அப்படீன்னா அவன் யார்? மச்சவல்லபன் தன்னைப் பற்றி சொல்லலானான் 'வானவதாரப் புருஷரே, உம்மைப் பார்த்தால் பரிதாபம் அடைகிறேன். உம்மைக் கொல்ல என் மனதும் இடம் கொடுக்கலே. அதற்கான காரணம் எனக்கும் தெரியலே. என் அப்பன் யார் என்று கேட்கிறீரே, அதையும் சொல்றேன். செவி மடக்கிக் கேளும். என் தகப்பன் மும்மூர்த்திகளையும் ஒத்த பலமுடையவர். சுத்த வீரர், பராக்கிரமசாலி. ராமநாமத்தை தவிர வேறெதுவும் சொல்லாதவர் என்று கேள்வி. அவர் பெயரை அனுமன் என்கிறார்கள். என்னோட தாயாரும் திமிதி என்ற மீன் ஆவாள். அவள் இந்த சமுத்திரத்துலேதான் இருந்தாள். இப்ப எங்கேன்னு தெரியலே. என் பாட்டனார் வாயு பகவான் என்று சொல்லி இருக்கா. என்னை மச்சவல்லபன் என்று அழைப்பார்கள்'
மச்சவல்லபன் கூறியதைக் கேட்ட அனுமார் திடுக்கிட்டார் 'அய்யய்யோ..., இதென்னடா கூத்து? இதென்னடா கோலம்? நான் இவனோட அப்பனா? என் அப்பன் வாயுவும் இவனுக்கு பாட்டனா? இதென்ன கூத்து? இதென்ன புதுக்கதை? இல்லை........இருக்காது.......... என் அப்பனுக்கு என்னைப் போலவே இன்னொரு பிள்ளையும் இருக்கானா? அவர் பெயரும் அனுமனா? நான் மட்டும்தானே அனுமார்!!!! எங்கிருந்தையா வந்தார் இன்னொரு அனுமார் ........எங்கிருந்து வந்தார்? நானோ இதுவரைக்கும் கட்டை பிரும்மச்சாரி. திமிதி என்பவளை என் மனைவி என்கிறானே. நான் இலங்கைக்கு சென்று இருந்தபோது அங்கு பல ஸ்த்ரீகளும் தாறுமாறாக கிடந்தபோதும் யாரையுமே ஏறெடுத்தும் பார்க்காத நானா திருமணம் ஆனவன்? இதென்ன கோலம்....ஹே.......ராமா...என் பிராணநாத..' என தன்னுள்ளேயே குழம்பித் தவித்தவர் மச்சவல்லபனிடம் மீண்டும் கேட்டார்.
'எழுந்து நில்லும் பிள்ளாய் நான் கேட்கிறேன் திரும்பத் திரும்ப கேட்குரென்னு கோபிக்காதேயும், பொய்யாய் எதையும் சொல்லவும் செய்யாதீர் ....வேறெந்த கதையும் கூட கூறாதேயும் .....எனக்கொரு விஷயம் தெளிவாய் கூறுவீரா. உம்முடைய அப்பன் யாரோ அனுமன், அனுமான் என்கிறீரே, யாரைய்யா அந்த அனுமன்? அவர் இப்போ எங்கிருக்கிறார்? யாருக்கு சேவகம் செய்யறார்? நீர் ஏன் அவரை விட்டுட்டு இங்கேன் வந்துட்டீர்? எதையும் ஒளிக்காமல் எல்லாத்தையும் சொல்லுமையா ?'
மச்சவல்லபன் கூறலானான் 'அட வானரேஸ்வரா, உமக்கு என் மீது சந்தேகமா? நானொண்ணும் பொய்யையும் கூறல ....கதையையும் கூறல. நெஜம்தான் சொல்லறேன். அதையும் நன்கே கேளும். என் அப்பன் ராம லஷ்மணர்களுக்கு சேவகம் செய்கிறார். சுக்ரீவருக்கு அவரும் ஒரு மந்திரியாவார்' என்று கூற அனுமார் மீண்டும் அவனை சீண்டும் விதத்தில் சொன்னார் 'பிள்ளாய், நீர் மூட்டை மூட்டையாய் பொய் மட்டுமே கூறுறீர். நான் அனுமானை அறியாதவனென நினைத்தாயா? அவர் கட்டை பிரும்மச்சாரி ஆச்சே. அவருக்கு ஏதடா மனைவி? அவருக்கு ஏதடா பிள்ளை? நெஜத்தைக் கூறு. சத்தியமாகக் கேட்கிறேன்...நெஜத்தைக் மட்டுமே சொல்லோணும்' என்று கூறவும் பொங்கி எழுந்தார் மச்சவல்லபன்.
'ஒய் .....வானரமே ....என் பொறுமையை சோதிக்க வேணாம். நான் பொய் சொல்றேன் என நினைத்தீரோ ? ராமனின் மனைவி சீதையை ராவணன் தூக்கிட்டு வந்துட்டப் பின் சீதையைக் காணாமல் அனைவரும் தேடிக் கொண்டு இருந்தபோது, என் அப்பனார் அனுமானும் தன் பங்குக்கு சீதையை தேடி சமுத்திரத்தின் மீது வியர்க்க வியர்க்க பறந்து கொண்டு இருந்தபோது அவர் உடம்பில் இருந்து வழிந்த வேர்வை நேரா சமுத்திரத்தில் மீனாக இருந்த என் தாயார் திமிதியின் வாயில் வந்து விழ அவள் அதை முழுங்கினாள். அதனாலே கர்பமுற்ற வவுத்திலே நானும் அனுமானின் மகனாகப் பிறந்துட்டேன். நான் பிறந்ததும் என்னை சமுத்ர கரையிலே விட்டுட்டு அவளும் போயிட்டா.
அப்போ சமுத்ர கரையிலே கிடந்த என்னை அந்த பக்கமா போன என் பாட்டனார் வாயுபகவான் பார்த்துட்டு வந்து என்னை உச்சி மோர்ந்து கொஞ்சினார். என்னோட அங்கலட்ஷணமனத்தையும் பார்துட்ட அவரும் என்னை அவர் பேரன் என்பதையும் புரிந்து கொண்டு எனக்கு என்ன வேணும்னு கேட்க நானும் என் அப்பனைப் பார்க்கோணும்னு கேட்டேன். அதுக்கும் மேலே என் அப்பனுடைய பலத்துக்கு குறையாத பலம் வேண்டும் என்றும் கேட்டேன். அதற்கு அவரும் 'உன் அப்பனாரும் சில காலம் பொறுத்தே உனக்கும் கிடைப்பார். அவர் சீதையை தேடி இலங்கைக்கு சென்றுள்ளார்' என்ற விவரம் கூறினார். அதையே கூறிட்டு என் அப்பனாருக்குரிய பலத்தையும் எனக்கும் தந்தார். இப்போ புரியுதா என் அப்பனார் யார் என்று? நான் சொன்னதெல்லாம் உண்மைதானையா வானரமே' இப்படியாக மச்சவல்லபன் சொல்லவும் அனுமன் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதபடிக் கூறலானார்.
'மகனே, நான்தானடா உன் அப்பன் ......நானேதாண்டா அந்த அனுமன்' என்று கூற மச்சவல்லபன் திகைபுற்றான். வெட்கம் கொண்டு அடங்கி நின்றான். ' நீரா என் தந்தை?. அதெப்படி' என ஆச்சர்யத்தோடு கேட்க அவனை வாரி எடுத்து உச்சி மோர்ந்து தலையைக் கோதி விட்டபடி கண்ணீர் விட்டார் அனுமன். 'குமரா, நான் உன்னை இந்தக் கையாலா அடித்து விட்டேனடா... ரொம்ம வலிக்குதா குமரா' என ஆறுதல் கூறினார். அதன் பின் இருவரும் குசலம் பரிமாறிக் கொண்டு தத்தம் கதையைக் கூறிக் கொண்டப் பின்னர் அங்கு தான் வந்தக் கதைக்கான காரணத்தையும் அனுமார் மச்சவல்லபனுக்கு சொல்லத் தொடங்கினார்.
................தொடரும்