Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan -5

$
0
0

'பிராணநாதா, நீவீர் எங்கே செல்கிறீர்?' என மயில் ராவணனைக் கேட்கவும் முகம் சுளுக்கிய மயில் ராவணனும் கூறுகிறான், 'அன்பே, ஒரு முக்கிய காரியத்துக்கு கிளம்பும்போது இப்படி அபசகுனமா வந்து புலம்பலாமா? இது ஒரு மனைவிக்கழகா? என் தாயாதி சகோதரன் ராவணனை இரண்டு மானிடர்கள் அவமானப்படுத்தி, அவன் சந்திதியினரையும், சேனைகளையும் நிர்மூலமாக்கி விட்டார்கள். அவனென்னை உதவிக்கழைத்தான். அவனுக்கும் ஒத்தாசை செய்வதா வாக்கும் கொடுத்தேன். என் தாயாதி அல்லவா? அவனுக்கு கெடுதியோண்ணு வந்தா, அது நம் வம்சத்துக்கும் கெடுதி இல்லையா? எம் சந்ததியினருக்கு தீங்கு செய்த அந்த இரண்டு மானிடர்களையும் காளிக்கு பலியிடுவதாக சங்கல்பம் செய்துள்ளேன். அதுக்காவே இப்போ போகிறேன்....என்னைத் தடுக்காதே....பெண்ணை....தடுத்து நிறுத்தாதே' என்று கூறியவுடன் வர்ணமாலி தன் மனதில் உள்ளதைக் கூறத் துவங்கினாள். 

வர்ணமாலி கூறுகிறாள் 'பிராணநாதா, நான் சொல்வதையும் சற்றே கேளுமேன். அந்த ராம-லஷ்மணர்கள் சாமான்யமானவர்கள் அல்ல என்று கேள்வி. அவர்கள் தெய்வத்தின் அம்சங்களாம். அதுவும் அனேகம்பேர்  சொல்லக் கேட்டேன். அதை ஆகாசவாணியும்  கூட நான் காளிக்கு பூஜை செய்யப் போனபோது வழி நெடுக என் காதில் வந்து கூறியது .  உமது தாயாதி சகோதரன் ராவணனுக்கு பொல்லாத காலம் வந்துள்ளது போலும். அதனால்தான் அவர் அபலைப் பெண்ணான சீதையை பேடி போல அவோ தனியா இருக்கையில் தூக்கிக் வந்து அதனால் ஏற்பட்ட பின் விளைவினாலே  புத்திர, மித்ரர்களையும் சேனைகளையும் அழித்துக் கொண்டுள்ளார்.
 
நாதா அதனால்தான் நான் ஒரு விஷயம் உமக்கு மீண்டும் மீண்டும் சொல்வேன். அதையும் காது கொடுத்துக் கேளும். உமது தாயாதியார் செய்த காரியம் தீய காரியம் என்பதால்தான் அவர் உடன் பிறந்த விபீஷணரும் ராமரை சரணடைந்து, சகோதரனுக்கு புத்தி சொல்லிப் பார்த்து சண்டையை தடுக்கப் பார்த்தார். அவரையும் ராவணன் லட்சியம் செய்யாமல் புத்தி சொன்னவனையும் தூர விலக்கினார். அதன் பலனா தன் சுற்றத்தாரையும் யுத்தத்திலே இழந்து அவரும்  நிர்கதியா நிக்கறாரே. அதனால்தான் கூறுகிறேன், நீர் ராம-லஷ்மணர்களை பிடித்து வந்து பாவ காரியத்தை சுமக்காதீர். அது உமக்கு வேண்டாமையா. ராம-லஷ்மணர்களை உம்மால் வெல்ல முடியாதையா....அதனால்தான் நீரும் உமது தாயாதி வழியில் நாசமாகி விடுவீரே என அஞ்சுகிறேன்' என அழுது புலம்பி அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு கதறினாள்.

அவள் எத்தனையோ எடுத்துக் கூறியும் மயில் ராவணனும் கேட்கவில்லை, சுற்றி இருந்த மந்திரிமாறும் அவளை கேவலமாக பார்த்தார்கள். 'புத்தி பேதலித்தவள் பினாத்திக் கொண்டே இருக்கட்டும்' என அவளை உதாசீனப்படுத்தி விட்டு சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் எனும் நான்குபேரும் பாதாளத்தின் அடியில் இருந்த அரண்மனையை விட்டு பெரும் படையோடு வெளிக் கிளம்பி அக்னிக் கோட்டையைத் தாண்டி சமுத்திரத்தின் மேலே வந்து அதன் கரையில் நின்றார்கள்.

மயில் ராவணன் தனது சேனாதிபதிகளிடம் கேட்டான் 'இப்போ சொல்லுங்கோ, யார் அந்த ரெண்டு பேரையும் பிடித்து வர முதலில் போவீர்கள்?'. பட்டென தட்டேன எழுந்தான் சதுரன். 'சுவாமி, நானிருக்க, மற்றவரை நீர் ஏன் கேட்கோணும்.  என்னை அனுப்பினால் அந்த எழுபது வெள்ளஞ் சேனையையும் நொடிப் பொழுதில் கொன்று தின்று வருவேன். என்னை முதலில் அனுப்புமையா' என்று கூற மயில் ராவணனின் முகமும் மலர்ந்த தாமரைப் போலாக மயில் ஓடோடி வந்து சதுரனை கட்டிப் பிடித்து பாக்கும் வெற்றிலையும் மடித்துக் கொடுத்து 'சென்று வாருமையா என் நல்புத்தியாரே' என சந்தோஷமாக அவனை வழி அனுப்பி வைத்தான். 

மயில் ராவணன் தன்னை வெற்றியோடு வழி அனுப்பியதைக் கண்டு மகிழ்ந்து போன சதுரன் இருட்டிலே மெல்ல மெல்ல அனுமான்  வாலினால் கட்டி இருந்த கோட்டையை அடைந்தான். சுற்றி சுற்றிப் பார்த்தான். உள்ளே நுழைய வழியே தெரியலே. 'அண்ணாந்து பார்த்தா ஆகாயம் மட்டும் தெரியுது. கீழே பார்த்தா வாலும் பூமிக்குள்ளே போகுதே!!!' எப்படியாக வாலைக் கொண்டே கட்டப்பட்டு இருந்த கோட்டைப் பார்த்து மனதிலே வியந்தவன் 'இதென்னடா, புதுமாதிரி இருக்கு? நான் என் வாழ்நாளிலேயே இப்படி ஒரு கோட்டையை கண்டதில்லையே. பாதாளம் முதல் ஆகாயம்வரை படந்திருக்கும் இதில் வாசலும் காணோம், வழியும் காணோம்! வாசல் கதவெங்கேன்னு பார்த்தா அது கூட புரியலயே. இதென்னடா புது தினுசுக் கோட்டை? இதிலெல்லாம் ஒருவராலும் நுழைய முடியாது' என குழப்பமுற்று ஓடோடி மயில் ராவணன் முன்னால் சென்று தலை குனிந்து நிற்கிறான்.
 
'வாருமையா தீரரே, இதோ ஆச்சூ, அதோ  போச்சூனு ஓடினீரே, போன காரியம் என்னவாச்சு ? தலை குனிந்து நிற்கிறீரே....போன காரியம் என்னவாச்சு?' என மயில் ராவணன் கேட்க சதுரன் தலை நிமிராமல் தான் கண்ட அதிசயத்தைக் கூறி 'அதுக்குள்ளப் போக நம்மால முடியாது சாமி' என்று கூற ' வாயை மூடும் மூடரே ....வாயை மூடும். உம்மால் முடியலேன்னா, நான் போய் அதை செய்து காட்டுவேன் பாரும்' என சூளுரைத்தான் பக்கத்திலிருந்த சாத்திரன்.
 
அவனும் போன வேகத்தோடே திரும்பி வந்து சதுரன் சொன்னதையே வெட்கி, நாணி சொன்னான். சாத்திரன் பிழைத்தோம், தப்பித்தோம் என்று உடம்பெல்லாம் காயம்பட்டு ஓடி வந்திருந்தான். வாலுக்குள்ளே நுழைய முயன்றவனை வாலினாலேயே எலும்பு நொறுங்கும் அளவு பூமியில் தேய்த்து தேய்த்து சதை எல்லாம் பிய்ந்தே போகுமளவு அனுப்பி இருந்தார் அனுமான். அடுத்தடுத்து போன  மற்ற இருவரும், அதாவது சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் என்ற இரண்டு பேர்களுமே மற்றவர் சொன்னதையே வந்து வெட்கத்தோடும், பயத்தோடுமே கூறினார்கள்.
...........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>