கிராம தேவதைகள் - 29
உப்பாணிமுத்தூர்
காட்டு சுடலை மாடன்
காட்டு சுடலை மாடன்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
சேரன்மாதேவியில் இருந்து ஒன்பது கிலோ தொலைவில் உள்ளது உப்பாணிமுத்தூர் கிராமம். அந்த கிராமம் ஊர்காட்டு ஜாமீன் பரம்பரையை சேர்ந்தது.
சுடலை மடான் கேரளாவில் இருந்து அங்கு வந்தவர். அந்த காலத்தில் கேரளாவில் சில மந்திரவாதிகள் கடவுளைக் கூட கட்டிப் போடும் அளவுக்கு சக்தி பெற்றவர்களாக இருந்தனர். அப்போது சுடலை மடான் கேரள மக்களை பாதுகாத்து வந்தார். ஆகவே மந்திரவாதிகள் சுடலை மடானை கட்டிப்போட எண்ணினார்கள் .
சுடலை மடானினால் பலன் அடைந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக அவரை ஒரு பனை ஓலை பெட்டியில் வைத்து நதிக்குள் விட்டு விட்டனர். அந்த பெட்டி தாம்பரபரணி நதி வழியே சென்று ஊர்காட்டு ஜாமீனில் இருந்த உப்பாணிமுத்தூர் எனும் ஊரை அடைந்தது. நதியில் மிதந்து வந்த பெட்டியை எடுத்து திறந்தனர் ஊர்காரர்கள். அதில் ஏழு அடி உயர, கருத்த மீசையுடன் கூடிய முகத்தைக் கொண்ட சிலை இருந்தது. அது கேரளா நாட்டை சேர்ந்தவரைப் போன்ற உருவத்துடன் இருந்தது. பெட்டியில் இருந்த சிலை தானே சுடலை மாடன் என்றும் தன்னை அந்த நதிக் கரையில் வைத்து வணங்கி வந்தால் தான் அந்த ஊரை காப்பாற்றி வருவேன் என்றும் கூறினார்.
அந்த ஊர் ஊர்காட்டு ஜமீனை சேர்ந்தது என்பதினால் அந்த சிலையை ஒரு ஆல மரத்தடியில் பிரதிஷ்டை செய்தது அவருக்கு ஊர்காட்டு சுடலை மடான் எனப் பெயரிட்டு வணங்கலாயினர். அவர் அங்கிருந்தபடியே அந்த ஊரையும் கேரளாவையும் பாதுகாத்து வரலானார். இதற்கு இடையில் கேரளத்து மந்திரவாதிகள் அவரைத் தேடி அலைந்தனர். அவர்களில் ஒருவன் அவர் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துவிட்டு அவரை அழிக்க வந்தான். மந்தரித்த துணிகளை ஆலய வாயிலில் போட்டு அவரை முடக்கி வைக்க நினைத்தான். ஆனால் அங்கிருந்து சுடலை மடான் பல்லி உருவை எடுத்து தப்பிச் சென்றபோது அவரை கண்டு பிடித்து விட்ட மந்திரவாதி தனது வாளால் அதை வெட்ட முயல பல்லியின் வால் பகுதி மட்டும் துண்டானது. இதற்கு இடையில் அங்கு வந்த கிராமத்தினர் அந்த மந்திரவாதியை கண்டு பிடித்து அவனை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு கொளுத்தி விட்டனர்.
[மந்திரங்களை பயன்படுத்தும் மந்திரவாதிகள் ஆப்ரிக்கா நாட்டில்
நிறையவே உண்டு. அவர்களைப் போலவே மலையாள
மந்திரவாதிகளும் மந்திர தந்திரக் கலையில்
கை தேர்ந்தவர்கள். ஏவல் எனப்படும் மந்திர கலையை பயன்படுத்தி ஒருவரை
செயல் இழக்க வைக்க முடியும். மந்திரக் கலையை பிரதிபலிப்பதே இந்தப் படம்.
செயல் இழக்க வைக்க முடியும். மந்திரக் கலையை பிரதிபலிப்பதே இந்தப் படம்.
இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு
(Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு
உள்ள புத்தகத்தில் காணப்படும் படம். அந்தப் பெண்மணி
எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை
எனக்கு தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை
பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார். அவருக்கு என் நன்றி- சாந்திப்பிரியா]
சித்திரை , வைகாசி அல்லது ஆவணிகளில் கோடை வீட்டு சுடலை மடான் எனும் வைபவம் நடைபெறுகின்றது. மருளாடிகள் ( சாமி வந்தவர்கள்) மேள தாளத்துடம் நதிக் கரைக்கு சென்று பொங்கல் படையலும் , ஆடு பலியும் தருவார்கள். சுடலை மடான் அங்கு உயிருடன் உள்ளதாக நம்புகின்றனர். அங்கிருந்து ஆலயம் வந்தவுடன் அங்கும் பொங்கல் படைத்து ஆடு பலி தந்தபின் அவர்கள் சுடுகாட்டுக்கு போய் இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து வருவார்கள். மீண்டும் ஆலயத்தின் முன் பொங்கல் படைக்கப்படும். அப்போது விசித்திரமான ஒரு விழா நடைபெறும். கருப்பு ஆடு ஒன்றைப் பிடித்து வந்து பறவை போல அதை கம்பில் கட்டி வைத்து அதன் வயிற்றை கிழித்து அதனுள் வாழை பழங்களை வைத்து அதை ரத்தத்துடன் எடுத்து சாப்பிடுவார்கள். ஆட்டின் ரத்தம் வடியும்வரை அது நடைபெறும். அதை ''உருவத்தை சாப்பிடுதல் '' என்று அழைப்பார்கள். அடுத்த நாள் தேவதைகளை அபிஷேகம் செய்து வழிபட்ட பின் விழா நிறைவு பெறும்.
சுடலை மடான் ஆலயம் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. கிராமத்தினுள் உச்சி மகா காளி அம்மன் ஆலயமும் உள்ளது. அந்த ஆலயத்துக்குள் ஒவ்வொரு வருடமும் சுடலை மடானின் உருவம் களிமண்ணால் செய்யப்பட்டு வைக்கப்படும். விழா முடிந்ததும் அந்த சிலை நதியில் கரைக்கப்பட்டுவிடும்.
----------------
பின் குறிப்பு:
சுடலை மாடனைப் பற்றிய அதிக விவரம் தெரியவில்லை என்றாலும், அவர் சிவன்-பார்வதிக்கு பிறந்தக் குழந்தை என்றே கூறுகிறார்கள். அதற்கான சில புராணக் கதைகளும் உண்டு. ஒரு கதையின்படி பார்வதி தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என விரும்பியபோது, அவர் அவளுக்கு ஏற்கனவே வினாயகரும் முருகனும் பிள்ளைகளாக உள்ளதினால் மூன்றாவது குழந்தை எதற்கு வேண்டும் எனக் கேட்டார். ஆனாலும் பார்வதிக்கு மூன்றாவது குழந்தை வேண்டும் என்ற ஆசை போகவில்லை என்பதினால் அவளை முதலில் பாதாளத்துக்குச் சென்று அங்கு எரிந்து கொண்டு இருந்த விளக்கு திரியின் ஒரு நெருப்பு ஒளியை அவள் சேலையில் முடிந்து எடுத்து வருமாறு கூற அப்படி எடுத்து வந்தவள் சேலையில் இருந்து அந்த திரியின் நெருப்பை எடுத்து சிவபெருமானுக்குக் அவள் காட்ட முயன்றபோது அங்கு நெருப்பு இல்லாமல் ஒரு சதை இருந்ததாகவும், அதற்கு உயிர் கொடுத்ததும் அது ஆணாக மாறியது என்றும், சுடர் விளக்கில் இருந்து அந்தக் குழந்தை தோன்றியதினால் அதுவே சுடலை மாடன் என்று கூறப்பட்டது என்ற கிராமியக் கதை உள்ளது. வளர்ந்தக் குழந்தை பசி தாங்காமல் சுடுகாட்டில் இருந்த மாமிசங்களையும் உண்ணத் துவங்கியதினால், அது தேவலோகத்தில் இருக்க முடியாது எனக் கருதிய சிவபெருமான் அதை பூமிக்கு அனுப்பி , தன சார்பில் அதை பூலோகத்தைக் பாதுகாத்து வருமாறு கூறினாராம். இதனால்தான் சுடுகாட்டிலும் சுடலை மாடன் வசிப்பதாகவும், அங்கு எரிக்கப்படும் பிணங்களின் ஆவிகளை அவர் கைலாயத்துக்கு அனுப்பி வைப்பதாகவும் நம்பிக்கை கதையும் உள்ளது.
இப்படியாக பூமிக்கு வந்த சுடலை மாடன் பலரது உருவங்களில் அவதரித்தது எங்கெல்லாம் தான் அவதரித்தாரோ அங்குள்ள கிராமங்களில் கிராம தேவதையாக அமர்ந்து கொண்டு ஊரைக் காத்து வருகிறார் என்பது நம்பிக்கையாகும். - சாந்திப்பிரியா