கிராம தேவதைகள் - 30
காசன்காடு எனும் இடத்தில் உள்ள
ஒரு ஆலயத்தில் முனீஸ்வரர் சிலை
போர்பனைக் கோட்டை முனீஸ்வரர்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
தங்கப் பனை மரக் கோட்டை முனிவர் என்ற அந்த கடவுள் உள்ள ஆலயம் புதுகோட்டை மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயம் வந்த கதை சுவையானது. ஒரு முறை சிவனும் பார்வதியும் ஆகாயம் மூலம் தமிழ் நாட்டின் மீது சென்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு குடை பிடித்தபடி அவர்கள் பின்னால் புஷ்பா தண்டன் என்ற அவர்களது உதவியாளர் சென்று கொண்டு இருந்தார். புதுக்கோட்டை வழியாக அவர்கள் சென்று கொண்டு இருந்த போது கீழே தெரிந்த குளத்தில் சில இளம் மங்கைகள் நீராடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் அழகில் மயங்கிய புஷ்பா தண்டன் அவர்களை பார்த்துக் கொண்டே நின்று விட தலைக்கு மேல் குடை இல்லாததைக் கண்ட சிவனார் திரும்பிப் பார்த்தார். புஷ்பா தண்டன் அங்கேயே நின்று கொண்டு இருந்ததைப் பார்த்து அவரை அந்த ஊரிலேயே ஒரு தங்க பனை மரமாகுமாறு சபித்து விட்டுச் சென்று விட்டார். அது இருந்த இடம் நல்ல வனப் பிரதேசம் ஆகும்.
அங்கு வேட்டை ஆடுவதற்காக பல வேடவர்கள் வருவது உண்டு. வந்த வேடர்கள் அந்த மரத்தில் தினமும் தங்கத்திலான ஒரு காய் காய்ப்பது உண்டு. அடந்த பனங்காய்களில் ஒன்று தங்கத்திலானது என்பதை அறியாத வேடர்கள் அதை அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கலசமங்கலத்தை சேர்ந்த கட்டுடையான் என்ற செட்டியாரிடம் சென்று விற்கத் துவங்கினார்கள். அவரும் அவர்களுக்கு நிறைய பணம் கொடுத்து தினமும் அந்த பழங்களை தன்னிடம் வந்து தருமாறு கூறினார்.
அந்த நாட்டை அப்போது ஆண்டு வந்தவன் சுந்தரபுரி சோழன் என்ற மன்னன். அவனுக்கு தொழு நோய் வந்தது. அவன் அந்த நோய் குணமாக வேண்டும் என்பதற்காக சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவரும் அந்த தங்க பனை மரத்தை கண்டு பிடித்து அதன் அருகில் உள்ள குளத்தில் குளிக்குமாறு கூற, அதை அவனும் செய்ய அவன் நோய் குணமாயிற்று .
அவன் அந்த மரத்தின் பழங்களைப் பற்றிய மகிமையைக் கேட்டறிந்தவுடன் அந்த செட்டியாரிடம் இருந்த தொண்ணூற்றி ஒன்பது தங்க பனை பழங்களையும் வாங்கிக் கொண்டு வந்து விட்டான். அதன் பின் மீண்டும் அந்த மரத்தைப் பார்க்க சென்றான் மன்னன். ஆனால் அந்த மரம் அங்கு காணப்படவில்லை. மறைந்து விட்டது. ஆனால் அந்த மன்னனோ அங்கு கடவுளைக் காணும் வரை தான் அங்கிருந்து செல்லக் கூடாது என முடிவு செய்து அங்கேயே தங்கி விட்டான்.
இதற்கு இடையில் அங்கிருந்து நான்கு கிலோ தொலைவில் இடயப்பட்டி என்ற கிராமம் இருந்தது. அங்கிருந்துதான் புதுக்கோட்டை அரண்மனைக்கு பால் கொண்டு வருவார்கள். அந்த பக்கத்தில் பால் எடுத்துச் செல்பவர்கள் அங்கிருந்த ஒரு மண் மேட்டின் மீது தடுக்கி விழத் துவங்கியதால் அந்த மண் மேட்டை சீராக்கத் அதை தோண்டினார்கள். ஆகவே அந்த இடத்தில் என்ன உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக அந்த மண் மேட்டைத் தோண்டத் துவங்கியதும் திடீரென அந்த இடத்தில் இருந்து ரத்தம் கசியத் துவங்கியது. அவர்கள் அங்கு ஒரு சிவலிங்கம் புதைந்து இருந்ததைக் கண்டனர்.
அந்த செய்தியைக் கேட்ட மன்னன் அங்கு உடனடியாக வந்து தங்க பனை பழங்கள் சிலவற்றை விற்று அதில் கிடைத்தப் பணத்தைக் கொண்டு அங்கு ஒரு ஆலயத்தைக் கட்டினான். மீதி இருந்த பழங்களை அந்த ஆலயத்தின் அடியிலேயே புதைத்து விட்டான். ஆலயத்தின் வடக்குப் பகுதியில் போர் பனைக் காளியையும், தெற்கில் ஐயனாரையும் பிரதிஷ்டை செய்து ஆலயத்தை அமைத்தான். அது போலவே ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் வேட்டையாடுபவர்கள் வணங்கி வந்திருந்த போர் பனை முனிஸ்வரரையும் ஸ்தாபனம் செய்தான். அவரையே அந்த கோட்டையின் காவலுக்கு நியமித்தான். தற்போது அந்த கோட்டை சிதைந்த நிலையில் இருந்தாலும் இன்றும் அங்கு அதே கோட்டை காணப்படுகிறது.
காசன்காடு எனும் இடத்தில்
உள்ள முனீஸ்வரர் ஆலயம்
சேஷைய சாஸ்தாரி என்பவர் புதுக்கோட்டை திவானாக இருந்த போது போர் பனை முனீஸ்வரருக்கு திரு கோகர்ண மலையில் இருந்து பெரிய சிலையை செய்து வந்தார். அவரே புதுகோட்டை நகரையும் நவீனமயமாக்கினார். அந்த சிலையை அங்கிருந்த பதினாறு வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துச் சென்ற பின் அதை நிறுவினார். பனை மரத்தில் கடவுள் தோன்றியதினால் அந்த பனை மரத்தை மக்கள் கடவுளாக வணங்கினர்.
அந்த மரத்தின் இலைகளை தின்றால் பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். திருமணம் தடை படும் பெண்கள் போர் பணை காளிக்கு வளையல்களைப் போடுகின்றனர். ஆடி மாதம் பதினாறாம் தேதி கருப்பருக்கு பால் குடம் எடுக்கப்படுகின்றது. அன்று சில மிருக பலிகளும் தரப்படுகின்றன.
------------
பின் குறிப்பு :-
முனீஸ்வரர் அவதாரம் பற்றிய சரியான குறிப்புக்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர் தக்ஷிணாமூர்த்தியின் அவதாரம் என்பது ஒரு நம்பிக்கை. அதன் கிராமியக் கதை இது. பிரும்மன் படைத்த உலகை ஒருகாலத்தில் அறியாமை சூழ்ந்தது. அப்போது உலகம் சீரழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரும்மாவின் மானசபுத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் சென்று அவருடைய உதவியை நாடினார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் தானே அவர்களுக்கு ஞானத்தைப் போதிக்க முடிவு செய்து தென் திசையை நோக்கி அமர்ந்து கொண்டு அவர்களுக்கு ஞானத்தை போதித்தார். ஆகவே அவர் ஞான குரு என அழைக்கப்பட்டார். அந்த தட்சிணாமூர்த்தியே உலகைக் காக்க பூமிக்கு மனித உருவில் வந்தபோது வேண்ட அவர் தென் திசை நோக்கிக் ஒரு குருவாக அமர்ந்து கொண்டு அவர்களுக்கு ஞானத்தைப் போதித்தார். அதனால் தென் திசையில் அமர்ந்து கொண்டு ஆசானாக (மூர்த்தி) இருந்தபடி போதித்த அந்த ரூபத்தை தக்ஷிண் (தென் திசை) மூர்த்தி என குறிக்கும் வகையில் தக்ஷிணாமூர்த்தி என அழைத்தார்கள். மேலும் முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து போதனை செய்ததினால் முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரர் ஆனார் அந்த தக்ஷினாமூர்த்தி என்பதைக் குறிக்கும் வகையில் தக்ஷிண முனீஸ்வரர் என்ற பெயரையும் பெற்றார். அதன் பின் பூமியில் இருந்த பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களைக் காக்க மனித உருவம் எடுத்து பூமிக்கு வந்த தட்சிணாமூர்த்தியே முனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அதனால்தான் முனீஸ்வரரைக் காவல் தெய்வமாக வணங்குகிறார்கள். இது ஒரு கிராமியக் கதை ஆகும். புராண வரலாறு இதற்கு இல்லை. - சாந்திப்பிரியா