Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 6

$
0
0
அவர்களனைவரும் வந்து சொன்ன சேதி அனைத்தையும் கேட்ட மயில் ராவணன் யோசனை செய்தான். 'இனி இவாள எல்லாம் நம்பிப் பிரயோஜனமில்லே. நான்தான் போய் தந்திரமோ, மந்திரமோ, மாயமோ எதேகிலும் செய்து கச்சிதமாக காரியத்தை முடிக்கோணும். வேறு வழி இல்லே'. இப்படி எண்ணியவன் அனைவரையும் பத்திரமாக அங்கேயே தான் வரும்வரை காத்து இருக்க சொல்லி விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான். வால் கோட்டை அருகே வந்ததும் தன்னை விபீஷணன் போல உருமாற்றிக் கொண்டான். வெற்றிலையில் மையையும் தடவிப் பார்த்து அனுமானின் முகம் எங்குள்ளது  என்பதைக் கண்டு பிடித்தும் விட்டான். அவன்தான் மாயாவி ஆயிற்றே.

மெல்ல மெல்ல அனுமானின் காதருகில் சென்று 'ஐயா அனுமனே, பத்திரம்....பத்திரம்....எச்சரிக்கையாக இறும்...... ....ரொம்பவே   எச்சரிக்கையாக இரும் .... பதினைந்து நாழியாகப் போகிறது. கோட்டைக்கு வெளியே எல்லாமே சரியா இருக்கு. அனைத்தையும் பார்த்துட்டேன். எல்லாமே சரியாக இருக்கு. நல்ல வேளை ....உள்ளே நுழைய  வந்த களவாணி எல்லாருமே ஓடிட்டான்......... உள்ளே எல்லாம் சரியா இருக்கான்னு பாக்குறேன். வழியை விடுங்கோ  ?'

அதைக் கேட்ட அனுமார் விபீஷணனே கூறுவதா நினைத்து வாயை திறக்க அவர் வாயில் புகுந்து விபீஷணனும் செல்ல அந்த வழியும் காதின் வழியே செல்வதைக் கண்டு கொண்டான். காதில் இருந்து வெளியில் வந்தவன் கோட்டைக்குள் புகுந்து தனது மாயத்தால் அங்கிருந்த அனைவரது புத்தியையும்  ஷண நேரத்துக்கு கட்டி வைத்து விட்டு, அது முடியும் முன்னேயே உள்ளே ராம லஷ்மணர்கள் படுத்திருந்த பர்ணசாலையை அடைந்து மாயா வினோதம் பண்ணி காளியின் அருளால் ராம லஷ்மணர்களை கைவிரல் அளவிலாக்கி, மயக்கமாக்கி, ஒரு சின்ன பெட்டிக்குள் அடைத்து உள்ளே  போனது போலவே வெளியிலும் வந்து பாதாள இலங்கையை அடைந்து அவர்களை காளி கோவிலில் பத்திரமாக பூட்டியும்  வைத்து விட்டான். அவர்களால் இனி அங்கிருந்து தப்ப முடியாது.

அனுமானின் வாய் வழியே வெளியில் வந்து திரும்பிப் போனபோதும்  'ஐயா அனுமனே, உள்ளே அனைத்தும் சரியாகவே இருக்கு. பதினைந்து நாழிகைக்கு இன்னும் பத்து சொட்டு நாழிதான் பாக்கி. மயில்ராவணன் எந்த உருவிலும் வருவான்....பார்த்து....கவனமாக இரும். நானும் வெளியில் சுற்றிக் கொண்டே இருந்து கண்காணிப்பேன்' என்று கூறி விட்டே ஒன்றும் தெரியாதவன் மாதிரி சென்றான். அனுமாரும் தன்னிடம் பேசிக் கொண்டு இருந்தது விபீஷணனே  என்றே நினைத்திருந்தார்.

மயில் ராவணன் ராம-லஷ்மணர்களை கடத்திக் கொண்டு சென்றபோது ஆகாயத்தில் இருந்து ஆகாசவாணி கூவியது 'அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்வது நல்லதல்லடா....வைகுண்டநாதர் அவதாரங்களை ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டதடா....நீர் அழிவது நிச்சயம். ..போ...போ....நீர் இத்தனை சிரமப்பட்டு ராவணனுக்காக இதை செய்கிறாயே. அவனும் ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத்தை இழக்கப் போறே.  மூர்கனே, உன் சகோதரி தூரதண்டியின் பிள்ளை உன் சிம்மாசனத்தில் அமரப் போகிறான்.  இந்த சத்திய வாக்கையும்  நீயும் பார்ப்பாய்....உன் சந்ததியினரும் பார்பார்கள்...போடா மூடனே....போ. சத்தியம் சொன்னால் இன்னும் கூட காலம் கடக்கலே.  ஒரு ஷணம் யோசனை செய்....ராம லஷ்மணர்களை விடுவித்து உன் தமையனிடம் கூறி சீதையையும் விடுதலை செய். இருவரும் ராமனிடம் சரண் அடையுங்கள். அப்போது நீயும் தப்புவாய். உன் தமையனும் கெளரவம் பெறுவான்...அதை செய்யலேன்னா உம்   இருவருக்கும் அழிவு நிச்சயம்...அழிவு சத்தியம் '

ஆகாசவாணி கூறியது மயில்ராவணன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவன் யோஜித்தான்   'அப்படியா சங்கதி....என் தங்கையின் பிள்ளை ஆட்சியை என்னிடமிருந்து பறிக்க உள்ளானா? அப்படியா சங்கதி?? அடடே ஆகாசவாணி....அவனை என்ன செய்கிறேன் என்று பார்' என கருவியவன் ராஜ்ஜியம் சென்ற உடனே ராம-லஷ்மணர்களை பாதுகாப்பாக அடைத்து வைத்தான். அடுத்த வேலையாக தூரதண்டியையும் அவள் பிள்ளையையும் சிறையில் அடைத்து கைவிலங்கு, கால் விலங்கு, மார் விலங்கு என அனைத்து விலங்கையும் போட்டு, ஒரு அறையிலே வைத்து அந்த அறையையும் பூட்டி   அதற்கிருந்த கதவுக்கெல்லாம் நாலு பக்கமும் நானூறு பூட்டும் போட்டு உணவு கொடுக்க மட்டும் சிறு ஓட்டைப் போட்டு அறையை  சுற்றி சுண்ணாம்பு சுவரும் எழுப்பி விட்டான். 'இப்போ பார்க்கலாம் எப்படி அவன் என் சிம்மாசனத்தில் அமருவான்னு?' என்று கருவியபடி நிம்மதியாக சென்றான்.
          ............தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>