடைய பலம் குன்றவில்லை. ஆனால் அந்த தாயத்தில்லாத யாரேனும் இருந்தால் அவர்களது பலத்தில் பாதியும் குறைந்திடும். அதனால்தான் இத்தனைக் கட்டுக் காவலை மீறி எப்படி உள்ளே செல்வது என்ற யோசனையில் அனுமான் இருந்தபோது அரண்மனைக்குள்ளே ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது.

அரண்மனையிலே மனைவியோடு படுத்திருந்து நித்திரையில் இருந்த மயில் ராவணன் 'நேரமாச்சே' என நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக எழுந்தான். 'நாழிகையும் 22 ஆச்சே. இன்னும் இரண்டு ஜாமமே பாக்கி. அதற்குள் ஆகவேண்டிய காரியத்தையும் பண்ணிட்டு ராம-லஷ்மணர்களை காளிக்கு பலி தரோணும்' என நினைத்தவன் 'அபிஷேகத்துக்கு தண்ணி கொண்டு வரணுமே. அதுக்கு தமக்கையை அனுப்பணும்னு அல்லவா விதி இருக்கே' என்று எண்ணியவாறு ' அவளை என்ன சொல்லி அனுப்பலாம்' என்றெண்ணிக் கொண்டும் காவலில் கை விலங்கோடு கட்டி வைத்திருந்த தூரதண்டியை அழைத்து வரச் சொல்லி அவளிடம் ஒரு தங்கக் குடத்தையும் தந்து ' சீக்கிரமா போய் உத்தியான வனத்திலிருந்து ஒரு குடம் தண்ணி கொண்டுவாடி' என ஆணையிட்டான்.

தூரதண்டியும் 'இத்தனை நாளும் நம்மை கையிலும், காலிலும், மார்பிலும் விலங்கு கட்டி பூட்டி இருந்தான். ஒருவேளை இன்னிக்கு என்னையும், என் பிள்ளையையும் பலி தரப்போறானோ? அதனால்தான் என்னை தண்ணி கொண்டு வா என்று அனுப்புறானோ? போகட்டும். என்னிக்காவது ஒருநாள் செத்துத்தானே ஆகணும். கைவிலங்கோடு, கால் விலங்கோடு நாள்பூர அவதிபடுவதை விட இப்போவே செத்து தொலைக்கலாம்' என மனதில் துக்கப்பட்டுக் கொண்டே இருக்க அவள் மனதிலே ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களை நொடிப் பொழுதில் அறிந்து கொண்டுவிட்ட மேதாவி மயில் ராவணன் அவளிடம் கூறினான் 
 
' அடியே தூரதண்டி, உங்கள் இருவரையும் வெட்டிக் கொல்ல கண்சிமிட்டே போதுமடி எனக்கு. அதை இப்போவே கூட செய்ய முடியுமே. ஆனால் நீ நினைக்கற மாதிரி ஒங்க ரெண்டுபேரையும் காளிக்கு பலி கொடுக்க தண்ணி கொண்டு வரச் சொல்லலேயடி ..... நான் முதலில் அந்த ராம லஷ்மணர்களை காளிக்கு பலி தரணும்டீ. அதனால்தான் சொல்லறேன் , போ....போய் யாருக்கும் இதைக் சொல்லாம சீக்கிரமா கிளம்பி குளத்துல இருந்து தங்க குடத்துல தண்ணீ கொண்டு வா' என அவளை விரட்டினான்.

'ஐயோ....அண்ணா...நீ ராம லஷ்மணர்களை காளிக்கு பலி கொடுக்கப் போறியா? இந்த பாவ காரியத்தைப் பண்ண நானா உனக்கு கிடைத்தேன்? நான் இந்த பாவ காரியத்தைப் பண்ணப் போகமாட்டேன் அண்ணா' எனக் கதறியவளை நோக்கி உருவிய தன் வாளை காட்டி ' போ...போய் சீக்கிரமா தண்ணீ கொண்டு வா..... இல்லேன்னா உன்ன வெட்டமாட்டேண்டீ...அதுக்கு பதிலா உன் பிள்ளைய வெட்டி கண்ட துண்டமாக்கி மிருகத்துக்கு போட்டுடுவேண்டீ' என்று கோபமாக மயில் ராவணன் கூறினான்.
 
அதைக் கேட்டவள் 'ஐயோ அண்ணா....அப்படியெல்லாம் செய்துடாத .....கொல்லர்தூன்னா என்னையும் சேத்தே கொன்னுடு' என்று சொல்ல 'அப்படீன்னா போ...போய் சீக்கிரமா தண்ணீ கொண்டு வா...' என்று அவளிடம் கூற அவளும் பயந்து போய் நந்தவனத்துக்கு வந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழத் துவங்கினாள் தூரதண்டி.

'ஐயோ ஆத்தாடி....இப்படி ஒரு பாபத்தைப் பண்ண நானா கெடச்சேன்? ரெண்டு புண்ணிய புருஷனுக்கும் இப்படியொரு நிலைமை வரணுமா? ஆத்தாடி...என் அண்ணன் செய்வது தப்படி.....இத நான் யாருகிட்ட கூறி அழுவேன்? வாலினாலே கோட்டைக் கட்டி அத்தன பேரையும் காத்து நின்ற அந்த வானரக் குரங்கு அனுமார் இங்கு வந்து என் அண்ணனைக் கொன்று அந்த புண்ணிய புருஷர்களை மீட்காதோ. நானென்ன செய்வேன்? ...........இதை செய்யலேன்னா என் பிள்ளையும் வெட்டிடுவேன்கறானே இந்த மகாபாவி ......... மகா பாவி இவன் சுகமா இருப்பானா? ........அவனுக்கும் கேடு வாராதோ' எனப் பலவாறாக புலம்பினாள். பூமியிலே புரண்டு புரண்டு அழுதாள்.
.............தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>