Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan -4

$
0
0
அனைவரும் தடால், துடாலேன ஓடிப் போய் அனுமானை அழைக்க அவரும் தாமதிக்காமல் ஓடோடி வந்தார் தன் ஸ்வாமியைப் பார்க்க. துள்ளி குதித்து வந்தவர் அப்படியே ராமனின் காலில் விழுந்து வணங்கி ' ஐயனே. எம்மை ஏன் அழைத்தீர். நானென்ன செய்யோணும்?' என்று பவ்யமாக கேட்க அங்கிருந்த சுக்ரீவரும் நடந்ததனைத்தையும் அவருக்கு விவரம் கூற யோசனையில் அமர்ந்தார் அனுமார். 'இன்று ராத்ரியை எப்படி கடப்பது ? அதைக் கடந்து விட்டால் சூளுரைத்தவனின் சபதம் அழிந்து போகுமே. அதுகென்ன செய்யலாம்?'

அனைவரும் அதையே யோஜிக்க 'வந்ததையா ஒரு யோசனை....வந்ததையா நல்லதொரு யோசனை' என சுக்ரீவரும், சாம்பவானும் ஆர்பரித்து எழுந்து வந்தவர்கள் அனுமானுக்கொரு உபாயத்தை சொன்னார்கள் 'இன்று ராத்திரி முழுதும் உம்முடைய வாலினாலே அனைவரையும் சுற்றி கோட்டை மாதிரி சுற்றிக் வைத்து விட்டால் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி வந்தால் வெட்டியும் சாய்க்கலாம். உயிரோடும் புதைக்கலாம். உம்மால் மட்டுமே வாலினால் ஆகாயத்தைத் தொட்டமாதிரியும், பூமிக்குள் புதைந்த மாதிரியும் இருக்குமொரு கோட்டையைக் கட்ட முடியும். நீரே அதை செய்யோணும்....ராமனின் பக்தனே ...நீரே அதை செய்யோணும்' எனக் கூறினார்கள்.

அதைக் கேட்ட அனுமானும் 'வாரும் ஐயா சுக்ரீவரே, நல்லதோர் யோசனையும் தக்க சமயத்திலும் தந்தீரே. நானதை செய்ய மாட்டேன்னு சந்தேகப்படாதீர் ? நிச்சயம் செய்வேன்? பழுதில்லாமல் செய்வேன்... .நான் அதை இப்போவே செய்வேன். கவலை வேண்டாம். நான் கட்டும் வால் கோட்டைக்கு என் வாயில் புகுந்து காது வழியேதான் செல்ல முடியும் எனும் வகையில் நானொரு கோட்டையையும் இன்றே கட்டுவேன்' என சூளுரைத்தார்.

அடுத்து காரியம் மளமளவென ஆரம்பம் ஆயிற்று. ராமனின் எழுபது வெள்ள சேனைகளையும், ராம லஷ்மணர்களையும் சுற்றி, சுற்றி தன் வாலினால் ஆகாயத்தையும் பூமியையும் தொடும் அளவு கோட்டை ஒன்றை ஷணப் பொழுதில் கட்டினார் அனுமார். அந்த கோட்டைக்குள் போக வேண்டும் என்றால் அனுமானின் வாயில் புகுந்து காது வழியே வெளியேறி உள்ளே செல்ல வேண்டும். வேறு வழியா ஈயும் எறும்பும் கூட உள்ளே நுழைய முடியாது. அத்தனை நெருக்கமாக, இடைவெளி இல்லாம சுருட்டிக் கட்டப்பட்டிருந்த வால் கோட்டை அது.

உள்ளே பர்ணசாலையில் ராம லஷ்மணர் படுத்திருக்க விபீஷணரோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ' ஐயனே அங்கு காவல் இரு....ஐயனே இங்கு காவல் இரு...அப்பனே உறங்கிடாதே....அடே சேனைகளே, ஆடல் பாடலை பாடிக் கொண்டு நித்திரையை அழித்துக் கொண்டு காவல் இருங்கள்.....நாலு ஜாமமும் ஜாக்கிரதையாக கண் விழித்து இருங்கோ...கவனமா இருங்கோ...ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொருத்தர் காவல் இருங்கோ' என கூவிக்கொண்டே அங்கும் இங்கும் ஓடியபடி அங்கதன், நீலன், சாம்புவன், குமுதன் போன்றவர்களுக்கு கட்டளை தந்து கொண்டு தானும் முழித்திருந்தார். 'இதெல்லாம் ராமனை சுற்றி இருந்தவர்களின் சங்கதி. இப்போ மயில் ராவணன் என்ன செய்தான் என்ற அந்த பக்கத்துக் கதையை கேளுங்கோ ' என்று கௌதம முனிவருக்கு நாரதர் கூறிவிட்டு அதையும் கூறத் துவங்கினார்.

பாதாள இலங்கையில் இருந்த மயில் ராவணன் தனது ஆலோஜனையாரை, மந்திரிமார்களை, மாய விநோதர்களை அழைத்து, ராக்ஷஸ பிராம்மணர்களை தருவித்து சாஸ்திரமும் போட்டுப் பார்த்தான். சோழியும் போட்டான்.....பட்ஷி கூவல் சாஸ்திரமும் பார்த்தான். எல்லாமே அவனுக்கு சாதகமாகவே இருந்தது என்று அவன் ஆலோசகர்கள் கூறினார்கள். ஆனால் கூறிய அத்தனையுமே அவன் கிட்ட இருந்த பயத்தில் வந்த பொய்யே என்பதும் சத்தியம். ராத்திரி பதினைந்து நாழிகளில் நடைபெற்ற ஆலோசனைகளைப் கேட்டப் பின் சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் எனும் நான்கு பேரையும் கூட்டிக் கொண்டு ராம லஷ்மணர்களை கடத்தி வரக் கிளம்பியபோது, அபசகுனம் போல ஓவென என ஆர்பரித்துக் கொண்டே வந்த அவனது பிராண நாயகி (மனைவி) வர்ணமாலி அங்கு வந்து அவனை வழி மறித்தாள்.
............தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>