Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 7

நிலைமை அங்கே அப்படியெல்லாமிருக்க ராம லஷ்மணர்களையும் அவரது சைனியங்களையும் தனது வாலினால் சுற்றிக் கட்டி இருந்த கோட்டையில் பாதுகாப்பாக வைத்திருந்த அனுமாருக்கு ராம லஷ்மணர்களை மயில் ராவணன் கடத்திக் கொண்டு போய் விட்டது தெரிந்திருக்கவில்லை.  அந்த வாலின் கோட்டைக்கு உள்ளே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த விபீஷணன் அனுமாரின் அருகில் சென்று 'ஐயா, அனுமாரே  அனைத்தும் பத்திரமாகத்தானே உள்ளது ?' என்று கேட்க அனுமார் கூறினார் ' வாருமையா விபீஷணரே. இப்போத்தானே அரை நாழிக்கு முன்னால என் வாயில் புகுந்து வெளி வந்தீர். எப்படி எனக்கே தெரியாமல் இப்போ மீண்டும் உள்ளே சென்றீர்?' என்று கேட்க பகீர் என்றது விபீஷணருக்கு. ஏமார்ந்து விட்டோமோ எனப் பதறியவாறு, 'ஒரு நிமிடம், வந்து விட்டேன்' எனக் கூறி விட்டு உள்ளே ஓடிப் போய் பார்த்தால் அங்கு ராம லஷ்மணர்களைக் காணோம்!!!.

'ஐயோ மோசம் போய்டோமே' எனக் கதறியவாறு அனுமானிடம் வந்து 'உள்ளே பாதுகாப்பாக இருந்த ராம லஷ்மணர்களைக் காணலை. நீர் யாரை உள்ளே விட்டீர். நான் கூறியது போலவே ஆயிட்டுது  இல்லே ....மயில் ராவணன் மாயாவி என்றேனே....ஏமார்ந்து விட்டீரே அனுமானே....அவன் என் உருவில் வந்து உம்மை ஏமாற்றி ராம லஷ்மணர்களை கடத்திட்டுப் போயிட்டான் ஐயா ...கடத்திட்டான். இப்போ என்ன செய்யர்தூன்னு  புரியலயே? ' என்று கூறி கோவென அழத் துவங்க அதைக் கேட்டு அப்படியே மூர்ச்சையானார் அனுமார்.  மூர்ச்சை தெளிந்ததும் நடந்ததையெல்லாம் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ள 'ஏமார்ந்து விட்டோமே. விபீஷணன் உருவில் மயில் ராவணன் வந்து தந்திரம் பண்ணி சொன்னபடி, சொன்ன நேரத்துக்குள் ராம லஷ்மணர்களை கடத்திச் சென்று விட்டானே. இப்போதென்ன செய்வது ?' என யோஜிக்கலானார்கள். அவர்களுக்கு எந்த உபாயமும் தெரியவில்லை என்பதினால் அனுமார் விபீஷணனிடம் கூறினார் 'ஐயா, விபீஷணரே, நான் செய்த தவறை நானே நிவர்த்திக்கிறேன். நீர்  எமக்கு பாதாள இலங்கைக்கு செல்லும் வழி மட்டும் கூறுவீராக' என்று கேட்டார்.

விபீஷணர் கூறினார் ' ஐயா அனுமந்தரே, பாதாள இலங்கைக்கு போவது அத்தனை எளிதல்ல. அது ரொம்பவே கடினம் என்பதால் நானொரு உபாயம் சொல்கிறேன்........கேளுமையா. நடு சமுத்திரத்திலே லட்ஷக்கணக்கான கடல் தாமரை படர்ந்திருக்கும். அவற்றில் ஒரு தாமரை பெரியதாகவுமிருக்கும். சரீரத்தை சுருக்கிக் கொண்டு அதன் தண்டுக்குள்ளே புகுந்து சென்றால் பாதாள இலங்கையின் அக்னிக் கோட்டை முதலில் தென்படும். அந்த கோட்டையின் உச்சியிலே மச்சவல்லனெனும் ஒரு ராட்ஷசன் இருப்பான். அவன் மகா பலசாலி. அவனை வெல்வது கடினம். அவனோடு ரெண்டரை லட்சம் சேனைகள் உண்டு. அவர்கள் ஒவ்வொத்தரும் ஒவ்வொரு விதத்தில் பலசாலிகள். தந்ரசாலிகள். அந்த கோட்டைகுள்ளே போனால் குளம் ஒன்று இருக்கும். அந்த ஊர் ஜனங்கள் எல்லாம் அந்த குளத்தில் இருந்துதான் பூஜைக்கு நீர் கொண்டு போவார்கள். அதையும் தாண்டிப் போனால் அந்த ஊரில் உள்ள அனைத்து கட்டடங்களும் அரண்மணை போலத்தான் இருக்கும். அங்கே போய் மயில் ராவணனின் அரண்மனை எதுன்னு கண்டு பிடிக்க வேணும். ஏனெனில் அவன் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பான். எது உண்மையான அரண்மணை ன்னும் தெரியாது ' 

அதைக் கேட்ட அனுமரோ 'இனியும் தாமதம் செய்வதில் பலனில்லை. உடனே கிளம்பணும்' என தீர்மானம் பண்ணிக் கொண்டு பாதாள இலங்கையை  தேடிக் கொண்டு கிளம்பினார். நடு சமுத்திரத்துக்கு சென்றவர் அங்கு ரெண்டு லட்சம் தாமரைகள் இருப்பதைக் கண்டு அவற்றில் பெரிய தாமரை செடியை தேடினார். அதை கண்டு கொண்டதும் தனது சரீரத்தை சுருக்கி வைத்துக் கொண்டு தாமரைத் தண்டில் உள்ளே ஒரு புகைப் போல புகுந்து சென்று பாதாள இலங்கையையும்  அடைந்தார்.

அவர் அங்கு போனதுமே 'இதென்ன நம் ஊரில் புதிய குரங்கு ஒண்ணு வந்துள்ளது ' என அனுமானை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு  இருந்த ராக்ஷசர்கள் அனுமானை சூழ்ந்து கொண்டு அவரை  பிடித்துத்  தாக்கப் பாய்ந்தார்கள்.  தன்னைப் பிடிக்க வந்த அனைவரையும் தாக்கிய அனுமான் தனது விஸ்வரூபத்தை எடுத்து அனைவரையும் தனது வாலில் சுற்றி கீழே அடித்தார். ராட்ஷசர்களை அவர் அடித்து அடித்து துவம்சம் செய்யத் துவங்க அந்த நேரம் பார்த்து அங்கு மச்சவல்லபனும் வந்து சேர்ந்தான். மச்சவல்லபனென்பவன் மயில் ராவணனின் நம்பிக்கைக்குரிய தளபதி . அந்த கோட்டையை பாதுகாக்க அவனை மயில் ராவணன் அமர்த்தியிருந்தான் .

அங்கு வந்த ஒரு வானரம் தம் வீரர்களை வெட்டி சாய்க்கிறதே   என்று கோபம் கொண்டு 'ஹேய் குரங்கே, நீ யாரடா இங்கு வந்து என் வீரர்களை அடிப்பது.....வா....வந்து என்னுடன் மோதடா' என கோபமாக கத்திக் கொண்டே வந்து அவனும் அனுமாருடன் போர் செய்யலானான். இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டாலும், அனுமானால் மச்சவல்லபனைக் வெற்றியும் கொள்ள முடியவில்லை. மச்சவல்லபனாலும் அனுமாரை எளிதில் வெல்ல முடியவில்லை. 'ஹைய் ....பூய் ....ஹூ.....ஹா.......ஹூ...ஹூ.....' என இருவருமே  கத்திக் கொண்டே முஷ்டியினால் ஒருவரையொருவர் அடித்தடித்துக் கொண்டு இருவரும் களைத்து விழுந்தார்களேயோழிய யாருக்கும் ஜெயம் கிட்டவில்லை.

அதைக் கண்ட அனுமானுக்கு ஓரே ஆச்சர்யம். அனுமார்  நினைத்தார் 'நான் இத்தனைபேரை அலட்சியமாக வென்றேன், கொன்றேன். ஆனா இவனை ஜெயிக்க முடியலயே. யார் இவன் இத்தனை பராக்கிரமசாலியா  இருக்கான் ?'. ........மூச்சிரைத்து எழுந்திருக்க முடியாமல் இருவரும் கீழே வீழ்ந்து கிடக்கையில் மச்சவல்லபனிடம் அனுமான் கேட்டார் 'பிள்ளாய், நீர் யார்? இத்தனை பலசாலியான உம்முடைய தாயாரும் தந்தையும் யார் என்பதை நான் உமக்கு எதிரியானாலும் எனக்கும் கூறுவீரா?'.

அதைக் கேட்ட மச்சவல்லபன் 'வாருமையா...வானரமே.....வாரும்....நீர் யார் என்னைக் கேள்வி கேட்க? நானெதற்கு உமக்கு பதில் கூற?. ஜாதி குலம் கெட்டவனே, சண்டைக் செய்ய வக்கில்லாமல் இதைக் கேட்டு என்ன திசை திருப்பு முயல்கிறாயா ....வா....எழுந்து வா...சண்டையிடுவோம்' என ஆக்ரோஷமாகக் கூறி எழுந்திருக்க முயல, அதுவும்  முடியாமல் அவனும் கீழே விழுந்து கிடக்கிறான். 

அதைக் கேட்ட அனுமார் மீண்டும் கேட்டார் 'இளம் பிள்ளாய் நீ என்ன சொன்னாலும் எனக்கு கோபமும் வரலே. ஏன்னும் தெரியலே. நான் சொல்வதைக் சற்றே காது கொடுத்துக் கேளு.  ஜாதி குலம் கெட்டவனே என்று எம்மைக் கூறினீரே. நான் என்ன ஜாதி என்பதயும் பின்னர் சொல்லறேன். முதலில் இதைக் கேளும்........... நான் உம்மிடம் தோற்று விட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் மூவாறு உலகிலும் அனேகபேருடனும்  சண்டைப் போட்டு அவர்களை எல்லாம் பந்தாடி துவம்சம் செய்திருக்கிறேன். அதென்ன பாவமோ உம்மை என்னால் வெல்லவும் முடியவில்லை. கொல்லவும் முடியலே. நான் வானரமாவே இருக்கேன். ஆனாலும் என் பேரில் தயை செய்து நான் இங்கிருந்து போகும் முன் நீர் யார் என்பதையும், இத்தனை பராக்கிரமசாலி நீர் ஏன் மயில் ராவணனிடம் சேவகம் செய்கிறீர் என்பதையும் தயை செய்து கூறையா' எனக் கைகளைக் கூப்பிக் கேட்டார்.

நல்லதொரு வீரன் நம்பிக்கை இழந்தவனைக் கொல்ல மாட்டான் என்பதை நன்கே அறிந்திருந்த  மச்சவல்லபன் நெஞ்சில் ஈரம் பூத்தது. ராட்ஷசனாக இருந்தாலும் சாஸ்திரமும் தெரிந்தவன். பண்பும்  கொண்டவன். விதியாலே இங்கு சேவகம் பண்ண வந்துட்டான். கைகூப்பிக் கேட்பவரை கொல்வது மகாபாபம் என்பதை அறிந்தவன். அவனுக்கிருந்த அந்த நல்ல குணத்துக்கெல்லாம் கூட  ஒரு காரணம் இருந்தது. அவன் வந்த கோத்திரம் அப்படி.  அவனும் பிறவியிலேயே ராட்ஷசனுமில்லே, அசுரனுமில்லே ? 
............தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>