Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

வெள்ளையம்மா சரித்திரம்

$
0
0


வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மாவின் சன்னதி   புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில்  உள்ளது.  காடையூர் என்ற பெயர் ஏற்பட்டதின் காரணமும் ஒரு அதிசய நிகழ்வுதான். 

முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். அந்த கால யுத்தங்களில் யானைப் படையே வலிமையான படையாகும் என்பார்கள். ஆனால் நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர். ஆகவே பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமான் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து வந்து அந்த யானைகளை தாக்கலானார். 

யானைகளை காரைக் 
குருவிகள் தாக்கலாயின. அவற்றில் ஒரு 
குருவியாக சிவபெருமானும் இருந்தார் 

சாதாரணமாக யானைகள் தமக்கிட்ட பணியில் கவனமாக இருக்கும். ஆனால் தம்முடைய கண்களையும், காதுகளையும் கொத்திக் கொத்தி நூற்றுக்கணக்கான காரைக் குருவிகள் காயப்படுத்தியதைக் கண்டு கோபமுற்ற யானைகள் செய்வதறியாமல் பிளிரத் துவங்கி மதம் பிடித்து தம்மை அழைத்து வந்த படையினரையே திருப்பித் தாக்கத் துவங்க, படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்துபோய்  எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம்  பிடித்தானாம். இதனால் மன்னனைக் காத்த காரைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது  காடையூர் என்ற பெயராயிற்று  என்பதாக கர்ண வழிப் பரம்பரைக் கதை உண்டு.

இதனால்தான் காடையூர் சிவபெருமான் ஆலயத்தில் முழுக்காதன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் வழிபடும் பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் மற்றும் அவர்களது குலதெய்வமான வெள்ளையம்மாள் சன்னதியும் உள்ளது.  காடையீஸ்வரரே  மன்னனுக்கு யுத்தத்தில் குருவி உருவில் வந்து உதவிய சிவபெருமான் ஆவார் என்ற நம்பிக்கையும் உண்டு. பங்கசாக்ஷி சிவபெருமானின் மனைவியான பார்வதியே.  இனி அந்த ஆலயத்தில் உள்ள  வெள்ளையம்மாள் தெய்வமான கதையைப் படியுங்கள் . 


முன்னொரு காலத்தில் காக்கேயம் எனும் ஊருக்கு பக்கத்தில் இருந்த கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்திருந்தார். அவருக்கு சில நிலபுலங்கள் உண்டு. அவருக்கு ஒரு பெண்ணும், நான்கு மகன்களும் இருந்தார்கள். பிறக்கும்போதே பெண் குழந்தையின்  சரீரம் வெள்ளை வெளீர் என இருந்ததினால் அவளுக்கு வெள்ளையம்மாள்  எனப் பெயரிட்டார்கள். நான்கு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். வெள்ளையம்மாள் திருமண வயதை எட்டினாள். ஆனால் அவர்கள் அவளை யாருக்கு மணமுடித்துத் தருவது என்ற கவலையில் இருந்தபோது பக்கத்து நிலங்களில் மாடுகளை மேயவிட்டுக் கொண்டு இருந்த ஏழை இளைஞன் ஒருவரைக் கண்டார்கள். அவர்கள் பார்த்தவரை அந்த இளைஞன் நல்ல குணம் கொண்டிருந்தான். தான் உண்டு தன்  வேலை உண்டு என வாழ்ந்து வந்திருந்தான். அவனும் அவர்களது இனத்தவரே ஆகும். ஆகவே அவனைக் கண்டவர்கள் அவனிடம் பேசி அவனுக்கே ஊரார் சம்மதத்துடன் வெள்ளையம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.  காலம் கடந்தது. 

வெள்ளையம்மாளின் கணவர் மாடு 
மேய்த்துக் கொண்டு இருந்தவன்

சில காலத்திலேயே வெள்ளையம்மாவுக்கு  மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. சில காலத்திலேயே வெள்ளையம்மாளின்  தந்தை  வயதாகி மரணம் அடைந்தார். மரணம் அடையும் முன்னால் தனது மகன்களையும், வெள்ளையம்மாளின் குடும்பத்தையும் அழைத்து, தனது மரணத்துக்குப் பின்னால் தன்னுடைய சொத்துக்களில் நிலபுலங்களில் ஒரு காணி நிலத்தை வெள்ளையம்மாளுக்கு  தரவேண்டும் என்று மகன்களிடம் கூறிவிட்டு மரணம் அடைந்தார்.  

தந்தையின் மரணத்துக்குப் பின்னால் அவருடைய மகன்கள் அவரவர்களுடைய மனைவிகளின் துர்போதனையைக் கேட்டு வெள்ளையம்மாளுக்கு சொத்தில்  காணி நிலத்தை தந்து விட்டால் தத்தம்  பங்கு குறைந்து விடுமே என எண்ணிக் கொண்டு  அவளுக்கு சொத்தில் எந்தப் பங்கையும் கொடுக்கக் கூடாது என முடிவு செய்தார்கள். வெள்ளையம்மாளின்  பலமே அவளது கணவன்தானே என்பதினால் வெள்ளையம்மாளுக்கு தெரியாமல்  அவனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அவனைக் கொன்று புதைத்து விட்டார்கள். ஆனால் அவர்களுடன் தனது கணவர் சென்றதையோ அல்லது அவர்கள் அவனைக் கொன்று விட்டதையோ அறிந்திடாத வெள்ளையம்மாளிடம் அவர்கள் வெள்ளையம்மாளின் நடத்தையில் சந்தேகம் கொண்டுதான்   அவளது கணவன் அவளை தவிக்க விட்டுச் சென்று விட்டான் எனக் கூறியதும் அல்லாமல் தாங்களும் அவளை சந்தேகிப்பதாகக் கூறினார்கள். அது முதல் தொடர்ந்து சில நாட்கள் அவளது நடத்தையைக் குறைக் கூறிக்கொண்டு இருந்தவர்கள் ஒருநாள் அவளையும் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளை அவர்கள் வீட்டை விட்டுத் துரத்தியபோது அவள் தனது  மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.  போதாததற்கு அவள் நான்காம் முறையாக அப்போது கர்பிணியாக வேறு  இருந்தாள். 

எங்கு செல்வது எனத் தெரியாமல்  பதுங்கி
இருந்த வெள்ளையம்மாளை  சர்தார் பார்த்தார்

எங்கு செல்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு சென்றபடி இருந்தவள் ஒரு காட்டுப் பகுதியில் சென்று பயத்தில்  ஒதுக்குப் புறமாக ஒரு இடத்தில் அமர்ந்து  இருந்தாள். அப்போது அந்த வழியே வந்து கொண்டு இருந்த அரசாங்கத்தை சேர்ந்த உயர் அதிகாரி பயத்துடன் அமர்ந்திருந்த அவளை கவனித்து விட்டார்.  அப்படிப்பட்ட அதிகாரிகளை  அந்த காலத்தில் சர்தார் என்றே அழைப்பார்கள். குதிரையில்  இருந்து  இறங்கி  அவள் அருகில் சென்று  அவளிடம் பேசி நடந்த அனைத்தையும் அந்த சர்தார் கேட்டறிந்து கொண்டார். அவள் கதையைக் கேட்டு மனம் இறக்கப்பட்டவர் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் பத்திரமாக தங்க ஏற்பாடு செய்தபின் தான், தான் அரசாங்க வேலையாக பல இடங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளதால் அவளை அங்கேயே தைரியமாக தங்கி இருக்குமாறும் தான்  திரும்பி வந்து அவளது குறையை தீர்ப்பதாக வாக்கு கொடுத்தார். 

சர்தார்  வேலை விஷயமாக சென்று விட்டு திரும்ப சில காலம் ஆயிற்று. அதற்குள் வெள்ளையம்மாளுக்கு  நான்காம் குழந்தையும் பிறந்து விட்டது.  சர்தார் திரும்பி வந்ததும் வெள்ளையம்மாளின்  சகோதரர்களை ஊரார் முன்னால்  வரவழைத்தார்.  வெள்ளையம்மாளை  வீட்டை விட்டு துரத்தியதின் காரணத்தையும், அவளுக்கு சேரவேண்டிய சொத்தை தராததின் காரணத்தையும் விளக்குமாறு கடுமையாக கேட்டு விசாரிக்கத் துவங்கியதும் அவர்கள் தத்தம் மனைவிகளுடன் சேர்ந்து தமது தவற்றை மறைத்துக் கொள்ளும் விதமாக அவள் நடத்தைக் குறித்து மீண்டும் சந்தேகத்தை எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் தம் மீது சுமத்திய அத்தனை அவதூறுகளையும் வெள்ளையம்மாள்  மறுத்ததும் அல்லாமல் கடவுள் மீது ஆணையாக தான் எந்த தவறையும் செய்யாத பதிவிரதை என சத்தியமும் செய்தாள். 

தான் எந்த தவற்றையும் செய்யாத பத்தினி 
என்று வள்ளியம்மாள் சத்தியம் செய்தாள் 

அதைக் கேட்ட அண்ணன்மார்கள் எங்கே அவளது வார்த்தைகளை சர்தார் நம்பி அவளுக்கு சாதகமாக தீர்ப்பை தந்து விடுவாரோ என பயந்துபோய் அவளால் செய்யமுடியாத சில நிபந்தனைகளைக் கூறி அவற்றை அவள் நிறைவேற்றினால் மட்டுமே அவள் கற்புக்கரசி என தாம் நம்புவோம் என்றும், அப்படி அவள் செய்து காட்டினால் அவளுக்கு சேர வேண்டிய சொத்தைத் தர சம்மதிப்போம் என்றும் கூறினார்கள்.  அவர்கள் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா?

மாடுகள் இழுத்துச் செல்லும் மாட்டு வண்டியில் மாடுகளை கட்டிவைக்க நுகத்தடி எனும் கட்டையை அதன் கழுத்தில் கட்டுவார்கள். அந்தக் கட்டை விசேஷ  மரத்தை வெட்டி நன்கு காயவைத்து அதன் கட்டையில் செய்தது. அது வேறு எதற்கும் பயன்படாது.  ஆகவே ஒரு நுகத்தடியை ஒரு இடத்தில் நட்டு வைத்து அதற்கு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.  நட்டு வைக்கப்பட்ட அந்தக் கட்டை துளிர்விட்டு செடியாக வளர வேண்டும். அது முதல் நிபந்தனை.

அடுத்த நிபந்தனை அந்த கிராமத்தில் உள்ள மண் குதிரையின்  மீது அவள் ஒரு குடம் நீர் ஊற்றவேண்டும். அப்போது அந்த குதிரை சற்று நேரம் உயிர் பிழைத்து எழுவது போல எழுந்து நின்று கனைக்க வேண்டும்.

மூன்றாவது நிபந்தனை என்ன என்றால் நுகத்தடிக்கு நீர் ஊற்றவும், குதிரை மீது நீர் ஊற்றவும் எடுத்து வரப்படும் பானை காய வைத்து பக்குவப்படுத்தி வைக்கப்படாத பானையாக இருக்க வேண்டும். அவள் பத்தினியாக இருந்தால் அந்த மண் குடம் தண்ணீரில் கரையாது.

அதைக் கேட்ட சர்தார் திகைத்தார். அவளை ஏமாற்ற அவர்கள் அவளால் செய்ய முடியாத நிபந்தனையை வேண்டும் என்றே விதிக்கிறார்கள். அவளுக்கு நீதி கிடைக்காவிடில் அவளையும் அவளது கணவரைக் கொன்றது போலவே அவர்கள் சதி செய்து கொன்று விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டதினால் அவளை அந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்குமாறு கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ தான் ஒரு பதிவிரதை என்பது சத்தியமானதினால்  அவர்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அவற்றை செய்வதாகவும், கடவுள் இருந்தால் சத்தியவாதியான  தன்னைக் காப்பாற்றுவார் என தீர்மானமாக கூறி விட ஊர் ஜனங்கள் முன்னால் மண்குதிரை இருந்த  இடத்தின் அருகில் ஒரு நுகத்தடியை எடுத்து வந்து நட்டார்கள். ஒரு குயவனிடம் இருந்து பக்குவப்படுத்தாத பானையையும் கொண்டுவந்து வெள்ளையம்மாவிடம் தந்தார்கள். 


வெள்ளையம்மாளோ அதை சர்வசாதாரணமாக தனது தலையில் வைத்து கிணற்றருகில் எடுத்துச் சென்று அதில் நீரை நிறப்பி மீண்டும் தனது தலையில் வைத்துக் கொண்டு வந்தாள். மண் குடம் நீரில் கரையாமல் இருந்தது. நட்டு வைக்கப்பட்டு இருந்த நுகத்தடி மீது குடத்து நீரை ஊற்ற சற்று நேரத்திலேயே அதில் சின்ன சின்ன இலைகள் தோன்றின.  அடுத்து மண் குதிரை மீது நீரை ஊற்ற சட்டென எழுந்த குதிரையும் கனைத்து விட்டு அமர்ந்தது.  அத்தனை சம்பவங்களையும் பார்த்த அவளது சகோதரர்கள் பயந்து போனார்கள். தாம் செய்த தவறை உணர்ந்தார்கள். தமது சகோதரி தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அவளுக்கே தமது தந்தையின் அனைத்து சொத்தையும் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வேறு ஊருக்கு சென்று விட்டார்கள்.

 வெள்ளையம்மாள்

அதன் பின் வெள்ளையம்மாள் பலகாலம் அந்த ஊரில் வாழ்ந்து வந்திருந்தப் பின் ஒருகட்டத்தில் தெய்வமாகி விட்டாள். அவளை அந்த ஊரில் இருந்த அனைவருமே வணங்கி வழிபடலானார்கள். அவள் வழிவந்த இனத்தவரே முழுக்காதன் சமூகத்தினர் என்கிறார்கள். 

இருதயாலீஸ்வரர் ஆலயக் கதை

$
0
0
 
நாயன்மார் எனும் சிவனடியார்கள் மொத்தம் அறுபத்தி மூன்று பேர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்திருந்தக் காலம்  கி.பி 400-1000 என்பதாகும். அந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களைக் குறித்த குறிப்புக்கள் பெரிய  புராணத்தில் காணப்படுகின்றது.  சிவனடியார்களான அந்த நாயன்மார்களுக்கு அனைத்து  சிவாலயங்களிலும் சிலைகள் உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டின் சென்னையில்  உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் அறுபத்தி மூவர் எனும் விழாவே ஒவ்வொரு வருடமும்  நடைபெறுகிறது என்பதில் இருந்தே அவர்களது  பெருமையைப் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நாயன்மார்களில் ஒருவரே பூசலார் என்பவர். 

பரம ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர், பெரும் சிவபக்தர். அவர் தினமும் வீட்டருகில் இருந்த சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்து அதை பூஜித்தப் பின்னரே வீடு திரும்புவார். ஆனால் அந்த ஆலயமோ மேல்கூரை இல்லாத ஆலயம் ஆகும்.  மேல்கூரை இல்லாததினால் அந்த சிவலிங்கம்  மீது மழை காலத்தில் பெய்த மழை நீர் விழுந்து ஓட, வெயில் காலத்தில் வெயில் அதன் மீது விழுந்து அதை சுற்றி இருந்த பகுதியை தகிக்க வைத்தது.  


அந்த நிலையைக் கண்ட பூசலார் மனம் வருந்தினார். வெயில் மற்றும் மழையில் இருந்து சிவலிங்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால்  அதன் மீது ஆலயம் அமைக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் அவரே ஏழை எனும்போது எங்கிருந்து பணம் இருக்கும்? தனது ஆசையை பலரிடமும் கூறியும் யாரும் ஆலயம் எழுப்ப தேவையான பணத்தைத் தர முன்வரவும் இல்லை. அத்தனைப் பணமும் அவர்களிடம் இல்லை. 

ஆகவே மனம் சோர்ந்து போனவர் இனி தனது உள்ளத்திலேயே அந்த சிவலிங்கத்துக்கு ஆலயம் எழுப்பிட முடிவு செய்தார். ஒருநாள் சிவலிங்கம் முன்பாக நின்று கொண்டு  'சிவபெருமானே, என்னால் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட முடியவில்லை, ஆனாலும் வேறு எந்தப் பிறவியிலாவது உனக்கு ஆலயம் அமைப்பேன். அதற்கான தேவைகளை நீதான் பூர்த்தி செய்து வைக்க வேண்டும்'என்றுக் கூறினார். அன்று இரவு அவருக்கு கனவிலே தோன்றிய சிவபெருமான் கூறினார் 'பக்தா, நீ ஏன் கவலைப்படுகிறாய். இந்த ஜென்மத்திலேயே உன்னால் முடியாவிடிலும் உன்மூலம்  ஒரு ஆலயம் எனக்கு அமைக்கப்படும். ஆகவே நீ எனக்கு எப்படி ஒரு ஆலயத்தை அமைக்க வேண்டும் என்பதை மனதிலேயே கட்டி முடித்து விடு. அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து வை. நான் அதில் கலந்து கொண்டு உன்னை சிறப்பிப்பேன்'  என்று கூறிவிட்டு மறைந்தார்.

மறுநாள் காலை எழுந்த பூசலார் மனதை திடமாக்கிக் கொண்டார். சிவபெருமான் கனவில் கூறியபடி ஒரு ஆலயத்தை இதயத்திலேயே அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயம் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என மனக்கண்ணில் அதன் வடிவத்தை அமைத்துக் கொண்டார். கருவறை, தியான மண்டபம் முதல், சுற்றுப் பகுதி, மதில்சுவர் என அனைத்தும் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என அத்தனை   நிலைகளையும் மனதிலேயே வடிவமைத்துக் கொண்டார். அதன் பின் தினமும் ஆலயத்துக்கு சென்று சிவலிங்கத்தை வழிபடும்போது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பார். சிவலிங்கத்தை சுற்றி கொத்தனார்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவது போல மனத் திரையில் கனவு கண்டார்.
பூசலாருக்கு மனக்கண்ணில் உருவான ஆலயம்.
பின்புறம் உள்ள ஆலயப்  படத்தையும், கிராமிய 
சூழ்நிலையையும்  வரைந்துள்ளவர் 
---  திருமதி Subhashini Harish  ---

முதல் நாள் தியானத்தில் அந்த ஆலயத்துக்கு அடித்தளம் அமைப்பதில் இருந்து துவங்கி ஒவ்வொரு நாள் தியானத்தின்போதும் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுவதைப் போல மனதில் ஆலயத்தை எழுப்பிக் கொண்டே இருந்தார். காலம் கடந்து கொண்டு இருந்தது. இப்படியாக  தினம் தினம் அந்த சிவலிங்கத்தை வணங்குகையில் தனது மனதிலேயே ஆலயத்தை கட்டிக் கொண்டு இருந்தார்.  ஆலயம் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்க அந்த ஆலயம் அமைக்க எத்தனை ஆண்டுகள் தேவையோ அத்தனை ஆண்டுகள் அந்த சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஆலயத்தை எழுப்பி வந்தார்.  முடிவாக ஆலயமும் கட்டப்பட்டு  முடிவுற்றது. இனி கும்பாபிஷேகம்  செய்ய வேண்டியதே மீதம் இருந்தது. அதற்கும் தேவையான தேதியைக் குறித்துக் கொண்டு கும்பாபிஷேக  வைபவத்துக்கான ஏற்பாடுகளையும் இதயத்துக்குள்ளேயே  செய்யலானார்.

இந்த நிலையில் காஞ்சீபுரத்தை ஆண்டு வந்திருந்த பல்லவ மன்னனான காடவர்கோன்ராஜசிம்மன்என்பவர் காஞ்சீபுரத்தில் உண்மையிலேயே ஒரு சிவன் ஆலயத்தைக் கட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆலயமும் பூசலாரின் மனக்கண்ணில் கட்டி முடித்த   அதே தினத்தில் முடிவுற்றது.

பூசலார்  எந்த தேதியில் கும்பாபிஷேகத்தை நடத்த நினைத்திருந்தாரோ அதை அறிந்திடாமல் பண்டிதர்கள் பிரசன்னம் பார்த்துக் கூறியது போல அதே தினத்தன்று மன்னன் ராஜசிம்மனும் இங்கே காஞ்சீபுரத்தில் கும்பாபிஷேக வைபவம் நடைப்பெற ஏற்பாடுகளை செய்யலானார். அந்த மன்னனுக்கோ அல்லது பூசலாருக்கோ ஒருவருக்கொருவர் காஞ்சீபுரத்திலும் திருநின்றவூரிலும் அவரவர் எழுப்பிக் கொண்டு இருந்த ஆலயத்தின் விவரமோ இல்லை கும்பாபிஷேக  ஏற்பாடுகளோ தெரியாது.

கும்பாபிஷேக வைபவத் தேதியை குறித்த நாளன்று மன்னன் பூஜைகளை விமர்ச்சையாக செய்துவிட்டு சிவபெருமானிடம் மனதார வேண்டினார் 'சிவபெருமானே, நான் கட்டி முடித்துள்ள ஆலய கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்திடவும் நீங்களே எனக்கு ஆசி கூற வேண்டும். அன்று நீங்கள் ஆலயத்தில் எழுந்தருளி எங்களைக் காத்தருளி, எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும்.'

அன்று இரவு உறங்கிக் கொண்டிருந்த மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் அவருக்குக் கூறினார் 'மன்னா,  நீ கும்பாபிஷேக வைபவத்தை நடத்த நினைத்துள்ள நாளில் என்னால் ஆலயத்துக்கு வந்து பூரணாஹூதியை  ஏற்க இயலாது. ஆகவே தேதியை மாற்றி அமைத்துக் கொள்.'. 

மன்னன் கேட்டார்  'சிவபெருமானே, இப்படி நீங்களே கூறிவிட்டால் இந்த பக்தனால் என்ன செய்ய இயலும்?  தயவு செய்து  அதற்கான காரணத்தை இந்த பக்தனுக்கு கூறி அருள் புரிவீர்களா?' 

சிவபெருமான் கூறினார் 'மன்னா, அதே தேதியில் திருநின்றவூரில் என்னுடைய பக்தன் பூசலார் என்பவன் கட்டி உள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கு வருவதாக முதலிலேயே வாக்களித்து விட்டேன். அதனால் நீ கட்டி உள்ள ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்கான தேதியை தள்ளி வைத்துக் கொள்'.

கனவு கலைந்து எழுந்த மன்னன் திடுக்கிட்டான். தனக்கே தெரியாமல் திருநின்றவூரில் ஒரு சிவன் ஆலயம் கட்டப்பட்டு உள்ளதா? திடுக்கிட்டு விழித்தெழுந்த மன்னன் தான் கட்டிய ஆலயத்தின் கும்பாபிஷேக தேதியை தள்ளி வைத்தப் பின்,  அமைதியாக நினைத்துப் பார்த்தான் 'என்ன இது. தான் காஞ்சீபுரத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டிக் கொண்டு இருக்கையில் அங்கிருந்து அறுபது கல் (கிலோமீட்டர்) தொலைவில் தன் ஆளுமைக்கு உட்பட்ட நகரில் பூசலார் என்று யாரோ ஒருவர் சிவபெருமானுக்கு ஒரு ஆலயத்தை எழுப்பி உள்ளாரா?'.

நம்ப முடியாமல் போன மன்னன் உண்மையில் அங்கு ஆலயம் கட்டப்பட்டு உள்ளதா என்பதைக் காண எந்த நாளில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக சிவபெருமான் கூறினாரோ அந்த தினத்திலேயே தனது பரிவாரங்களை அழைத்துக் கொண்டு அதைக் காண  சிவபெருமான் கூறிய  அதே திருநின்றவூருக்கு விரைந்து சென்றார்.

ஆனால் அந்த ஊரோ சின்ன கிராமமாக இருந்ததைக் கண்டு வியந்தான். அனைத்து வீடுகளுமே குடுசையில் வேயப்பட்டு இருக்க, கண்களுக்கெட்டிய  தூரம்வரை எந்த ஆலயமும் கண்களில் தென்படாமலிருக்க, அங்கிருந்த மக்களிடம் ஆலயம் குறித்த விவரம் குறித்துக் கேட்க, அவர்களோ மன்னனிடம் என்னக் கூறுவது என்பது தெரியாமல் விழித்தார்கள். ஆலயம் இருந்தால்தானே அதைப் பற்றிக் கூற முடியும்.

ஆனாலும் அவர்களில் இருந்த வயதான ஒருவர் மன்னனிடம் வந்து கூறினார் 'மன்னா, எங்களுக்குத் தெரிந்து இந்த ஊரில் யாருமே ஆலயம் கட்டவில்லை. நாங்களோ ஏழைகள். எங்களால் எப்படி ஒரு ஆலயத்தைக் கட்ட முடியும். ஆனால் அதோ வெகு தொலைவில் ஊர் மூலையில் தெரிகிறதே சின்ன  தோட்டம் போன்ற  இடம்.  அங்குதான் ஒரு  திறந்தவெளியில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அதைதான் இங்குள்ளவர்கள் ஆலயமாகக் கருதி அங்கு சென்று அதை வணங்கி வருகிறோம். அங்குள்ள ஒரு மரத்தடியில்தான் பூசலார் என்றொரு சன்யாசி அமர்ந்து கொண்டு அந்த சிவலிங்கத்தை வணங்கி வருகிறார். அவர்தான் எங்களிடம் பல முறை அங்கு ஆலயம் அமைக்க பண உதவி கேட்டார். நாங்களோ ஏழைகள். எங்கிருந்து ஆலயம் கட்ட பணம் தர முடியும் என்று கூறி விட்டதினால் அவர் ஊருக்குள் வருவதை துறந்து விட்டு சிறு குடிசையைக் கட்டிக் கொண்டு அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  ஆகவே அவரிடம் சென்று கேட்டுப் பாருங்கள்'என்று கூற மன்னன் பூசலார் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

மன்னன் பூசலாரிடம் சென்றபோது அவர் கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார். மன்னன் வந்த ஓசையைக் கேட்டவர் கண்விழிக்க மன்னனும் அவரிடம் சிவபெருமான் தனது கனவில் கூறியதையும், தான் வந்த விவரத்தையும்  கூறிவிட்டு, அந்தப் பகுதியில் அவர் கட்டி உள்ள ஆலயத்தை காண ஆவலுடன் வந்துள்ளதாகக் கூற,  பூசலார் சற்றும் தயங்காமல் தான் எந்த ஒரு ஆலயத்தையும்  எங்கும் கட்டவில்லை  என்றும், சிவபெருமான் அவர் கனவில் தோன்றிக் கூறியபடியே சிவபெருமானுக்கான ஆலயத்தை தனது இதயத்திலேயே கட்டி வந்துள்ளதாகவும் அன்றுதான் அந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாகவும், தான் அதை உடனடியாக செய்யக் கிளம்பிக் கொண்டு உள்ளதாகவும், மன்னரும் அங்கு வந்து உள்ளதால் அவரும் அதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறும் மன்னனிடம் கேட்டுக் கொண்டப் பின் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.


இவர் என்ன பித்தரா அல்லது பைத்தியமா என்று அனைவரும் அரண்டு நின்று கொண்டிருந்தபோதே மன்னனுக்கும் அவர் பரிவாரங்களுக்கும் முன்னால் பெரிய காட்சி தோன்றியது.  அவர்கள் முன்னால் பெரிய சிவன் ஆலயம் காணப்பட, அதன் உள்ளே மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்க அந்த ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுவதைப் போலவே தத்ரூபமாகக் காட்சி அமைந்து இருந்தது. நேரம் நகர்ந்தது.

அனைவரும் ஆனந்தமாக தம்மை மறந்து அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பிரசாதத்தை வாங்கிக் கொள்ள,  அந்தக் காட்சி அப்படியே மறைந்தது. அனைவரும் திக்கிட்டுப் போய் நின்றிருக்க பூசலார் கண் விழித்தார். மன்னனும் அவர் பரிவாரங்களும் அப்படியே அவர் கால்களில் விழுந்து வணங்கினார்கள். ஆஹா, ஒரு சிவபக்தருக்கு சிவபெருமான் எப்படி அவர் ஆசையை நிறைவேற்றித் தந்துள்ளார் என்பதை எண்ணி வியந்தார்கள். மன்னனிடம் தான் கட்டிய ஆலய  கும்பாபிஷேக வைபவத்துக்கு வந்து விழாவை சிறப்பித்ததற்கு நன்றி கூறியப் பின் அடுத்தகணம் அங்கிருந்த சிவலிங்கத்தில் பூசலார் ஆத்மாவும் பறந்து போய் புகுந்துக் கொண்டு  அப்படியே மறைந்து போனார்.

மன்னனுக்குப் புரிந்தது. அங்கு இருந்த சிவலிங்கத்தின் மீது ஆலயம் எழுப்ப விரும்பிய பூசலார் அளவற்ற சிவபக்தி கொண்டவர். அவர் ஆசையை நிறைவேற்ற எண்ணிய சிவபெருமான் அவர் மனக்கண்ணில் அதை நடத்தி முடித்திருப்பதினால் எந்த மாதிரியான ஆலயக் காட்சியை கண்டாரோ அதே போன்ற சிவபெருமான் ஆலயத்தை அங்கு பூசலாருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே சிவபெருமானின் விருப்பமாக இருந்துள்ளது என்பதை அறிந்து கொண்டார். 

தன அரண்மனைக்குத் திரும்பிய மன்னன் உடனடியாக சிற்பிகளை வரவழைத்து, தமக்கு பூசலார் காட்டிய அதே மாதிரியான தோற்றம் கொண்ட ஆலயத்தின் வரைபடத்தை  தயாரிக்குமாறுக் கூறினார். அடுத்து  ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து வேலைகளும் மளமளவென நடந்திட, ஆலயம் எழுப்பும் பணியும் விரைவாகத் துவங்கின. அடுத்த சில  நாட்களிலேயே பூசலார் கட்ட நினைத்த அதே தோற்றத்தில் ஒரு ஆலயமும் எழுந்தது.  மன்னனும் இரவு பகலாக ஆட்களை வைத்து அந்த ஆலயத்தை பூசலார் இருந்த இடத்திலேயே கட்டி முடித்தப் பின்னர்,  தான் காஞ்சீபுரத்தில் கட்டிய ஆலயத்துக்கும் சேர்த்து அடுத்தடுத்து கும்பாபிஷேகமும் செய்து முடித்தார்.

இப்படியாக பூசலார் அமர்ந்திருந்த இடத்தில் கட்டப்பட்ட ஆலயம் இதயலீஸ்வரர், அதாவது இதயத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்ற பெயருடனும், காஞ்சீபுரத்தில்  மன்னனால் முதலில் கட்டப்பட்டு இருந்த ஆலயத்தின் பெயர் ஏகாம்பனாதர் ஆலயமென்றும் ஆயிற்று. அந்த இருதயாலீஸ்வரர் கோயிலில் கருவறையில் சிவபெருமானின்  லிங்க வடிவத்துக்கு  அருகே பூசலாரும் காட்சி தருகிறார்.


இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து திங்கள் கிழமைகளில் வழிபட்டு வந்தால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால் மற்ற அனைத்து சிவாலயங்களிலும் காணப்படுவது போல கருவறையில் சிவலிங்கம் தனியாக இல்லாமல் சிவலிங்கத்தின் பக்கத்திலேயே பூசலாரின் சிலையும் ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளதுதான்.

ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறார்.

இந்த ஆலயம் சென்னையிலிருந்து 33 கி.மீ. தொலைவில் அரக்கோணம்  ரயில் நிலையத்திலிருந்து 1-2 கிலோமீட்டர் தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருநின்றவூரில் அமைந்துள்ளது.

இதே ஆலயக் கதையைக் கொண்ட இன்னொரு ஆலயமும் திருநெல்வேலி மாவட்டத்தின் வீரகேளம்பத்தூரில் உள்ளது. அதையும் 1100 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் என்கிறார்கள். அங்குள்ள சிவலிங்கத்தை மனஈஸ்வரர்  என்கிறார்கள். அந்த ஆலய விலாசம் : 

 மூலவர் :இருதலாயஈசுவார் (மன ஆலய ஈஸ்வரர்)
ஆலய மூல அம்மன்/தாயார் :மீனாட்சி
ஆலய தல விருட்சம் :வில்வம்
ஆலய தீர்த்தம் : சிற்றாறு
காலம் : 1063 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வீரகேரளம்புதூர்
ஆலயம் உள்ள இடம் :வீரகேரளம்புதூர்
மாவட்டம் :திருநெல்வேலி


இருதலாயஈசுவார் எனும் மன ஈஸ்வரர் 
ஆலயப் படங்கள் மற்றும்  இருதலாயஈசுவார் 
ஆலயக் குறிப்பை தந்து உதவிய திரு பெ.இசக்கிராஜ்  
அவர்களுக்கு நன்றி

தோஷங்களை அழிக்கும் பூஷணிக்காய்

$
0
0

இந்த ஓவியத்தை கட்டுரைக்காக தந்து உதவியவர் 
Ranjani Ramesh
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வப்போது சிவபெருமான் மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டிருந்த சில அசுரர்கள் தமது பகை உணர்வைக் காட்ட அவ்வப்போது தேவர்களுக்கு தொல்லைத் தந்தவண்ணம் இருந்தார்கள். ஆனால் அவர்கள் பெற்றிருந்த வரங்களின் காரணமாக அவர்களை தேவர்களால் வெற்றிக் கொள்ள முடியாமல் போனதினால் அந்த வரம் பெற்றிருந்த அசுரர்கள் தங்கி இருத்த சில இடங்களுக்கு , அது தேவ லோகமாகவே இருந்தாலும் தேவர்களினால் செல்ல முடியாமல் போயிற்று.

தேவர்கள் மற்றும் அசுரர்கள் என்ற பிரிவினை சில இயற்கைக் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது இந்த உலகில் தீமை மற்றும் நன்மைகளைக் குறிக்கும் விதத்திலேயே தீய குணங்களை அசுரர்கள் என்றும், நல்ல குணங்களை தேவர்கள் என்றும் கூறப்பட்டு எப்பொழுதுமே நன்மைக்கு எதிராக தீமைகள் உள்ளதாகவும், அந்த தீமையை அழித்து நல்ல பண்புகளைக் கொள்ளும்போது ஒருவன் தேவபுருஷர்கள் ஆகி விடுவார்கள், அதாவது பரிசுத்த மனத்தை அடைந்து விடுகிறார்கள், அப்போது அவர்கள் இறைவீகத்தின் வாயிலில் சென்று விடுவதான நிலை ஏற்ப்படும் என்ற அடிப்படை தத்துவத்தை உணர்ச்சிபூர்வமாக பூலோக மனிதர்களுக்கு எடுத்துக் காட்டவே பரமாத்மன் என்பவர் அசுரர்கள் மற்றும் தேவர்கள் என்பவர்களைப் படைத்து அவர்கள் மூலம் சில நாடகங்களை நடத்திக் காட்டுகிறார்.  ஆகவே அசுரர்களும் சரி, தேவர்களும் சரி, அனைவருமே  மேலுலகில் இருந்துதான் வந்துள்ளவர்கள் என்பதும், அனைவரும் அடிப்படையில் தேவ கணங்களே, சில சாபங்களின் காரணமாக அசுரர்களாக பிறந்து இருந்தார்கள் என்பதே உண்மை.

இந்த பின்னணியில் அறிய வரங்களைப் பெற்றிருந்த அசுரர்கள் தமக்கு சொல்லொண்ணாத்  துயரங்களைத் தருவதைக் குறித்து பலமுறை தேவர்கள் சிவன், பிரும்மா மற்றும் விஷ்ணுவிடம் முறையிட்டும் அவர்கள் ஒன்றும் கூறாமலேயே சென்று விடுவார்கள். ஆனால் அதே சமயத்தில் அசுரர்கள் தேவர்களுக்கு அநீதி இழைத்து கொடுமை செய்வதை தக்க நேரத்தில் சிவபெருமானோ அல்லது விஷ்ணுவோ அழிக்கத் தயங்கியது இல்லை. ஆனால் அதற்கான காலம் வரும்வரை, அதாவது அசுரர்களுக்கு அழிவு காலம் வரும் வரைப் பொறுத்திருந்து பார்த்தப் பின் அதை செய்தார்கள். ஏன் என்றால் அவர்களாலும் அவர்களே படைத்திருந்த  நியதிகளை மீற முடியவில்லை. வெகு காலத்திற்கு முன் இப்படியாக இருந்த நிலையில் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர் என்பதினால் அடிக்கடி அவர்கள் ஒருவரை எதிர்த்து ஒருவர் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களையும், வரங்களையும் வைத்திருந்தனர்.

தேவர்களுக்கும், மேலுலகத்தில் வசித்து வந்த அசுரர்களுக்கும் அவர்கள் நினைத்த இடங்களுக்கு, அது தேவலோகமோ இல்லை பூலோகமோ அல்லது பாதாளமோ அங்கெல்லாம் செல்லும் சக்தி இருந்தது. சில கர்மாக்களின் வினையாக சில தெய்வீக கணங்களே அசுரர்களாக பிறவி எடுத்து கர்மாக்களை அழித்துக் கொள்ள வேண்டி இருந்ததினால்தான், அந்த கணங்கள் அசுரர்களாக உருவெடுத்து மேலுலகில் வாழ முடிந்தது. சாபம் பெற்ற வேறு சில கணங்கள் பூவுலகில் அரக்கர்களாக பிறவி எடுத்து அந்த சாபங்களை விலக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது அவை ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்கள் போன்ற பிறவிகளை பூமியில்  எடுக்க வேண்டி இருந்தது.  அடிப்படையில் தேவ கணங்களான அவை ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்திருந்தாலும், அந்த நிலையில் தேவ லோகத்துக்கு செல்ல முடியாமல், ஆனால் பூவுலகில் சில சக்திகளைக் கொண்டு இருந்தன.

தேவலோகத்தில் அசுரர்களாக இருந்தவர்கள் பூவுலகில் பிறவி எடுத்திருந்த ராக்ஷசர்கள் மற்றும் பிரும்ம ராக்ஷசர்களை  சந்தித்து விட்டு செல்லும் பழக்கத்தைக் கொண்டு இருந்தன. அப்படி வந்திருந்தபோது தாம் எந்தெந்த தேவர்களினால் ராக்ஷச மற்றும் பிரும்ம ராக்ஷச பிறப்புக்களை எடுத்து பூமியில் வந்து அவதிப்பட வேண்டி உள்ளது என்பதை தேவலோக அசுரர்களிடம் கூறியபோது அதைக் கேட்டு  கோபமடைந்த அசுரர்கள் தேவலோகத்தில் இருந்த தேவர்களை துன்புறுத்தத் துவங்கினார்கள். இதனால்தான் தேவர்களுக்கும், தேவலோக அசுரர்களுக்கும் முடிவற்ற வகையில் பகை பெருகிக் கொண்டே இருந்தது.

இந்த பின்னணியில்தான் தேவலோகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்து வந்த விஷ்ணு பக்தனான கூஷ்மாண்டன் ( சில கதைகளில் அவனை கூச்மாண்டன் என்கிறார்கள்)  எனும் அசுரன் அங்கிருந்த தேவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கி வந்திருந்தான். பல தெய்வங்களிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்று இருந்த அசுரன் கூஷ்மாண்டன் வேண்டும் என்றே தேவலோகத்தில் இருந்த தேவர்களிடம் வம்பு செய்து அவர்களை துரத்தி அடிப்பதும், தமது இருப்பிடத்திற்கு இழுத்து வந்து சிறையில் வைத்து கொடுமைகளையும் செய்து வந்தான். இத்தனைக்கும் அவன் அடிப்படையில் ஒரு கூஷ்மாண்டா எனும் ஒரு தேவியின் பக்தனாவான். அந்த தேவியோ விஷ்ணுவினால் படைக்கப்பட்டவள்.  கூஷ்மாண்டாவுக்கு உகந்த நாள்  வெள்ளிக்கிழமை ஆகும். அவள் மங்களத்தைத் தருபவள் என்பார்கள். அது போலவே கூஷ்மம் என்றால் முட்டை அல்லது அண்டம் என்றும் பொருள் தரும். முதன் முதலில் இந்த பிரபஞ்சம் தோன்றியபோது அது ஒரு முட்டை உருவில் வெளி வந்தது. அதில் இருந்து வெளிவந்த விஷ்ண்வை சுற்றி பல தேவிகளும் இருந்தார்கள். அதில் ஒருவளே கூஷ்மா என்பவளும் ஆவாள். ஆகவேதான் கூஷ்மாவின் பக்தனான கூஷ்மாண்டனுக்கு விஷ்ணுவின் அரிய வரங்கள் கிடைத்து இருந்தன. கூஷ்மாண்டன் பக்தி மார்கத்தில் அதாவது தனக்கு வரமளித்த தெய்வங்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு அவர்களை மறவாது அனுதினமும் வணங்கி துதித்தே வந்தவன். அதனால்தான் அவனுக்கு அத்தனை கர்வம் இருந்தது. 

இதனால் கூஷ்மாண்டனின் பலம் ஓங்கி, அட்டகாசம் அதிகமாகி, தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேவேந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை என்பதினால் அனைவரும் தம்மை கூஷ்மாண்டனின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டிக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட விஷ்ணு பகவான் சினம் அடைந்தார்.  கூஷ்மாண்டனுக்கு சாப விமோசனம் தரும்  காலம் நெருங்கி விட்டதையும், தன்னுடைய பக்தனான அவனுக்கு அவன் மரணம் அடையும் முன்னால்  ஏதாவது வழியில் பெருமையும் தர எண்ணி இருந்த நாளும் நெருங்கியது என்பதையும் உணர்ந்தார். விஷ்ணு பகவான் கூறியவாறு தேவர்கள் பெரும் படையுடன் கூஷ்மாண்டான்  ஆண்டு வந்த பூமிக்கு சென்று அவனுடன் போரிட்டார்கள். அதில் விஷ்ணுவும் கலந்து கொண்டு அந்தப் படையின் ஒரு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். யுத்தம் நடந்திட விஷ்ணுவிடம் நேரடியாக மோதும் கட்டத்தை கூஷ்மாண்டன் எட்டினான்.

தன்னை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்ற அகம்பாவத்தில் இருந்த கூஷ்மாண்டன் யுத்தத்தில் விஷ்ணுவை தாக்க முயன்றபோது அவரை சுற்றி அரணாக இருந்திருந்த தீக்கணங்கள் பெரும் தீ நாக்குடன் அவனைத் தாக்க அப்படியே சுருண்டு விழுந்தான் கூஷ்மாண்டன். உயிர் பிரிகின்ற நேரம்....தான் யார், இந்த ஜென்மத்தில் என்னென்ன பாவங்கள் செய்தேன் என அனைத்தையும் உணர்ந்தான். மரணத் தருவாயில் கரம் கூப்பி விஷ்ணுவை வணங்கி, அவர் மீது தோத்திரம் பாடி தனக்கு நற்கதி தருமாறும், வேறு நல்ல பிறவி எடுக்க அருள் தருமாறும் கேட்டான். அவன் நிலைக் கண்டு பரிதாபப்பட்ட நாராயணன் கேட்டார் ''கூஷ்மாண்டா, இந்த பிறவியில் தேவர்களும் கடவுளின் அவதாரங்களே, அவர்களும் தெய்வ கணங்களே என்பதை மறந்து போய் அவர்களை ஹிம்சித்து வந்ததின் மூலம் பெரும் தவறுகளை செய்துள்ளாய் என்றாலும் அந்த நிலையிலும், மரணத் தருவாயிலும் நீ தெய்வ பக்தியோடு இருந்துள்ளாய் என்பதினால் உனக்கு நல்ல கதி கிடைக்க உள்ளது. ஆகவே உன் வாழ்க்கையின் மூலம் பூலோகத்தில் உள்ளவர்கள் பயன் அடையும் வகையில், நீ பூலோகத்தில் ஒரு இந்த அகண்டத்தை பிரதிபலிக்கும்  உருவில் உள்ள பூஷணிக்காயாக அவதரிப்பாய். உன்னைக் கொண்டு எந்த ஒருவரும் தமது தோஷங்களை விலக்கிக் கொள்ள முடியும் என்ற வரத்தை உனக்கு அருளுகிறேன்.

இந்த ஓவியத்தை கட்டுரைக்காக வரைந்தவர்
Ranjani Ramesh
எப்படி உன்னை இப்போது நான் பூமி மீது மோதி விழ வைத்து மரணத்தைக் கொடுத்தேனோ அது போலவே தோஷங்களை விலக்கிக் கொள்ள உன்னை பூஜிக்கும்போது அங்குள்ள அனைத்து துஷ்ட ஆத்மாக்களையும் நீ உன்னுள் உறிஞ்சிக் கொண்டு அவற்றை உள்ளேயே அழிப்பாய் (பூஷணிக்காயின் உள்ளே). அதன் பின் அவற்றுக்கு உயிர் இருக்காது. அந்த நிலையில் பூஷணிக்காயாக உள்ள உன்னை பூமி மீது மோத விட்டு உடைத்தால் உன்னால் மரணம் சம்பவிக்கப்பட்ட அனைத்து துஷ்ட ஆத்மாக்களும் அவற்றுடன் ஒட்டிக் கொண்டுள்ள தோஷங்களுடன் பூமியிலே புதைந்து போகும். அந்த நிலையைக் காட்டும் விதத்தில்தான் பூஷணிக்காயை உடைக்கும் முன்பாக அதை சிறிது வெட்டி உள்ளே குங்குமத்தைக் கொட்டி பூஜித்தப் பின் அதை உடைப்பார்கள். அதை நீயும் உனக்கு அவர்கள் செய்யும் பூஜையாக ஏற்பாய். இன்று முதல் உன்னைக் கண்டாலே தீய தோஷ ஆவிகள் பயந்து ஒளியும் என்ற அளவு உனக்கு சக்தி தருகிறேன்.  தீய தோஷங்களை  நீ பூஷணிக்காய்  உருவில் இருந்தபடி அழிப்பாய் .

கூஷ்மாண்டா, உன்னை தானமாக தந்தால் அதைத் தந்தவனின் துயரங்கள் விலகும், அவனது தீய தோஷங்களும் விலகி ஓடும். முக்கியமாக அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியாக பிறந்துள்ள உன்னை தானம் செய்தால் கஷ்டங்களும் வியாதிகளும் விலகி ஓடும். ஆனால் அதே சமயத்தில் பூஷணிக்காயை இலவசமாக பெற்றுக் கொள்பவர்கள், யாரிடம் இருந்து அதைப் பெற்றுக் கொள்வார்களோ அவர்களது பாவங்களையும் தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வார்கள். ''என்று அருள் புரிந்தார்.

அதனால்தான் பூஷணிக்காயை பூஜை செய்து உடைப்பதின் மூலம் தீய ஆவிகளை கூஷ்மாண்டனிடம் அனுப்பி விடுவதாகவும், அவற்றை அவன் கொன்றுவிட்டதைக் குறிக்கும் வகையில் குங்குமம் அந்தக் காயின் உள்ளே உள்ள தண்ணீருடன் கலந்து விட, அந்தக் காயை உடைத்ததும்- தீய ஆத்மாக்களை கொன்று  விட்ட நிலையைக் குறிக்கும் விதத்தில், அந்தக் காய் சிவப்பு நிறத்தில் உடைந்து விழுகிறது என்றும், அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரியும்  தீய ஆவிகள் பூஷணிக்காயில் இருந்து வெளிவரும் அந்த சிவப்பு நிறத்தைக் காணும்போது, தம்மையும் அதனுள் உள்ள கூஷ்மாண்டன் கொன்று விடுவான் என பயந்து கொண்டு அங்கிருந்து ஓடி விடுமாம். அதனால்தான் தீய அவைகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தோஷங்கள் விலகி ஓட பூஷணிக்காயை வீட்டின் வாயிலில் முதலில்  கட்டி தொங்க வைத்து சில நாட்களுக்குப் பின்னர் அதை எடுத்து பூஜை செய்து உடைப்பதும் ஐதீகம் ஆயிற்று.  பூஷணிக்காயில் அமர்ந்து கொண்டு கூஷ்மாண்டன் பார்த்துக் கொண்டு இருப்பதினால்தான் கண்திருஷ்டி தரும் தீய ஆவிகள் அங்கிருந்து விலகி ஓடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

அது போலவே பணம் தராமல் பூஷணிக்காயை தானமாக பெறலாகாது .அப்படி தானம் பெற்றாலும், தானத்தைப் பெறும்போது, 'இன்று என் செய்கையினால் நான் பெற்ற ஒருநாள் நல்ல பலனை உனக்கு தருகிறேன் 'என்று தானம் தந்தவருக்கு கூறி விட்டோ அல்லது அதற்கு ஈடாக அரைக்காசு நாணயத்தையாவது தந்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டால் அது தானமாக பெற்றதாகாது. தீய பலன் தானம் பெற்றவரை சேராது என்பது ஐதீகமாகவும் ஆயிற்று. இதனால்தான் இப்படிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்ட பூஷணிக்காயை சாதாரணமாக யாரும் திருடுவது இல்லை.

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 1

$
0
0
-1-

தமிழ்நாட்டின் கரூர் மற்றும்  திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள ஐயர் மலை எனும் இடத்துக்கு சென்றால் காவேரி கரைப் பகுதியில் உள்ள மலை மீது உள்ள ரத்னகிரீஸ்வறரை தரிசிக்கலாம்.

இந்த ஆலயம்  இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது.  இந்த ஆலயத்துக்கு  இரதினகிரி என்ற பெயரைத் தவிர மாணிக்க மலை, சிவாய மலை, ஐயர்மலை என்று வேறு பெயர்களும் உண்டு.  தற்போது மக்கள் வழக்கில் இந்த மலைப் பகுதி ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.  பாண்டவ சகோதரர்கள்  ஐந்துபேரும் தமது வனவாசத்தின்போது இந்த மலையில் வந்து தங்கியதினால்  இந்த மலைக்கு ஐவர் மலை அதாவது  ஐந்து சகோதரர்கள் என்ற பெயர் வந்ததாம்.  அதுவே காலப்போக்கில் ஐயர் மலை என்றாயிற்று.

மலை உச்சியில் அமைந்துள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் சுமார் 1017 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டது.  புராணப் பெருமை பெற்றுள்ள ஸ்தலமாகும். 'காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கி நாதர்'என்பது கிராமியப்  பழமொழி ஆகும்.  அது ஏன் அப்படிக் கூறப்படுகிறது என்றால் காலை வேளையில் குளித்தலையில் கடம்பவனநாதரை தரிசனம் செய்தப் பின், மதியம் சிவாயமலை எனப்படும் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசனம் செய்தப் பின், அந்திப் பொழுதில் (மாலை) ஈங்கோய் மலையில் வேங்கிநாதரை சென்று வணங்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.

இந்த ஆலயத்தின் மேன்மையை இப்படியாக கூறலாம்:-

1) தமது குல தெய்வம் யார் என்பது தெரியாதவர்கள் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு பூஜிக்கலாம். இறைவன் அதற்கு அப்படிப்பட்ட சக்தியை தந்துள்ளாராம்.

2) இங்குள்ள சன்னதியில் பாலைக் காய்ச்சாமல் நெய்வித்தியம் செய்தப்பின் ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டுச் சென்றால் மறுநாள் அந்தப் பால் கெடாமல், மாறாக தயிராக உறைந்து இருக்குமாம். இந்த அதிசயத்தை வேறெங்கும் காண முடியாதாம்.

3) இந்த மலை மீது யாரையாவது பாம்பு தீண்டினாலும் அதன் விஷம் உடலுக்குள் ஏறாதாம். இது இன்னொரு அதிசயம்.

4) இந்த மலை மீது எந்த ஒரு காகங்களையும் காண முடியாது. அதற்கான காரணக் கதை ஒன்று உள்ளது.

இங்குள்ள சிவபெருமானை ஐயர்மலை ரத்னகிரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக இந்த ஆலயம் நாட்டார்கள் எனப்படுபவர்களில்  பன்னிரண்டாம் செட்டியார் எனப்படும் பிரிவினர் தமது குல தெய்வ ஆலயமாகவே கருதி போற்றி வணங்கும் ஆலயம் என்றாலும், ஜாதிப் பிரிவினை இன்றி பிற பிரிவினரும் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை வழிபட்டு வணங்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் சமண முனிவர்கள் பலர் காவிரிபூம்பட்டினம் என அன்று கூறப்பட்டு வந்திருந்த இந்த பகுதியில் வந்து மலைகள் மீதிருந்த பல குகைகளில் தவத்தில் இருந்துள்ளார்கள் என்பது வரலாறு. அதனால்தானோ என்னவோ இந்த மலையிலும் சமண முனிவர்கள் தவமிருந்த குகைகள் சில காணப்படுகின்றன.

இந்த மலை தோன்றிய வரலாறும் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டதுதான். ஒருமுறை வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் கடும் போர் மூண்டது. அப்போது ஆதிசேஷன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மேரு மலையை சற்றே அசைத்து அங்கு ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு அந்த மேரு மலையின் அடியில் மறைந்து கொண்டது. அதைத் தேடி வந்த வாயுதேவன் அந்த மலையை பிளக்க அந்த மலை ஐந்தாக உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்துக்கு பறந்து சென்று விழுந்தன. அதில் ஒரு பகுதியே இந்த ரத்னகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மலை என ஆயிற்று. மேரு மலை சிவபெருமானை சார்ந்தது என்பதினால் அதை உடைத்த குற்றத்தை செய்த வாயுதேவன் சிவபெருமானின் சாபத்தைப் பெற்றார். ஆகவே அந்த சாபத்தை போக்கிக் கொள்ள தமக்கு உதவிடுமாறு வாயுதேவன் சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவரும் வாயு தேவனை வாட்போக்கி (அப்போது இதன் பெயர் வாட்போக்கி என்பதல்ல. அந்தப் பெயர் வந்ததின் காரணக் கதை வேறு உண்டு)எனப்படும் இந்த இடத்துக்குச் சென்று அங்கு வந்து தம்மை வணங்கி துதிக்குமாறு கூற வாயுதேவனும் வாட்போக்கிக்கு வந்து அங்கு ஒரு தீர்த்தம் அமைத்து அதில் பல காலம் நீராடி அங்கேயே தவமிருந்து சிவபெருமானை துதித்து அவர் அருளைப் பெற்று சாப விமோசனம் பெற்றார். இப்படியாக வாயு பகவான் அமைத்த தீர்த்தம் ஒன்று அங்கு உருவானது.

வாயுதேவன்

வாட்போக்கி என இந்த இடத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? அது இரண்டு காரணங்களினால் ஏற்ப்பட்டது என்கிறார்கள். முன்னொரு காலத்தில் மனு வம்சத்தை சேர்ந்த மன்னன் ஒருவன் நீதி தவறாது  ஆட்சி செய்து வந்தான். அவன் பக்தி மார்கத்தில் சிறந்தவன். ஆனால்  அவன் நாட்டில் தூம்ரலோசனன் என்ற ஒரு அசுரனும் வாழ்ந்து வந்தான். மிக்க பலசாலியான அந்த அரக்கன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களையும் பெற்று இருந்தான்.  அந்த செருக்கினால் அந்த அரக்கன் அவ்வப்போது அந்த நாட்டில் இருந்த மக்களிடம் வேண்டும் என்றே வம்புக்குச் சென்று அவர்களை அடித்து உதைத்து அவர்களை துன்புறுத்துவான். அந்த நாட்டு அரசனால் கூட அந்த அரக்கனை அடக்க முடியவில்லை.  நாளுக்கு நாள் அவன் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்க வேறு வழித் தெரியாமல் கலங்கிய மன்னன்  கைலாயத்துக்குச் சென்று அங்கு வாயிலில் அமர்ந்து கொண்டு சிவபெருமானை வேண்டித் துதித்தான். அந்த காலத்தில் ஆட்சி செய்து வந்தவர்கள் தேவலோக மனிதர்கள். அவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். அவர்களால் தெய்வங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல முடிந்தது.  அதனால்தான் அந்த மன்னனும் கைலாயத்துக்கு செல்ல முடிந்தது.   கைலாய வாயிலில் அவன் அமர்ந்து கொண்டு  தன்னை துதித்து  தவத்தில் இருந்த மன்னனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுக்க அவனும் தனது நாட்டில் அந்த அரக்கனால் ஏற்பட்டு வந்துள்ள துன்பங்களை எடுத்துரைத்தான். அவற்றைக் கேட்டு கோபமுற்ற சிவபெருமான்  அவரது துணைவியான பார்வதியை அழைத்து அவனை அழிக்குமாறு கட்டளை இட்டார். பார்வதியும் துர்க்கை வடிவு எடுத்து சவளது யுத்த தேவதைகளான சப்த கன்னிமார்களுடன் வந்து அரக்கனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளந்து  அவனை  அழித்தாள். 


இப்படியாக அரக்கன் என்றாலும் தெய்வ பக்தி கொண்டிருந்தவனைக் கொன்ற காரணத்தினால் துர்க்கை வடிவில் இருந்த பார்வதிக்கு பிரும்மஹத்தி தோஷம் பிடித்தது. ஆகவே கவலையுற்ற பார்வதி அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என சிவபெருமானிடம் கேட்டாள்.  சிவபெருமானும் அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள எந்த இடத்தில் அந்த அரக்கனை வதம் செய்தாலோ அதே இடத்துக்கு சென்று அங்குள்ள மலை பகுதியை ஒரு வாளினால் இரண்டாகப் பிளந்து அதற்குள் அவனுக்கு மோட்ஷம் கிடைக்க வழி செய்யுமாறு கூறிவிட்டு அவளுக்கு மலையைப் பிளக்கும் வாள் ஒன்றையும் தந்தார். அவளும் அதே மலையில் சிவாயம் என இன்று அழைக்கப்படும் மலைப் பகுதிக்கு சென்று மலையைப் பிளந்து அந்த அரக்கனின் ஆன்மாவுக்கு சாந்தி கொடுத்தாள். அந்த மலைப் பிளவில் இரண்டு பாறைகள் எதிரெதிரே பிளவுபட்ட நிலையில் காணப்படுகிறது. அந்த அரக்கனும் அங்கேயே அவளை எழுந்தருளுமாறு வேண்டிக் கொள்ள துர்கையும் அவளது  தேவ கணங்களான சப்த கன்னிகைகளும்  அந்தப் பிளவுபட்ட பாதை நடுவிலேயே சில காலம் தங்கி இருக்க, இப்போதும் அங்கு பிளந்து உள்ள  பாறையின் நடுவில் சப்த கன்னிகைகளுடன்  துர்கையும் காட்சி தருவதைக் காணலாம்.

 சிவாயம் மலைப் பிளவில் 
சப்தகன்னிகைகளுடன் உள்ளே  துர்க்கை 
 .............தொடரும் 

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 2

$
0
0
-2-

ஆரிய   நாட்டு  மன்னர்கள் 

மனு வழி மன்னனைப் போலவே ஆரிய வம்சத்தை சேர்ந்த இன்னொரு மன்னன் ஆரிய நாட்டில்**இன்னொரு காலத்தில் வாழ்ந்திருந்தான். அவன் பெயர் ஆர்யராஜா என்பதாகும்.  அவன் நாடும் ரத்னகிரீஸ்வரர் மலையின் அருகில்தான் இருந்தது.  அவனும்  சிவபக்தி நிறைந்தவனே. அந்த மன்னனிடம் அபூர்வமான நவரத்தினக்கல் பதித்த மணிமுடி இருந்தது.  அந்த மணிமுடி அந்த மன்னனுக்கு  மிக முக்கியமானது.  வாழ்க்கையில் பல நன்மைகளை பெற வேண்டும், தான் பலமிக்க அரசனாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜகுருக்களின் ஆலோசனைப்படி விசேஷ பூஜைகளை செய்து அதை செய்திருந்தான். தினமும்   அந்த மணிமுடியை அணிந்து கொண்டுதான் அரச சபைக்கும்  செல்வான். ஒருமுறை அவனது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அவனுடைய நவரத்தினம் பதித்த மணி முடியை காணாமல் போகச் செய்தார். காலை எழுந்து குளித்தப் பின் மன்னன்   அரச சபைக்கு கிளம்பினான். மணிமுடியை தேடினான். அதைக் காணாமல் திகைத்து நின்றான்.

மணிமுடி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அரண்மனையில்  யார் வந்து அதை திருடிச் செல்ல முடியும்?   என்ன மாயம் இது என அரண்மனையில் இருந்த அனைவரும் பிரமித்துப் போனார்கள். அனைத்து இடங்களுக்கும் சென்று அந்த மணிமுடியை  தேடி அலைந்தார்கள். இரவுவரை அது கிடைக்கவே இல்லை.  மனம்  குழம்பிக் கிடந்த மன்னன் கவலையில் உறங்கி விட்டான்.  நடு இரவு. அவன் அறையை யாரோ வந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யார் வந்து கதவைத் தட்டுகிறார்கள் என  யோசனை செய்தவாறு மன்னன் கதவைத் திறக்க அங்கு ஒரு அந்தணர் நின்று கொண்டு இருந்தார். மன்னன் எதையும் கேட்கும் முன்னரே அந்த அந்தணர்  மன்னனிடம் இருந்து களவு போய்  உள்ள நவரத்தினம் பதித்த மணிமுடி  அருகில் உள்ள மலை மீதுள்ள சிவலிங்கத்தின் மீது காணப்படுவதாகவும், அங்கு சென்று அதை எடுத்துக் கொள்ளுமாறும்  கூறிவிட்டு அவசரம் அவசரமாக அங்கு நிற்காமல் சென்று விட்டார். வாட்போக்கி மலை*உள்ள இடத்தின் அடையாளத்தையும்  குறிப்பிட்டு சென்று விட்டார். 

{* இன்று வாட்போக்கி எனப்படும் இடம் அன்று அந்தப் பெயருடன் இருக்கவில்லை. அது ஒரு மலைமுட்டாகவேதான் இருந்தது .

** ஆரிய நாடு என்பது ஆரியர்கள் ஆண்ட வட இந்தியப் பகுதியில் இருந்த நாட்டைக் குறிப்பிடுவது அல்ல. இதில் வரும் அனைவருமே ஆரியர்கள் வருகை தரும் முன்னரே இருந்த தென் பகுதி நிலத்தை சேர்ந்த தமிழ் மக்கள். கிராமங்களில் முத்துப்பட்டன் கதை என்ற ஒரு வில்லுப்பாட்டு உண்டு. அதில் முத்துப்பட்டன் என்பவரைப் பற்றிய கதைக் கூறப்படும். அவர் வாழ்ந்த நிலப்பரப்பு அன்றைய திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கேரளா மானிலத்தை  சேர்ந்த எல்லைப் பகுதிகளில் இருந்த சிற்றூர்களை இணைத்த நிலப்பரப்பாகும். அந்த நிலப்பரப்பையே , பெரும்பாலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டு  இருந்த பகுதிகளையே ஆரியநாடு என்று கூறி உள்ளார்கள். இந்த உண்மை குற்றாலங் குறவஞ்சி  எனும் நாட்டுப்புறப் பாடலிலும் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் ஆட்சியில் இருந்தவனே இந்தக் கதையில் கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவார் }

 மன்னன் சுயநினைவுக்கு  வந்து, தன்னை சுதாகரித்துக் கொண்டு   அந்த நேரத்தில் வந்தது யார் என்பதை அறிய முற்படும் முன்னரே அந்தணர் சென்று விட்டார். வந்தது யார், அவர் எப்படி வந்தார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை, புரியவும் இல்லை. என்ன இது நடப்பது அனைத்துமே மாயமாக உள்ளதே, மணிமுடி களவு போயிற்று, யாரோ அந்தணர் எங்கிருந்தோ வந்தார், அவரும் காணாமல் போய்விட்டார். இது எப்படி சாத்தியம் ஆகும்?  குழப்பத்துக்கு மேல் குழப்பம்.  ஆனாலும் அந்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் இருக்க முடியாத நிலையில் விடியற்காலை எழுந்து குளித்து விட்டு தனது பரிவாரங்களுடன் அந்த மன்னன் தன்னிடம் நடு இரவில் வந்து அந்தணர் கூறிய இன்றைய வாட்போக்கி எனும் மலைப் பகுதியை சென்றடைந்தார். அங்கு ஆச்சர்யமாக ஒரு சிவலிங்கம் இருந்ததையும் அதன் அருகிலேயே அவரிடம் வந்து விவரம் கூறிய அதே  அந்தணர் இருந்ததையும்  கண்டார்.  சிவலிங்கத்தின் தலையில் அந்த நவரத்தின மணிமுடி ஜொலித்தது.


கடவுளே ...அரண்மனையில் களவு போன மணிமுடி இங்கு எப்படி வந்தது என அனைவரும் வியந்து அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடி நின்றிருக்க, அந்த அந்தணர் மீண்டும் கூறினார் 'மன்னா இன்று விடியற்காலை சிவபெருமான் எனக்குக் காட்சி தந்து இந்த மணிமுடியை மன்னன் வந்தால் அவரிடம் கொடுத்து விடு  என்று   கூறினார்.  ஆனால் அதற்கு  ஒரு நிபந்தனையும் போட்டு உள்ளார்.  அது என்ன என்றால் இதோ சிவலிங்கத்தின் அருகில் உள்ளதே சின்ன  பாத்திரம் அதை நீர் ஊற்றி  நிறப்ப  வேண்டும்.  அந்த நீரை எங்கிருந்து கொண்டு வர வேண்டும்  தெரியுமா ?  அதோ தெரிகிறதே காவேரி ஆறு, அதில் இருந்து நீரை எடுத்து வந்து பாத்திரம் நிறைய நீரை ஊற்றி நிறப்பிய பின்னரே மணிமகுடத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். ஆகவே இந்த பாத்திரத்தில் நீரை ஊற்றி  நிறப்பிய  பின் மணிமுடியை எடுத்துச் செல்லலாம்'என்று கூறிவிட்டு சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டார்.

இதென்ன பெரிய காரியம் என எண்ணிய மன்னன் தனது பரிவாரங்களை அனுப்பி காவேரி ஆற்றில் இருந்து தண்ணீரை  குடங்களில் எடுத்து வரச் செய்து அந்த பாத்திரத்தில் ஊற்றினான். ஆனால் குடம் குடமாக நீரை எடுத்து வந்து எத்தனைக் குடம் நீரை ஊற்றியும், மன்னன் எவ்வளவோ முயன்றும் அந்தப் பாத்திரத்தை நீரால் நிறப்ப முடியவில்லை.  அதனால் கோபங் கொண்ட மன்னன் தனது உடைவாளை உருவி எடுத்து அந்த அந்தணரை வெட்ட முயன்றான். அடுத்த கணம் அந்த அந்தணன் அப்படியே சிவலிங்கத்தில் நுழைந்து மறைய அந்த சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்தது.  ஐயோ நான் தவறு செய்துவிட்டேனே என பதறிய மன்னன் ஓடிச் சென்று சிவலிங்கத்தின் மீதிருந்து வழிந்த ரத்தத்தை தடுத்து நிறுத்த தன்  உடலால் அதைக் கட்டிப்பிடித்து அணைத்தபடி நின்று கொண்டு தன்னை மன்னித்து விடுமாறு கதற அவன் பக்தியை மெச்சி அவன் முன் காட்சி தந்த சிவபெருமான் அவனுக்கு அருள் புரிந்து மணிமகுடத்தை தந்தார்.  அதே சமயம் அவன் அந்தணரை வெட்ட முயன்ற அவனுடைய கையில் இருந்த வாளும் மறைந்து போயிற்று.  இதனாலும் அந்த இடத்துக்கு வாள் போக்கி அதாவது வாளைத்  தொலைத்த இடம் என்ற பெயர் ஏற்பட்டது.


சிவபெருமான் மன்னனுக்கு மணிமுடியை தந்ததும் இல்லாமல், அது முதல் அவனது குலத்தை  சார்ந்தவரே மட்டுமே காவேரி ஆற்றில் இருந்து நீரை எடுத்து வந்து தன்னை அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அவன் குலத்தினரைத் தவிர வேறு யாரும் அபிஷேகம் செய்தால் அதற்குப் பலன் இருக்காது என்று அருள் புரிந்தார். அதனால்தான் காலம் காலமாக  இன்றுவரை அந்த ஆரிய மன்னன் ஆர்யராஜாவின் குலத்தவர் எனப்படும் பன்னிரண்டாம் செட்டியார் எனும் மரபினர் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து  தண்ணீரைக் குடங்களில் நிறப்பிக் கொண்டு கால்நடையாகவே  இங்கு வந்து சிவலிங்கத்தை அபிஷேகித்து  வணங்கி வருகிறார்கள். அந்த  குலத்தினரைத் தவிர  வேறு யாருக்கும் அந்த அபிஷேகம் செய்யும்  உரிமைத் தரப்படவில்லை. அந்த ஆலய வாயிலிலும் மன்னனின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது.  அது முதல் இந்த சிவலிங்கத்தை  மணிமுடி மற்றும் திருமுடித் தழும்பர் அதாவது இறைவனின் திருமுடியில் வாள் வெட்டுபட்டதினால் ஏற்பட்ட தழும்பைக் கொண்டவர் என்பதாக கூறப்பட்டார். அந்த சிவலிங்கத்தில் இன்றும்  அதைக் குறிக்கும் விதத்தில் தழும்பு போன்று காணப்படுவதாகக் கூறுகிறார்கள்.  
.........தொடரும் 

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 3

$
0
0
-3-

இந்த மலைக்கு வந்து வாயுபகவான் சாபவிமோசனம் பெற்றதை அறிந்திட்ட ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவிடம் சென்று தனக்கு  முன்னொரு ஜென்மத்தில் சகோதரர்களைக் கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தையும், மேரு மலையை உடைத்ததற்கு காரணமாக தானும் இருந்ததினால் அதனால் பெற்ற சாபத்துக்கும்  விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க அவரும் அதே மலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவம் இருக்குமாறும் அப்படி செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே சாபவிமோசனம் பெற முடியும் என்றதும், ஆதிசேஷனும் அங்கு சென்று ஒரு தீர்த்தம் அமைத்து,  அதில் தினமும் நீராடி சிவபெருமானை துதித்து பல காலம் தவமிருந்து சாப விமோசனம் அடைந்தார்.

ஆதிசேஷனின் இந்த நிலைக்குக் ஒரு பின்னணிக் காரணம் உண்டு. கிருஷ்ண பகவானின் முடிவு காலம் நெருங்கியபோது யாதவர்கள் தமக்குள்  தாமே சண்டை இட்டுக் கொண்டு யாதவ வம்சத்தை அழித்துக் கொண்டபோது அதில்  கிருஷ்ணருடைய சகோதரரான பலராமர்  பங்கேற்று பல யாதவர்களை  கொல்ல நேரிட்டது.  ஆகவே சகோதரர்களைக் கொன்ற தோஷம் ஏற்பட்டு இருந்தது.  ஆகவே அவர் வாழ்க்கையில் வெறுப்புற்று  ஆதிசேஷனாக மாறி விஷ்ணுவிற்கு ஆசனமாக மாறினாலும் அந்த தோஷம் அவரைத் தொடர்ந்தது. விஷ்ணுவே கிருஷ்ணராக  அவதரித்து  இருந்தார்.  அவரால்தான்  பலராமரும் இந்த தோஷத்தைபெறக் காரணமாக இருந்தார் என்பதினால் அந்த சாப விமோசனத்தை அவரால் தரமுடியாது. ஆகவே விஷ்ணு பகவான்  ஆதிசேஷன் அவதாரத்தில் இருந்த பலராமரை   வாயுவுடன் போர் புரிய வைத்து  அதன் மூலம்  இன்னொரு சாபம் பெற்று, அதற்கு சாப விமோசனம்  பெறுவதின் மூலம் பாலராமராக இருந்தபோது பெற்ற சாபத்தையும் விலக்கிக் கொள்ள வழி வகுத்தாராம்.  இதெல்லாம்  வாய் வழியாக கூறப்பட்டு வரும் கதைகளே.

அது போலவே தொண்டை நாட்டில் இருந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த சிவபதியில் முதலியார் இனத்தில் பிறந்த வைராக்கியப் பெருமாள் எனும் பக்தருக்கு வெகு காலம் குழந்தைப் பிறக்காமலேயே இருந்தது. ஆகவே அவர் பல தலங்களுக்கும் சென்று தமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டி வந்தார். அப்படி தலம் தலமாக சுற்றிக் கொண்டு இருந்தவர்  எங்கு சென்றும் தமக்கு குழந்தைப் பாக்கியம் பெறும் பாக்கியம் கிடைக்கவில்லையே என நொந்து போய் முடிவாக இந்த இடத்துக்கும் வந்தார். மலை  மீது இருந்த சிவலிங்கத்தை  'ஈசனே, நான் பல இடங்களுக்கும் சென்று பல காலம் வேண்டியும் எனக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை என்பதினால் மனம் சோர்ந்து விட்டேன்.  முடிவாக உன்னிடம் சரண் அடைந்து உள்ளேன். எனக்கு  குழந்தைப் பாக்கியம் கிடைத்தால் இங்கேயே வந்து என் தலையையே உனக்கு காணிக்கையாகத் தருகிறேன்'மனதார வேண்டிக் கொண்டார். தினமும் இப்படியே வேண்டியவாறு சில காலம் அங்கு தங்கி இருந்தவர் கனவில் ஒரு நாள் சிவபெருமான் தோன்றி அவர் வேண்டியது நிறைவேறும் என ஆசி கொடுத்தார்.  அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன  பெருமாள் வீடு திரும்பினார். அடுத்த வருடமே அவருடைய மனைவிக்கு குழந்தையும்  பிறந்தது.

தன்னுடைய  வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றித் தந்ததினால் அவர்  தனது  குடும்பத்தை அழைத்துக் கொண்டு ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு சென்றார். அங்கு பூஜைகளை செய்தப் பின் கீழிறங்கி வந்து  தான் சிவபெருமானிடம் கூறியது போல சற்றும் தயங்காமல் தனது கையில் கொண்டு வந்திருந்த வாளினால் தனது தலையை துண்டாக்கிக் கொண்டு காணிக்கையை செலுத்தினார். அந்தத் தலை அப்படியே பறந்து போய் மலை மீது விழ,  உடல் பூமியில் விழுந்தது. அவர் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவனார் அவருக்கு காட்சியைத் தர, தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது தமது தலையை கொய்து கொண்ட அந்த பக்தரின் பக்தியால்  மகிழ்ந்து போன தேவர்கள் தேவலோகத்தில் இருந்து பூமாரி பொழிந்தனர்.


அவர் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அந்த ஆலயத்தில் சில விதிமுறைகளை ஏற்படுத்தினார்.  அதன்படி அந்த சன்னதியின் அடுத்து அமைந்துள்ள சன்னதியில் உள்ள வைராக்கியப் பெருமாளுக்கே  இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில்  சூட்டப்படும். அடுத்து  இறைவனுக்கு  கற்பூர ஆரத்தி எடுத்தப்  பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் கல்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டும். அது போலவே  இறைவனுக்கு படைத்த நெய்வித்தியமும் இவருக்கே முதலில் தரப்படும். அது மட்டும் இல்லாமல்  மலையின் அடிவாரத்தில் இவர் உடம்பின் அடிப்பாகம் ஒரு சன்னதியாகவும், நடுப்பாகம் மலைக்கு செல்லும் நடு வழியில் ஒரு சன்னதியாகவும், அவருடைய தலை பாகம் மலைமேல் இறைவன் சன்னதிக்கு மிக அருகில் ஒரு சன்னதியாகவும் அமைந்துள்ளது.

கீழிருந்து மலை மீது ஏறிச் செல்லும்போது வழியில் ஆங்காங்கே இருபத்தொரு மண்டபங்கள் காணப்படுகின்றன. அவை பல்வேறு காலங்களில் அமைந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணக் கதையும் உள்ளது. அவற்றில் குறிப்பிட வேண்டியவை இலட்ச தீப மண்டபம், காக்கை மண்டபம், வசந்த மண்டபம், சகுனக்குன்று, பொன்னிடும்பாறைமற்றும் பதினெட்டாம் படி போன்றவை ஆகும்.
 
காக்கை மண்டபத்தின் மீது காகங்கள் பறப்பதில்லை, காகங்கள் அங்கு வந்து அமர்வதும் இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் காகம் என்பதே இல்லாத பகுதியாக அந்த மண்டபம் உள்ளது.  அதன் காரணம் ஒன்று உண்டு.  ஒருமுறை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஒரு பக்தர் ஒருவர்ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய அதைக் கீழே வைத்தபோது,  அதைக் கவ்வி  எடுத்துச்  வேகமாக பறந்து வந்த ஒரு  காக்கை அந்தக் கிண்ணத்தை கவிழ்த்து விட்டு பறந்து ஓடிவிட, அடுத்த சில அடி தூரத்திலேயே தீ மூட்டி வைக்கப்பட்டிருந்த  ஒரு அடுப்பில் அந்தக் காக்கை நிலைக் குலைந்து போய் விழுந்து தீப்பற்றி  எரிந்து விட்டதாக ஒரு கதை உண்டு. அதனால்தான் காகங்களுக்கு அந்த இடத்தில் நுழையக்கூடாது என்கின்ற சாபம் ஏற்பட்டு அவை அங்கு நுழைவதில்லை என்கிறார்கள்.


இன்னொரு கதையின்படி அபிஷேகத்துக்காக கொண்டு வந்திருந்த பாலுடன் இருந்த கிண்ணத்தை ஒரு காக்கை கொத்தி கவிழ்த்து விட்டதினால் அந்த பாலைக் கொண்டு வந்திருந்த பக்தரின் மனம் வேதனை அடைய, அவர்   ஈசனிடம் இனி அந்த இடத்தில் காகங்கள்  பறக்கக்கூடாது என சாபம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்ள இறைவனும் அந்தகக் காக்கைக்கு அந்த பக்தர் வேண்டியபடியே சாபம் கொடுக்க, அதனால்   அந்தப் பகுதியில் இயற்கையாகவே காகங்கள் நுழைவதே இல்லை என்கிறார்கள்.  எந்தக் கதை உண்மையோ ஆனால் அங்கு காகங்கள் பறப்பதில்லை என்பது ஓர்   அதிசய நிலையாகவே உள்ளது. அதனால் அங்கு கட்டப்பட்டுள்ள மண்டபத்தை காக்கை மண்டபம் எனப் பெயரிட்டு அந்த மலைப் பகுதிக்கு காகம் பறவா மலை என பெயர் வந்துள்ளது.

அந்த மலை ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் தாம் எண்ணிய  காரியம் நிறைவேறுமா என்பதை தெரிந்து கொள்ள அந்த குன்றின் மீது உள்ள சகுனக் குன்று எனும் இடத்தில் நின்று கொண்டு நாம் என்ன காரியம் நிறைவேற வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதை மனதில் நினைக்க வேண்டுமாம்.  நினைத்தக் காரியம் நிறைவேறும் என்றால்  அங்கு எங்காவது ஒளிந்து கொண்டு இருக்கும் பல்லி ஒலி எழுப்பி சப்தமிடுமாம். அப்படி பல்லி  கத்தினால் நினைத்த காரியம் கைகூடும் என்றும், பல்லி கத்தாவிடில் காரியம் நிறைவேறாது என்பதும் காலம் காலமாக நம்பிக்கையாக உள்ளது.  ஆகவே சகுனம் பார்க்கும் இடமாக உள்ள அந்த பகுதியை சகுனக் குன்று என்றே அழைக்கிறார்கள்.

பதினெட்டாம் படி எனும் இடம் உள்ளது.  அந்த இடத்தை நாட்டாமையார் என்று கூறுவார்கள். அந்த காலத்தில் கிராமங்களில் நாட்டாமையார் முன்னிலையில் நடைபெறும் பஞ்சாயத்தில் உண்மையை கண்டறிய சத்தியம் செய்து உண்மையைக் கூறுமாறு கூறுவார்கள். அல்லது ஒரு ஒரு கடவுளின் படத்தின் முன்  கற்பூரத்தை ஏற்றி அதன் முன் சத்தியம் செய்யுமாறு கூறுவார்கள். அப்படி செய்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தவறு செய்தவன் பயந்து கொண்டு போய் சத்தியம் செய்யமாட்டார்கள் என்பது ஒரு நம்பிக்கையாகவே இருந்தது.   அது போலவே ஒருகாலத்தில் இந்த இடத்தில் சச்சரவுகளை தீர்த்து வைக்க  இருதரப்பினரையும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யுமாறு கூறுவார்கள். சச்சரவுகளைத் தீர்ப்பார்கள். அந்த முறையை இன்றும் சிலர் கடைப் பிடிக்கிறார்களாம். ஆகவே பல காலமாக பதினெட்டாம்படி ஒரு  நாட்டாமை  இடமாகவே கருதப்படுகிறதாம்.
..........தொடரும் 

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 4

$
0
0
-4-


பன்னிரண்டாம் செட்டியார் கதை என்ன?  இதுவும் செவி வழிக் கதைதான். காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒருவன் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க விரும்பினான். ஆனால்  காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் தம்முடைய பெண்ணை வேறு இனத்தவருக்கு மணமுடித்துக் கொடுக்க உடன்படவில்லை.  மன்னன் எத்தனையோ முறைக் கேட்டும் அவர்கள் அதற்க்கு உடன்படவில்லை என்பதினால் கோபம் கொண்ட மன்னன் அவர்கள் வசித்த நகருக்குத் தீயிட்டான். அங்கிருந்த பலரும் தீயினால் மரணம் அடைய,  அவர்களில் வணிகர் குலத்தைச் சேர்ந்த பதினோரு பேர் தீயிலிருந்து தப்பி பல பொருட்களையும் எடுத்துக் கொண்டு அந்த நகரை விட்டு வெளியேறி தாம் தங்கி இருக்க நாட்டின் பல இடங்களுக்குச் சென்றனர். ஆனால் எந்த இடமும் சரிவர அமையவில்லை என்பதினால் அந்த பதினோரு வணிகர்களும் தங்கள் பொருட்களுடன் ஐயர் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள்  தாம் கொண்டு வந்திருந்த பொருட்களை பாகம் பிரித்துக் கொண்டார்கள். எப்படி பாகம் பிரித்தாளும் அதை மீண்டும் எண்ணும்போது அது பன்னிரண்டு பாகங்களாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே சலித்துப் போனவர்கள் சரி நம்முடைய பங்கை எடுத்துக் கொண்டபின் மீதி உள்ள பன்னிரண்டாம் பங்கை செய்வது எனப் புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தபோது அங்கு ஒரு அந்தணர் வந்தார்.  வந்தவர்  'ஏன் இப்படி சோகமாக அமர்ந்திருக்கிறீர்கள்'என அவர்களிடம்  கேட்டதும் அவர்களும் நடந்ததை அவர்கள் அவரிடம் கூற அந்த அந்தணர் 'சரி அந்த பன்னிரண்டாம் பாகத்தை நீங்கள் ஏன் இங்குள்ள இறைவனுக்கு தரக்கூடாது'  என்று கேட்க, அதுவே சரியான வழி என அவர்கள் மனதில் விழுந்தது. தயங்காமல் அவர்களும் 'ஐயா, உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம். இதை இதோ இறைவனுக்கு உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்'என தயங்காமல் கூறிவிட்டு பன்னிரண்டாவது பாகத்தை இறைவன் சன்னதியில் வைக்க அந்த அந்தணரும் மறைந்தார். சிவபெருமான் அவர்கள் முன் காட்சி தர அவர்கள் அப்படியே அவர் பாதத்தில் விழுந்து வணங்கினார்கள்.  அவரும் 'பக்தர்களே, இனி நானும் உங்களில் ஒருவன். இனி நீங்கள் பதினோரு பேர்கள் அல்ல, பன்னிரண்டாவதாக நானும் உங்களுடன் இருப்பேன்'என அவர்களுக்கு ஆசிகளை தந்தப்  பின்னர் மறைந்து போனார்.   அதைக் கண்டு மகிழ்ந்து போன பன்னிரண்டு செட்டியார்களும் 'இனி நாங்கள் சம்பாதிப்பதில் எங்களால் முடிந்ததை இங்குள்ள இறைவனுக்கே தந்து விடுகிறோம்'என அங்கேயே சங்கல்பம் செய்து கொண்டார்கள். அது முதல் அவர்கள் வருவாயில் பன்னிரண்டில் ஒரு பங்கு இறைவனுக்குச் சேர்க்கிறார்கள்.


இதனால்தான் அந்த வணிகர்களின் குலத்துக்கு பன்னிரண்டாம் செட்டியார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. பல ஊர்களில் பரவி உள்ள இந்த பன்னிரண்டாம் செட்டியார் இனத்தவர் ரத்தினகிரீஸ்வரரையே தங்கள் குல தெய்வமாகக் ஏற்றுக் கொண்டு பக்தி மார்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள். சிவபெருமான் பன்னிரண்டாம் பங்கு பெற்ற வரலாறு வாட்போக்கிக் கலம்பகம்,  இரத்தினகிரி உலா போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளது.
ஆலயத்துக்குள் நுழைந்துடன்  தட்சிணாமூர்த்தி சன்னதி காணப்படுகிறது. அவரை தரிசனம் செய்தபின்னரே மூலவரான ரத்னகிரீஸ்வரரை தரிசிக்க வேண்டுமாம்.  சித்திரை மாத சிவராத்திரி நாட்களில்  சூரிய ஒளி  கிரணங்கள் கருவறைக்கு  நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக உள்ளே வந்து மூலவர் மீது விழுவதை குறிப்பிடுகையில் அன்று சிவபெருமானை இங்கு வந்து சூரியன் நமஸ்கரிப்பதாகக் கூறுகிறார்கள்.   எட்டு  பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் திருவாட்போக்கி எனும் ரத்னகிரீஸ்வரராக ஸ்வயம்புவாக அவதரித்துள்ள சிவபெருமான் அங்கு வந்து தன்னை வணங்கி வேண்டி நிற்கும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.

இந்த ஆலயத்தில் மூலவர்  மேற்கு நோக்கியும், அவருடைய மனைவியான பார்வதி சுரும்பாற்குழலி மற்றும் ஆராளகேஸ்வரி எனும் பெயருடன் கிழக்கு நோக்கி இருந்தபடி  காட்சி தருகின்றனர். இந்த தலத்தில் சாப விமோசனம் பெறுவதற்காக இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் வந்துள்ளனர். ரத்னகிரீஸ்வரரை இங்கு வந்து வணங்கி வழிபட்டால்  திருமணத்தில் ஏற்படும் தடங்கல் விலகும், தொழில் அபிவிருத்தி அடையும், புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.   மலையில் படிகள் வழியே மேலே ஏறிச் செல்லும்போது அங்குள்ள மூலிகை மரங்கள் மீது விழுந்தபடி வீசும் காற்றை   சுவாசிப்பதினால் ஆஸ்தும, ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் விலகுமாம்.

-  முடிவுற்றது  -

ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார்

$
0
0
வாணிய செட்டியார்களின்  
 குல தெய்வம்

பிரபஞ்சம் துவங்கியபோது முதலில் படைக்கப்பட்டவர்களில் ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அடுத்து படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அந்த ஏழு ரிஷிகளில் ஏதாவது ஒருவரை தமது வம்சத்தை ஸ்தாபித்தவர்கள் எனக் கருதி வணங்கினார்கள். ஒவ்வோருவரின் வழிதோன்றல்களுக்கும் அவர்கள் பாட்டன் வணங்கிய ரிஷியே மூல தெய்வமானார்கள். இப்படியாகப் படைக்கப்பட்டவர்களான ஏழு ரிஷிகளுடைய  வம்சா வழியில் வந்த வம்சத்தினர் பலரும் பல இடங்களிலும் வசிக்கத் துவங்கினார்கள். அந்த ஏழு ரிஷிகளில் ஒருவருடைய குலத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் என்பதைக் பறைசாற்றும் வகையில் தம்மை அந்தந்த ரிஷிகளின் கோத்ராதிகள் என்று கூறிக்கொண்டார்கள். கோத்திரம் என்றால் குலம் என்றும், வம்சம் என்றும் அர்த்தங்கள் உண்டு. ஆகவேதான் மனிதர்கள் தம்மை இன்னின்ன ரிஷியின் கோத்ராதிகள் என்பதைக் குறிக்கும் வகையில் தத்தம் குடும்பத்தை இன்ன கோத்திரத்தைக் கொண்டவர்கள் என்று அடையாளம் காட்டிக் கொண்டார்கள். அந்த கோத்ராதி என்பதே பின்னர் கோத்திரம் என ஆயிற்று. ஆனால் இந்து மதத்தினரைத் தவிர பிற மதத்தினர் எவருமே  தம்மை இந்த முறையிலான கோத்ராதிகள்  என்று கூறிக் கொண்டதற்கான வரலாறு இல்லை என்பதினால் இந்து மதத்தில் மட்டுமே கோத்திரம் என்று கூறப்படும் பழக்கம் இருந்தது.

கோத்திரம் என்பதின் அடிப்படையில் விவாஹம் மற்றும் உறவு முறைக் கொண்டாலும் இப்படிப்பட்ட கோத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள வாணிய செட்டியார்கள் எனும் சமூகத்தை சார்ந்த ஐந்து கோத்ராதிகள் வணங்கும் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில் ஒன்று தமிழ்நாட்டின் திருச்சி அருகில் உள்ள தென்னூரில் காணப்படுகிறது. அந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையாரே வாணிய செட்டியார்களின் குல தெய்வமாவார். வாணிய செட்டியார்கள் எனும் சமூகத்தை சேர்ந்த அந்த ஐந்து கோத்ராதிகள் யார் என்றால் மகரிஷி கோத்திரத்தை சார்ந்த பருத்தி குடையான், பயிராளலக, தென்னவராயன், பாக்குடையான் மற்றும் மாத்துடையான் எனும் கோத்ராதிகள் ஆவர்.


இந்த பெரிய நாச்சியம்மன் ஆலயம் அமைந்த கதை பல கிராமங்களிலும் காணப்படும் கிராம தெய்வங்களின் கதையில் கூறப்பட்டு வரும் மனிதர்கள்  தெய்வமான கதையை ஒத்து உள்ளது. இந்தக் கதைக்கான வரலாற்று ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும் வாய்மொழி வழியே  காலம் காலமாக  கூறப்பட்டு வரும்  இந்த ஆலயம் குறித்தக் கதை கீழே உள்ளதாகும். இந்த ஆலயம் உள்ள இடத்தில் ஆலயத்தின் கதையை சேர்ந்த மன்னர்  வரலாறு உள்ளது. இடங்களும் காணப்படுகின்றன.

பதினாறாம் நூற்றாண்டில் இன்றைய திருச்சி மாவட்டத்தில் உறையூர் எனக் கூறப்படும் பகுதி விசுவப்ப நாயக்கர் என்பவர் ஆட்சியின் கீழ் இருந்தது. நாயக்கர் மரபில் வந்த இராணி மங்கம்மாள் (1689-1704) மதுரையை ஆண்ட பெண்மணி ஆவார். துணிவு மிக்கப் பெண்மணியான இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சி விளங்கியது. அவருடைய சகோதரரே விசுவப்ப நாயக்கர் ஆவார். விசுவப்ப நாயக்கரின் இன்னொரு சகோதரர் 1595 – 1601 ஆண்டுகளில் மதுரையை ஆண்டு வந்த கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் ஆகும்.  அவர்கள் ஆண்டு வந்த காலங்களிலும் அதற்கும் முன்னதாக பல நூற்றாண்டுகளாக பல இடங்களிலும் நடைபெற்று வந்திருந்த, கணவன் இறந்தால் அவர் உடலை எரிக்கும் சிதையில் தாமும் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் மனைவிகளின் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்து வந்துள்ளது. ஆகவேதான் இந்த ஆலயம் எழும்பிய காலம் 1689-1704 என்பதாக கூறுகிறார்கள். பல இடங்களிலும் உடன்கட்டை ஏறிய பெண்களை பத்தினி தெய்வமாக போற்றி வணங்குதல் தென் நாட்டில் மட்டும் அல்ல, வடநாட்டிலும் இருந்துள்ளது. அப்படி இறந்தவர்கள் நினைவாக நடுக்கல் என்ற பெயரில் கல்லை ஊன்றி வைத்து நினைவுச் சின்னமாக கருதி வந்தார்கள். அதை சதிகள் என்றும் கூறினார்கள். இன்றும் பல இடங்களில் அப்படிப்பட்ட நடுக்கல்  தெய்வமாக வணங்கப்படுவதைக் காண முடியும்.

இந்த நிலையில் முன் ஒரு காலத்தில் உறையூர் பகுதியில் ஸ்ரீ வீரியப் பெருமாள் எனும் ஒரு வணிகர் எண்ணை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவியே ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் என்பதாகும். அவர்கள் தெய்வ பக்தி மிக்கவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  அப்போது அந்த நாட்டை விசுவப்ப நாயக்கர் என்றொரு மன்னன் ஆண்டு வந்திருந்தார். அந்த மகனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். ஆகவே அந்த மன்னன் அவளை மிகவும் ஆசையோடு வளர்த்து வந்தார். ஆனால் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மன்னனின் மகள் இளம் வயிதிலேயே இறந்து விட்டாள். அவள் மீது அதிக பாசம் கொண்டிருந்த மன்னனால் தனது மகளின் மரணத்தின் சோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் அவரால் ஆட்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் அங்கும் இங்கும் அலையத் துவங்கினார்.

இப்படியாக அலைந்து கொண்டிருந்தவர் ஒருநாள் எதேற்சையாக ஸ்ரீ வீரியப் பெருமாளுடைய மனைவி பெரிய நாச்சி அம்மையாரை கடை வீதியில் காண நேரிட்டது. பெரிய நாச்சி அம்மையார் உருவ அமைப்பில் மன்னனின் இறந்து போன மகளைப் போலவே இருந்ததைக் கண்டார். அதனால் அவளிடம் சென்று அவள் இருப்பிடத்தைக் கேட்டறிந்தவர், பெரிய நாச்சி அம்மையாருடைய கணவரை சந்தித்து அவர்களை தமது அரண்மனையிலேயே வந்து தங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, அப்படி அவர்கள் தமது அரண்மனையில் வந்து இருந்தால் இறந்து போய்விட்ட தனது மகள் தன்னுடன் உள்ளதைப் போலவே உணர்ந்து கொண்டு இருக்க முடியும். அதனால் நாட்டு நலனிலும் அதிக கவனத்தை தன்னால் செலுத்த முடியும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த தம்பதியினரோ அரண்மனையில் சென்று தங்க விருப்பம் இல்லை என்றும், மன்னன் போது தனது மகளாகக் கருதும் பெரிய நாச்சி அம்மையாரைக் எப்போது காண விரும்பினாலும் உடனே அவர்கள் அரண்மனைக்கு வந்து அவரை தரிசிப்பதாகக் கூற மன்னனும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு அரண்மனைக்கு திரும்பினார். அது முதல் பெரிய நாச்சி அம்மையாரை அந்த மன்னன் தனது மகளாகவே கருதி அவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தனது இறந்து போன மகளே நேரிலே மீண்டு வந்து விட்டதைப்போலக் கருதிக் கொண்டு மகிழ்ச்சியில் நல்லாட்சி செய்யலானார். அவர்களுக்கு அடிக்கடி எதையாவது சேவகர்கள் மூலம் அனுப்பியும் வந்தார்.

இப்படியாக சில காலம் கடந்தது. ஒருமுறை மன்னன் புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த வனப்பகுதியில் வேட்டையாடச் சென்று இருந்தார். திரும்பி வரும் வழியில் வேட்டையாடிக் கிடைத்த  மிருகத்தின் சிறிது இறைச்சியை தனது சேவகனிடம் தந்து அதை பெரிய நாச்சி அம்மையாருக்கு தந்துவிட்டு வருமாறு கூறி அனுப்பினார். அப்போது சற்று மாலைப் பொழுதாகி விட்டது. அந்த சேவகனும் இறைச்சியை எடுத்துக் கொண்டு செல்லும்போது வழியில் வீரியப் பெருமாள் தனது நாயுடன் செல்வதைக் கண்டு அவரிடம் சென்று மன்னன் கொடுத்து அனுப்பிய இறைச்சியை அவரிடம் தந்துவிட அவரும் அதை தனது எண்ணைப் பானை மீது வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, தற்போது காந்தி மார்க்கெட் எனப்படும் (அதை காமன் ஆர்ச் என்கிறார்கள்) இடத்தைக் கடக்கும்போது அங்கு உலவிக் கொண்டு இருந்த கோட்டை முனி ஓன்று அவரை அடித்துக் கொன்று விட்டது.


சாதாரணமாக இன்றும் பல கிராமங்களில் காத்து அல்லது காற்று, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, முனி என பல பெயர்களில் அமானுஷ்ய ஆத்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். இரவு வேளையிலும், மனித நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களிலும் அப்படிப்பட்ட பேய், பிசாசு, முனி போன்றவை உலாவிக் கொண்டு இருக்கும் என்பார்கள். அவர்களில் கோட்டை முனியும் ஒருவர் ஆகும். அவரை பேய் போன்றதில் ஒன்று என்று நம்புபவர்களும் உண்டு. முனிகளிலும் தீய மற்றும் நல்ல குணம் கொண்ட முனிகள் உண்டு. அதனால்தான் கந்தர் ஷஷ்டி போன்ற முருகன் பாராயணங்களிலும் முனி பற்றிய கீழுள்ள வரிகள் இடம் பெற்று உள்ளது.  இதில் இருந்தே தீமை செய்யும் முனிகள் உண்டு என்பது விளங்கும்.

.................வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் |
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் |
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் |.......................

வீரியப் பெருமாள் எங்கு சென்றாலும் அவருடன் துணைக்கு அவருடைய வளர்ப்பு நாயும் உடன் செல்லும்.  நாய்கள் பேய் மற்றும் தீய ஆத்மாக்களைக் கண்டால் அவற்றை அடையாளம் கண்டு கொண்டு விடும். முனி தனது எஜமானனை அடித்துக் கொன்று விட்டதைக் கண்ட நாய் இறந்து ரத்தக்கறையுடன் கிடந்த அதன் எஜமானனின் உடலை எப்படியோ வாயால் கௌவ்வி வீட்டுக்கு இழுத்து வந்து விட்டது. நாய்  இழுத்து வந்த  இறந்து கிடந்த கணவரின் உடலைக் கண்ட பெரிய நாச்சி அம்மையார் எதோ விபரீதம் நடந்து விட்டதைக் கண்டு கொண்டார். அப்படி அகால மரணம் ஏற்ப்பட்டால் அதன்  காரணம் பேய் அல்லது பிசாசுகளாகவே இருக்கும் என்பது பண்டையக் கால நம்பிக்கையில் ஒன்றாக இருந்தது. பெரிய நாச்சி அம்மையார் சோகத்தினால் கதறி அழுதாலும் மனதை திடமாக்கிக் கொண்டு தனது கணவரை கொன்ற முனியிடம் நியாயம் கேட்க உடனடியாக தனது கணவரின் உடலை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு உறையூருக்குக் கிளம்பிச் சென்றார். ஆனால் அந்த வண்டியோ தற்போது பெரியநாச்சி அம்மன் ஆலயம் உள்ள இடத்தருகே வந்ததும் அங்கிருந்து மேலும் நகராமல் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது. என்ன செய்தும் அந்த வண்டியை வேறு இடத்துக்கு தள்ளிக்கொண்டு போக முடியவில்லை.

ஆகவே அந்த அம்மையார் 'ஒருவேளை தனது கணவர் தன்னை அங்கேயே தகனம் செய்து கொள்ள எண்ணி உள்ளதை அப்படிக் காட்டுகிறாரோ என்னவோ என எண்ணியபடி அந்த உடலை அங்கேயே இறக்கி வைத்து தகனத்துக்கான ஏற்ப்பாடுகளை செய்யத் துவங்கினாள். இதன் இடையே நடந்திருந்த அந்த நிகழ்ச்சி மன்னன் காதுகளை எட்டியது. அதைக் கேட்டறிந்த மன்னனும் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்து பெரிய நாச்சியிடம் துக்கம் விசாரித்தப் பின், அவளது கணவரின் இறுதி சடங்கை முடித்து விட்டு தன்னுடன் அரண்மனைக்கு வந்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த அம்மையாரோ தான் வீரியப்பெருமாளின் தர்ம பத்தினியாக வாழ்ந்திருந்ததினால் அவர் மரணத்துக்குப் பின்னால் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்க முடியாது என்றும், ஆகவே அவர்களது குல  பழக்கத்தின்படி அவர் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏற உள்ளதாகவும், தன்னை தடுப்பது மன்னனுக்கு பாவத்தைக் கொண்டு சேர்க்கும் எனவும் கூறினாள்.

அந்த காலத்தில் இருந்த பெண்கள் தனது கணவன் மரணம் அடைந்தால் அவரை எரிக்க சிதையூட்டும்போது அதில் தானும் குதித்து தற்கொலை செய்து கொள்வார்கள். அதன் மூலம் தனது கணவரது ஆத்மாவுடன் தானும் சேர்ந்து கொள்வதாக நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். அப்போதெல்லாம் மயானம் என்பது தனியாக இருந்தது இல்லை. அந்தந்த ஊர் எல்லையில் உள்ள பாழும் நிலத்தின் எல்லைகளில் தகனம் செய்து விடுவார்கள். அப்படி உடன்கட்டை ஏறிய பெண்கள்  பின்னர் தெய்வமாகி விடுவார்கள் என்று நம்பப்பட்டதினால் பின்னர் அந்த ஊரிலேயே அப்படி தற்கொலை செய்து கொண்ட பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். அதையே 'சதி'என்று வட மொழியில் கூறுவார்கள். ஆகவே அப்படி தகனம் செய்யப்பட்ட இடத்தில் உடன்கட்டை ஏறிய பெண்கள் நினைவாக ஒரு நடுக்கல்லை நட்டு அதையே அந்த தெய்வமாகி விட்ட பெண்ணாகக் கருதி வழிபடுவார்கள். அப்படி தெய்வமாகி விட்ட பெண்களை தமது கிராமத்தை காத்து வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிறு ஆலயமும் அங்கு அமைத்து விடுவார்கள்.

தமிழ் நாட்டில் ஒரு 
கிராமத்தில் நட்டுக்கல் 

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் கூட சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு விதத்தில் பார்த்தால் அந்த இரண்டு வேதங்களுமே சதியை ஆதரிப்பது போல உள்ளதினால் உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத. 28,3.1). இதை மனதில் கொண்டதினால்தான் வேறு வழி இன்றி அவளது உடன்கட்டை ஏறும் முடிவுக்கு மன்னன் விசுவப்ப நாயக்கரும் கட்டுப்பட வேண்டியதாயிற்று.

மறுநாள் காலை அதே இடத்தில் சிதையை தயார் செய்து வீரியப் பெருமாளை அந்த சிதையில் தகனம் செய்ய, ஏற்க்கனவே முடிவு செய்து விட்டதைப் போலவே பெரிய நாச்சி அம்மையாரும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது சிதையில் குதித்த அம்மையார் பூமியிலே தனக்கு ஒரு வாரிசு இல்லை, தம்மை தகனம் செய்ய சந்ததி இல்லையே என மனம் வருந்தி தனது கணவரின் இஷ்ட தெய்வமான பெருமாளிடம் அடுத்த ஜென்மத்திலாவது தமக்கு சந்ததி வேண்டும் என்று வேண்டிக் கொண்டவாறு தீயிலே குதித்தார். ஆனால் பெருமாள் அவளது வேண்டுகோளை நிராகரிக்கவில்லை.  மரணத்திலும் அவள் மனம் வருந்த வேண்டாம் என்பதற்காக பெருமாளே  மலை மீது இருந்து இறங்கி வந்து வீரப்ப ஸ்வாமி என்ற உருவில் அங்கு நின்றிருந்தபடி பெரிய நாச்சி அம்மையாரின் தகனத்தில் கலந்து கொண்டாராம். அதன் பின் அனைவரும் திரும்பச் சென்று விட்டார்கள்.

உடன்கட்டை ஏறினார் திருமதி பெரிய நாச்சி அம்மையார்
 -இந்தப் படத்தை வரைந்தவர் திருமதி சுபாஷினிஹரிஷ்-

மன்னனும் சில நாட்கள் அமைதி இன்றி இருந்தார். அப்போது ஒருநாள் அவர் கனவில் தோன்றிய பெரிய நாச்சி அம்மையார் தான் சக்தியின் சொரூபம் என்றும்,  தான் வந்த வேலையை பூமியிலே நிறைவேற்றி விட்டதாகவும், ஆகவே அந்த ஊரைக் காத்தபடி தான் இருக்க விரும்புவதாகவும்,  அதற்கு அங்குள்ளவர்கள் ஒப்புக் கொண்டால் தான் சதியாகி தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே ஒரு ஆலயம் அமைத்து தன்னை வழிபட வேண்டும் என்றும் கூறினாள்.  அது மட்டும் அல்லாமல் தனது மகனாக தனது தகனத்தில் வந்திருந்த வீரப்ப ஸ்வாமிக்கும் ஆலயத்தில் சன்னதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினாராம். அதைக் கேட்ட பின்னரே சதியாகி மரணம் அடைந்த  பெரிய நாச்சி அம்மையார் சக்தியின் ஒரு அவதார கணம் என்றும், எதோ காரணத்துக்காக பூமியிலே பிறப்பு எடுத்திருந்ததும் மற்றவர்களுக்குப் புரிந்தது. அதைக் கேட்டு மெத்த மகிழ்ச்சி அடைந்த மன்னன் விசுவப்ப நாயக்கரும் பெரிய நாச்சி அம்மையாரின் ஆணையின்படியே அந்த இடத்தில்  பெரிய நாச்சி அம்மையாருக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அது முதல் ஊர் ஜனங்களும் அந்த அம்மையாரை ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் என பெயரிட்டு வணங்கத் துவங்கினார்கள்.


அந்த ஆலயத்தின் மூல சன்னதியில் மற்றும் அதை ஒட்டிய சன்னதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன், ஸ்ரீ வீரிய பெருமாள், ஸ்ரீ வீரபத்திர ஸ்வாமி, ஸ்ரீ விசுவப்ப நாயக்கர் போன்றவர்களது சிலைகள் காணப்படுகின்றன.
: ஆலயம் உள்ள இடம் மற்றும் செல்லும் வழித்தடம் :

ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவில்
தென்னூர் ஹை ரோடு
தென்னூர்
திருச்சி - 620 017 


பேருந்து: (திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் or சத்திரம் பேருந்து நிலையம்)
தில்லைநகர் வழி :காவேரி ஆஸ்பத்திரி நிறுத்தம்
உறையூர் வழி :புத்தூர் நால் ரோடு நிறுத்தம்

ஆலய பூஜை மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள மணி மீது கிளிக் செய்யவும்.
http://sriperiyanachiammantemple.org/index.php?page=about-temple

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1

$
0
0
 --சாந்திப்பிரியா --
1 


நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் 'ஆத்மாவின் பயணக் கதை'குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது. நான் பல இடங்களில் அந்தக் கதைகளைக் கேட்டு இருந்தாலும் அவற்றைக் கூறும் பண்டிதர்கள் இடை இடையே  ஆன்மீக் கதையை விட்டு சற்றே விலகி உலக நடப்புகளைக் சேர்த்துக் கூறி  எதை குறித்து  அவசியம் கூற வேண்டுமோ அது குறித்து  கூறாமல் அந்த கதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்பதை நேரிடையாக பல முறைக்  கண்டிருக்கிறேன்.  அந்தக் கதை மூலம் உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா எங்கு செல்கிறது, அதன் அமைதியான பயணத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும், இறந்தவர்களின் வீட்டில் செய்யும் சடங்குகள் என்ன, அந்த இறப்பை நாம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அதே நேரத்தில் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு பாடம் போல எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தாத்பர்யம்.   சமீபத்திலும் அப்படிப்பட்ட சடங்குகள் நடைபெற்ற  ஒரு இடத்தில் கதையைக் கேட்டேன்.  மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.  இறந்தவருக்கு பதிமூன்று நாட்கள் சடங்குகளை எப்படி செய்ய வேண்டும், அதன் அர்த்தம் என்ன, ஆத்மா பயணிப்பது எப்படி போன்றவற்றை கூறாமல் அதை விட்டு விலகிச் சென்று கூறப்படும் கதைகள் போதனாமுறையில் அமைந்தவையாக இல்லாமலும்  தாத்பர்யத்தை விட்டு விலகிச் செல்வதும்  போலத் தோன்றியது.  
 
ஆகவே அப்படிக் கூறப்பட்ட கதைகள், மற்றும் மயானத்திலும்,  சடங்குகள் செய்யப்படும் இடங்களிலும்  இருந்த சில பண்டிதர்களிடம் பேசிக் கொண்டு அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள், அவற்றைக் குறித்து சுமார் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருந்த சிறிய அளவிலான புத்தகம் போன்றவற்றின் விவரங்களை எடுத்துக் கொண்டேன். அவை அனைத்தையும் தொகுத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன். இதன் மூலம் மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பயணிக்கும் கதை மட்டும் அல்ல உண்மையிலேயே நாம் அனைவரும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பதைக் குறித்து சாஸ்திரங்களிலும் அந்த காலத்திலும் என்னென்ன  கூறி உள்ளார்கள் என்பதையும், அவற்றின் அடிப்படைக் காரணம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் என் அறிவுக்கு உகந்தவகையில் அவற்றை விளக்க முற்பட்டு இருக்கிறேன்.  இது வேத புத்தகம் போல எழுதப்பட்டு உள்ள கட்டுரை அல்ல. நாம்  நம்மை சுற்றி நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொது நலக் கட்டுரை ஆகும்.
 
1) பூவுலக வாழ்க்கைக்கு எப்படி பூதேவி, இந்திரன், அக்னி, வாயு மற்றும் வருணன் போன்றவர்கள் முக்கியமோ அப்படித்தான் மரணம் அடைந்து விட்டவர்களின் ஆத்மாக்களையும் காப்பாற்ற பிரும்மனால் படைக்கப்பட்ட எட்டு வஸுக்கள் மற்றும் ஏகாதச ருத்திரர் மற்றும் துவாதசாதித்யர் போன்றவர்கள்  முக்கியமானவர்களாக உள்ளார்கள். அந்த எட்டு வஸுக்கள் வஸு, ருத்ர, ஆதித்ய, ஸ்வரூபா, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹ என்பவர்கள் ஆவர். அவர்களது பாதுகாப்பில்தான் இறந்தவர்களது ஆத்மாக்கள் அவர்களுக்கு கர்மம் ஆகும்வரை தங்கி இருக்கும் என்பதாக ஐதீகம் உண்டு.

2) சாதாரணமாக நோயினால் பீடிக்கப்பட்டு, வயதோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ சுய நினைவற்று மெல்ல மெல்ல சுவாசம் நிற்கும் நிலையில் வந்துவிட்டவர்களையும்,   மருத்துவர்கள் கைவிட்டப் பின், இன்னும் சில மணி நேரத்திலேயே மரணம் அடைய உள்ள நிலையில் உள்ளவரையும்  சுற்றி உள்ளவர்கள் அவர்களுடைய மூச்சு நிற்கும்வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம் போன்றவற்றை பாராயணம் செய்தபடி இருப்பார்கள். சிலர் ராம நாமத்தை ஜெபித்தபடி இருப்பார்கள். ஆனால் அவற்றில் முக்கியமான ஒரு காரியத்தை அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் கூறி உள்ளன. அதை பலரும் அறிந்திருக்கவில்லை.
 
3) அந்த காரியம் என்ன என்றால் மரணத்தை தழுவும் நிலையில் உள்ளவர்களின் குடும்பத்தில் மூத்த மகன் இருந்தால் முடிந்தவரை மரணம் அடைய உள்ளவருடைய வலது காதில் பஞ்சாக்ஷர, அஷ்டாக்ஷரீ, மற்றும் சிவாய போன்ற மந்திரங்களை அவர்கள் சற்று நேரம் ஓதிக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி மந்திரம் ஓதுவதின் மூலம் உடம்பில் உள்ள ஐந்து பிராணன்கள் ஒன்றாகி வெளியேறும் என்பது ஐதீகம். அப்படி மந்திரம் ஓதத் தெரியாதவர்கள், அல்லது செய்ய முடியாதவர்கள் தம் வீட்டில் இவற்றை  ஓதத்  தெரிந்தவர் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் அந்த மந்திரங்களை ஓதலாம். சாதாரணமாக வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம்  பஞ்சாட்சர மந்திரம் அல்லது சிவாய நமஹா எனும் மந்திரத்தை ஓதுவார்கள். அது தவறல்ல. ஆனால் மூத்த மகன் அதை செய்வதின் மூலம் மரணம் அடைவ உள்ளவர் மனம் மேலும் அமைதி அடையும் என்பது நம்பிக்கை. இப்படி எல்லாம் செய்ய வேண்டியதின் அவசியம் அந்த ஆன்மா இறைவனையே எண்ணும்படியான சூழ்நிலையை அங்கே உருவாக்க வேண்டும் என்பதே. 

4) அது மட்டும் அல்ல வீட்டில் கூடி உள்ளவர்கள் தொடர்ந்து சஹஸ்ரநாம  பாராயணம் அல்லது நாராயணீயம், சுந்தரகாண்டம், ராம ராமா, கோவிந்த நமஹா ... கோவிந்த நமஹா.... போன்றவற்றை  உச்சரித்துக் கொண்டும் உரக்கப் படித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  அப்படி யாரும் இல்லை என்றால் ஒலி நாடாவில் போட்டு அதை அமைதியான சூழ்நிலையில் ஒலி பரப்பினால் அதுவும் நல்லதற்கே ஆகும். இது சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டதா என்ற தயக்கம் தேவை இல்லை. நாகரீகம் அதிகரிக்காத முன் காலத்தில் இப்படிப்பட்ட ஒலி நாடாக்கள் கிடையாது என்பதினால், மக்கள் மிக சாதாரண நிலையில் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்து வந்ததினால் இப்படிப்பட்ட சாதனங்களை பயன்படுத்தும் நிலையில் இருந்திடவில்லை, இப்படிப்பட்ட சாதனங்களும் இருந்திடவில்லை. ஆகவே இந்த காலத்தில் அவற்றை பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. அந்த சூழ்நிலையில் பகவான் நாம ஒலியே முக்கியம் ஆகும்.  இறக்கும் தருவாயில் உள்ளவர் அருகே கூடி உள்ளவர்கள் வாய் வழியே மட்டுமே நாமாவளியை நேரடியாக  ஓத அல்லது பாடிட வேண்டும் என எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. அதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணமும் கிடையாது.  மனிதர்கள் வாய் வழியே  ஓதுவதற்கு இணையாக  பகவானின் நாமகரணத்தை எந்த விதத்திலாவது   அந்த இடத்தில் பரவ வைப்பதே முக்கியம் ஆகும்.


5) இந்த பாராயணங்களை ஓத வேண்டும் என்று அறிவுறுத்துவதின் காரணம் அந்த இடத்தில் உள்ள சூழ்நிலையை முதலில் தெய்வீகத் தன்மைக் கொண்டவையாக மாற்ற வேண்டும். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.  சாதாரணமாகவே பல்வேறு நல்ல மற்றும் தீய கணங்கள் வான் வெளியில் அங்காங்கே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.  யாராவது மரணம் அடையும் நிலையில் இருந்தால்  தீய  கணங்களோ அந்த இடத்துக்குச் சென்று மரணப் படுக்கையில் உள்ளவர் மேல் பகுதியில் வெற்றிடத்தில் சுற்றியபடி இருக்கும்.  இறந்தவரது ஆத்மா வெளியேறும்போது அதை தம்முடன் இழுத்துக் கொண்டு செல்ல முற்படும். அவை நம் கண்களுக்கு புலப்படாது. ஆனால் அவற்றினால் மனிதர்கள் எவரையும் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சக்தி அவைகளுக்கு இல்லை. அதே நேரத்தில் அவற்றினால்  வான் வெளியில் மற்றும் வீட்டின் உள்ளேயும்  சுற்றிக் கொண்டு இருக்கும் மற்ற கணங்களை  கட்டுப்படுத்த முடியும். அந்த தீய  கணங்களினால் தெய்வீக மந்திர சக்தி ஒலிகளை தாங்க முடியாது.   இது இயற்கை நியதி ஆகும். மரணம் அடைந்தவரது ஆத்மா அவரது உடலை விட்டு வெளியேறி மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் முன்னால் அந்த ஆத்மாவை தம்முடையக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அங்குள்ள தீய கணங்கள் முயலும். அப்படி செய்வதின் மூலம் அதற்கு செய்யப்படும் கர்மாக்களின் பலன் தமக்கும் வந்து சேரும், தமக்கும் நல்லகதி கிடைக்கும் என அவை எண்ணுமாம்.

எப்போது உடலில் இருந்து ஆத்மா வெளிவரும் 
என்று எதிர்பார்த்து  மரணம் அடைய உள்ளவர் 
மேலுள்ள வெற்றிடத்தில் காத்திருக்கும் தீய கணங்கள்

6) அதனால்தான் உரத்தக் குரலில் ஓதப்படும், அல்லது பாடப்படும் தெய்வீக மந்திர ஒலிகள் இறக்கும் தருவாயில் உள்ளவர்களது வீட்டின்  சூழ்நிலையை ஆக்கிரமித்தபடி இருக்கும்போது அந்த மந்திர உச்சாடனையின் சக்திகள் அங்கிருந்து தீய கணங்களை துரத்தி அடித்து விடும்.  மேலும் அந்த மந்திர உச்சாடனைகள் இறந்தவரது உடலில் இருந்து வெளிவந்த ஆத்மாவை சுற்றி உள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொண்டு ஆத்மாவினால் உலக பந்தத்தின் வேறு எதையும் யோசனை செய்ய இயலாதவாறு செய்து விடும்.  இப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் அமைத்துக் கொடுப்பதின் மூலம் மரணம் அடையும் நிலையில் உள்ளவர்களின்  ஆத்மா  தெய்வ நினைவோடு  இருந்தபடி அது வாழ்ந்திருந்த உடலுக்கு  நல்ல கதி கிடைக்க வழிவகுத்து, அடுத்த ஜென்மத்தில் தான்  யாராக பிறக்க வேண்டும் என எண்ணினார்களோ அவர்களாகவே பிறக்க உதவும் என்பதெல்லாம் நம்பிக்கை ஆகும்.

7) அடுத்து மரண நிலையில் இருந்தவர் மரணமும் அடைந்து விட்டார். அப்போது அவர் உடலில் இருந்து பிராணன் வெளியேறி அந்த உடலின் மேல்பகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆகவே மரணம் அடைந்தவர் உடலை தர்பைப் புல்லைப் பரப்பிய தரையில் உடலின் தலைப் பகுதியை தெற்கு நோக்கி இருக்குமாறு படுக்க வைத்து, இறந்தவரின் ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள தனக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை துவக்க வேண்டும்.தென் பகுதியில்தான் யமதேவர் இருப்பதாகவும், அந்த பிராணனை அழைத்துக் கொண்டு செல்ல வந்துள்ளவரை நோக்கி காலை நீட்டி படுக்க வைத்து  அவரை அவமதிக்கக் கூடாது  என்பதினால் இறந்தவருடைய தலையை தெற்கு நோக்கி படுக்க  வைப்பது ஐதீகம் ஆகும். பிணத்தின்  தலையை தென் பகுதியை நோக்கி வைப்பதின் மூலம் இறந்து கிடப்பவர் தன் உடலில் அதுவரை குடி இருந்த தன்  ஆத்மாவை அழைத்துக்  கொண்டு போக வந்து உள்ள யமதர்மனை சாஷ்டாங்கமாக   நமஸ்கரிப்பதாகவும்  ஐதீகம் உண்டு .  தென் பகுதியில் தலையை வைத்து  உடலைக்  கிடத்துவதற்கு விஞ்ஞான ரீதியான இன்னொரு காரணமும் உள்ளது. தென் பகுதியில் காந்த சக்தி அதிகமாக உள்ளதினால் உடலில் இருந்து வெளியேறும்  சக்தி எளிதில் உடலில் இருந்து  பிரிந்து  வெளியில் வர தென் திசை உதவுகிறது.
 
மரணம் அடைந்ததும் உடலை விட்டு 
வெளியேறும் ஆத்மா  மயானம் சென்று தகனம் 
செய்யும்வரை அந்த உடல் மேல் பகுதியில் அதைத் 
தொடர்ந்து சென்று கொண்டே இருக்குமாம்

அடுத்து கர்மாக்களை எப்போது, எப்படி செய்யத் துவக்க வேண்டும்? சாஸ்திரத்தின்படி  என்னென்ன செய்வார்கள் என்பதைக் காணலாம்.
.................தொடரும் 

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 2

$
0
0
 --சாந்திப்பிரியா --
2

8) ஒருவர் மரணம் அடைந்த பின் அவருக்கு அடுத்த பதிமூன்று நாட்களில் செய்ய வேண்டிய கர்மா அல்லது நியமங்களை எப்படி செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள்.  அவற்றில் சில சடங்குகள்  விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளவையாகவும் காணப்படுகின்றன. மீதம் உள்ளவை நன்னெறி முறைகளை போதிப்பவை, ஒவ்வொருவரும் ஒழுங்கு முறையுடன் வாழ வேண்டும், பக்தி  இருக்க வேண்டும் என்பதற்காகவும்  எழுதி ஆன்மீக கண்ணோட்டத்துடன் போதிக்கப்பட்டவை. சடங்குகளில் கூறப்பட்டு உள்ள அனைத்திறக்கும் நம்மிடம் விஞ்ஞானபூர்வ காரணங்கள் கிடையாது என்றாலும், நம்பிக்கையின் அடிப்படையில்  அவை காலம் காலமாக பழக்கத்தில் இருந்து கொண்டு உள்ளன என்பது மட்டும் இல்லாமல் நம்பப்பட்டும்  வந்துள்ளன.   அவற்றில் பலவும் இந்தக் கால நடைமுறைக்கு ஏற்றவையாக இல்லை என்றாலும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள அனைத்து சடங்குகளும், நெறி முறைகளையும் ஏற்க முடியாதவை  என்று கூற முடியாது.  அந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஏற்பவே நியதிகள் பலவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன என்றாலும், அதை இந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வதற்கு தடையும்  இல்லை.

9) இதற்கும் ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது. பண்டை காலத்தில் அந்தணர்களின் ஆதிக்கம் நிறைந்தே இருந்தது. அந்தணர்கள் வேறு எந்த தொழிலையும் செய்திருக்கவில்லை. சம்ஸ்கிருத மொழிகளில் மற்றும் கிரந்தம் எனப்படும் மொழிகளில் எழுதி வைக்கப்பட்டு இருந்த வேதங்களையும், சாஸ்திரங்களையுமே கற்றறிந்து, குருமார்களிடம் சேவகம் செய்து குருகுல வாசத்தின் மூலம் அவற்றில் நல்ல தேர்ச்சியும் பெற்று இருந்ததினால் புரோகிதம் செய்து கொண்டு பல நாடுகளிலும் அரசினரின் ஆலோசகர்களாக, ராஜ குருக்களாக இருந்து வந்தார்கள். அவர்கள் மற்றவர்களை விட மேன்மையானவர்களாக கருதப்பட்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கு வாழ்வதற்கு பொருள் தேவை. ஆகவே வேத சாஸ்திரங்களில் கூறப்படாத பலவற்றையும் கூட அவர்கள் நியமங்களாகக் கூறி, அவற்றை அறிந்திடாத, கல்வி அறிவு இருந்திடாத பாமர மக்களிடம் இருந்து தமது தட்ஷணைகளையும், தானங்களையும் பெருக்கிக் கொண்டார்கள். அப்படிப்பட்ட செயல்கள் சிலவும் கூட சம்பிரதாயம், மற்றும் சாஸ்திர விதிகளில் புகுத்தப்பட்டு ஒரு நெறிமுறையாக செயல்படுத்தப்பட்டு வந்திருந்தது.

10) இந்த நிலையில் இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட சடங்குகளும், இறந்தவர்களின் ஆத்மா செல்லும் பாதையும் கூட கருட புராணத்தில் கருடாழ்வாருக்கு மகாவிஷ்ணு போதித்த போதனையின் அடிப்படையில் அமைந்ததுதான். பெரும்பாலான சடங்குகள் அனைத்துமே வாய்மொழி வார்த்தைகளின் மூலமாகவே பரவப்பட்டு பின்னர் எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளன என்பதையும் நாம் மறக்கக்கூடாது. ஆகவே அது எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதைக் காண வேண்டும். அதனால்தான் தற்காலத்தில் பல்வேறு பிரிவினரும் சென்று வணங்கும் மகான்களும், ஆன்மீக குருக்களும் கூட பண்டை காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த பல சாஸ்திர சடங்கு முறைகளை இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொடுத்து நமக்கு  வழிகாட்டுவதில் இருந்தே பண்டைக் காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த அனைத்து சடங்குகளுக்கும்  அடிப்படை ஆதாரம் இருந்திருக்க நியாயம் இல்லை, அவை தர்ம நெறி முறைகளை, பக்தி மார்கத்தை வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை, வேத மற்றும் புராணங்களை நியாயப்படுத்த ஏற்படுத்தப்பட்டவை என்பது விளங்கும்.

11)  சில  சடங்கு முறைகள் ஓரளவுக்கு பண்டையக் கால அந்தணர்களின் ஆதிக்கத்தை மேன்மைப்படுத்தவும் நியாயப்படுத்தவும் வறையுறுக்கப்பட்டு இருந்துள்ளன என்றாலும் அதே நேரத்தில் நாம் கடைபிடிக்கும் சடங்குகளின் அடிப்படை சடங்குகள்  சாஸ்திர நியதிகளை மீறாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இறப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூறப்பட்டு உள்ள சடங்கு முறைகளில் மீறக் கூடாத முக்கியமான பொதுவான சடங்கு முறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் இந்தக் கட்டுரையில் தந்துள்ளேன். அதே சமயத்தில் இந்தக் கால சூழ்நிலைக்கு ஏற்ப  மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய, மாற்றி அமைத்துக்  கொள்ளப்பட்டுவரும்  நெறிமுறைகளையும்  அங்காங்கே எடுத்துக் காட்டி உள்ளேன்.

12)  இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான காரியங்கள் என்னென்ன  என்பதை இந்தக் கட்டுரையில் கூறி உள்ளேன் என்றாலும் ஒருவர் வீட்டில் கர்மாவை செய்ய அழைக்கப்படும் பண்டிதர்கள் அந்த குடும்பத்தினரின் சம்பிரதாயத்துக்கு ஏற்ப என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாகக் கூறுவார்கள். ஏன் என்றால் ஒவ்வொரு கோத்திரங்களுக்கும், ஒவ்வொரு பரம்பரையினர் மற்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் (ஜாதியினர்)தனித்தனி சடங்கு முறைகள் மற்றும் மந்திரங்கள்  உண்டு என்பதினால் அவற்றை இங்கு  தனித்தனியே விவரிக்காமல் பொதுவாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை மட்டும் விவரித்து உள்ளேன்.

பூஜை அறையும் ஏற்றப்பட்டு உள்ள விளக்கு . 
ஒருவர் வீட்டில் மரணம் ஏற்பட்டால்
அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த 
அறையின்  கதவை மூடி வைத்திருப்பார்கள்.

13) குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் முதலில்  வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் அங்குள்ள விளக்கை அணைத்து விட்டு அறையை மூடி வைத்து விடுவார்கள். தனி அறை இல்லாமல்  சுவற்றில் ஆணி அடித்து வைக்கப்பட்டு  உள்ள தெய்வங்களுக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு இருந்தால் அதையும்  அணைத்து வைத்து விடுவார்கள். அடுத்த பன்னிரண்டு நாட்களும் வீட்டில் உள்ள பிற தெய்வங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து அங்கு விளக்கேற்றக் கூடாது,  வீட்டில் அடுப்பையும் ஏற்றி சமைக்கலாகாது என்பார்கள். ஆனால் அந்த வீட்டில் தென் திசையில் ஒரு விளக்கை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அணையாமல் ஏற்றி வைத்து இருப்பார்கள். அந்த விளக்கை ஏன் ஏற்ற வேண்டும்? அதன் தாத்பர்யம் என்ன ??

14) குடும்பத்தில் ஒருவருடைய மரணத்தினால் வீட்டினருக்கு ஏற்பட்டு உள்ள அசௌகர்யம் அதாவது இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள துயர நிலைக் காலம் என்பதை சுருக்கி அசௌகம்  என்பார்கள். அதைதான்  சாஸ்திர சம்பிராயததில் தீட்டு காலம் என்று கூறி உள்ளார்கள்.

15) மகிழ்ச்சியான நாட்களில்  வீட்டில் அனைவரும் நலமாக உள்ள  நேரத்தில் குடும்ப மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்காக தெய்வங்களுக்கு முன்னால் ஏற்றப்படும் ஒளி விளக்கின் மூலம் அந்த தெய்வங்களை நமது வீட்டிற்கு வந்து நமக்கு அருள் புரிய வேண்டும் மானசீகமாக வேண்டுகோள் விடுகிறோம். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வைத்து தம்மை ஆராதிக்கும் பக்தர்களுக்கு அருள் செய்ய அந்த ஒளி  விளக்காக தெய்வங்களே பல சமயங்களில் நம்மை அறியாமல் வீட்டுக்குள்  வந்து போகுமாம்.   ஆனால் மரணம் அடைந்த ஜீவன்கள் உலவும் இடத்தில், அதனுடன் சேர்ந்து வேறு பல ஆத்மாக்களும் உலவும் இடங்களில் தெய்வம் வருவது இல்லை. அதனால்தான் தெய்வங்களுக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து தெய்வங்களை அழைப்பது  தடுக்கப்படுகிறது.  அப்படிப்பட்ட புனிதம் வாய்ந்த செயலை துக்க காலத்தில் இறந்தவரது வீட்டில் செய்வதை ஆன்மீக ரீதியில் அனுமதிக்கவில்லை. மன  இருள் இல்லாமல் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டிய தெய்வ காரியம் எதையுமே  துயரத்துடன் செய்யக் கூடாது என்பதினால் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளது.

16) ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்ததும் அந்த குடும்பத்தை விட்டு அடுத்த பன்னிரண்டு நாட்களில் வெளியேற உள்ள  ஆத்மா துயரத்தோடு அங்கு சுற்றித் திரியும் நேரத்தில், நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஏற்கனவே  துயறுற்றுத் திரியும் ஆத்மாவை மேலும் துயரத்தில் ஆழ்த்தலாமா? அந்த ஆத்மாவின்  துயரத்தில் அந்த வீட்டினரும் ஆத்மார்த்தமாக பங்கு  கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதே தெய்வத்தின் முன்பாக விளக்கை அந்த பன்னிரண்டு நாட்களும் ஏற்றுவது இல்லை. ஏன் எனில் அந்த நேரத்தில் தெய்வங்களும் அங்கு வராதாம்.

17)  அதே சமயம்  இறந்து போனவர் அறையில் தெற்குப் பகுதியில் ஒரு சின்ன தீப விளக்கை அந்த பனிரண்டு நாட்களும் அணையாதபடி  இருக்குமாறு ஏற்றி வைத்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது.  அது ஏன்?  அடுத்த பன்னிரண்டு நாட்களும் யம தர்மனின் ஆதிக்கத்தில்  உள்ள அந்த வீட்டில் யம தர்மதேவருக்கு மட்டுமே முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் காரியம் அது.  இறந்தவரது ஆத்மாவின் பாவங்களை மன்னித்து, அந்த ஆத்மாவை அழைத்துச் செல்ல வரும் யமகணங்கள் அவர்களை துன்புறுத்தாமல்  நல்ல முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக யம தேவனை ஆராதிக்கும் வகையில் அவருக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என்பதினால் இதை செய்கிறார்கள். யமதேவர் தென் திசையில் உள்ளதினால் தென் திசையில் விளக்கை ஏற்றி வைத்து, அவரை தெய்வமாக வணங்கி அவருக்கு மரியாதை தருகிறார்கள். சில ஊர்களில் யமதேவருக்கு ஆலயமும், சில ஆலயங்களில் யமனுக்கு சன்னதிகளும் உள்ளன என்பதை கவனியுங்கள்.

18) மரணம் அடைந்தவர் அறையில் விளக்கை ஏற்றுவதற்கு இன்னொரு காரணமும்  உண்டு. உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவானது  அந்த வீட்டில்  சுற்றிக் கொண்டே இருக்கும். அப்போது உயிருடன் இருந்த  நாட்களில் தான் வாழ்ந்திருந்த அறையில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் ஆத்மாவானது இருட்டில் தட்டுத்  தடுமாறிக் கொண்டு இருக்கக் கூடாது, யம தேவர் உள்ள திசையையும் அறிந்து கொண்டு அடுத்த பன்னிரண்டு நாட்களும் தம்மை நல்ல முறையில் அழைத்துக் கொண்டு சொர்க்கத்தில் விட வேண்டும் என அவரை ஆராதித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காகவும்  வைக்கப்படும் விளக்காம் அது. இவை அனைத்துமே தீர்கமான நம்பிக்கையின் அடிப்படையில் காலம் காலமாக கூறப்பட்டு வந்துள்ளவை.  ஆகவே அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அவற்றை காரணம் இல்லாமல் நாம் ஒதுக்கி வைக்கக்  கூடாது.

19)  ஒருவர் இறந்துவிட்டால் அந்த வீட்டினருக்கு அசௌகம்  அல்லது தீட்டு  என்பது வந்து விடும் என்பார்கள்.  வீட்டின் சொந்தக்காரர்களுக்கு இறந்தவருடனான சொந்தத்தின் அடிப்படையில் தீட்டுக் காலம் வறையுறுக்கபட்டு உள்ளன (தீட்டுக் கால அளவு எத்தனை என்பதை கடைசிப் பகுதியில் தர உள்ளேன்).தீட்டு என்பதைக் குறித்து இங்கு சின்ன விளக்கம் தர வேண்டி உள்ளது. சாதாரணமாக தீட்டு என்றால் விலக்கி  வைக்கப்பட்ட வேண்டியது என்பது பொதுப் பொருள் ஆகும். உதாரணமாக பெண்கள் மாத விலக்கு ஆன காலத்தில்  மூன்று நாட்கள்  தீட்டுக் காலம் என்று கூறி அவளை வீட்டில் அனைவரிடமும் இருந்து தள்ளி இருக்குமாறு கூறுவார்கள்.  அவளை தனி அறையில் அல்லது  தனி மூலையில் தங்க வைத்து இருப்பார்கள். அவளை யாரும் தொடக் கூடாது,  தீண்டக் கூடாது, குறைந்தது பத்தடி தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள்.

20) அந்த காலத்தில் இப்படியாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியதிக்கான விஞ்ஞானபூர்வமான காரணம் பின் காலத்தில் தெரிய வந்துள்ளது. இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் கோளாறினால் அந்த மூன்று நாட்கள் அவள் பலமின்றி இருப்பாள், அசுத்தமாக இருப்பாள் என்றும், அந்த மூன்று நாட்களிலும் பலமின்றி இருக்கும் அவளுக்கு முழு ஒய்வு தேவை, திருமணம் ஆகி இருந்தால் தாம்பத்திய உறவுகள் கூடாது, மூன்று நாட்களும் குளிக்கக்கூடக் கூடாது என்று சாஸ்திரங்களில் நடைமுறையாக வைத்து இருந்தார்கள். ஆகவே  அந்த மூன்று நாட்களும் அவளை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதைக் குறிக்கும் வகையில் அந்த மூன்று நாட்களையும் அவளுக்கு  தீட்டுக் காலம், அதாவது தூர விலக்கி  வைத்திருக்க வேண்டிய காலம் என்றார்கள் (அந்தணர்களின் பலர் வீடுகளில் மாதவிலக்கு ஆன பெண்களை 'தூரமணா'அதாவது தூரத்தில் மனையில் உள்ளவள் என்பார்கள்).

21) அதே போன்ற நிலைதான் இறந்தவர்கள் வீடுகளிலும்  கடைபிடிக்கப்படும் தீட்டுக் காலம்  என்பதும் ஆகும்.   இறந்தவர்களது குடும்பத்தினர்களின் துக்க அளவின் மன நிலைக்கு ஏற்ப  தீட்டுக் காலம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒருவர் வீட்டில் இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள மனத் துயர காலத்தில் அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.  மகிழ்ச்சியுடன் இருந்தபடி காரியங்களை செய்ய மனம் வராது. வீட்டில் உள்ளவர்கள் அவ்வப்போது அழுதவண்ணமே, துக்கத்தோடு இருப்பார்கள் என்பதினால் உடலளவிலும் நரம்பு மண்டலம் தளர்ச்சி அடைந்து சோர்வுடன்  இருப்பார்கள். அவர்களது மனத் துயரத்தை நீக்கிக் கொள்ள சில காலம் தேவைப்படும்.


22) இந்த நிலையில் பன்னிரண்டு  நாட்கள் இறந்தவருக்கு செய்யப்படும் கர்மா முடியும்வரை சில சடங்குகளை செய்ய வேண்டும். அவற்றை செய்யாவிடில் இறந்தவரது ஆத்மாக்களை சாந்தி அடையச் செய்ய முடியாது. 'ஐயோ நம்மை விட்டுப் போய் விட்டாரே'என மனத் துயரில் இருந்தவாறு சடங்குகளை செய்யும்போது குடும்பத்தினர் மனம் சஞ்சலத்தில் இருக்கும். இப்படிப்பட்ட மன அதிர்வுகளிலிருந்து மீண்டு, மனநிலையை பக்குவப்படுத்திக் கொண்டு அவரவர் இயல்பு நிலைக்குத் திரும்ப  கால அவகாசம் தேவை.

23) ஒருவர் பெரும் துயரில் இருக்கும்போது அவர்களது நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும், மன நிலை பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு மன ஒய்வு தேவை. அப்போது அதிக வேலை செய்தால் நரம்பு தளர்வு இன்னும்  அதிகம் ஆகும். நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும்போது அவர்கள் துயரம் இன்னும் பெருகும். ஏன் என்றால் மனக்கட்டுப்பாடு  அவர்களிடம் குறைந்திருக்கும். ஆகவே அவற்றை எல்லாம் தடுக்கவே, அமைதி தரவே   அந்த குடும்பத்தினரை கர்மா முடியும்வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டவர்களாகக் கருதுவார்கள்.  கர்மா செய்யும் காலமான பன்னிரண்டு  (பதிமூன்றாம் நாள் சுப காரிய நாள்) நாட்களில் அவர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். ஆகவே அதையே தீட்டு காலம் என்று கூறி அந்த தீட்டு காலத்தில் இறந்தவர் வீட்டுக்கு அதிகம் யாரும் சென்று குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற  நெறிமுறைகளை வகுத்திருந்தார்கள்.  உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுபவருக்கு ஒய்வு தர தீட்டு எனக் கூறப்பட்ட இதில் விஞ்ஞான அடிப்படையும் உள்ளது. 

24) தீட்டுக் காலம் அனுஷ்டிக்கப்பட்டதற்கு விஞ்ஞான அடிப்படையிலான இன்னொரு காரணமும் உள்ளது.  இறந்து போனவர்கள் வீட்டில்  இறந்தவரது உடலில் இருந்து சில கிருமிகள் வெளியேறி இருக்கும். அவை அதிக காலம் உயிருடன் இருக்காது. சில நாட்களே உயிர் வாழும் தன்மைக் கொண்டது அந்த கிருமிகள்.  ஆகவே அவை இறந்தவர்கள் வீட்டில்   சில நாட்களே உயிருடன் இருக்கும். அது மட்டும் இல்லை. கர்மாவை செய்பவர்கள் தினமும் சுடுகாட்டுக்கு சென்று (அந்த காலத்தில்) கல் ஊன்றிய இடத்தில் பன்னிரண்டு நாள் காரியம் செய்துவிட்டு வருவார்கள். அப்போது அவர்கள் உடலில் சில விஷக் கிருமிகளுடன் கூடிய அசுத்தங்களும் ஒட்டிக் கொண்டு  வர வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட விஷக் கிருமிகளை  தாமே அறியாமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதினால் அவை வீட்டில் இன்னமும் பரவ வாய்ப்புண்டு. பன்னிரண்டு நாட்கள்வரை அவை அந்த  வீட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்த பன்னிரண்டு  நாட்களிலும் சுடுகாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும் வீட்டினரை தொட்டுத் தழுவுவதின் மூலம் நம் மீதும் அந்தக் கிருமிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.  அவற்றை மனதில் கொண்டுதான் சுத்தத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் கர்மாவை செய்யும் வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று சாஸ்திர விதி வைக்கப்பட்டு உள்ளது.  இதுவே  தீட்டு என கூறப்பட்டு அவர்களிடம் இருந்து மற்றவர்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று கூற காரணமாக அமைந்தது.

25) ஆனால் அந்த கிருமிகள் அனைத்தும்  சுத்த சாந்தி (கிரேக்கியம்) செய்யப்படும் பதிமூன்றாவது நாளன்று செய்யப்படும் ஹோம குண்டத்தில் இருந்து வெளிப்படும்  ஹோமகுண்டப்  புகையை தாங்க முடியாமல் வெளியேறி விடும், அல்லது மரணம் அடைந்து விடும். அதற்குக் காரணம் ஹோமங்களில் பயன்படுத்தப்படும் பல பொருட்களுக்கு சில மருத்துவ குணமும், கிருமிநாசினி தன்மையும் உண்டு.

26) மூன்றாவது  ஆன்மீகக் காரணம், அந்த பன்னிரண்டு  நாட்களிலும் இறந்தவர்களது ஆத்மா அங்கு வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் உறவினரும் மற்றவர்களும்  வீட்டுக்கு வந்து உற்சாகமாக இருந்தால் அதைக் கண்டு அந்த ஆத்மா வேதனைப்பட்டு மனம் வெதும்பி நிற்கும். சந்தோஷ அதிர்வலைகள் அந்த இடத்தில் இருந்து துயர அதிர்வலைகளை துரத்தி அடிக்க, துயரமுற்று உள்ள ஆத்மாக்களும் சடங்குகளை ஏற்க முடியாமல் அங்கிருந்து ஓடிப் போக நேரிடும். அதனால் அது படும் வேதனை, துயரம் போன்றவை  அந்த குடும்பத்தின் அமைதி இன்மைக்கு வழி வகுத்து விடும். ஒரு விதத்தில் பார்த்தால் அதுவே துயரத்தோடு இருக்கும் ஆத்மாவின் சாபத்தைப் பெற வழி வகுத்து  விடும்.

27) அது மட்டும் அல்லாது இறந்தவரது ஆத்மா அந்த வீட்டுக்கு வந்து கொண்டும் சென்று கொண்டும்  இருக்கையில் அதைத் தொடர்ந்து வேறு சில ஆத்மாக்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அந்த நேரத்தில் அங்கு  அடிக்கடி வருபவர்களை சில தீய ஆத்மாக்கள் தாக்க வாய்ப்புண்டு.  பசியினாலும், தாகத்தினாலும் வாடும் இறந்தவரது ஆத்மாவே கூட அவர்களுடைய  நடத்தையைக் கண்டு கோபமடையலாம். அதன் விளைவாக  அவர்களுக்கு சாபமும் கொடுக்கலாம்.  ஆகவேதான் இவற்றை எல்லாம்  தவிர்க்கவே அந்த பன்னிரண்டு நாட்களையும் தீட்டு காலம் எனக் கூறி அந்த வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது, அப்படி  சென்றாலும் வீட்டுக்கு திரும்பிய பின் குளித்த பின்னரே வீட்டிற்குள்  செல்ல வேண்டும் என்ற விதியை வைத்து இருந்தார்கள்.

28) அப்படி என்றால் அனைவருக்கும் பன்னிரண்டு நாட்கள்தான் அசௌகரிய அல்லது தீட்டுக் காலமா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு உள்ள ஆசௌகர்ய காலத்தை அந்த காலத்தில் அவரவருக்கு இருந்ததாக நம்பப்பட்ட மன மற்றும் ஆன்மீக நிலைக்கேற்ப இத்தனை, இத்தனைக் காலம் என வறையுறுத்தி  வைத்து உள்ளார்கள். அவர்கள் சமூக கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு அதற்கான கால அளவையும் வறையுறுத்தி  அதை தீட்டுக் காலம் எனப் பெயரிட்டு உள்ளார்கள் (அந்த தீட்டுக் கால  அளவு எத்தனை என்பதை கடைசியில் கொடுத்துள்ளேன்).  உண்மையாகப் பார்த்தால் பண்டைக் காலத்தில் நிலவிய குடும்ப மன நிலை, மனக்கட்டுப்பாடு, மன உறுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதே  தீட்டுக்காலம் அதாவது மனத் துயர் நீங்குவதற்கு கொடுக்கப்பட்ட கால அளவு என்பதாகும்.  அவை  விஞ்ஞான அடிப்படையில் அமைந்தவை அல்ல. சில சடங்குகளை மிகைப்படுத்தி வேதங்கள் கூறியவை, வழி வழியாக வாய் மொழிச் செய்தியாக கூறப்பட்டு வந்தவற்றை என அவற்றின் சாரத்தை சற்றே உருமாற்றி அந்த காலத்தில் சமுதாயத்தில் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள அந்தணர்கள் ஏற்படுத்திய  சட்ட திட்டங்களே ஆகும்.  அதில் தீட்டுக் காலமும் ஒன்று ஆகும்.

29) தீட்டு சம்மந்தமாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள சில நியதிகளுக்கு விஞ்ஞான ரீதியிலான அடிப்படை காரணம் உண்டு என்றாலும் அவற்றில் இடை சொருகல் செய்யப்பட்டு உள்ள தீட்டுக் கால அளவிற்கு  அடிப்படை ஆதாரம் எதுவுமே கிடையாது என்பதே உண்மை. இதற்கு உதாரணத்தைக் காட்ட வேண்டும் எனில் ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அதனால் ஏற்படும் தீட்டு பிராமணர்களுக்கு பத்து நாட்கள், க்ஷத்திரியர்களுக்கு பதினைந்து நாட்கள், வைசியர்களுக்கு இருபது நாட்கள் மற்றும் சூத்திரருக்கு முப்பது நாட்கள் எனக் கூறப்பட்டு இருப்பதில் இருந்தே இவை வர்ணாஸ்ரம அடிப்படையில் உருவானது என்பது விளங்கும்.

30) அது மட்டும் அல்ல. ஒரே குடும்பத்திலும் கூட இன்னாருக்கு இத்தனை நாட்கள் தீட்டு என்றும் பல பிரிவுகளை வைத்து உள்ளார்கள். மரணம் அடைந்தவருடைய பங்காளியில் ஒருவருக்கு பத்து நாட்கள் தீட்டு, அதே குடும்பத்தில் இன்னும் சிலருக்கு மூன்று நாட்கள், இன்னும் சிலருக்கு ஒரு நாள் என தீட்டுக் காலத்தை அமைத்து உள்ளார்கள். உண்மையிலேயே தீட்டு காலத்துக்கு விஞ்ஞான ரீதியிலான அடிப்படை காரணம் முழுமையாக இருந்திருந்தால் அதெப்படி ஒவ்வொருவருக்கும் தீட்டு காலம் வேறுபட்டு  இருக்கும் ?(அந்த தீட்டுக் கால  அளவு எத்தனை என்பதை கடைசியில் கொடுத்துள்ளேன்).

31) இதில் இன்னொன்றையும் சரியான நியதியாக  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள், யுத்தத்தில் மரணம் அடைந்தவர்கள் மற்றும் இயற்கையாக இறந்தவர்கள்  என்பவர்களுக்காக அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஆசௌச மற்றும் தீட்டு கால அளவு வெவ்வேறாக உள்ளது எனும்போது காலத்துக்குப் பொருந்தாத, விஞ்ஞான ரீதியில் அமைந்தில்லாத  இது போன்ற சில நியதிகள் (அனைத்து நியதிகளும் அல்ல) சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானது இல்லை, இடை செருகல்கல்தான் என்பது விளங்கும். அதைக் கடைபிடிப்பது, கடை பிடிக்காததும் அவரவர் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அதை நாம் எதிர்ப்பது தவறு. அது தனி நபர் விருப்பம் ஆகும்.

இனி அடுத்த பன்னிரண்டு நாட்களும்  செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதையும் அவற்றின் தத்துவங்களையும் ஆராயலாம்.
..........தொடரும் 

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -3

$
0
0
 --சாந்திப்பிரியா --
3


 32) மரணம் அடைந்தவர் வீட்டு வாயிலில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் கோலங்களையும் போட்டு அலங்கரிக்கக் கூடாது.   நமது இல்லத்திற்கு தினசரி நாம் ஆராதிக்கும் தெய்வங்களும் தேவர்களும் வருகிறார்கள் என்று ஐதீகம் உள்ளது. ஆகவே அவர்களை வரவேற்கும் விதமாக இருக்கவும் மங்களச் சின்னமாக இருக்கவுமே கோலத்தைப் போடுவார்கள். ஆனால் ஏற்கனவே கூறியது போல இறந்தவர் வீட்டில் தற்காலிகமாக மங்கள காரியங்கள் நடைபெறாமல் இருக்கும் என்பதாலும் இறந்தவர்களின்  ஆத்மா அங்கிருந்து செல்லும்வரை தெய்வங்களோ அல்லது தேவர்களோ அங்கு  நுழைய மாட்டார்கள் என்பதாலும் இறந்தவர்கள் வீடுகளில் கோலங்களை போடுவது இல்லை.

33) ஒருவர் இறந்து விட்டால் அந்த பிரேதத்தின் தலையை தெற்கு நோக்கி தர்பைப் புல்லில் படுக்க வைத்து தென் பகுதி மூலையில் சின்ன விளக்கேற்றி வைக்க வேண்டும்.  இதற்கான காரணத்தை பாகம்-2 / பத்தி 17 முதல் 19 ல் விளக்கி உள்ளேன். முடிந்த அளவிற்கு அதன்  உடலில் போடப்பட்டு உள்ள துணிகளை அகற்றி விட்டு வெள்ளைப் போர்வையினால் உடலைப் போர்த்தி வைக்க வேண்டும். நெற்றியில் வீபுதி பூசியும்  வைப்பார்கள். கால் கட்டை விரல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து சின்ன துணியினால் கட்டி வைத்து விட வேண்டும். மூக்கிலும் பஞ்சை வைத்து மூடி விடுவார்கள். இதற்கான காரணத்தை கீழே  பத்தி 35 ல்  படிக்கவும். எதற்காக தலையை தெற்குப் பக்கம் பார்த்தபடி படுக்க வைக்க வேண்டும் என்பதை  பாகம் -2 ல் ஏற்கனவே விளக்கி உள்ளேன்.

மூக்கின் இரு துவாரங்களிலும்  பஞ்சை 
வைத்து மூடுவார்கள்

34) எதற்காக கட்டை விரல்களை ஒன்று சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள் என்பதை  விஞ்ஞான ரீதியில்  சாஸ்திரங்கள் விவரிக்காவிடிலும் அதை தர்ம சாஸ்திர விதியாக கூறி உள்ளார்கள். ஒருவர் இறந்தப் பின் அவர்கள் உடலில் உள்ள பிராண சக்தி உடலை விட்டு உடனடியாக அகன்று விடுவது இல்லை. அந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவானது சில காலம்வரை அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கும்  (இதன் காரணத்தை பின் வரும் பத்திகளில் விளக்கி உள்ளேன்).அதைத் தொடர்ந்து விண்வெளியில் உள்ள பல ஆத்மாக்களும் அங்கு வந்து சுற்றத் துவங்கும்(இதன் காரணத்தையும் பின் வரும் பத்திகளில் விளக்கி உள்ளேன்).

35) மேலே கூறிய தன்மையினால் இறந்தப் பின் இயற்கையாகவே கால்கள் இரண்டும் அகலமாக திறந்து கொண்டு ஒன்றை விட்டு ஒன்று விலகி நிற்கத் துவங்கும். அப்படி கால்கள் விலகும்போது பின்புறத்தில் உள்ள ஆசனத் துவாரம் விரிவடைந்து விடும். அதையே மூலாதாரம் என்பார்கள். அதன் வழியே இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவும், அங்கு சுற்றித் திரியும் மற்ற ஆத்மாக்களும் அந்த உடலுக்குள் மீண்டும் மீண்டும் நுழைய  முயலும். அப்படி அவை நுழைந்து விட்டால் அந்த உடலுக்கு செய்யப்படும் கர்மாவின் பலனை அந்த ஆத்மாக்களும்  பெற்றுக் கொள்ளத் துவங்கி விடும். அப்படி உடலின் உள்ளே புகுந்து கொண்ட ஆவிகள்  தகனத்தின் போது வெளியில் வந்து விடும். மயானத்தில் மந்திரவாதிகள் அப்படி உடலுக்குள் நுழைந்து வெளி வரும் ஆவிகளை தன்வயப்படுத்தி துர்பிரயோகம் செய்ய வழி வகுத்து விடும். அது அந்தந்த குடும்பங்களை பாதிக்கும். ஆகவேதான் அந்த மூலாதார துவாரம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக கட்டை விரல்களை இறுக்க கட்டி வைத்து விடுவார்கள்.

36) ஆத்மாக்களினால் இறந்து விட்டவர்களின் உடலில் உள்ள மற்ற துவாரங்கள் வழியே உள்ளே நுழைய முடியாதாம். நாசித்துவாரம் அல்லது மூலாதாரம் வழியே மட்டுமே நுழைய இயலுமாம். அதனால்தான் நாசியின் துவாரங்களை பஞ்சு வைத்து மூடியும், கால் கட்டை விரல்களை  ஒன்றாக சேர்த்துக்  கட்டியும்  வைத்து விடுவார்கள். இனி கர்மாக்கள் என்னென்ன, கர்மாக்கள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை படித்தப் பின் அவற்றுக்கான  சந்தேகங்களையும் விளக்கங்களையும்    பார்க்கலாம்.

தலைமாட்டில் சடங்குகளை துவக்குவார்கள் 

37) உறவினர் அனைவரும் வந்து கூடிய பின், வீட்டினர் தகனக் கிரியை அல்லது கர்மாவை துவக்க முடிவு செய்தப் பின் பொதுவாக தலைப் பகுதியில் செங்கல்லை அடுக்கி வைத்து சின்ன குண்டம் அமைத்து, அதன் பக்கத்தில் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகளைத் துவக்குவார்கள். தலைப் பகுதியில் சடங்குகளை செய்ய ஆரம்பிப்பதின் காரணமும் யமதர்மராஜருக்கு மரியாதை தருவதற்காகத்தான். பூதவுடலை ஒரு பூணூல் மூலம் கும்பங்களுடன் இணைத்து வைத்து ஹோம குண்ட அக்கினியுடன் சங்கமிக்கச் செய்வார்கள். அதாவது இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை அக்னி ஹோமத்தின் மூலம் பூர்வாங்கமாக தகனம் செய்து யமதர்ம தேவரிடம் அனுப்பி வைப்பதான ஐதீகம் அது. அந்த சடங்கு முடிந்ததும் அக்கினி ஹோமம் வளர்க்கப்பட்டு பூத உடலை தண்ணீர் விட்டு அலம்புவார்கள். அந்த சடகுகளை  வீட்டில் உள்ளவர்கள் செய்கிறார்கள். அன்றே கல் ஊன்றுதல் எனும் சடங்கும் நடைபெறும்.  அதை பாஷண ஸ்தாபனம் என்றும் கூறுவார்கள். அதன் தாத்பர்யம் குறித்து பின்னர் கூறுகிறேன். இந்த சடங்கும்  குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கலாம். அதற்கான கர்மாக்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை கர்மாவை செய்ய வந்துள்ள புரோகிதர்கள் கூறுவார்கள்.

38) அதற்கு இடையில் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பிரேதத்துக்கு மலர் மாலைகளை அணிவிப்பார்கள். பூக்களையும் உடல் மீது தூவுவார்கள். எதற்காக இறந்தவர் உடலின் மீது மலர்களை போட வேண்டும் அல்லது , மலர் மாலைகளை வைக்க வேண்டும் என்பதற்கு சாஸ்திர நியதி இல்லை. தர்ம சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவர் தெய்வமாகி விட்டார் எனக் கருதுவதினால்தான் அதை செய்கிறார்கள்.  இது பிற்காலத்தில் இறந்தவருக்கு செலுத்தப்படும்  மரியாதைக்குரிய பழக்கமாக ஏற்படுத்தப்பட்டு  உள்ளது ஆகும்.

39) இறந்து போனவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்குப் பிறந்த பெண்கள் மற்றும் மருமகள்கள் (பிள்ளைகளின் மனைவிகள்)போன்றவர்கள் தாம் உடுத்திய புடவையுடன் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு, தலையை  முடியாமல்,  ஈரப் புடவையுடன் குடத்தில் தண்ணீர் ஏந்திக் கொண்டு வந்து ஆளுக்கொரு குடமாகவோ அல்லது ஒரு குட ஜலத்தையே எல்லோரும் பிடித்துக் கொண்டோ கால் பாதத்தில் இருந்து இருந்து தலை வரை உடம்பு முழுவதும் நன்றாக நனையும்படி நிதானமாக, படுக்க வைக்கப்பட்டு உள்ள பிரேதத்தின் மீது தண்ணீர் விடுவார்கள்.

சவத்தின் மீது தண்ணீரை ஊற்றி 
குளிப்பாட்டுவார்கள்

40) உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி உடலை நனைத்தப் பின், முடிவாக முகத்தில் தண்ணீரை ஊற்றியதும் தலை அருகே குடத்தைக் கவிழ்த்து வைத்து விட்டு  அதில் இருந்து கீழே  வடிந்த ஜலத்தை  எடுத்து அதே குடத்தின் மீது தெளித்தப் பின் அந்தக் குடத்தை எடுத்து பிரேதத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்து விடுவார்கள்.  அப்படி செய்வது கங்கை நீரால் அந்த குடத்தை அலம்பியதற்கு சமம் என்பார்கள்.  அதனால்தான் அந்த சடங்கை இறந்தவரது  பிரேதத்துக்கு  செய்யும் அபிஷேக பூஜை என்றும் கூறுவார்கள்.  இறந்தவர்கள் தெய்வத்துக்கு சமானம் எனக் கருதப்படுவதினால் அதற்கு செய்யும் மரியாதை சடங்கு ஆகும் இது என சாஸ்திரங்களும் கூறுகின்றன.  இந்த சடங்கை சில பண்டிதர்கள் ஒரு விதத்தில் அஸ்வமேத யாகத்துக்கு இணையானது என்று கூறி உள்ளார்கள்.

41) அதன் பின்னர் இறந்தவரது கர்த்தாக்கள் அனைவரும் பிரேதத்தை பிரதர்ஷணம் செய்த பின் அந்த இடத்தில் இருந்து வெளியில் சென்று விடுவார்கள். செல்லும் முன் அதற்கு நமஸ்கரிப்பது மெத்த சிறந்தது ஆகும். அங்குள்ள மற்றவர்கள் அந்த இடத்தை ஈரமின்றி நன்றாகத் துடைத்து விடுவார்கள். அதன் பின் மரணம் அடைந்தவர் பெண் என்றால் பெண்களும், ஆண் என்றால் ஆண்களும் ஈரமாக உள்ள பிரேதத்தின் உடலை நன்றாகத் துடைத்து விட்டு அந்த சடலத்துக்கு மாற்று உடை அணிவிப்பார்கள். இறந்தவர்கள் உடலில் நகைகள் ஏதாவது அணிவிக்கப்பட்டு இருந்தால் அதையும் அந்த நேரத்தில் கழற்றி எடுத்து விடுவார்கள். அனைவரும் தெற்கு பக்கமாகப் பார்த்து சவத்தை நமஸ்கரித்தப் பின்னர் பிணத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு  செய்வார்கள். இவை அனைத்தையும் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி நடத்தி வைப்பார். 

42) பொதுவாக கர்மாக்கள் நடைபெறும் வீட்டின் முற்றத்தில் பந்தல் போட்டு மாவிலை மற்றும் தோரணம் கட்டி தரையை சாணத்தினால் மெழுகி வைப்பார்கள் (உறவினர் வந்து அமர மற்றும் சடலத்தைக் கட்டும் பாடையை அங்கு வைப்பதற்காக). இந்த பழக்கம் கிராமங்களில் மட்டுமே தற்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இட வசதி காரணமாக நகரங்களில் இந்த பழக்கம் அதிகம் காணவில்லை. இப்படி செய்வதும் இறந்தவருக்கு மரியாதை காட்டும் சடங்கு  ஆகும். தயாராக வைக்கப்பட்டு உள்ள பாடையில் பிணத்தைக் வைத்ததும், உரிமைக்காரப் பெண்களும், வீட்டுப் பெண்களும் அதன் வாயில் வாய்க்கரிசி போட்டப் பின், இறந்தவர்களின் உடலை ஒரு போர்வையினால் நன்கு மூடி வைத்தப் பின், அதை பாடையுடன்  சேர்த்து  கட்டியதும் நான்கு பேர்கள்  அந்தப் பாடையை தூக்கி தமது தோள்  மீது வைத்துக் கொள்ள, நெருப்புச் சட்டியுடன் இறந்தவரது மகன்கள் முன்னே செல்ல,  பிணத்தின் பின்புறத்தில் இறந்து போனவரின் பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் ஏந்தியபடி  பிணத்துடன் செல்வார்கள். சாதாரணமாக இறந்தவருக்கு முன்னால் கூட்டமாக செல்லக் கூடாது என்றும், பிணத்துடன் செல்பவர்கள் அதன் பின்னால் செல்ல வேண்டும் என்பார்கள். பிணத்தின் முன்னால்  தீ சட்டியுடன் கர்த்தாக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் இதற்கான காரணம் நமக்கு விளங்கவில்லை. இறந்தவரின் பேரன்கள் தீப்பந்தம் தூக்கிச் செல்லும் பழக்கம் இறந்தவரது குடும்பத்து சிறுவர்களும் சுடுகாட்டுக்கு செல்லும் உடலுக்கு  தீ மூட்டி எரிக்க தானும் உரிமை உள்ள கர்த்தா என்பதை காட்டவும், மேலுலகம் செல்லும் ஆத்மாவுக்கு மரியாதைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் ஐதீகமே தவிர அதற்கு வேறு எந்த விஞ்ஞான பூர்வமான அல்லது சாஸ்திர காரணமோ கிடையாது. சில குடும்பங்களில் பிள்ளைகளோ மற்ற கர்தாக்களோ இல்லை என்றால் இறந்தவரது பேரன்கள் கர்மாவை செய்ய உரிமை உள்ளவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இது அதை எடுத்துக் காட்டும் சம்பிரதாய சடங்கு முறையே ஆகும்.

43) மேலும் அந்த சிறுவர்களும் பின் வரும் நாட்களில் தாம் பெரியவர்கள் ஆகும்போது இறந்து போக உள்ள தமது தாய் தந்தைக்கு சடங்குகளை எந்த விதத்தில் செய்ய வேண்டும் என்பதை காட்டும் போதனையாக இருக்கவே  சாஸ்திர சம்பிரதாயமாகவும் அவற்றைக்  காட்டி உள்ளார்கள்.  முன் காலங்களில் பேரப்பிள்ளைகளும் சுடுகாடுவரை சென்று சிதைக்கு கொள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது. தற்போது பலரது வீடுகளிலும் சிறு பிள்ளைகளை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்வது இல்லை. சுடுகாட்டில் பிணங்களைக் கண்டு அவர்கள் பயந்து விடுவார்கள் என்பதே அதன் காரணம்.

44) வாய்க்கரிசி போடுவது எதற்கு எனில் அதுவரை இறந்து போனவருக்கு தாம் உணவு தரவில்லை எனில், அந்த கடைசி நேரத்திலாவது அவருக்கு உணவு கொடுத்தோமே என்ற மன நிறைவு  இருக்கட்டும்  என்பதற்காக போடப்படும் சம்பிரதாயமே தவிர அதன் தத்துவம் வேறு எதுவும் இல்லை. ஆனால் ஆன்மீகத்தில் அரிசியை தெய்வீகத் தன்மைக் கொண்டதாகக் கூறுவார்கள். ஹோமம் ஆனாலும் சரி பூஜைகள் ஆனாலும் சரி அவற்றில் அரிசி முக்கிய இடம் பெறுகிறது. அரிசி மீதுதான்  பூஜை கலசங்களைக் கூட வைத்திருப்பார்கள். மஞ்சள் அரிசியைத்தான் பூஜைகளிலும் உபயோகிப்பார்கள்.  எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் சரி, இந்துக்கள் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக போடுவது அரிசி தானியமே தவிர பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை.  இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியும்  அவர் உடலை தகனம் செய்யும்போது எரிந்து போகும்.  இறந்தவர் உடலை தகனம் செய்யும் சடங்கு ஒரு விதத்தில் அந்த புனித ஆத்மாவுக்கு செய்யப்படும் ஹோமம் போன்றது. எப்படி ஹோம குண்டத்தில்  அரிசியைப் போடுவது முக்கியம் ஆனதோ அது போலவேதான்  இறந்தவரது சின்ன வாயையும் ஹோம குண்டமாகக் கருதி அதில் அரிசியைப் போட்டு உடலை  தகனம் செய்கிறார்கள்.

45) சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவரது  வாயில் போடப்படும் அரிசியானது அவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவினால் ஆவாகிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் ஏழு தலை முறைக்கான ஆத்மாக்களுக்கும் பங்கிட்டு தரப்படும், அதன் மூலம் அந்த பித்ருக்களின் மனம் சாந்தி அடையும் என்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்த சடங்கு செய்யப்படுகிறது.  அதை செய்வதின் மூலம் வாய்க்கரிசியை உணவாக போட்டவர்களது குடும்பத்துக்கு மேலுலகில் உள்ள ஆத்மாக்களின் ஆசிகள் வந்து சேரும், அது அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்பார்கள்.

பேரப்பிள்ளைகளும் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் சவத்தின் 
பின்னால் தீப்பந்தங்களை ஏந்திச் கொண்டு சற்று தூரம் செல்வார்கள்

46) முன் காலங்களில்  சுடுகாடு எத்தனை தூரம் இருந்தாலும் பிணத்தை மாறி மாறி நான்குபேர் தூக்கிக்  கொண்டு நடந்தே சுடுகாடுவரை செல்வார்கள். ஆனால் தற்காலத்தில்  சற்று தூரம் சென்றப் பின்  வாகனத்தில்  பிணத்தை வைத்து கொண்டு சென்று விடுகிறார்கள். இரண்டு முறைகளுமே தவறல்ல. சாஸ்திரத்துக்கு எதிரானதும் அல்ல. காரணம் சவத்தை தோளில் மட்டுமே சுமந்து  கொண்டு செல்ல வேண்டும் என்பது சாஸ்திர விதியல்ல. அது இறந்தவரது குடும்பத்தினருக்கு தாமும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நின்று இருப்போம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாயமே ஆகும்.

47) அந்த காலத்தில் சவங்களை தோளில் மட்டுமே சுமந்து  கொண்டு செல்வது நடைமுறையில் இருந்தது என்பதின் காரணம் சுடுகாடுகள் அதிக தூரத்தில் இருந்ததில்லை என்பது மட்டும் அல்ல வாகன வசதிகளும்  கிடையாது, மனிதர்களும் திடகார்த்தமாக இருந்தார்கள் என்பதே. நேரம் அதிகமாக  ஆக சவத்தின் எடை அதிகரிக்கத் துவங்கும்.  இது இயற்கையின் தன்மை ஆகும். ஆகவேதான் நேரமாக நேரமாக, உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சவத்தை அத்தனை தூரமும் சுமந்து கொண்டே செல்ல முடியாமல் வண்டியில் வைத்துக் கொண்டு செல்லும் பழக்கமும்  துவங்கியது. சுடுகாடுகள் நீண்ட தூரத்தில் இருந்ததினால் பாதி  தூரம் சவத்தை தோளிலே வைத்துக் கொண்டு சம்பிரதாயமாக நடந்து சென்றதும் பாடைகளுடன் கட்டப்பட்ட சவங்களை ஒரு கட்டை வண்டியில் வைத்து  இழுத்துச் செல்வார்கள்.
...........தொடரும்

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 4

$
0
0
 --சாந்திப்பிரியா --
4


48) மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை  இடபக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு திசையில் இருக்கும்படி பாடையை சிதை மேடை மீது வைப்பார்கள்.  அதாவது உடலின் தலைப் பகுதியானது மயானத்தை நோக்கி வைக்கப்படும். சிதையில் பூதவுடல் வைக்கப்பட்டதும் பாடையுடன் சேர்த்துக் கட்டி இருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப்பட அந்த உடலில் உள்ள மேற்போர்வையைத் தவிர அதன் கீழ் உள்ள அரைஞாண் கயிறுவரை அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அதாவது போர்வையின் கீழ் உள்ள உடல்,  நிர்வாண நிலையில் வெற்றுடம்பாக இருக்கும்.

49) அதன் பின் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி சில சடங்குகளை செய்தபின், பங்காளிகள் மீண்டும் சவத்தின் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். கர்மாவை செய்ய வந்துள்ளவர் தனது இடது தோளில் சுட்ட களிமண்ணினால் செய்யப்பட்ட ஒரு காலி மண் குடத்தை ஏந்திக் கொண்டு முதலில் சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து அதில் கும்ப நீரை கொட்டிய பின், மேலும் அதில் அரிசி, சின்ன தங்கக்காசு அல்லது நாணயங்களைப் போட்டப் பின் சவத்தின் வாயில் அரிசியைப் போடுவார் (கர்மாவை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை கடைசி பகுதியில் வரும் பத்தியில் கூறி உள்ளேன்). இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும்.

50) அதன் பின் முன்போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு  சந்தனக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால் செல்பவர் சிறு கல்லினால் மண் குடத்தில் ஒரு சின்ன ஓட்டை இட அந்த ஓட்டை வழியே தண்ணீர் சவத்தின் மீது விழும். அதையும் இறந்தவரது உடலுக்கு செய்யும் கடைசி அபிஷேகம் என்பார்கள். அதன் இரண்டு தாத்பர் என்னென்ன?

51) முதலாவது  அந்த ஜீவன் தகிக்கும் தீயில் எரிந்து போனாலும், அதன் ஆத்மா தாகத்தோடும் பசியோடும் இருக்கக் கூடாது என்பதற்காக அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த குடத்தில் சமையல் செய்து ஜீவனின் பசியைப் போக்கி (பிண்டம்) , குடிப்பதற்கு தண்ணீரும் தருகிறோம் என்பதைக் குறிக்கும் செயல் அது. அந்த காலங்களில் மண் சட்டியில்தான் அரிசியை வேக வைத்து சமையல் செய்வார்கள். அது போலவேதான் தண்ணீரையும் குடத்தில் எடுத்து வருவார்கள். ஆகவே இரண்டுக்குமே குடமே பிரதானமாக உள்ளது. இப்படியாக  அந்த செயலை தகனம் செய்யப்பட உள்ள உடலுக்கு மயானத்தில் செய்யும்போது  அதைக் காணும் ஜீவனின் மனதில் மகிழ்ச்சி  ஏற்படுமாம்.

52)  இரண்டாவது தத்துவம் என்ன?   குடம் என்பது உடலைக் குறிப்பது. மண் குடம் நிலையற்ற தன்மையைக் கொண்டது. அது கீழே விழுந்தால் பிற உலோகப் பொருட்களைப் போல நசுங்காமல், உடைந்து போகக் கூடிய பொருளாகும். அந்த மண் குடத்தைப்  போன்றதே இந்த உலக வாழ்கையும் உள்ளது. பிறந்தவருக்கு வாழ்வு நிரந்தரம் அல்ல. குடத்தை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடும் இருக்கும் என்பதைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் பிறருக்கு எந்த விதத்தில் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு வாழ வேண்டும். 'இதோ உடைந்து போன இந்த மண் குடத்தில் இருந்து நீர் வெளியேறுகிறதே அதைப் போலவேதான் நம்முடைய ஜீவன்களும் மண் குடம் போன்ற இந்த உடலை விட்டு வெளியேறுவோம் . ஆகவே உள்ளவரை பிறருக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் 'என்று அந்த ஆத்மா அங்குள்ளவர்களுக்கு  எடுத்துக் காட்டுவதை உணர்த்துவதே அதன் இரண்டாவது  தத்துவம்.

53) குடம் என்பது மனித உடலைக் குறிப்பது. மண் குடத்தில் நிறப்பப்பட்டு உள்ள தண்ணீர் என்பது உடலின் உள்ளே உள்ள ஆத்மாவாகும்.  மூன்று முறை குடத்தை துளையிட்டு தண்ணீரை வெளியேற்ற வைப்பது  உடலை விட்டு வெளியேறும் ஆத்மா மூன்று சங்கல்பங்களை தான்  எடுத்துக் கொண்டு  வெளியேறுவதைக் குறிக்கும் சடங்காம்.  அந்த மூன்று சங்கல்பங்கள் என்னென்ன?

சிதையை சுற்றி வருகையில் குடத்தில் 
போடப்பட்ட சிறு ஓட்டையில் இருந்து 
வெளியேறும் நீர் சவத்தின் மீது விழுகிறது

54) இந்த மண்ணுலகில் ஒரு ஆத்மாவானது பிறப்பு எடுத்ததும் மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொருளாசையுடன் அலைந்து திரிகிறது. அதனால்தான்  ஆத்மாவானது உடலை விட்டு வெளியேறும்போது  அந்த மூன்று ஆசைகளையும் அங்கேயே அழித்துக் கொண்டு, 'இனி மண் உலகில் உள்ளவர்களுக்கும்  ஆத்மாவான எனக்கும் எந்த பந்தமும் கிடையாது, நான் சுதந்திரமானவன், எங்கு வேண்டுமானாலும் சென்று பிறப்பேன்.  எப்படி உடைந்து போன மண் குடத்தை மீண்டும் ஓட்ட வைக்க இயலாதோ அப்படித்தான் இப்போது நான் வெளியேறிய உடலுடன் என்னை மீண்டும் ஓட்ட வைக்க இயலாது'என்ற சங்கல்பத்துடன்  உடலை விட்டு வெளியேறும். அது போலவேதான் வாழ்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவித்தப் பின் வயதான காலத்தில் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டத்தில் ஒவ்வொருவரும் காம, குரோத மற்றும் இச்சைகளை குறைத்துக் கொள்ளத் துவங்க வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே  அதை  ஒரு போதனையாக வைத்துள்ளார்களாம்.

55)   உடைந்த ஓட்டையில் இருந்து வெளியேறிய நீர் உடலின் மீது விழுந்து அந்த உடலின் மீதிருந்து  பூமியிலே சிந்தும் தண்ணீர், அந்த ஜீவன்  பூமாதேவி மீது ஆணை இட்டு அந்த சங்கல்பத்தை  எடுத்துக் கொள்வதைக் காட்டுவதான   ஐதீகம். ஆகவே மண் குடத்தை ஓட்டை இட்டு தண்ணீரை உடல் மீது விழ வைப்பது பக்தி மார்கத்தை வலுப்படுத்த செய்யப்பட்ட ஆன்மீக போதனை ஆகும். இதற்கு எந்த விதமான விஞ்ஞானபூர்வமான  காரணமும்  கிடையாது.  இனி கர்மாவை தொடர்வோம்.

56) மூன்றாவது சுற்று முடிவில் கர்மாவை செய்பவர் சிதையை பார்க்காமல் சிதையின் எதிர் திசையைப் பார்த்து  நின்றபடி 'ஓம்'எனக் கூறிக் கொண்டே சந்தனக் கட்டையை ( அதில் சிதையை எரிக்க நெருப்பு இருக்கும்) சிதையின் தலைப் பகுதியில் வைத்தப் பின் குடத்தை உடையும்படி முன்புறமாக கீழே போட்டு விடுவார். இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும். சில குடும்பங்களில் கர்த்தா சிதையை பார்த்தபடி நின்றவாறு சந்தனக் கட்டை கொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் உண்டு. சிதைக்கு கொள்ளி வைத்தப் பின் கர்த்தாவானவர் பிரேதத்தின் பாதங்கள் உள்ள பகுதிக்குச் சென்று தன் விரலில் அணிந்திருந்த தர்பைப் புல்லினால் ஆன பவித்திரம், பூணூல் போன்றவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் உடல் முழுவதும்  எரியும் வரை அங்கேயே நின்று கொண்டு இருப்பார்கள்.

57) முன் காலங்களில் விறகுகளை அடுக்கி அதன் மீது பிணத்தை வைத்து எரித்தது போல் இல்லாமல் இந்த காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் மின்னடுப்பில் பிணங்களை எரித்து விடுவதினால் சிதை பீடத்தில் வைத்த சவத்திற்கான சடங்குகளை முடித்தப் பின் பாடையுடன் கூடிய உடலை எடுத்து வந்து மின்சார யந்திரத்தின் மேடை மீது வைத்தப் பின் சம்பிரதாயமாக கொள்ளிக் கட்டையை அதில் வைப்பார்கள்.  அதன் பின் அங்குள்ள தொழிலாளி அந்த பாடையுடன் உள்ள உடலை யந்திரத்தின் உள்ளே தள்ளி கதவை மூடிவிடுவார். உடல் சற்று நேரத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். இந்த முறையில் செய்யப்படும் கர்மா சாஸ்திர விதிப்படி சரியா அல்லது தவறா என்ற விவாதம் தேவை அற்றது. காரணம் மின் அடுப்பிலும் உள்ளே எரியும் நெருப்பே உடலே பஸ்பமாக்கி  விடுகிறது என்பதினால் சாஸ்திர விதிப்படி இது தவறல்ல.

 சாதாரண முறையில் செய்யப்படும் தகனம் 

 மின்அடுப்பு  யந்திரத்தில் செய்யப்படும் தகனம்

58) அதன் பின் பூதவுடல் எரிந்து போன அரை மணி நேரத்திலேயே அங்குள்ள தொழிலாளி யந்திரத்தில் இருந்து சாம்பலையும் எலும்பையும் எடுத்து கர்த்தா செய்பவரிடம் தருவார்கள்.  அங்கு சில சடங்குகளை செய்தபின் அவற்றை எடுத்து  அவர் பால் நிறப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின்  அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்துவிட்டு வீடு திரும்புவார்கள். அதை சஞ்சயனம் என்று கூறுவார்கள். இந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்போது புரோகிதர்கள் சில சடங்குகளை செய்ய  மந்திரம் ஓதுவார்கள். எலும்புகளை எடுத்ததும்  கர்த்தா முக சவரம் செய்து கொண்டு தாடி மீசைகளை எடுத்து விடுவார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்வார்கள். அதன் பின் அங்கேயே குளித்தப் பின் குடத்தில் போடப்பட்ட எலும்பை நதிக்கு எடுத்துச் செல்வார்கள். இந்த பழக்கமும் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும்.

எறிந்த இடத்தில் இருந்து எலும்புகளை
பொறுக்கி  எடுப்பார்கள்

59) மயானத்தில் மின் அடுப்பில் உடலை எரிக்காமல் விறகுக் கட்டை மீது வைத்து மயான பூமியிலேயே சாதாரண முறையில் தகனம் செய்பவர்கள் பிணத்தை தகனம் செய்த மறுநாள் மயானத்துக்குப் போய் பிணம் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல் மீது  பாலை ஊற்றி  அதில் கிடக்கும் எலும்புகளை பொறுக்கி எடுத்து வந்து அவற்றை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின் அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்தப் பின் வீடு திரும்புவார்கள். அதையும்  சஞ்சயனம் என்றே கூறுவார்கள். இவை அனைத்தும் முதல் நாள் சடங்கு என்றாலும், பிணத்தை எடுத்த அடுத்த நாள் வரை தொடர்கிறது. அதன் காரணம் மின் அடுப்பில் உடனடியாக உடல் எரிந்து விடுவதைப் போல விறகுக் கட்டையில் அத்தனை விரைவாக உடல் எரிந்து விடாது. ஆகவே மறுநாள்தான் எலும்பை எடுக்க மயானத்துக்கு செல்ல வேண்டும். சில வீடுகளில் அந்த சடங்கு முடிந்தப் பின்னரே,  மூன்றாம் நாள் கல் ஊன்றி கர்மாவின் பிற காரியங்களைத் தொடர்வார்கள்.

எலும்புகளையும், சாம்பலையும் நதியில் 
அல்லது நீர் நிலையில் கரைப்பார்கள்

60)  தகனம் செய்த அடுத்த நாளில் இருந்து எங்கே சடங்குகளை செய்ய கல் ஊன்றி உள்ளார்களோ அங்கு சென்று இரண்டாம் நாள் சடங்குகளை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் நடைபெற்று முடியும். பதிமூன்றாம் நாள் சுபகாரியம் வீட்டில் நடைபெறும். அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம். முதல் நாளன்று கல்லை ஊன்றி பாஷாண ஸ்தாபனம் செய்யாவிடில் மூன்றாம் நாளன்று  கல்லினால் சம்பிரதாயமாக இரண்டு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வார்கள்.

61) கல் ஊன்றுதல் என்பது என்ன?  ஒருவர் இறந்த உடனேயே ஆத்மாவானது உலகை விட்டு வெளியேறிச் சென்று விடுவது இல்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் பத்து நாட்கள்வரை அந்த ஆத்மாவானது பூவுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம். அதனால்தான்  பத்து நாட்களும் பூமியிலேயே தங்கி இருக்கும் ஜீவனை பூமியிலே புதைத்த கற்களில் (பாஷாண ஸ்தாபனம்) மந்திர சக்திகள் மூலம் செலுத்தி (ஆவாஹிப்பது என்பார்கள்)   அதற்கு தினமும் எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) கொடுத்து உயிருடனான ஜீவாத்மாவாக பாவித்து அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள். இப்படியாக கல் ஊன்றி செய்யப்படும் சடங்கை முதல் நாளில் ஆரம்பிக்காவிடில் ஒற்றைப் படையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாம் நாளன்று துவக்கி  அனைத்து முந்தைய நாட்களுக்குமான சடங்கையும்  சேர்த்து  அன்றே செய்து முடிப்பார்கள் .

62) கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடமே  அந்த சடங்குகள்  செய்து முடிக்கப்படும்வரை  மந்திர சக்திகளினால் ஆன புனிதமான கைலாயம் மற்றும் இந்திர லோகமாக அந்த ஆத்மாக்களுக்கு இருக்கும் என்பது ஐதீகம் ஆகும்.  அங்கு இறைவீகம் நிறைந்து இருக்கும் என்பார்கள். ஏன் என்றால் இறந்து போனவருடைய ஆத்மா அங்கு கல்லின் உள்ளே அமர்ந்திருக்கும். அங்கு அதை தன கட்டுப்பாட்டில் வைத்துள்ள வஸுக்கள் இருக்கும். ஆத்மாவை தம் வசம் வைத்துள்ள வஸுக்கள் தினமும் மந்திர சடங்குகளினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் அந்த தேவலோகத்திற்கு அழைத்து வந்து கர்மாவில் கலந்து கொள்ள வைக்கும் என்பார்கள்.  அதனால் அந்த ஆத்மாவும்  தமக்கு  அந்தஸ்தை தரும் வகையில் செய்யப்படும் சடங்குகளை மனதார ஏற்றுக் கொண்டு தாம் வாழ்ந்திருந்த  குடும்பத்துக்கு மனதார ஆசிகளை அளிக்குமாம்.  அதே வஸுக்கள்தான் அந்த ஆத்மாவை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அதன் குடும்பத்தினர் வாழும் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்து விட்டு வர துணை புரியும்.

63)  ஒருவர் இறந்து விட்டால் அவர் குடும்பத்தினர் முதல் நாளைய சடங்குகள் அனைத்தையும்  குடும்ப மனிதர் இறந்து போன அன்றே  செய்யத் துவங்குவார்கள். ஆனால் தற்காலத்தில்  பலரது உறவினர்களும் கர்த்தா செய்பவரும் வெளி ஊர்களில் இருப்பதினால் அவர்களால் இறந்த அன்றே வர இயலாமலும் இருக்கும்.  அதன் காரணமாக   கர்மாவை அவர்கள் வரும்வரை துவக்க மாட்டார்கள். சாஸ்திர விதிப்படி  அது சரியானதா அல்லது தவறானதா என்ற கேள்வி எழலாம்? ஒருவர் மரணம் அடைந்ததும், அந்த நேரத்தில் இருந்து கர்மாவை செய்யத் துவங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் அளவு என்ன, விளக்கம் என்ன?
..............தொடரும்

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 5

$
0
0

 --சாந்திப்பிரியா --
5

64)  மேலே தொடரும் முன் பாகம் - 4, பத்தி 59 தில் கூறப்பட்டு உள்ள தகனம் மற்றும் சஞ்சயனம் குறித்த சின்ன விளக்கம். உடலை எரிப்பதை  எதற்காக செய்கிறார்கள் என்பதை ஆன்மீக கண்ணோட்டத்தில் எத்தனை அழகாக கூறி உள்ளார்கள்.  மயானத்தில் வசிப்பவர் சிவபெருமான். அவர் விரும்பி தனது உடலில் பூசிக் கொள்வது சாம்பல். ஆரம்பமும் அவரே (பரபிரும்மன்), முடிவும் அவரே என்பதைப் போல படைப்பையும்,  அழிக்கும் செயலையும் தன்னுள் அடக்கி வைத்து உள்ளவர். ஆகவே அவர் இயக்கத்தில், பிரும்மாவினால்  படைக்கப்பட்ட உயிரானது முடிவாக மயானத்தில் சிவபெருமான் பூசிக்கொள்ளும் சாம்பலாக உருமாறுவத்தின்  மூலம் ஜீவன் முடிந்தப் பின் சாம்பலாகி சிவனையே சென்று அடைந்து விடுகிறது.  சாம்பல் என்பதில் உள்ள வார்த்தைகள் சாம்ப அதாவது சாம்பசிவன் எனும் பரமசிவனையும், பல் அதாவது காய் முற்றி  பழமாகிய பின்னர் அழுகி விடுகிறது, அதாவது முடிவை எட்டியது என்ற தத்துவத்தைக் காட்டும் சாம்ப+பல் =சாம்பல் எனும் சொல் ஆகும். ஆகவே உயிருடன் இருந்தபோது பலருக்கும் பயன்பட்ட அந்த ஜீவனின் உடலானது, வாழ்வு முடிந்து விட்ட கட்டத்தில் எவருக்கும் பலனின்றி போகும்போது சாம்பலாகி அந்த சாம்பசிவனையே சென்று சரண் அடைகிறது. அதனால்தான் ஒருவன் இறந்த பின்  ஸ்மஸானவாசியான சிவபெருமானை  சென்றடைய உடலை தகனம் செய்து சாம்பலாக்குகிறார்கள் என்பதான  ஐதீகம் உள்ளது.

65) அது போலவேதான்  சாம்பலை நதியில் கலக்கும் சஞ்சயனம் எனும் சடங்கும்.   உடலுக்குள் உள்ள ஜீவனானது எங்கிருந்து வந்ததென யாருக்கும் தெரியாது, அது எங்கே போகும் என்பதும்  புரியாது.  நீர் இல்லாமல் இந்த உலக வாழ்க்கை இயங்க முடியாது. வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவை நீரே ஆகும். ஆகவே உடலை விட்டு வெளியேறிய ஜீவன்  எங்கு சென்றாலும், யாராக பிறந்தாலும், வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான தண்ணீரைப் போல அனைவருக்கும் பயனுள்ளவாறு இருந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதாக  வேண்டிக் கொண்டு அந்த ஜீவன் குடி இருந்த உடல் சாம்பலான பின்னர் அந்த சாம்பல் புனித நதியில் அந்த காலங்களில் கரைக்கப்பட்டன. ஆனால் தற்காலத்தில் நதிகளில் கரைக்காமல் நீர் நிலைகள் எங்கிருந்தாலும் அவற்றில் அதைக் கரைப்பது ஒரு சடங்காகி விட்டாலும், தத்துவம் என்னவோ ஒன்றுதான்.  மேலே கூறப்பட்ட இரண்டுமே ஆன்மீக போதனையின் அடிப்படையில் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சடங்குகள் ஆகும்.

66) ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு செய்ய வேண்டிய கர்மா மற்றும் தகனம் செய்யத் துவங்க எத்தனை மணி நேர அவஹாசம் தரப்பட்டு உள்ளது என்று கேட்டால் அதற்கான பதில் இதுதான்.  ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்த அடுத்த பத்து மணி நேரத்துக்குள் தகனம் செய்து விட வேண்டும் என்றாலும்  அதே சமயத்தில் தகன காரியத்தை ஒருவர் இறந்த நேரத்தில் இருந்து  மூன்றரை மணி நேரத்துக்கு முன்னர் செய்து முடித்து விடக் கூடாது என்பது சாஸ்திர விதியாகும். எதற்காக பத்து மணி நேரம் மற்றும் மூன்றரை மணி நேர கால அவஹாசம் தரப்பட்டு உள்ளது?  

67) ஒருவர் இறந்தப் பின் அவருடைய ஆத்மா உடனடியாக யம தூதர்களால் கொண்டு செல்லப்படாதாம். ஒருவரது மூச்சு நின்று விட்டதாக சமிக்கை கிடைத்ததும் உடனடியாக யமகணங்கள் பூமிக்கு வந்து விட்டாலும் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை  தம்முடைய  கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள அவர்கள் கண்சிமிட்டும் நேர அளவில்  காத்திருப்பார்களாம். அதன் காரணம் இறந்தவருடைய வாழ்க்கையின் கால அளவை ஆராய்ந்து பார்க்கும் சித்ரகுப்தரிடம் இருந்து அவர்களுக்கு அந்த ஆத்மாவின் காலம் முடிந்து விட்டது என்ற ஒப்புதல் கிடைக்க கண் சிமிட்டும் நேரம் ஆகுமாம்.  அவர்களுக்கு கண் சிமிட்டும் நேரம் என்பது பூமியின் கணக்கின்படி மூன்றரை மணி நேரம் என்பதினால்தான் மூன்றரை மணி  நேரத்துக்கு முன்னதாக தகன காரியங்களை செய்யத் துவங்கி தகனமும் செய்து முடிக்க மாட்டார்கள், மூன்றரை மணி நேர  காலம் முடியும்வரை யமகணங்கள் அந்த ஜீவனை தம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதினால் ஏற்பட்டது இந்த விதியாம்.

68) இதற்கும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. உலகில் பல்வேறு இடங்களில் பல சாதுக்களும் சன்யாசிகளும், சித்தர்களும், ராஜ ரிஷிகளும், முனிவர்களும், யோகக் கலையை கைக்கொண்ட ஆன்மீகவாதிகளும் சித்திகளைப் பெற்றிட மூச்சை நிறுத்தி வைத்துக் கொண்டு தபஸ்சில், சமாதி நிலையில் இருப்பார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் உடலில் இருந்து தமது ஜீவனை தாமே  வெளிக் கொண்டு சென்று வான் வெளியில் மிதந்தவாறு தவ நிலையில் இருப்பார்களாம். அந்த நிலையில் அவர்கள் இறந்து விட்டதாகக் கருதி யமகணங்கள் அந்த ஆத்மாவை பிடித்துச் சென்று தவறு  இழைத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நியதி பரப்பிரும்மனால் வைக்கப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.

69) இது நடக்கக் கூடிய காரியமா என்ற சந்தேகம் எழத் தேவை இல்லை.  தமது ஆத்மாவான ஜீவனை தனது உடலில் இருந்து வெளியில் வைத்துக் கொண்டு எவராலும் இருக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகப்படலாம். ஆனால் இந்த காரியத்தை நமது நாட்டிலேயே பல சித்த முனிவர்களும், மகான்களும் ஏன் மந்திரவாதிகளும் கூட செய்துள்ளார்கள் என்பது வரலாற்றுக் கதைகள் மூலம் தெரிய வரும்.  கூடு விட்டு கூடு பாய்ந்து செல்லும் கலை என்பது தனது உடலில் உள்ள  ஜீவனை வெளியேற்றி தற்காலிகமாக மற்றொரு சடலத்தில் வைத்துக் கொண்டு இருப்பதாகும். இந்தக் கலை பண்டைக் காலத்தில் பல சாதுக்கள், முனிவர்கள், ரிஷி மற்றும் சித்தர்களால் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

70) ஆதி சங்கரரின் வாழ்க்கையில் கூட அவருக்கு விடப்பட்ட சவால் ஒன்றில் தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக தாம்பத்தியம் என்பது என்ன என்பதைக் கண்டறிய தன உடலில் இருந்த ஆத்மாவை  உடலில் இருந்து வெளியேற்றி கூடு விட்டு கூடு பாய்ந்து சென்ற கதை உள்ளது. அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்ந்து கிளி உருவில் சென்றபோது அவர் உடலை அவரது எதிரி அழித்த கதையும் உண்டு. அதனால் அருணகிரிநாதர் கிளியாக வாழ வேண்டி இருந்ததாம். இவை அனைத்துமே மேன்மையான  மூச்சை அடககிக் கொள்ளும் யோகக் கலையை அபாரமாக கற்றறிந்திருந்தவர்களால் மட்டுமே செய்ய இயலும், இதை அனைவராலும் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் தெய்வீக ஆற்றலும், அருளும் பெற்று இருக்க வேண்டும்.

71)  இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் நவீன காலத்தின் தத்தாத்திரேயர் அவதாரமான சமர்த்த ஸ்வாமிகள், சீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன. இறந்து போனவர்களை மீண்டும் உயிர் பிழைத்து எழ வைத்த சம்பவங்கள் பல மகான்களுடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றன.   உஜ்ஜயினியை ஆண்டுவந்த விக்ரமாதித்தன் கூட இந்தக் கலையை பயன்படுத்தி  உள்ளதாக அவர் வரலாற்றில் கதை உண்டு. சிவபாலயோகி போன்ற நவீன கால பல மகான்கள் கூட தமது ஆஸ்ரமங்களில் இருந்து தேவலோகத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய கதைகள் ஏராளமாக உள்ளன.

72) மேலே கொடுத்துள்ள உதாரணங்கள்  மேன்மையான ஆன்மீகவாதிகளினால்  நடத்தப்பட்டது என்றாலும் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ள காலத்திலும் அப்படிப்பட்ட  அதிசயங்கள் நடைபெற்று வந்துள்ளன. சில நேரங்களில் இறந்து விட்டதாக கருதப்பட்டு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட சவங்கள் நடு வழியில் உயிர் பிழைத்து எழுந்தான உண்மைக் செய்திகள் உள்ளன. அது போல மருத்துவர்கள் நின்று போன மூச்சை உடனடியாக செயற்கை ஸ்வாசம் செலுத்தி மீண்டும் உயிர் பிழைக்க வைத்த சம்பவங்களும் நிறையவே உள்ளன. ஆனால் குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள், அவர்கள் உடல் நிலையின் ஒத்துழைப்பைப் பொறுத்து அதை செய்ய வேண்டி இருந்தது.  ஆகவே ஒருவர் இறந்து விட்டால் அடுத்த  மூன்றரை மணி நேரத்துக்குள் (யமலோகக் கணக்கின்படி கண்சிமிட்டும் நேரம்) தகன காரியங்களை செய்து முடித்து விடக் கூடாது என்று வைக்கப்பட்டு உள்ள நியதிக்கும் விஞ்ஞான அடிப்படை உள்ளதாகவும், நியாயமானதாகவும்  நமக்கு தோன்றுகிறது.

73)  அடுத்து  அதென்ன பத்து மணி நேரக் கணக்கு என்று கேள்வி கேட்பதிலும்  நியாயம் உள்ளது. ஒவ்வொருவர் உடலுக்குள்ளும் பத்து விதமான காற்று வெளியேற்ற மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்கள் வழியேதான் ஒருவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறும் என்கிறார்கள் . இதிலும், அதாவது உயிர் வெளியேறும்  ஓட்டைகள் எத்தனை என்பதைப் பற்றி - சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்றாலும் பத்து மண்டலங்கள் என்பதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன.


74) சாஸ்திரங்களின்படி இறந்தவர்களது ஆத்மா இரண்டு கண்களின் வழியாகவோ, இல்லை வாயின் வழியாகவோ, உச்சிமண்டை வழியாகவோ, ஆசன துவாரத்தின் வழியாகவோ, மூத்திர வாசல் அல்லது இரண்டு காதின் வழியாகவோ அல்லது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவோ வெளியேறும் என்பார்கள். இதுவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாகும்.

75)  ஆனால் புலிப்பாணி முனிவர் மற்றும் போக முனிவருக்கு உயிர் எந்த விதங்களில் மனித உடல்களில் இருந்து வெளியேறுகிறது என்பதை குறித்து விளக்கிய அகஸ்திய முனிவர் இந்த பத்து மண்டலங்களைத் தவிர ஜீவன்கள் வெளியேற உடலில் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் உள்ளன என்றும், அந்த இடங்கள் கை, கால் விரல்கள், மற்றும் அவற்றின் இடைப் பகுதியில் உள்ள ஓட்டைகள் என்றும், அவற்றைத் தவிர உடலில் உள்ள பல்லாயிரக்கணக்கான மயிர்க்கால்களின் அடியில் உள்ள ஓட்டைகளின் வழியாகவும் ஜீவன் வெளியேறும் என்றும், அந்த வழிகளில் வெளியேறும் ஜீவன் என்னென்ன பிறவிகள் எடுக்கின்றன என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

76) தாயின் வயிற்றில் செல்லும் ஜீவனானது  அங்கு வளரும் கருவின் உச்சி மண்டையின் வழியாகவே அதனுள் உள்ளே நுழைகிறது என்பது ஆன்மீக நம்பிக்கையாகும். அந்த உச்சிமண்டையைக் கபாலம் என்பா். உச்சி மண்டையில் புகுந்த அந்த உயிர் உச்சந்தலை வழியாக வெளியேறுவதுதான் சிறப்பு. அதுவே சரியான மரணம், அது புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதன் பின் ஆத்மா வேறு எந்த பிறவியும் எடுப்பதில்லை என்றும் புராணங்களில் கூறப்படுவதினால் ஜீவன் வெளியேறும் இடங்கள் பொதுவான பத்து இடங்கள் என்பதை நாம் ஏற்றுக்  கொள்ள வேண்டி உள்ளது.

77) கபாலம் வழியே வெளியேறும் ஜீவனானது பூமியிலே பிறப்பு எடுக்காமல் அவர்கள் வாழ்ந்திருந்த இடத்தின் வான் வெளியிலேயே தெய்வ ஆத்மாவாக தங்கி இருந்து விடுகிறது என்பதும் நம்பிக்கை ஆகும்.  அதனால்தான் அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்களை உண்மையான தெய்வம் எனக் கருதி அவர்களுடைய உடலை எரிக்காமல் புதைத்து வைத்து அதன் மீது சமாதியும் கட்டி வைத்து பூஜிக்கிறார்கள்.
 

78) ஒன்பது காற்று மண்டலமும் அடைபட்டு, அவயங்களும்  அவற்றின் துடிப்பை நிறுத்திக் கொள்ளும்போது, அந்த உடலின் விதிக்கேற்ப எந்த ஓட்டையின் (மண்டலம்) வழியாக உடலின் ஆத்மா உடலை துறந்து வெளியேற வேண்டுமோ அந்த  பத்தாவது மண்டலத்தில் இருந்து ஆத்மா வெளியேறும். அப்போது அந்த உடலை சுற்றிக் கொண்டிருக்கும் காற்று ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று விடும். அப்படி ஆத்மாவை சுமந்து கொண்டு செல்லும் காற்றானது அந்த ஆத்மாவை மேலுலகில் உள்ள வஸுக்களிடம் சேர்ப்பித்து விட்டு விட்டு அங்கிருந்து வந்து விடும். இங்கும் ஒரு ஆன்மீக விளக்கம் நமக்கு கிடைக்கிறது. காற்று என்பது நமது கண்களுக்கு தெரியாது என்றாலும், அது உணரக் கூடியது என்பதின் காரணம் அதுவும் வாயு பகவானின் பல லட்சக்கணக்கான உயிர் கணங்களைக் கொண்டு இயங்குவதுதான். இறந்தவர் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவை  மேலுலகில் உள்ள வஸுக்களிடம் கொண்டு செல்லும்  இந்த குறிப்பிட்ட செயல் வாயுதேவருக்கு விதிக்கப்பட்டு  உள்ள நியதியாகும் என்பதாக தன்னிடம் வந்து சந்தேகம் கேட்ட நாசிகேதனுக்கு யமதர்ம தேவர் எடுத்துரைத்தாராம்.

79) காற்றுடன் இணைந்து செல்லும் ஆத்மாவின்  பயணம் முடிவுற - உடலில் இருந்து ஆத்மா வெளியேறிய நேரத்தில் இருந்து வஸுக்களிடம் சென்றடையும்வரை நமது பூமியின் கணக்கின்படி பத்து மணி நேரம் பிடிக்கிறது.


80) அப்படி அந்தப் பத்து மணி நேரத்துக்குள் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படாத ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் பல தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு அவற்றை தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டு  நற்கதி அடைய விடாமல்  தடுக்க முயலுமாம். தீய ஆவிகள்  அந்த தூய ஆத்மாவை தம் வசம் முற்றிலுமாகக் கைகொள்ள பத்து நாட்கள் பிடிக்கின்றன.   ஒருவர் இறந்தப் பின் அடுத்த பத்து மணி நேரத்துக்குள்ளாக கர்மாவை செய்யத் துவங்கியதும்,  அந்த கர்மாவில் ஓதப்படும் மந்திர சக்திகள் மூலம் காற்றானது அந்த ஆத்மாவை வஸுக்களிடம் கொண்டு சேர்க்கிறதாம். அடுத்த பத்து நாட்களும் செய்யப்படும் சடங்குகளின் மந்திரங்களினால்   தீய ஆவிகளின் சக்தி அடக்கப்பட்டு விடும்.  அதனால்தான் பத்து மணி நேரத்துக்குள்  இறந்தவருக்கு கர்மாவை செய்யத் துவங்கி தகனமும் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்த பத்து நாட்களும் கர்மாக்களை செய்ய வேண்டும் என்ற விதியான   பத்து மணி நேரக் கணக்கு  அமைந்து உள்ளது. இதில் பத்தாவது நாளான காரியமே மிகவும் முக்கியமான சடங்காகும்.

 யம தூதர் ஆத்மாவை  எட்டு கோஷ்டியான
வஸுக்களிடம் கொண்டு சேர்க்கிறார் 

81)  அந்தப் பத்து மணி நேரத்தில் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படாத ஆத்மாவை பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் பல்வேறு  தீய கணங்கள் சூழ்ந்து கொண்டு அவற்றை தம்மிடம் பிடித்து வைத்துக் கொண்டு அவை நற்கதி  அடைய விடாமல் தடுக்கும் என்பதினால் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் ஆத்மா நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக முதல் நாளன்று எப்போது கர்மாவை துவக்கினாலும் தொடர்ந்து அடுத்த பத்து நாட்கள் மந்திரங்களை ஓதி சில சடங்குகளை செய்ய வேண்டி உள்ளது.

82) வஸுக்கள் என்பது யார்?  கர்மாவில் செய்யப்படும் மந்திரங்களுக்கு உரிய தேவதைகள் அந்த  வஸுக்கள். ஆத்மாவை பிடித்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை விரட்டி தம்மை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் தேவதைகளே அந்த வஸுக்கள்.  வஸுக்களின் பாதுகாப்பினால் அடுத்த  பத்து நாட்களிலும் செய்யப்படும் காரியங்களினால் ஆத்மா பசியோடு அலையாமல் இருக்கும்.  ஆக பத்து மணி நேரம், பத்து நாட்கள் என்ற அனைத்துமே பத்து என்ற எண்ணிக்கையில்தான்  அடங்கி உள்ளது.

83) ஆனால் அனைத்திற்கும் மேலாக இன்னொரு காரணமும் உள்ளது.  மரணம் அடைந்து விட்டவர்களது ஆத்மாவானது வஸுக்களிடம் பாதுகாப்பாக  உள்ள நேரத்தில்  அந்த ஆத்மாவின் தர்ம, அதர்ம கணக்குகளை ஆராய்ந்து பார்த்து அதற்கான தண்டனைகளையும் முடிவு செய்து கொண்டு வஸுக்களிடம் அவற்றை சமர்ப்பித்து அந்த ஆத்மாவை தம்முடன் அழைத்துக் கொண்டு செல்ல யமதர்ம தேவருக்கும்  பத்து நாட்கள் ஆகுமாம். அந்த பத்து நாட்களிலும் இறந்தவர் சந்ததியினர் செய்யும் ஆத்மார்த்தமான  கர்மாக்களின் விளைவாக என்னென்ன பாவங்கள் விலக்கப்பட வேண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த ஆத்மாவின் முடிவான நிலை இதுதான் என பத்தாவது நாளன்று வஸுக்களிடம் விவாதித்தப் பின்னர் யமதர்ம தேவர் அந்த ஆத்மாவை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.  இதனாலும் பத்து நாட்கள் சடங்கு எனும் கணக்கு வைக்கப்பட்டு உள்ளதாம்.

...............தொடரும்

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 6

$
0
0
 --சாந்திப்பிரியா --
6

84) வஸுக்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஆத்மா போய்  விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்குமாம் அந்த யம கணங்கள்.  அதனால்தான் பன்னிரண்டு நாட்களும் கல் ஊன்றிய இடத்தில் செய்யப்படும் சடங்குகளில்  செய்யப்படுபவற்றை  அந்த ஆத்மாவானது ஏற்றுக் கொள்கிறதாம். கல் ஊன்றிய பிறகு தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு தண்ணீராலும்  தர்ப்பணம் பண்ண வேண்டும். எள்ளும் தண்ணீரும் தர்பைப் புல்லின் மீது பட்டவாறு  சமர்பிக்கப்படுகிறது.  அதன் பின்னர் சாதத்திலான பிணடம் சமர்ப்பிக்க வேண்டும். கர்மாவில் அரிசி சாதம், தர்பை, எள் மற்றும் தண்ணீர் என்பன முக்கியமானவை ஆகும்.

வஸுக்களிடம் இருந்து ஆத்மாவை அழைத்துக் 
கொண்டு செல்லும் யமதூதர்கள்  
யமராஜரிடம் அவரை சமர்ப்பிக்கிறார்கள் 

85) மரணம் அடைந்தவர் உடலில் இருந்து வெளியேறும்  ஜீவன் எனப்படும் ஆத்மா அந்த உடலை சுற்றி உள்ள காற்றின் மூலம் வஸுக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டதும் அந்த வஸுக்கள் அந்த ஜீவனை முதலில் எமனுலகில் உள்ள எமதேவர் முன்னிலையில் கொண்டு சென்று அவர் முன் நிறுத்தி அதன் கணக்கை ஆராயுமாறு வேண்டிக் கொள்ளும். அதன் பின்  யமராஜரின் அனுமதியோடு மீண்டும் அந்த ஆத்மா வஸுக்கள் மூலம் பூமியில் அது  வாழ்ந்த இடத்திற்கே திரும்ப அழைத்து வரப்படும்.  அங்கு அது அடுத்த இரண்டு நாட்களை கழிக்க வேண்டும். பாஷண ஸ்தாபனம் எனும் பெயரில் என்றைக்கு  கல் ஊன்றுகின்றார்களோ அன்றைக்கு அந்த ஆத்மா அந்த கல்லுக்குள்  குடி புகுந்து கொள்ள, கர்மாவைத் துவக்கிய முதல் நாள் முதல் அடுத்த பத்து  நாட்களும் அதன் குடும்பத்தினரால் போடப்படும் எள்ளும் தண்ணீரையும், பிண்டத்தையும் அங்கிருந்தவாறே அது பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல முழுமையான பிண்ட உடலைப் பெற்றுக் கொள்ளத் துவங்கும். பிண்ட உடல் என்பது மனித உடல் அல்ல. நமது கண்களுக்கு தெரியாத பிரேத உடல் ஆகும்.

86)  மனித உடலைப் போன்ற அந்த பிரேத உடல் முழுமை அடைந்தப் பின்னரே பன்னிரண்டாம் நாள் கர்மா முடிந்த பின் யமலோகத்துக்கு அந்த ஜீவன் அழைத்துச் செல்லப்படும். அந்த ஜீவன் பிரேத உடலை முழுமையாக அடையும்வரை ஏன் காத்திருப்பார்கள் என்றால் சொர்க்க நரகங்களில் அவை தமக்கு தரப்படும் தண்டனைகளையும்  சுகபோகங்களையும்  மனித உடல் அனுபவிக்கும் அதே உணர்வுகளுடன் இருந்தவாறு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள நியதி ஆகுமாம் (அந்த பிரேத உடல் அனுபவிக்கும் நன்மை தீமைகளை பின் வரும் பாகங்களில் படங்களுடன் விளக்கி உள்ளேன்).

87) அந்த ஜீவன் எப்படி முழுமையாக வளர்ச்சி அடைகிறது?  கர்மா துவக்கப்பட்ட முதல் நாள் அன்று தலை பாகத்தில் அமர்ந்து எள் கலந்த தண்ணீரையும்  பிண்டத்தையும்  பெற்றுக் கொள்ளும் அந்த ஆத்மா  அடுத்தடுத்த நாட்களில் முகம், கழுத்து, தோள் மற்றும் கைகள்,  மார்பு,  வயிறு, தொப்பிள், புட்டம், மலத் துவாரம், தொடைகள், கால்கள் எனப் படிப்படியாக  அனைத்து இடங்களிலும் அமர்ந்தபடி எள் கலந்த தண்ணீரையும்  பிண்டத்தையும்  பெற்றுக் கொள்ளும் காலத்தில் இறந்தவர் உடலின் அந்தந்த பாகங்களின் அனைத்து பரிசங்களையும் அந்த ஜீவன் தான் பெறும் பிரேத உடலில் அடக்கிக் கொள்கிறது. இறந்தவரின் அனைத்து உடல் பரிசங்களையும்  பதினொன்றாவது நாளன்று முழுமையாக அந்த ஆத்மா பெற்று விடும்போது அந்த ஆத்மாவானது வஸுக்களிடம் இருந்து விலகி யமகணங்களோடு சேர்ந்து கொண்டு விடும். ஆனாலும் பத்தாவது நாட்களுக்குப் பின்னர் அடுத்த இரண்டு நாளும் அந்த ஆத்மா மீதமுள்ள எள் கலந்த தண்ணீரையும் பிண்டத்தையும்  பெற்றுக் கொண்டப் பின்னரே பதிமூன்றாவது நாளன்று எமதூதர்கள் வந்து அழைத்ததும் துயரத்தோடு அவர்களுடன் செல்லத் துவங்கும்.

அந்த ஆத்மா பத்து நாட்களில் படிப்படியாக எப்படி முகம்,கழுத்து,
தோள் மற்றும் கைகள் மார்பு, வயிறு, தொப்பிள், புட்டம், மலத் துவாரம், 
தொடைகள், கால்கள் என பிரேத உடலின்  அனைத்து பரிசங்களையும் 
தன்னுள் அடக்கிக் கொள்கிறது என்பதைக் காட்டும் படம் 

88) இறந்தவரது உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வேளையில் மயானம்வரை அதில் இருந்து வெளியேறிய   ஜீவனும் அதன் மீதே பயணித்துக் கொண்டு  இருக்கும். அதன் காரணம் உடலுக்குள் உள்ள ஆத்மா அதுவரை தான் தங்கி  இருந்த உடல் அழிக்கப்படுவதை நேரடியாகக் கண்ட பின்னரே திருப்பதி அடைந்து வஸுக்களிடம் செல்லுமாம். மயானத்தை அடைந்ததும் அது வாழ்ந்திருந்த உடல் எரிந்து சாம்பலாகிப் போனதும் அந்த ஆத்மா வஸுக்களுடன் வான்வெளிக்குச் சென்று விடும்.  சாம்பலாகி விட்ட அந்த ஜீவனின் உடல் (பிரேத உணர்வுகள் என்பார்கள்)சிவபெருமானின் பாதங்களில் கலந்து விடுமாம். இது குறித்து ஏற்கனவே விளக்கி உள்ளேன்.

89)  ஆனால் மரணம் அடைந்து விட்டவரது ஆத்மாவை வஸுக்கள் அந்த உடல் தகனம் செய்யப்பட்ட மற்றும் கல் ஊன்றப்பட்ட இடத்தின் மேல் பகுதியிலேயே அடுத்த பன்னிரண்டு நாட்களும் தங்க வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்பதின் காரணம் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை பிண்ட தானத்தில் தினமும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காகவேதான்.

90) அப்படி என்றால் கல் ஊன்றியதும் அந்தக் கல்லில் அந்த ஆத்மாவை மந்திர பூர்வமாக ஆவாஹனம் செய்து வைப்பார்கள் என்ற கூற்று தவறா என்றால், அதுவும் 'இல்லை'என்பதே அதற்கு பதிலாகும். கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஆத்மாவை அதற்குள் வைக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.  அது எப்படி ஊன்றப்பட்டு உள்ள கல்லுக்குள் ஆவாஹிக்கப்பட்ட ஜீவனால் தகனம் செய்யப்பட்ட இடத்தின் மேலும், தான் வாழ்ந்திருந்த வீட்டுக்கும் அடுத்த பன்னிரண்டு நாட்களும் செல்ல முடியும் எனதும் நியாயமான கேள்விதான்.

91) கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஆத்மாவை அதில் செலுத்தி வைத்ததும் அந்த இடமே அதன் அரண்மனை போல மாறி விடும். ஊன்றப்பட்டு உள்ள அந்தக் கல் அதனுடைய சிம்மாசனம்  போன்றது ஆகும். அந்த கல்  அதற்கு சிறைசாலை போன்றது அல்ல. அதனால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் அதற்க்கு அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள வஸுக்களின் அனுமதி தேவை மட்டுமல்ல, அந்த வஸுக்கள் வராமல் அதனால் எங்கும் தனியே செல்ல முடியாது.

92) ஜீவன் எங்கிருந்தாலும், கர்மாக்கள் நடைபெறும் சமயத்தில் அந்த ஜீவனை வஸுக்கள் அங்கு அழைத்து வந்து அந்த கல்லுக்குள் (சிம்மாசனத்தில்) அமர வைத்து விடுவார்கள். அங்கிருந்தபடி அந்த ஜீவனால்  கர்மாவில் தரப்படும் எள் கலந்த தண்ணீரையும்  பிண்டத்தையும் ஏற்றுக் கொண்டு பிண்ட உடலைப் பெற்றுக் கொள்ளும். அதை விடுத்து நேரடியாக அந்த ஆத்மாவை யமலோகத்துக்கு அனுப்பி விட்டால் அங்கிருந்து அது மீண்டும் பூமிக்கு திரும்பி வர இயலாது, எள் கலந்த தண்ணீரையும்  பிண்டத்தையும்  அதனால்  ஏற்க முடியாது என்பதினால் இந்த சடங்கை தினமுமாக பத்து நாட்கள் தொடர்ந்து செய்வார்கள். அதை வாஸ்சோதகம், திலோதகம் மற்றும்  நித்ய விதி என்பார்கள். அந்த நித்ய விதியில் ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தமும், நவ ஸ்ரார்தம் போன்றவை நடைபெறும். அவற்றை பண்டிதர் செய்து வைப்பார்கள்.

எள்ளையும்   தண்ணீரையும் நேராக 
ஊற்றாமல் கையை எதிர்புறமாக திருப்பி 
வைத்துக் கொண்டு ஊற்றுவார்கள். இதுவே 
ஸ்ரார்த்த காரியத்தின் முக்கியத்துவம்

93) முதல் நாளில் மூன்று தடவை, அடுத்த நாள் நான்கு தடவை, அதற்கு அடுத்த நாள் ஐந்து தடவை எனப் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போய் பத்தாம் நாளன்று பன்னிரண்டு முறை செய்யப்படும் ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் எனப்படும் சடங்கில் எள் கலந்த தண்ணீரையும்  பிண்டத்தையும் தரும் தர்ப்பணமும்  சிலர் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும்.  அதையும் புரோகிதர் கூறுவார்கள்.

94)  சரி ஒருவர் இறந்து போனதும் அடுத்த பத்து மணி நேரத்துக்குள்  கர்மாக்களை துவங்க முடியவில்லை. வெளி ஊர்களில் உள்ள மரணம் அடைந்தவருடைய  புத்திரன் அல்லது முக்கிய உறவினர்கள் வந்தே ஆக வேண்டும். அதற்க்கு முன்னாள் காரியங்களை துவக்கக் கூடாது என்கின்ற நிலை. வெளி ஊர்களில் வசிக்கும் அவர்கள் வந்து சேர குறைந்தபட்ஷம்  இருபது மணி நேரம் ஆகும்.ஆகவே காலையில் இறந்தவரது காரியங்களை மறுநாள்தான் துவக்க முடியும். அந்த நிலையில் என்ன செய்வது?

95) முக்கியமான கர்த்தாக்கள் வரும்வரை இறந்தவர் உடலை குளிர்சாதன பெட்டி அல்லது ஐஸ் மீது வைத்து இருப்பது தற்காலத்தில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அது சரியா அல்லது தவறா என்பது கேள்வி. உதாரணமாக  காலையில் ஆறு மணி அளவில் ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் முக்கியமானவர்கள் வந்து சேரும்வரை இறந்தவர் உடலை தகனம் செய்ய முடியாமல் நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.  மாலை ஐந்து மணிக்கு மேல்தான், அல்லது மறுநாள் காலையில்தான் தகனம் செய்ய முடியும் என்ற நிலைமை. அது பத்து மணி நேரத்துக்கும்  அதிகமாகி விடுகிறது அல்லவா. அப்படி என்றால் என்ன செய்வது?  பத்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் சாஸ்திர நம்பிக்கையின்படி உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை  தீய ஆத்மாக்கள் சூழ்ந்து கொள்ளாதா என்ற கேள்வி எழலாம் .

96)  சாஸ்திர விதிகளில் இது பற்றிய விளக்கம் கிடையாது.  பத்து மணி நேரத்துக்கும் அதிகமாக உடலை வைத்திருந்தால் இயற்கையின் விளைவாக அதன் உடலில்  தீய கிருமிகள் தோன்ற வாய்ப்பு  உள்ளது, அது நோய்களை பரப்பும், அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தில் துற நாற்றமும் வீசத் துவங்கும் என்பதினால்தான் கர்மாவைத் துவக்க பத்து மணி நேர அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளார்கள் என்பது விஞ்ஞான அடிப்படையின் ஒரு உண்மையாகும். அதை ஆன்மீக போர்வை போர்த்தி தந்துள்ளார்கள். காரணங்கள் இல்லாமல் இந்த நியதிகளை வைத்திருக்கவில்லை என்பது தெளிவு.  

97) சாஸ்திரத்தில்  இரவு 9.30 மணிக்கு முன்னால் இறந்தவரை தகனம் செய்து விட வேண்டும் என்பது மட்டுமே விதியாக இருந்தது. அதே சமயத்தில் பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்டது என்ற நிலையில் உள்ளவர்கள் தகனம் செய்யக் கிளம்பும் முன் அந்த சவத்தை பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து புனித திரவ்வியங்களைக் கொண்டு தயாரிக்கும் பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்ட தண்ணீரால் குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியும்  இருந்தது. சிலர் அதை சவத்தின் மீது புரோஷணம் செய்வார்கள். பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், மூத்திரம், பால், பாலில் எடுத்த நெய், பாலில் செய்த தயிர் - போன்றவற்றைக் கொண்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை ஆகும்.

தேவலோகப் பசு காமதேனு,
அதனுள் வசிக்கும் தேவர்கள்

98) பஞ்சகவ்யம் எனும் கலவையைக் கொண்டு குளிப்பாட்டிய பின்னரே தகனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விஞ்ஞான ஆராய்வில் பஞ்சகவ்யம் கிருமி நாசினி என்றும், இறந்தவர் உடலில் உள்ள கிருமிகளை அவை நாசம் செய்து விடும் என்றும் கூறுகிறார்கள். பசு என்பது காமதேனுப் பசுவின் சந்ததி என்பதினால் பசுக்கள் தெய்வத்துக்கு சமமானவை, அதன் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் அமர்ந்துள்ளனர் என சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது.  பசுவின் மூத்திரத்தில் வருணன் வசிக்கிறார், சாணத்தில் அக்னி வசிக்கிறார், தயிரில் வாயுவும், பாலின் சந்திரனும் மற்றும் நெய்யில் சூரியனும் வசிக்கிறார்கள். அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பஞ்சகவ்யம் செய்யப்படும்போது காயத்ரி மந்திரத்தை ஓதியே ஒன்று சேர்க்க வேண்டுமாம். ஆகவே அத்தனை சக்தி வாய்ந்த பஞ்சகவ்யம்  கலந்த நீரைக் கொண்டு சவத்தைக் குளிப்பாட்டும்போது அதில் இருந்து வெளிவரும் அந்தந்த தெய்வங்களின் கணங்கள் அங்குள்ள தீய ஆத்மாக்களை விரட்டி அடிக்குமாம். இப்படியாக சாஸ்திரங்கள் அந்த சடங்கை நியாயப்படுத்தி உள்ளார்கள். ஆகவே இறந்தவருக்கு கர்மா செய்ய பத்து மணி நேரத்துக்கும் அதிகமாகி விட்ட நிலையில் பஞ்சகவ்யம்  கொண்டு அந்த உடலை குளிக்க வைத்தாலோ அல்லது புரோஷணம் செய்தாலோ  தகனத்துக்கு  பத்து மணிக்கும் மேலாகி விட்ட நிலையில் அங்குள்ள தீய கணங்களை பஞ்சகவ்யம்  துரத்தி விடும் என்பது நம்பிக்கை.

99) மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம்  அதாவது அசுப காரியம் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன்  என்பது பொருள் ஆகும்.  அதற்கு எதிர்மாறான அபரம்  என்பது நிலையற்ற அழியும் தன்மை கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதனால்தான் அபர காரியம் என்பது இறந்து போன பிரேத கர்மம் அல்லது நீர்த்தாருக்கு செய்யும் கடன் என்பதினால் அசுபமான காரியம் என்பதாகக் கருதுகிறார்கள். அதையே சாஸ்திரமும் கூறுகிறது. இறந்தவர்களுக்கு பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மா என்பது தஹனம் முதல் பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் கர்மாக்கள் ஆகும்.  ஆனால் அந்த கர்மாக்களின் தொடர்ச்சியாக பதிமூன்றாம் நாளன்று செய்யப்படும் கிரேக்கியம் என்பது  குடும்பத்தினரின் துயரத்தை  நீக்கிக் கொள்ள செய்யப்படும்  சுபஸ்வீகாரம் ஆகும்.  அதாவது அபார காரியம் சுப காரியத்துடன் முடிவடைகிறது.  அதன் பின் மரணம் அடைந்தவரது  ஜீவன் பிதுர்லோகத்தில் தெய்வமாகிவிட்ட அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினரிடமும் போய் சேர்கிறது என்பது ஐதீகம் .

பிதுர்லோகத்தில் உள்ள ஆத்மாக்களுடன் 
சேருவதற்கு பயணிக்கும் ஜீவன்கள்

100) ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள  அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் பன்னிரண்டு நாள் காரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. அந்த கர்மாக்கள் நடக்கும் காலத்தில் சாதாரணமாக வீடுகளில் அடுப்பை மூட்ட மாட்டார்கள்.  அங்கு சமைக்க மாட்டார்கள் என்பார்கள்.  முதல் பத்து நாட்களும் உறவினர்கள் வீடுகளில் இருந்துதான் சாப்பாடு வரும்.  இதற்கு விஞ்ஞான காரணம் கிடையாது என்றாலும்  இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளதற்கு ஒரு அடிப்படை காரணம் இருந்துள்ளது.

101) பண்டைக் காலங்களில்  முதல் நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களும் நதிக்கரையில் சென்று கல் ஊன்றிய இடங்களில் காரியங்களை செய்ய வேண்டி வரும்.  ஆகவே அந்த காரியம் முடிக்கப்பட்டு வீட்டிற்கு வரும்வரை வீட்டில் உள்ளவர்களால் சமைக்க முடியாது. இந்த காலத்தில் செய்யப்படும் சடங்குகளைப் போல அல்லாமல் பண்டை காலங்களில் கர்மாவை செய்து முடித்து விட்டு வர பல மணி நேரம் ஆகும். அதற்கு காரணம் அதில் பல நியதிகளை வைத்திருந்தார்கள். சடங்குகளை முடித்து விட்டு வீடு வந்தப் பின் மீண்டும் குளித்து விட்டுதான் அடுப்பை மூடிவிட்டு சமையல் செய்ய முடியும். அதற்கும் அதிக நேரம் ஆகும். வீடுகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை இருந்தால் அவர்களால் அத்தனை நேரம் பட்டினியுடன் இருக்க முடியாது.  ஆகவே உறவினர்கள் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆகவே அதுவே மனிதாபிமான  அடிப்படையில் வைக்கப்பட்டு உள்ள சடங்காகி விட்டதே  தவிர இதற்கு வேறு விஞ்ஞான ரீதியிலான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

102)  இதற்கு ஒரே ஒரு ஆன்மீக அடிப்படையிலான காரணம் மட்டுமே உள்ளது. பண்டை காலங்களில், அடுப்பை மூட்டி சமைத்ததும் சிறிதளவு சாதத்தை அடுப்பில் போட்டு அக்னிதேவருக்கு தரப்படும் நைவித்தியமாக'கருதினார்கள். அதாவது  அக்னிதேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு ஆகும். இன்றும் சில வீட்டில் இதைக் கடைபிடிக்கிறார்கள். பண்டை  காலத்தில் வீடுகளில் தற்காலத்தைப் போல மின் அடுப்புக்களும், எரிவாயு (காஸ்)அடுப்புக்களும் இல்லாத நிலையில் விறகுகளைப் போட்டு நெருப்பு பற்ற வைத்து சமையல் செய்து வந்தார்கள். ஆகவே இறந்தவரது வீடுகளில் அந்த ஜீவன் வீட்டைவிட்டு வெளியேறும்வரை, மயானத்தில் விறகுகளை வைத்து தகனம் செய்ததைப் போல, வீட்டில் விறகு எரிக்கக் கூடாது, அடுத்த பன்னிரண்டு  நாட்கள் கர்மாக்களை முடிக்கும்வரை, வேறு எந்த தெய்வீக பூஜையையும் செய்யக் கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாஸ்திர ரீதியில்  இந்த நியமத்தை வைத்துள்ளார்கள்.
................தொடரும்

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 7

$
0
0
 --சாந்திப்பிரியா --
7

103)  முதல் நாள் முதல் ஒன்பது   நாள் வரையிலான சடங்குகள் 

சஞ்சயனம்:- தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை  எடுத்து வந்து அதை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிநிலையில் சென்று கரைப்பது. மின்சார அடுப்பில் உடலை தகனம்  செய்தால் இதை முதல் நாளிலேயே செய்து விடுவார்கள். ஆனால் மயானத்தில் விறகு அடுக்கி விறகை எரித்து தகனம் செய்தால் அதை இரண்டாம் நாள் அன்று  செய்வார்கள் (இதன் தாத்பர்யத்தை பாகம் 4, பத்தி 59 மற்றும் பாகம் -5, பத்தி 65ல் ஏற்கனவே விளக்கி உள்ளேன்) .

a) கல் ஊன்றுதல் :- சஞ்சயனம் முடிந்ததும் குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன்  ஆசமனம் பண்ணிய பின்   தர்ப்பைப் புல்லை மோதிரம்  போன்று பவித்திரம் செய்து அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த  இடத்துக்கே சென்றுவிட்டு திரும்பும் ஜீவனை சாஸ்திரிகள் மந்திர சக்திகள் மூலம் அங்கேயே அவர்களால் பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அந்தக் கல்லின் முன்னால் தினமும் சில  சடங்குகளை செய்வார்கள் (இதன் தாத்பர்யத்தையும் பாகம்-4,  பத்தி 61 & 62 ல், மற்றும்  பாகம்-6 பத்தி  84, 91, 91ல் விளக்கி உள்ளேன் ).


b) தினமும்எள்ளும் தண்ணீரும் விட்டு பிண்டம் போடுதல்:-  அந்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் தர்பை மூலம் எள்ளு கலந்த தண்ணீரை ஊற்றியும், அங்கேயே சமைத்த வெள்ளை சாதத்தையும் (அதை பிண்டம் என்பார்கள்) போட்டு அந்தக் கல்லையே உயிருடனான ஜீவாத்மாவாக கருதி அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள்.  அவைகளையே வாஸ உதகம், தில உதகம், பிண்டம் போடுதல் என்பார்கள்.  பிண்டம் போடுவதை இறந்தவரது மகள்கள் செய்ய வேண்டும் என்பது  விதியாகும். அப்படி மகள் இல்லை என்றால் வீட்டில் உள்ள மருமகள் செய்ய வேண்டும். அதற்கான பிண்டத்தை தயாரிக்க அவள் அந்தக் கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கு அடுப்பு மூட்டி சாதம் வைக்க வேண்டும். சாதம் வெந்ததும், பிண்டத்தைப் பிடித்துப் போட வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் அவள் ஈரப் புடவையுடனேயே  செய்ய வேண்டும் என்பது நியமனம். அது ஏன்?

c) இதற்கும் ஓரளவுக்கு விஞ்ஞான அடிப்படைக் காரணம் உள்ளது. மன வேதனையில், துக்கத்தின் விளைவாக ரத்தம் கொதிப்படைந்து உடல் சூடாகவே இருக்கும்.  கர்மாக்களை செய்யும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஈரத்துடன் இருக்கையில் உடலின் சூடு குறையும், எண்ண அலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதினால் இதை ஒரு விதியாக வைத்து உள்ளார்கள்.

d) மேலும் பண்டை காலங்களில் நதிக்கரையில் அல்லது வேறு நீர் நிலைகளில் கர்மாக்களை செய்வார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள நதியில் குளித்து விட்டு  அங்கு காரியங்களை செய்வார்கள். ஆகவே நதி அல்லது நீர் நிலைகளில் குளித்தப் பின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மாற்றுத் துணியையும் நனைத்து விட்டு  காய வைத்து அதை உடுத்திக் கொண்டு காரியத்தை துவக்க   கால தாமதம் ஏற்படும்.  அந்த நேரத்தில் இன்னும் துணி காயவில்லையே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டு மனமும் காரியத்தில் நிறைவாக ஈடுபடாமல் உடைகள் மீது கவனத்தை வைத்திருக்கும். வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை  நனைக்காமல் மாற்றிக் கொள்வது  கூடாது. ஏன் என்றால் தீட்டு வீட்டில் இருந்து எடுத்து வந்த துணிகளை உடுத்திக் கொண்டு தீட்டோடு காரியங்களை செய்யக் கூடாது.  உடைகளை மாற்றிக் கொள்ள மறைவிடங்களும் இல்லாத காலம் அது. கர்மாக்களை செய்யும்போது மனக்கட்டுப்பாடு தேவை. ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஈரப்புடவையுடன் சடங்கை செய்ய வேண்டும் என்ற விதி வைக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்திலேயே   இவற்றை எல்லாம் எத்தனை ஆழமாக சிந்தித்து விதியாக வைத்துள்ளார்கள் என்பதைக் காணும்போது வியப்பாகவே உள்ளது. 

e) பிண்டம் போடும் இடமே மந்திர சக்திகளினால் ஆன புனிதமான இடமாக, தெய்வீக பூமியாக இருக்கும். ஆகவேதான் அங்கு தர்பை புல்லையும் போட்டு வைத்து இருப்பார்கள். தர்பையைப் பயன்படுத்தாத சடங்குகளே கிடையாது (இதன் தாத்பர்யத்தையும் பாகம்-4, பத்தி 61 & 62 ல் மற்றும்  பாகம்-6 பத்தி 84, 87 மற்றும் 92 ல் விளக்கி உள்ளேன்).

f) ஆகவே இப்படியாக  தர்பை மூலம் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஆத்மா உண்டதும் அங்குள்ள பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கும்  ஏற்ப ஆகாரமாக அவற்றை மாற்றி தேவலோகத்தில் உள்ள அவர்களுக்கும் கொண்டு சென்று கொடுத்து அவர்களை திருப்தி அடைய வைக்கிறது.  இவை அனைத்தும் கண்களுக்கு தெரிவதில்லை, ஆனால் மானசீகமாக உணர வேண்டியவை ஆகும்.

g) இந்த சடங்குகளுக்கு எள்ளையும் தர்பைப் புல்லையும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்? வேறு தான்யங்களை ஏன் பயன்படுத்துவது இல்லை என்ற கேள்வி  எழலாம்.

h) எள் என்பது திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றியதாக கருதப்படுவதினால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். எள்ளிலும்  கருப்பு எள், வெள்ளை எள் இரண்டு வகை உண்டு. எந்த எள்ளை பயன்படுத்தினாலும் பலன் ஒன்றே என்றாலும் சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் அது பிதுர் தேவர்களை அதிக சந்தோஷப்படுத்தும் என்பார்கள். கருப்பு எள் வராஹ மூர்த்தியிடம் இருந்து தோன்றியதாக கூறுவார்கள். அதனால்தான் எள்ளை தண்ணீருடன் கலந்து சமர்பிக்கையில், பித்ருக்களின் பசியைப் போக்கி திருமால்  வாழும் இடமான வைகுண்டலோகத்துக்கு இறந்தவர்களது ஆத்மாக்களை அனுப்பி வைப்பதாக ஐதீகம் உள்ளது  என்று  பண்டிதர்கள் கூறுவார்கள்.


i) அதைப் போன்ற தெய்வீக மகிமை பெற்றதே தர்பைப் புல்லும் ஆகும். தர்ப்பைப் புல் என்பது முதலில் ஆகாயத்தில் தோன்றியது என்றும் அந்த தர்பைப் புல்லின் அடிப் பகுதியில்  பிரஹ்மாவும், நடுப்பகுதியில் திருமாலும் நுனியில் சிவபெருமானும் வசிப்பதாகவும் அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும் புராண ஐதீகம் உண்டு.  இதனால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும்.  இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள் என்பது இதனாலும் வைக்கப்பட்டு உள்ள விதி முறை ஆகும். தர்பையில் காந்த  சக்தி  என்பதினால் அது அதை கையில் வைத்துள்ளவர்களுக்கு பிராண சக்தியைத் தருகிறது. அதனால்தான் நாம் சடங்குகள் செய்யும்போது இழக்கும் பிராண சக்தியை அதிகரிக்கவும் அதை பயன்படுத்துகிறோம்.  தர்பையின் மேன்மையை குறித்து மாபெரும் முனிவர்களான மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வியாசர், பரத்வாஜர், யாக்ஞவல்க்யர்,  ஆபஸ்தம்பர் போன்றவர்கள் நிறையவே கூறி உள்ளார்கள். வேதங்களிலும் தர்பையின் மகிமையைக் கூறி உள்ளார்கள். அந்த முனிவர்கள் தர்பைப் புல்லை சமுஸ்கிருத மொழியில் குசம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.


j) சரீரத்தை விட்டு வெளியேறிய ஆத்மாவானது தகனத்துக்குப் பின்னர் அடுத்த ஒன்பது நாட்களும்  ஆத்ம சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. அதனால்தான் அந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை அடக்குவதற்காக ஒன்பது நாட்களும் எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் செய்து , பிண்டத்தையும் போட்டு சடங்கு செய்கிறார்கள். அப்போது அந்த ஆத்மா பிரேத உடலைப் பெறுகிறது (இதன் தாத்பர்யத்தையும் பாகம்-6, பத்தி  86 & 87 ல் விளக்கி உள்ளேன்).

k) ஜீவனுக்கு சரீரமே இல்லை எனும்போது அவை எப்படி பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும்?  இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஜீவ அணுக்கள் உண்டு. காற்றில் உள்ள அதன் ஜீவ அணுக்கள் நம்மை உரசிக் கொண்டு செல்லும்போது அதை காற்று என்று உணர முடியுமே தவிர அதை வாசனை என்று உணர முடியாது. ஏன் என்றால் அந்த ஜீவ அணுவின் தன்மை அது.  அதைப் போலத்தான் ஒலி , வாசனை, ஒளி, பார்வை என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஜீவ அணு உள்ளது. அதன் மூலமே நம்மால் அவற்றின் தன்மைகளை உணர முடிகிறது. இப்படியாக உள்ள நிலையில் பிரேத ஆத்மாவாக உள்ள ஜீவன் பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் எப்படி குடிக்க முடியும் என்ற கேள்வி எழத் தேவையே இல்லை.

l) மனித உடலுக்குள் உடல் சார்ந்த (Physical)உணவு புகுந்து சென்று வயிற்றில் அமர்ந்ததும்தான் பசி அடங்கும், தண்ணீர் தாகத்தை அடக்கும்.  ஆனால் பிரேத உடலுக்கு பசியை அடக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் உடல் சார்ந்த பொருள் தேவை இல்லை. அதனால் உடல் சார்ந்த பொருளை உண்ணவோ குடிக்கவோ முடியாது. ஆனால் அதே சமயத்தில் அந்த உடல் சார்ந்த பொருட்களான பிண்டம் மற்றும் எள்ளும் தண்ணீரும் வெளிப்படுத்தும், நமது கண்களுக்கு தெரியாத ஜீவ அணுக்களை அவை ஸ்வாசித்து அவற்றை தன்னுள் கிரகித்துக் கொள்ளும் நிலையில் பிரேத உடலின் உணர்வுகள் திருத்தி அடைகின்றன.  மனித உடலுக்கு உடல் சார்ந்த பொருள் தேவை, பிரேத உடலுக்கு உடல் சார்ந்த பொருட்களின் ஜீவ அணுக்களின் ஸ்பரிசம் மட்டுமே தேவை.  இதுவே இந்த சடங்கின் தாத்பர்யம் ஆகும்.

m) இவை அனைத்தையும் நித்ய  விதி என்பார்கள். கல் ஊன்றிய நாள் முதல் அனுதினமும் வாஸோதகம், திலோதகம் பிண்ட ப்ரதானம், ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம், நவச்ராத்தம் போன்ற  காரியங்கள் அனைத்தும் கர்த்தாக்களால் செய்யப்படுகின்றன. இந்த காரியங்களை அடுத்த நாளே துவக்க முடியாமல் போய்விட்டால் அவை அனைத்தையும் 3,5,7, அல்லது 9 தாவது நாளில் துவக்கி அதற்கு முன் விட்டுப் போன அத்தனை நாட்களின் கர்மாக்களையும் சேர்த்து ஒரே நாளில் செய்து முடிப்பார்கள்.

104)  பத்தாவது நாள் சடங்கு : தசாஹம் :-

பத்தாம் நாள் அன்று பண்ண வேண்டிய கர்மாக்கள் : பங்காளி தர்ப்பணம்(குழி தர்ப்பணம் என்பார்கள்), நித்தியவிதி, ப்ரபூத பலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம், சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடல் போன்றவை ஆகும். 

a) ப்ரபூத பலி என்பது  சாதம், அடை, உருண்டைகள் மற்றும் அகத்திக் கீரை போன்றவற்றை ஜீவாத்மாவாக உள்ள ஊன்றிய கல் முன்னால் கொட்டுவதாகும்.  இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம்.

b) இறந்தவருக்கு மனைவி இருந்து அவர் உயிருடன் இருந்தால் அவளும் ப்ரபூத பலி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒரு புதுப்புடவை வாங்கி அதை அவள் மீது சகோதரர்கள் போட வேண்டும். கையில் தரக் கூடாது. அதை புடவைப் போடுவது என்பார்கள். அதற்குப் பிறகு அவள் அப்படிப்பட்ட  பட்டுப் புடவைகளை அணியாகக் கூடாது என்பதற்காக கடைசியாக அவளுடைய வீட்டினரால் சம்பிரதாயமாக தரப்படுவதாம் அந்த புடவை. ஆனால் இந்த சடங்கு  ஒரு ஆன்மீக போதனைக்காகவே வைக்கப்பட்டு உள்ள சற்றே மூடத்தனமாக உள்ள இந்த சடங்கிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. இந்த சடங்கிற்குப் பின் கணவனை இழந்த பெண்ணிற்கு என்ன நிலைமை ஏற்படுகிறது தெரியுமா?

c) பண்டைக் காலத்தில் கணவரை இழந்த பெண்கள் அன்று முதல் விதவையாகக் கருதப்பட்டதினால் அவர்கள் அன்றைய தினம் தாலியை அறுத்துக் கொண்டு, தலைமுடியை வழித்துக் கொண்டு, வெள்ளைப்  புடவையை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த வண்ணப் புடவைகளையோ, நகைகளையோ அணிந்து கொள்ளக் கூடாது என்றும், விதவையானப் பின் வெளியில் செல்லக் கூடாது, விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது  என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள்.  அதற்கு அடிப்படைக் காரணம்  விதவைகள் ஆன பெண்கள் உலக சுக போகங்களில் மூழ்கி  காம இச்சை கொண்டு அலையக் கூடாது, தமது இறுதி வாழ்நாள்வரை ஆன்மீகத்தில் இருந்து கொண்டு பக்தி மார்கத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சடங்கு முறை ஆகும். ஆனால் தற்காலத்தில் பல குடும்பங்களில்  இந்த சடங்குமுறை  இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் விதவையான பெண்கள் தமது தலைமுடியை வழித்துக் கொள்வதில்லை, வெள்ளைப் புடவைகளை மட்டும் அணிந்து கொள்வதில்லை, நகைகளையும் அணிகிறார்கள், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். அனைத்து விழாக்களிலும் கலந்தும் கொள்கிறார்கள். ஆகவே இந்த சடங்கு தார்மீக அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். 

d) பத்தாம் நாள் சடங்கு அன்று   இறந்தவரின்  பங்காளிகள் இருந்தால் அவர்கள் அங்கு வந்து பத்து தினங்களுக்கான தர்ப்பணம் செய்ய வேண்டும். பண்டைக் காலத்தில் இறந்தவர்களின் பங்காளிகள் நதி மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள். அந்த நீர் நிலையில் இறந்தவர்களது சாம்பலும் கரைக்கப்படும். அப்படி கரைக்கப்படும் சாம்பலானது அந்த நீர் நிலையில் கரைந்து விடும்போது இறந்து போன அந்த ஜீவனின் அணுக்களும் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த நீரில் பயணித்துக் கொண்டு இருக்கும். இந்த நிலையில் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்  செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்றும்போது அந்த தர்ப்பண நீரும் அந்த ஜீவனின் அணுக்களை சென்றடைவதால் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த ஜீவனின் அணுக்கள் மூலம் அதை ஆவாஹிக்கும் ஜீவன்களின் தாகம் அடங்கும் என்பதான ஐதீகம் உண்டு. அதனால்தான் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில்தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்  செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்ற வேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருந்தது.

e) ஆனால் அனைத்து இடங்களிலும் நதிகளும் நீர் நிலைகளும் இருப்பது இல்லை. அதனால்தான் பண்டை காலத்திலும் கூட நதிக்கரை, கடற்கரை இல்லாத பல இடங்களில் பூமியிலே சின்ன குழியை தோண்டி பூமாதேவியிடம் அந்தக் குழியிலே ஊற்றப்படும் தர்ப்பண நீரை அவள் உடலுக்குள் (பூமிக்குள்) ஓடும் நதியுடன் சென்று கலந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டு செய்யப்படும் சடங்காக அதை வைத்திருந்தார்கள். அதன் விளைவாக பண்டை காலத்திலும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழி  தர்ப்பணம் செய்யலாம் என விதி அமைத்தார்கள்.

குழி  தர்பணம்

f) குழி தர்ப்பணம் என்பது என்ன? கர்மா நடைபெறும் இடத்தில் வந்து தர்ப்பணம் செய்யும் பங்காளிகள் அந்த இடத்தில் கொட்டப்பட்ட மண் தரையில் சின்ன குழி போல கையால் தோண்டி வைத்து அந்த குழிக்குள் எள்ளும் தண்ணீரும் கலந்து விடுவார்கள். கர்மா நடைபெறும்  இடத்தில்  குழி செய்து அதில் எள்ளும் தண்ணீரும் ஊற்றியதும்   அங்கேயே அது  பூமியிலே ஊடுருவி அதே பூமிக்குள் இருந்து வெளிவரும் நதி, கடல், குளம், நீர் நிலை அனைத்திலும் கலந்து  விடுவதாகவும், ஆகவே அந்த ஜீவனின் அணுக்கள் நீர் நிலை மூலம் எங்கு பாய்ந்து சென்று இருந்தாலும் அங்குள்ள அந்த ஜீவனின் அணுக்கள் மூலம் இறந்தவரது ஜீவனின் தாகத்தை தர்ப்பண நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

g) அப்படி என்றால் அந்த நீரில் உள்ள மற்ற ஜீவன்களின் அணுக்கள் அந்த தர்ப்பண  நீரை ஆவாஹிக்காதா  என்றால், அது முடியாத ஒன்று என்பதே ஆன்மீக ரீதியிலான பதில் ஆகும்.  காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட ஜீவ அணுக்கள்  அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும் என்பது விசித்திரமான தெய்வ நியதியாம். 

h) தர்ப்பணத்தில் தண்ணீர் ஊற்றும்போது அதை வலது கை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் இடுக்கு வழியே ஊற்றுகிறோம். ஒவ்வொருவரது கையிலும் வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே உள்ள  இடைப் பகுதியில் ஓடும்  ரேகைகளை பொதுவாக பித்ரு பூம்ய  ரேகைகள் என்பார்கள். பங்காளிகள் மந்திரங்களை ஓதி ஊற்றும்  தர்ப்பண நீரானது  அவர்களது கைகளில்  உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியே  ஓடிச் செல்லும்போது அந்த கைகளின் ஸ்பரிசங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அது பித்ருக்களுக்கான நீராக மாறி விடுமாம்.  அதனால்தான் ஜீவ அணுக்கள் அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும்  என்ற தெய்வ நியதி  நியாயமாகவே உள்ளது.
  
 ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளில் 
உள்ள ரேகைகள் மீது இருந்து வெளியேறும் 
பித்ரு  நீரின் ஸ்பரிசம் வேறுபட்டு இருக்கும் 
என்பதை விளக்கும் படம் 

i)  அதன்  பின் அனைவரும் அங்கேயே குளித்து விட்டு ஆனந்த ஹோமத்தில் பங்கேற்பார்கள்.   

j)  அதை செய்வதற்கு முன்னால் பத்து நாட்களுக்கு  முன் ஆவாஹனம் செய்து பூமியிலே ஊன்றிய கல்லை மீண்டும் யதாஸ்தானம் செய்து வெளியில் எடுத்து விடுவார்கள். அதாவது அங்கு  வாசம் செய்து கொண்டிருந்த ஜீவனை வெளியில் எடுத்து விடுவார்கள் என்பதான ஐதீகம் ஆகும்.

k) பத்தாவது தினத்தன்று யதாஸ்தானம் செய்து வெளியில் எடுக்கப்பட்ட ஆத்மாவானது கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் எடுக்குமாம். அதன் பின்னரே சூட்சும சரீரம் எடுத்த அந்த ஆத்மாவானது யமதூதர்களுடன் யமலோகத்துக்கு பயணத்தை துவக்குமாம். அந்த பயணத்துக்கு வழிவகுக்கும்  நிலையை ஏற்படுத்தவே யதாஸ்தானம் எனும்  சடங்கு செய்து  அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம். அங்கிருந்து பயணிக்கும் ஆத்மாவின் கதை கிரேக்கிய தினத்தில் கூறப்படும். அதை  பாகத்தில் விளக்கி உள்ளேன். 

l) கடைசியாக சாந்தி ஹோமம் செய்தபின்  பூர்ணாஹூர்த்தி காட்டிவிட்டு ப்ரபூத பலி - அரிசியினால் ஆன சாத உருண்டை, கீரை மற்றும் அப்பம் போன்றவற்றை- அங்கு கல்லின் முன் போடுவார்கள். ஆனால் இந்த வரிசைகிரமம் சில குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும் என்பதினால் அதை பண்டிதர்கள் கூறுவது போல செய்து முடிக்க வேண்டும்.

m) பத்தாம் நாளன்று முதல் நாள் அன்று இரவு உப்பில்லாமல் சமைக்கப்பட்டு அங்கு எடுத்து வந்துள்ள உணவை இறந்தவரின் பங்காளிகள் 'உப்பில்லாத சாப்பாடு'எனும் பெயரில் போடுவார்கள். அந்த உப்பில்லாத உணவை பெற்றுக் கொள்ளும் ஜீவனானது, ஐயோ இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதை விட வேறெங்காவது போய்  விடலாம் என்று உலக பந்தத்தை அறுத்துக் கொண்டு செல்லும்   மன நிலையை அதற்கு அளிக்கும் என்று இந்த சடங்கை வைத்து உள்ளார்கள்.

n) அனைத்தும் முடிந்தப் பின் வந்துள்ள உறவினர் அனைவருக்கும் உணவு அளிப்பார்கள்.  அன்று தீட்டு விலகி விட்டதாக ஐதீகம் உண்டு. அன்று சாரு சம்பாவனை என்பதையும் செய்வார்கள். அப்பம் மற்றும் பொறி போடுவார்கள். அன்று குடும்பத்தினருக்கு விலகி விட்டதாக கருதப்படும் தீட்டு மறுநாள் மீண்டும் வந்து சேரும் என்பார்கள்.

105)  11 ஆம்  நாள் கர்மாக்கள் :-  இறந்த 11வது நாளில் செய்வது ஏகோதிஷ்டம் என்று பெயர் பெறும். அன்று செய்யப்படும் கர்மாக்கள்:-
 
a) யஜ்யோபவீத தாரணம் புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், அவ்ருத்தாத்ய மாஸிகம்  போன்றவை ஆகும்.

b) பதினோராம் நாளன்று நடைபெறும் இன்னொரு முக்கியமான சடங்கு 'ஒத்தன் சாப்பாடு'என்பதாகும். அன்றைய தினம் ஒத்தன் எனப்படும் ஒரு புரோகிதரை அழைத்து வந்து அவரையே உப்பில்லாத உணவை அங்கேயே தயார் செய்து அதையே  உண்டு விட்டு செல்லுமாறு கூறுவார்கள். மீதி இருந்தால் அதை அவர் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டுமாம்.  அவருக்கு  தட்ஷணையும் உண்டு. அவர் போகும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாதாம். இதுவும் ஒரு முக்கியமான சடங்காம். அப்படி செல்பவரையே பிரேத மனிதர் என்பார்கள்.

106) 12 ஆம்  நாள் கர்மாக்கள் :-  அன்றைய தினம் செய்ய வேண்டிய கர்மாக்கள் புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம் போன்றவை ஆகும்.


a)  11-ஆம் நாள் வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஆத்மாவானது பன்னிரண்டாம் நாளன்று பித்ருக்களின் ரூபத்தை அடைந்து அவர்களுக்கு முன்னால் மரணம் அடைத்துவிட்ட பித்ருக்களுடன் ஒன்று சேர்வதாக ஐதீகம் உண்டு. அன்றைய தினத்தன்று சவுண்டி சாப்பாடு என்ற சடங்கும் நடைபெறும்.   அந்த சவுண்டிக்கு வீட்டினர் சமைத்த உணவைப் போடுவார்கள். ஆனால் அவர் போகும் போதும் அவரை எவரும் பார்க்கக் கூடாதாம்.
 
b)  இதில் முக்கியமான கர்மா ஸபிண்டீகரணம் என்பதாகும். இந்த கர்மா மூலம் இறந்தவருக்கு முன் மாண்ட அவருடைய மூன்று தலைமுறையினரின் பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது சபிண்டீகரணம்.

 சபிண்டீகரணம்

ஆனால் பிரேதத்துவம் பெற்றதும் அந்த ஆத்மா அடுத்த பிறவி எடுக்கும் என்பதல்ல அதன் அர்த்தம். அந்த பிரேத ஆத்மாக்கள் யமலோகத்துக்கும் போகாமல், சொர்க்க லோகத்துக்கும் போகாமல் யமதர்மனின் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு கிடைக்க உள்ள  தண்டனை மற்றும் பிரதிபலன்களை எதிர்பார்த்தவண்ணம் யமலோகத்தில் உள்ள யமராஜனிடம் சரணடைய பயணித்துக் கொண்டு  இருப்பார்கள். அதன் பயணம் முடிவுற  ஒரு வருட காலம் ஆகுமாம்.

c) ஆகவேதான் அந்த ஜீவன்கள்  நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக அந்த பித்ரு ஆத்மாக்களுக்கு அந்த ஒரு வருட காலத்துக்குள் செய்ய வேண்டிய பதினாறு ஸ்ரார்தங்களை  ஒரே நாளில் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு முக்கியமான காரணமும் உள்ளது. ஒரு வருடத்தில் அந்தந்த குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தை ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் கர்த்தாவினால் செய்ய முடியாது போய் விட்டால், அந்த பாவம் கர்மாவை செய்பவருக்கு போகாது. மாறாக எந்த ஜீவனுக்காக அந்த ஸ்ரார்தம் செய்யப்படுமோ அதற்கு போய் சேரும். அதனால் அது படும் வேதனையின் விளைவாக, அந்த ஜீவனின் குடும்பத்தினர் மன வேதனைகளை அடைவார்கள் என்பது தெய்வ நியதியாம். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே  ஒரே நாளில் அந்த பதினாறு ஸ்ரார்தங்களை முறையாக, நியதிப்படி செய்வதின் மூலம் யமதர்மதேவர் அந்த ஜீவன்களுக்கு கிடைக்க உள்ள தண்டனைகளின் கடுமைகளைக் குறைப்பார் என்பது நம்பிக்கை.

 
d) பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்ய முடியாது என்பதினால்தான் பன்னிரண்டாம் நாளன்று பதினாறு அந்தணர்களுக்கு அரிசி, வாழைக்காய் போன்றவற்றுடன் தட்ஷணயையும் சேர்த்து கொடுத்து அந்த குறிப்பிட்ட கர்மாவை செய்து முடிக்கிறார்கள். இதை சோடசம் என்று கூறுவார்கள். சோடசம் என்றால் பதினாறு என்பது பொருள் ஆகும்.
 
e) இறந்தவரை நேரடியாக பித்ருவாக பாவித்து முதன்முதலாகச் செய்யப்படும் ஸ்ரார்தமான ஸோதகும்பம் எனப்படும் சடங்கையும் பன்னிரண்டாம் நாள் செய்து ஒரு பிராமணருக்கு போஜனம் செய்விப்பார்கள். 

107) 12 ஆம் நாள் கர்மாக்கள்:-பதிமூன்றாம் நாளன்று வீட்டின் அனைவருக்கும் உள்ள தீட்டு காலம் முடிந்து விடும். குடும்பத்தினர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள்.  அன்று ஹோமம் செய்து அந்த ஹோம ஜலத்தை வீடு முழுவதும் தெளித்து வீட்டையும் சுத்தமாக்குவார்கள். இதை சுபஸ்வீகாரம் என்று கூறுவார்கள். சுபஸ்வீகாரத்தின்  அன்று  மாலை சாஸ்திரிகள் இறந்தவரின் ஆத்மா பயணிக்கும் கதையைக் கூறுவார். அவர்கள் கூறுவது கருட புராணத்தின் அடிப்படையில் அமைந்துள்ள கதையாகவே இருக்கும். கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள அந்தக் கதை என்ன ?
 ..............தொடரும் 

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 8

$
0
0
 --சாந்திப்பிரியா --
8

108) கிரேக்கியத்தின் அன்று பண்டிதர்களினால் கூறப்படும்  பொதுவான கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து  உள்ளது.  அந்தக் கதை இது : -


109) பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது பல ஜீவன்கள் படைக்கப்பட்டது. அதில் ஒன்றாக மானிட பிறவியும் படைக்கப்பட்டது. பல்வேறு பிறவிகள் பூச்சி, புழு, மரம், செடி, கொடி, மிருகங்கள் என படைக்கப்பட்ட அனைத்திலும் சிறந்தது மானிடப் பிறவியே ஆகும். எல்லா உயிரினங்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி என்ற அனைத்து இயக்கமும் இருந்தது. ஆனால் மானிடர்களுக்கு மட்டுமே ஞானம் என்கின்ற இன்னொரு இயக்கமும் தரப்பட்டது. இந்த பூமியிலே மானிடப் பிறவி எடுத்தவர்கள் மட்டுமே  சொர்கத்தையும் மோட்ஷத்தையும் அடைய இயலும். மற்ற பிறவிகள் அனைத்துமே முன் பிறவிகளில் அவரவர்கள் செய்திருந்த  பாவங்களினால் அந்த பிறவி  எடுத்திருந்தவர்கள் ஆவர்.  பூச்சி, புழு, மரம், செடி, கொடிகள், மிருகங்கள் என்ற அந்த பிறவிகளுக்கு சொர்க்கம் மோட்ஷம் என்பதெல்லாம் கிடையாது.  அந்தப் பிறவிகள் எடுத்திருந்த அவை ஜீவனை இழந்ததும் அடுத்து என்ன பிறவி எடுக்க வேண்டுமோ அதுவாக பிறப்பார்கள். அவர்களுக்கு யமலோக தண்டனைகள் என்பதெல்லாம் கிடையாது. 

110) அனைத்து பிறவிகளிலும் மானிடப் பிறவியே சிறந்தது என்றாலும் மானிடனாக பிறந்தவர்களில்  மண், பெண், பொன் ஆசை போன்றவற்றைக் கொண்டவர்கள், அதர்ம வழி நடந்து,சுயநலக்காரனாக இருந்து தீவினைகளைச் செய்தவர் போன்றவர்கள் நரகத்தை அடைகின்றனர். எனவேதான்  கல்வியும், வித்தையும் கற்றவனையும் கூட முடிந்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பார்கள். அந்த ஞானமே தீமைகளை  அழிக்க உதவுகின்றன. ஆனால் அந்த ஞானத்தைப் பெறுவதற்கு  நன்மைகளை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

111) ஆகவேதான் பெரியவர்கள் கூறுவார்கள்  பிறந்த ஒவ்வொருவரும்  தமது வாழ்விலே நல்ல காரியங்களையும் புண்ணியக் காரியங்களையும் செய்தபடி இருக்க வேண்டும். ஒவ்வொரும் இந்த மானிட வாழ்வில் செய்த பாவ புண்ணியங்களே அவர்களது மரணத்துக்குப் பின்னும் அவர்களுடன் தொடர்ந்து  செல்லும் என்பதே அதன் காரணம். எனவேதான் தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தான தர்மங்கள் செய்வது, முக்திக்கு வழி வகுக்கும்.

112) தாம் பிறந்த பூமியிலே எத்தனை நாட்கள் வாழ்ந்திருந்தாலும்  பிறந்தவர்கள் என்றாவது இறப்பது நிச்சயம், இந்த பூமியிலே பிறந்த எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதல்ல என்பதை எவருமே  நினைத்துப் பார்ப்பது இல்லை. இந்த பூமியிலே பிறந்து இறந்தவர்களது உயிர்களை பிடித்துக் செல்லும் எமன் யாரையும் விட மாட்டார் என்ற உண்மையை  மனிதன் உணர்ந்து கொண்டால் அந்த பயத்திலாவது அறநெறிப்படி வாழ்ந்திடுவான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அந்த நன்னெறிக் கர்மாக்களே அவனை இறந்த பின்னரும் காப்பாற்றும்.  தனக்குரிய கர்மங்களை எவன் ஒருவன் முறைப்படி  செய்கிறானோ, அவனே எல்லா விதத்திலும்  மேன்மையடைவான்.   பிறப்பே கர்ம வினையினால் உண்டானது என்பதினால் மீண்டும் இந்த பூமியிலே பிறவாமலிருக்க நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்.
 
113) ஒருவர் இறந்த பின் அவர்களது உடலில் உள்ள ஆத்மா கட்டை விரல் அளவுக்கு சுருங்கி அதற்கு  கர்மா செய்து முடிக்கப்படும்வரை வான்வெளியில் மிதந்தவாறு இருக்கும். யமதர்ம ராஜன் ஒவ்வொருடைய ஆயுட்காலமும்  முடிந்ததும் அந்த ஜீவனைப் பிடித்து வரும்படி மூன்று  யமதூதர்களை அனுப்பி வைப்பார்.  அவர்களும் இறந்து போனவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை  யமதர்ம தேவர் முன் கொண்டு சென்று  நிறுத்தியதும், யமதர்மரோ அவர்களது கணக்கு வழக்குகளை  ஆராயுமாறு சித்ரகுப்தரிடம் கூறி விட்டு, மீண்டும் அந்த ஆத்மாவை பூமியிலே கொண்டு சென்று  அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்யும் பன்னிரண்டு நாட்கள் கர்மாவில் கலந்து கொள்ள வைத்தப் பின் தம்மிடம் அழைத்து வருமாறு தூதர்களிடம் கூறுவார். அந்த பன்னிரண்டாவது நாளன்று சித்ரகுப்தரிடம் இருந்து பாவ புண்ணிய கணக்குகள் யமராஜரிடம் வந்து விடும். அவற்றை ஆராய்ந்து  பூமியிலே அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்த கர்மாவின் பலனுக்கு ஏற்ப கணக்குகளை  மாற்றி அமைத்துக் கொண்ட பின் அந்த ஜீவனை சொர்கத்துக்கோ  அல்லது நரகத்துக்கோ அனுப்பி வைக்க முடிவு செய்வார். 

114) யமகிங்கர்கள் அனைத்து ஆத்மாவையும் ஒரே மாதிரி அழைத்துச் செல்வதில்லை. வேத சாஸ்திர புராணங்களை கற்றறிந்திருந்தவர்களின் ஆத்மாவை தேவ விமானத்தில் ஏற்றிக் கொண்டு தேவலோகத்துக்கு  செல்வார்கள். தான தர்மங்களை செய்தவர்களின் ஆத்மாவை தேவகுதிரை மீது ஏற்றி  தேவலோகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். சொர்கத்துக்கு செல்பவர்கள் வழி நெடுக  தேவலோகத்தில் அங்குள்ள மனதுக்கு இதமான காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்வார்கள். தெய்வங்களைக் காண்பார்கள். அப்சரஸ்களையும் அவர்கள் ஆடும்  அற்புதமான நடனங்களையும்  கண்டு  களிப்பார்கள்.

சொர்கத்துக்கு  செல்லப்படும் ஜீவன்கள் 
தேவலோகத்தில் வழி நெடுக   மனதுக்கு இதமான 
காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்வார்கள்
115) தம்மிடம் அழைத்து வரப்பட்ட ஜீவன்களை பூமியிலே கொண்டு சென்று  அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்யும் பன்னிரண்டு நாட்கள் கர்மாவில் கலந்து கொள்ள வைத்தப் பின் தம்மிடம் அழைத்து வருமாறு தூதர்களிடம் யமதேவர்  கூறியதும் அந்த ஜீவனை  யம தூதுவர்கள் அங்கிருந்து பன்னிரண்டு நாட்கள் நடைபெறும்  கர்மா நடைபெறும் பூமிக்கு  அழைத்துச்  சென்று அதன் கட்டுக்களை அவிழ்த்து விட்டப் பின் அந்த ஆத்மாவின் கர்த்தாக்கள்  செய்யும் கர்மாவின் பலன்களை எழுதி வைத்துக் கொள்ள அங்கேயே தங்கி இருப்பார்கள் (இந்தக் கதை ஆத்மாக்கள்  வஸூக்களிடம் முதலில் ஒப்படைக்கப்படும் என்பதாக கூறப்பட்டிருக்கும் பிற புராணக் கதைகளில் இருந்து மாறுபட்டு உள்ளது).

116) யமகிங்கரர்களால் அவிழ்த்து விடப்பட்ட ஜீவன் சுடுகாட்டில் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று திரும்பவும் உடலுக்குள் புக முடியாதவாறு தீப்பற்றி எரியும் உடலைப் பார்த்து ஓலமிட்டு அழும். அப்படி அழும் ஜீவன்கள் பாவாத்மாக்களாகவே இருக்கும். ஆனால் புண்ணியம் செய்த ஜீவனோ 'நல்ல வேளை,  இவ்வுடல் எரிந்து ஒழிந்ததே நல்லது'  என்று மகிழ்ச்சி அடையும்.

117) இறந்து போனவனின் ஜீவனோ அந்த உடலை விட்டு  வெளியேறியதுமே  மீண்டும் உடலுக்குள் நுழைய முடியாமல் போன நிலையில் அது வாழ்ந்த வீட்டின் வாயிலுக்குச் சென்று கதறிக் கொண்டு நிற்கும். கர்மா துவங்கி தகனமும் துவங்க தேகம் முழுவதும் எரிந்து சாம்பலானவுடன் ஜீவனுக்குப் பிண்டத்தாலான பிரேத சரீரம் உண்டாகும். அதையே பிரேத சரீரம் என்பார்கள்.

118) கர்மா தொடங்கிய நாள் முதல் இறந்தவர்களின் கர்த்தாக்கள் சடங்குகளை முறையோடு, பக்தி பூர்வமாக செய்ய வேண்டும்.  அப்படி செய்தால்தான் அந்த ஜீவனுக்கு நல்ல முக்தி கிடைக்கும்.  இறந்தவனின் மகன் அல்லது கர்மாவை செய்பவன் கல் ஊன்றிய நாள் முதல் ஒவ்வொரு நாளும்  போடும் பிண்டத்தால் அடுத்த பன்னிரண்டு நாட்களில்  அந்த ஜீவன் படிப்படியாக தனது பிரேத சரீரத்தை பெற்றுக் கொள்ளும்.

119) பன்னிரண்டு நாட்கள் கர்மா முடிந்ததும்  பதிமூன்றாம் நாள் யமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்படும் ஆத்மாவின் பயணப் பாதை எப்படி இருக்கும்?  ஆத்மா எப்படி பயணிக்கிறது? 

120) பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் செய்யப்பட்ட கர்மாக்களின் மூலம் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பிரேத  சரீரத்தை அடைந்த ஜீவனை, பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் செல்ல, அந்த ஜீவனோ பூமியை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அழுது கொண்டே  யமலோகத்துக்குச் செல்லும். பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், கொதிக்கும் மணல் போடப்பட்டு  இருக்கும் வழியில் அவை செல்ல வேண்டும்.

121) அந்த வழியில் அழைத்துச் செல்லப்படும் ஜீவனின்  துன்பம் சொல்ல முடியாததாகும். அந்த ஜீவன் புலம்பிக் கொண்டே செல்லும். 'வாழ்ந்து கொண்டு இருக்கையில் சர்வேஸ்வரன் இருக்கிறான் என்பதை உணரவில்லை,  நன்றியை செய்தால் சொர்க்கம், தீமைகளை செய்தால் நரகம் என்பதை உணரவில்லை. அது தெரியாமல் சாது சன்யாசிகளை ஏளனம் செய்து அவமானப்படுத்தி இருக்கிறேனே. நல்ல செயல்களை செய்யவில்லை.ஏகாதசி விரதம் இருக்கவில்லை. அவற்றின் பயனை இப்போது  அனுபவிக்கின்றேனே'என்றெல்லாம் புலம்பியவாறு செல்லும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.
 
மூலப் படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka
தீமைகளை செய்தவர்களுக்கு யமலோகத்தில் என்னென்ன 
தண்டனைக் கிடைக்கிறது என்பதை  எடுத்துக் காட்டும் 
மூலப் படத்துக்கு  விளக்கம் அதனதன் அடியில் தரப்பட்டு உள்ளது
 
122) பாவ காரியங்களை செய்தவர்களை கட்டி தரதரவென இழுத்துக் கொண்டு செல்வார்கள். மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் உள்ள தூரம் எண்பத்தாறாயிரம் காத தூரம் ஆகும். அதைக் கடந்து செல்ல ஒரு வருட காலம் ஆகும்.  அந்த  ஒரு வருட காலத்திலும் கர்தாவினால் செய்யப்படும் மாதாந்திர மாசியம், சோதம்பம், தர்ப்பணங்கள் மற்றும் ஆறுமாத கால சிரார்த்தம்  போன்று அனைத்து சடங்குகளையும் முறையோடு, சிரத்தையோடு செய்தால் பாவாத்மாகவே இருந்தாலும் கூட ஒரு வருட காலத்தில் செய்யப்படும் பயணம் அந்த ஜீவனுக்கு  ஓரளவு துயரம் இன்றி இருக்கும். ஆனால் கர்த்தாவினால் அவை அனைத்தும் முறைப்படி செய்யாமல் இருந்தால் அந்த ஜீவனின் பயணம் எப்படி இருக்கும் தெரியுமா ?

123) எந்த ஜீவனுக்கு கர்மாக்கள் முறையாக செய்யப்படவில்லையோ அந்த ஜீவன் யம தூதர்களால் பாசக் கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் வழி எங்கும் உதைப்பட்டுக் கொண்டு செல்லும்.  ஜீவன் தன் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும். தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும். தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது தன்னுடன் வரவில்லையே, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பொன்னையும் பொருளையும் சேர்த்தோம். இப்போது நாம் செய்த தவறினால் நரகத்துக்கு செல்கிறோமே என அலறித் துடிக்கும்.
.............தொடரும்

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 9

$
0
0
 --சாந்திப்பிரியா --
9
கருட  புராணக்  கதை  தொடர்கிறது 

124) அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து 'மனைவி மக்களே அழிவற்றவர்கள்  என்று  நீ  நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே உனக்கு இவ்வுலகில் இன்பம் அல்லது துன்பத்தைத் தரவல்லது. பிறர் பொருளை அபகரித்தல் போன்ற அதர்மங்களை செய்யாமல் தர்மம் செய்து வாழ்ந்திருந்தால் இப்போது இக்கேடு வராதல்லவா?'  என்று பலவாறு இடித்துக் கூறி, அந்த ஜீவனை வழி நெடுக நையப் புடைத்துக் கொண்டே செல்வார்கள். சூறாவளி வீசும் காற்று நிறைந்த வழியில், அடர்ந்த காட்டின் நடுவே கடும் புலிகள் நிறைந்த பாதையில் யமகிங்கரர்களுடன் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்தவரின் கர்த்தாவால் இருபத்தெட்டாம் நாளில் செய்யப்படும் ஊனமாச சிரார்த்த பிண்டத்தை உண்டு முப்பதாம் நாளன்று யாமியம் என்ற நகரத்தை அடைவார்கள்.

125) அங்கு இன்னும் அதிகமாக பிரேதக் கூட்டங்கள் இருக்கும். வழியில்  பத்திரை என்ற நதியும், வட விருக்ஷமும் உள்ளன. சிறிது நேரச் சிரம பரிகாரத்துக்காக யமகிங்கரர்களுக்கு அஞ்சி அவ்யாமியம் என்ற நகரில் தங்கி, இரண்டாவது மாசிய பிண்டத்தை உண்டு, தொடர்ந்து யமகிங்கரர்களால் காடுகளின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு துன்புற்று, அரசன் சங்கமனின் கௌரி நகரை அடைந்து அங்கு தனது கர்தாவினால் செய்யப்படும் மூன்றாம் மாசிக பிண்டத்தைப் புசித்து அப்பால் சென்று வழியில் கடுங்குளிரால் வருந்தும்.

126) யமகிங்கரர்கள் எறியும் கல் மழையால் வருத்தமுற்று குரூரன் என்ற அரசனின் குரூரபுரம் அடைந்து ஐந்தாவது பிண்டத்தைப் பெறும். அடுத்து கிரௌஞ்சம் என்ற ஊரை அடைந்து ஆறாவது மாசிகப் பிண்டத்தை உண்பான். அங்கு அரை முகூர்த்த காலம் ஒய்வு எடுத்துக் கொண்டு பயங்கரப் பாதையில் செல்கையில் பூவுலக வாழ்வை எண்ணி புலம்ப, யம கிங்கரர்கள் அதன் வாய் மீதே அடிப்பார்கள்.

127) அடுத்து இரத்தம், சீழ், சிறுநீர், மலங்கள் நிறைந்த வைதாரணி ஆறு வரும். கோதானம் செய்திருந்தால் படகோட்டி ஒருவனின்  ஜீவன் வந்து அந்த நதியைக் கடக்க உதவிடும். கோதானம் செய்யாதவர் அந்த ஆற்றில் நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும். ஆகவே ஒவ்வொரு மனிதரும் தமது வாழ்நாளில் வைதரணி கோதானம் செய்ய வேண்டும். அல்லது அவன் மரணம் அடைந்தப் பிறகு அவனுடைய வாரிசுகளாவது அதை  செய்து இருக்க வேண்டும்.

128) அடுத்த நமனுக்கு இளையோனான விசித்திரனது நகரை அடைந்து ஊனஷானி மாசிகப் பிண்டத்தை உண்டு, பிறகு அவ்விடம் விட்டுப் புறப்படுகையில், ஏழாம் மாதம் பிண்டத்தை உண்ணும்போது பிசாசுகள் தோன்றி நம்பினவரைக் கெடுத்த ஜீவன் அந்த அன்னத்தை உண்ணத் தகுதியற்றவன் என்று கூறி பலவந்தமாக அந்த பிண்டத்தை பறித்துக் கொண்டு போகும். அதைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் அந்த ஜீவன்  அலறித் துடிக்கும்.
 
மூலப் படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka 
நரகத்துக்கு  அழைத்துச்  செல்லப்படும்  பாவத்மாக்கள்  
எப்படி எல்லாம் கொடுமை செய்யப்படுவார்கள்  என்பதைக் 
காட்டும் படம் இது 
 
129) மானிடப் பிறவி பெற்று இருந்த ஜீவன் தன் வாழ்நாளில் தான, தரும, பூசை முதலிய புண்ணிய காரியங்களை செய்து  இருக்க வேண்டும். அந்த  பிறவியில் செய்யப்படும் நல்வினைத் தீவினைப் பயன்களையே அது இறந்தப் பின் அடையும். அந்த ஜீவன் தன் வாழ்நாளில்  தண்ணீர் நிரப்பிய குடங்களில் இருந்து நீரை எடுத்து தாகித்து இருந்தவர்களுக்கு தந்து  இருந்தால் வழியில் நீரைப் பருகி தாகத்தை தீர்த்துக் கொள்ளும். ஏழாம் மாதத்தில் மீண்டும் பயணத்தைத் தொடரும். யமபுரிக்கான பாதையில் பாதி தூரம் கடந்து விட்டதால் அவனுக்குரியவர் பூவுலகில் அப்போது அன்னதானம் செய்யவேண்டும்.  பிறகு பக்குவப் பதம் என்ற நகரில் எட்டாவது மாசிக தர்ப்பண பிண்டத்தையும், துக்கதம் என்ற ஊரில் ஒன்பதாவது மாத தர்ப்பண பிண்டத்தையும், நாதாக்கிராந்தம் என்ற நகரில் பத்தாம் மாசிக ஊன தர்ப்பண பிண்டத்தையும் உண்பான். அதபதம் என்ற ஊரை அடைந்து பதினொன்றாம் மாத தர்ப்பண பிண்டத்தை உண்டு, அடுத்த சீதாபரம் என்ற ஊரை அடைந்து சீதத்தால் வருந்தி, பன்னிரண்டாம் மாத வருஷாப்திக  பிண்டத்தை உண்டு, அடுத்து வைவஸ்வத பட்டணம் சேரும் முன்பே மீண்டும் ஊனமாச தர்ப்பண பிண்டத்தை உண்டு யமபுரியை ஜீவன் அடையும்.

130) சித்ரகுப்தனின் உதவியாளர்களான பன்னிரண்டு யம கணங்களான சிரவனர்கள் எனப்படுவோர் அங்குதான் இருப்பர். ஜீவன்கள் அந்தப் பன்னிரெண்டு சிரவணர்களையும் ஆராதித்தால், அவர்கள் ஜீவன் செய்த புண்ணியங்களை மட்டும் யமனுக்கு எடுத்துரைப்பார்கள். எனவே அந்தப் பன்னிரு சிரவணர்களை ஆராதித்தல் மறுபிறவி எடுக்கும்போது நன்மை தரும். 

131) இப்படியாக பயணித்துக் கொண்டு இருந்த ஜீவன் கட்டைவிரல் அளவிலான  கர்ம சரீரம் பெற்று சித்திர குப்தனது பட்டணத்தின் வழியாக யமலோகத்தில் நுழையும். யமலோகமோ புண்ணியம் செய்தோர்க்கு மிகவும் அழகாகக் காணப்படும். வாழ்க்கையில் ஈமகாரியங்களில் இரும்பு, உப்பு, பருத்தி, எள்ளுடன் பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்திருந்தால் யமலோகத்தில் உள்ள யம கணங்கள்   காலதாமதம் செய்யாமல் அந்த ஜீவன் வந்திருப்பதை யமதர்மனுக்குத் தெரிவிப்பார்கள். எப்போதும் யமராஜரின் அருகிலேயே இருந்து கொண்டிருக்கும் தர்மத்துவஜன் என்பவர் சித்ரகுப்தர் அனுப்பி வைத்த அந்த ஜீவனின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து  அதில் நல்லவை அதிகம் இருந்தால் அவற்றை யமதர்மருக்கு எடுத்துரைப்பார்.  அந்த ஜீவன் பூமியிலே இருந்தபோது கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு ஆகிய ஏழு வகைத் தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானம் செய்திருந்தால் தர்மத்துவஜன் திருப்தியடைந்து 'இந்த ஜீவன் நல்லவன். புண்ணியம் செய்த புனிதன்'என்று யமராஜரிடம் எடுத்துரைப்பார். பாபம் செய்த ஜீவனுக்கோ அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும்.

படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka 

132) பாவம் செய்தவனுக்கு யமனும், யமதூதர்களும் அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு  காட்சி தருவார்கள். அதைக் கண்டு பாவி பயங்கரமாக ஓலமிடுவான்.  புண்ணியம் செய்தவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமன் முன் சென்றதும்  தேவனாக மாறி தேவருலகம் செல்வான். பாவம் செய்தவனை யமகிங்கரர்கள் யமதர்மராஜன் கட்டளைப்படி நரகத்துக்கு அழைத்துச் சென்று கொடுமைகளை செய்வார்கள். அதன் பின் அந்த ஜீவன் கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவார்கள்.  அந்த ஜீவன் புண்ணியம் அதிகம் செய்திருந்தால் முன்பு போல் மீண்டும் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தான தர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.

133) பூர்வ ஜென்மத்தில் மகாபாவம் செய்தவனே பிரேத ஜென்மத்தை அடைவான். ஒருவன் பெருவழிகளில் கிணறு, தடாகம், குளம், தண்ணீர்பந்தல், சத்திரம், தேவாலயம் பலருக்கும் பயன்படும்படியான தருமத்தைச் செய்து  இருந்தாலும் அவனது குலத்தில் பிறந்த எவராவது ஒருவன் அவைகளை விற்று தனதாக்கிக் கொண்டிருந்தாலும்  அப்படி ஒரு பாவத்தை செய்தவர்கள்  மரணம் அடைந்த பின்  பிரேத சரீரத்தை அடைவார்கள் .

134) பிறருக்கு சொந்தமான பூமியை அபகரித்தவனும், தற்கொலை செய்து கொண்டு இறந்தவனும், மிருகங்களால் தாக்கி இறந்தவனும், ஈமக்கிரியைகள்  செய்ய தன் குலத்தில் ஒருவரும் இல்லாமல் இருக்க வைத்தவனும், தனது  தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமல் இருந்து இறந்தவனும் பிரேத ஜென்மத்தை (சரீரத்தை)பெறுவார்கள். அது போலவே பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ அவர்களும் இறந்த பின் காற்று ரூபமாக பிரேத சரீரத்தை  பெற்று  பசியோடும்  தாகத்தோடும்  தவித்து  திரிவான். அவர்கள் யமலோகத்தில் இருந்து வெளியே துரத்தப்பட்டு பசியோடும், தாகத்தோடும், வெயிலிலும் மழையிலும், கடும் குளிரிலும் அவதிப்படுமாறு அலைய  விடப்படுவார்கள். பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டான். பித்ருக்களின் தினத்தில் பித்ருக்களை அவர்களது  வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும்படி இருக்க சாபமிட்டுக் கொண்டே அலைவார்கள். பிரேத சரீரத்தை  அடைந்தவன் பயங்கரமான முகத்தோடும் வாள் போன்ற பற்களோடும் தன் குடும்பத்தாரின் கனவில் தோன்றி, அயோ! என்னைக் காப்பாற்றுவோர் யாருமில்லையா? பசி தாகத்தோடு இருக்கிறேனே, என் பிரேத சரீரம்  நீங்கவில்லையே என்று கதறுவான்.
 
மூலப் படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka 
நரகத்துக்கு  அழைத்துச்  செல்லப்படும்  பாவத்மாக்கள்  
எப்படி எல்லாம் கொடுமை செய்யப்படுவார்கள்  என்பதைக் 
காட்டும்  இன்னொரு படம் இது
 
135) இப்படியாக இறந்தவர்கள் தவறுகளையே செய்து பாதிக்கப்பட இருந்தாலும், இவை அனைத்தும் இல்லாமல் யமகணங்கள் அந்த ஆத்மாவை நல்ல முறையில் அழைத்துக் கொள்ள யமராஜரை வேண்டிக் கொண்டு திருப்திபடுத்தவே  ஒருவர் இறந்தப் பின் அவர்களுக்கு  நாம் பதிமூன்று  நாட்கள் நல்ல சிரத்தையுடன் கர்மாக்களை செய்ய வேண்டும். அதனால் யமராஜர் மனம் இளகி பாவம் செய்திருந்தாலும் தண்டனை கொடுக்காமல் மன்னித்து விடுவார். நித்ய விதியையும் மற்ற கர்மாவையும், பிண்ட தானத்தையும் எள்ளும் தண்ணீரும் கலந்து முறையோடு தர வேண்டும். அந்த கர்மாவில் முக்கியமானது சபிண்டீகரணம் ஆகும். சபிண்டீகரணமும் செய்து அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்த பன்னிரண்டாம் நாள், மூன்றாவது பக்ஷம் அல்லது ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம். சபிண்டீ கரணம் செய்யும் வரையிலும் மரித்தவன் பிரேத தத்துவத்துடனேயே இருப்பான். ஓராண்டு வரையிலும் ஒருவனே கர்மம் செய்ய வேண்டும். நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் ஜலம் நிரப்பி உதக கும்பதானம் செய்ய வேண்டும்.  கர்மங்களைத் தவறாமல் செய்தால் இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகடைவான்.

136) கருமங்களைச் செய்வதற்கு முன் அந்த  இடத்தை துடைத்து பசுவின் சாணத்தால் மெழுகி வைக்க வேண்டும். அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அமர்ந்து கொண்டு அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் ஆக்ரமித்துக் கொண்டு கருமங்களைத் தடுத்து  நிறுத்தி  இறந்தவன் நரகத்தை அடைய வழி வகுப்பார்கள்.  எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம். கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்  தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.

137) இப்படியாக ஆத்மா செய்யும் பயணத்தையும், கர்மா செய்யும் நோக்கத்தையும் இறந்தவரது குடும்பத்தினருக்கு அனைத்தையும் பண்டிதர்கள் கதைப் போல  எடுத்துரைப்பார்கள். அதன் பின் தானங்கள் முடிந்ததும் உறவினர் அனைவரும் அந்த இடத்தில் நமஸ்கரித்தப் பின் போஜனம் செய்து விட்டு பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு செல்வார்கள்.

138) சாஸ்திரங்களின்படி கர்மாவையும், அவற்றை தொடர்ந்து மாதாந்திர மற்றும் கர்மாக்களை செய்யும் பொது விதிகளில் சில :-


a) அரசாங்கத்தினரால்  தண்டனை தரப்பட்டு மரணம் அடைந்தவர்கள் - தூக்கு தண்டனை, வேறு விதத்தில் கொல்லப்பட்டவர்கள் -போன்றவர்களுக்கு அந்த செய்தி கிடைத்த உடனேயே அவர்களது பங்காளிகளில் கர்த்தா செய்ய உரிமை உள்ளவர்கள் மூலம் கர்மா செய்யலாம்.  அவர்களுக்கும் மேற்கூறிய அனைத்து சடங்குகளும் உண்டு.

b) தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஆறு மாதம் கழித்து  கர்மா செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால் கர்த்தா விரும்பினால் இருபத்தி நான்கு நாட்கள் கழித்து கர்மாவை செய்யலாமாம். அவர்களுக்கும் மேற் கூறிய அனைத்து சடங்குகளும் உண்டு.

c) பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். இதனால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

d) சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்குப் பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே அம்மாவாசை தினங்களில் இறந்தவர்களின் பசியையும், தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
 
e) அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அதனால் அன்றைக்கு தர்ப்பணம் செய்து எள் கலந்த தண்ணீர் தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றடைந்து வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன.

f) மறைந்த முன்னோருக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நம் குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
 
g) இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.  ஏனென்றால் சிரார்த்த தினத்தன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் தமது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவைச் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

h) சிராத்தம் செய்ய வசதி இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாகச் செய்யலாம்.  ஒரு பண்டிதரை அழைத்து வாழக்காயையும், அரிசியையும் தானமாக கொடுத்து அனுப்பலாம். அப்படியும் செய்ய முடியாதவர்கள்  சாஸ்திரிகளை கலந்தாலோசனை செய்து ஹிரண்யம், சங்கல்ப்ப சிரார்த்தம் அல்லது ஆம சிராத்தம் போன்றவற்றை செய்யலாம். அவை நமது பித்ருக்களை சந்தோஷப்படுத்த  செய்யப்படுபவை ஆகும். அவற்றை முறையோடு, சிரத்தையுடன் செய்வதின் மூலம் அந்தக் குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள்,  பெரும் புகழ்,  வற்றாத செல்வம் போன்றவை வந்து சேருமாம்.
...........தொடரும் 

மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 10

$
0
0
 --சாந்திப்பிரியா --
10
 

139) தீட்டு என்பது என்ன என்பதை ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். ஆகவே தீட்டு என்பதை விஞ்ஞான ரீதியிலும் சரி, ஆன்மீக ரீதியிலும் சரி, விலக்கி வைத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதாக வைத்துக் கொள்ளலாம். காலம் காலமாக தொடரப்பட்டு வரும் நம்பிக்கையின் அடிப்படையில் யாருக்கு விருப்பமோ அவர்கள் அவற்றைக் கடைபிடிக்கலாம். ஏன் எனில் இவை எதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதற்கு சாஸ்திர ரீதியிலான விளக்கம் கிடையாது. பெரும்பாலும் கருட புராணமே இந்த நியதிகளுக்கு ஆதாரமாக காட்டப்படுகிறது. ஆகவே இவற்றைக் கடை பிடிப்பது  அவரவர் விருப்பம் ஆகும்.

யாருக்கெல்லாம் தீட்டு உண்டு?  தீட்டுக் காலம் என்பவை எத்தனை?

தீட்டுக் காலத்தை ஸ்நானத் தீட்டு, பக்ஷிணீ   தீட்டு,   ஒரு நாள் தீட்டு, 1 1/2நாள் தீட்டு, மூன்று நாட்கள் தீட்டு மற்றும் பத்து நாட்கள் தீட்டு எனப் பிரித்து உள்ளார்கள்.  தீட்டிலும் பிரசவ தீட்டு மற்றும்  மரணத் தீட்டு என இரு வகை உண்டு.  இங்கு நாம் மரண தீட்டை மட்டும் பார்க்கலாம்.

மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்:

(-1) தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு அதாவது விபத்தில் உயிர் இழந்தவர் என யாராக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுக்கு தீட்டு உண்டு. ஆனால் அதே சமயத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு தீட்டு கிடையாதாம் .
 
(-2) கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மா செய்த பின் தீட்டுப் போகும்.
 
(-3) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண் இறந்து விட்டால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லையாம்.  ஆனால்  இறந்த சேதி கேட்டதும் குளிக்க வேண்டுமாம். அதாவது அவர்களுக்கு அந்த செய்தி கொடுப்பது ஸ்நானத் தீட்டாம்.
 
(-4) ஒரு தீட்டுக்காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக்கூடாது. தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு. ஆகவே தீட்டுள்ளவன் வீட்டுக்குச் சென்று விட்டு தம் வீடு வந்ததும் இன்னொரு  முறை ஸ்நானம் செய்ய வேண்டுமாம். 

(-5) தீட்டு இல்லாதவர்களுக்கும்  துக்கத் தீட்டு உண்டு. அதாவது தீட்டுக் காலம் முடியும் முன்னால் ஆனால் சஞ்சயனம் முடிந்தப் பின்னர் இறந்தவர்  வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரித்தாலும் அங்குள்ளவர்களைத் தொட்டு விட்டாலும் வீட்டுக்கு வந்து கால்களை அலம்பிக் கொண்டுதான்  உள்ளே செல்ல வேண்டும். அதன் பின் குளித்து விட வேண்டும். இல்லை என்றால் குளிக்கும்வரை தற்காலிக தீட்டு உண்டு.   

(-6)  எவர் வீட்டில் ஸ்ரார்தம் நடைபெறுகிறதோ அன்றைய தினத்தன்று துக்கம் விசாரிக்க செல்லலாகாது. 

(-7) தீட்டு முடியும்வரை தீட்டு உள்ளவர்கள் வீட்டினர் எந்த ஒரு புண்ணிய காரியங்களுக்கோ, புண்ணிய சடங்குகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லக் கூடாது.

(-8)  எத்தனைதான் அதிக வயதானவர் என்றாலும் தீட்டு உள்ள காலத்தில் தீட்டு இல்லாதவர்கள் அல்லது அதே வீட்டில் உள்ள  தீட்டு உள்ளவர் கூட அவரை  நமஸ்கரிக்கலாகாது.

(-9) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்களுடைய கோத்திரம் புகுந்த வீட்டுக் கோத்திரமாகி விடுவதினால்  அவர்களுக்கு பிறந்த வீட்டு தீட்டு  கிடையாது. அவளுடைய  தாய் மற்றும் தந்தை இறந்தால் மட்டுமே அந்தப் பெண்ணிற்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டாம். மற்ற உறவினர் இறந்தால் அதைக் கேட்டதும் ஸ்நானம் செய்தால் மட்டுமே போதுமானது.  அதை தீட்டு என்பதாக கருதாமல், குளிக்கும்வரை அந்த தீட்டை ஆசாரம் அற்ற நேரமாக  அதாவது விழுப்பு என்று கருதுவார்கள்.  ஒருவேளை அந்த செய்தி வரும் முன்னரே அவள் ஏற்கனவே குளித்து விட்டு இருந்தாலும் மரண செய்தியைக் கேட்டதும் மீண்டும் ஒருமுறை அவள் ஸ்நானம் செய்ய வேண்டும்.

(-10)  ஒரு குடும்பத்தில் தாய் தந்தையின் மரணத்தை அவர்களது மகன்களோ, திருமணம் ஆகாத பெண்களோ எப்போது கேட்டாலும் அவர்களுக்கு பத்து நாள் தீட்டு உண்டு.
  • ஒரு  வேளை தாய் மற்றும் தந்தையின் மரணச் செய்தி  தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்களுக்கு பத்து நாட்களுக்குள் கிடைக்காமல் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் மற்றும் தந்தை இறந்து எத்தனைக் காலம் ஆனாலும் சரி, அது குறித்து  முதல் செய்தி எப்போது கேட்டாலும் சரி, அந்த செய்தி கிடைத்த  நாள் முதல்  அடுத்த பத்து நாட்கள் தீட்டு உண்டு.
(-11​)  Y'  குடும்பத்தில் உள்ள  உறவினர் இறப்பினால்  'Y'  குடும்பத்துக்கு பத்து நாள் தீட்டு  உள்ளதாக வைத்துக் கொள்வோம்.  'Y'  குடும்பத்துக்கு அந்த தீட்டு முடியாத நிலையில், அவர்களுடைய இன்னொரு குடும்ப உறவினருடைய இறப்பினால், அதாவது 'X'குடும்ப உறுப்பினரின் மரணத்தினால்  அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டால் இரண்டு தீட்டுக்குமான கால அளவு எத்தனை ?
  •  'Y'  குடும்பத்தினர்  பத்து நாள் தீட்டை  காத்துக் கொண்டு இருக்கையில் அவர்களுக்கு 'X'  குடும்பத்தில் ஏற்பட்டு விட்ட மரணத்தினால் இன்னொரு பத்து  நாள் தீட்டு வந்து விட்டது.  அந்த மரணமும் முதல் பத்து நாள் தீட்டின்போதே நிகழ்ந்து விட்டது. அப்போது என்ன செய்வது?  அதற்கு குழப்பம் அடைய வேண்டாம். முதல் பத்து நாள் தீட்டு முடியும் முன்னரே   இன்னொரு பத்து நாள் தீட்டு குறித்த செய்தி   வந்து விட்டால் அந்த இரண்டாவது பத்து நாள் தீட்டும், முதல் பத்து நாள் தீட்டோடு முடிந்து விடும்.  ஆனால் அந்த செய்தி முதல் தீட்டு முடிய உள்ள பத்து நாட்களுக்குள் வர வேண்டும். அப்படி வந்தால் அடுத்து வந்த பத்து நாள் தீட்டும் முதல் தீட்டுக் காலமான பத்து நாள் தீட்டோடு விலகி விடும்.
  • ஒரு வேளை 'X'குடும்ப உறுப்பினரின் மரண செய்தி 'Y'குடும்பத்துக்கு பத்தாம் நாளன்று இரவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது இரண்டாவது தீட்டு காலத்தை 'Y'குடும்பத்தினர் இன்னும் எத்தனை நாள் அனுஷ்டிக்க வேண்டும்?  குழப்பம் அடைய வேண்டாம். அந்த நிலையில் அவர்கள் இன்னும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும். அந்த தீட்டு முதல் தீட்டுக் காலம் முடிந்து அடுத்த  மூன்று  நாட்களுக்குப் பின்னரே போகும்.  
  • ஆனால்  'X'குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் குறித்த அதே செய்தி  'Y'  குடும்பத்துக்கு பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது பதினோராம் நாள் விடியற்காலையில், முதல் தீட்டு முடிவடைந்து குளிக்கப் போகும் முன்னால் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது 'Y'  குடும்பத்துக்கு  தீட்டுக் காலம் எத்தனையாக இருக்கும்?   அதாவது 'X'குடும்பத்தில் இறந்து விட்டவரின்  செய்தியை பத்து நாட்களுக்கு மேல், அடுத்த மூன்று மாதங்களுக்குள் 'Y'குடும்பத்தினர் எப்போது கேட்டாலும் அவர்கள் பத்து நாள் தீட்டு காக்கத் தேவை இல்லை. அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து மூன்று நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது. 
  • அதே போலத்தான் பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டை பற்றி  மூன்று  மாதங்களுக்கு  மேல் ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு முன்னால்  கேட்டால் அவர்கள் மூன்று நாட்கள் கூட தீட்டு காக்கத்  தேவை இல்லை.  அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து ஒன்றரை  நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.
  •  ஆனால் அதே  செய்தியை அந்த குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு  மேல் ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னால்  கேட்டால், அந்த  செய்தியைக்  கேட்டதில் இருந்து  ஒரு நாள் தீட்டு காத்தால், அது  மட்டுமே போதுமானது.
  • ஆனால் அதே செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்கு பிறகு கேட்டால்  அது தீட்டாக கருதப்பட மாட்டாது. அந்த செய்தி கேட்டதில் இருந்து குளிக்கும்வரை அதை ஆசாரம் அற்ற நேரமாக கருதி ஒரு ஸ்நானம் மட்டும் செய்தால் அதுவே போதுமானது. 

(-12) ஒருவருடைய மரணத்தினால் ஒரு குடும்பத்தினருக்கு மூன்று நாட்கள் தீட்டு காலம் ஏற்பட்டிருந்த  நிலையில், அந்த  மூன்று நாள்  தீட்டை பற்றிய செய்தியை இறந்தவரது கர்மா முடிவடைந்த பத்து நாட்களுக்குப் பிறகு  கிடைத்தாலும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டுமா?
  • ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டியவர்களுக்கு அந்த செய்தி  மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களுக்குள் எப்போது கிடைத்தாலும், அந்த செய்தியைக் கேட்ட தினத்தில் இருந்து அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு.  அந்த செய்தி இறந்தவரின் பத்தாம் நாள் மாலை வந்தால் கூட அன்றில் இருந்து அடுத்த மூன்று நாட்கள் தீட்டு உண்டு. 
  • ஆனால் அதே செய்தி அவர்களுக்கு  மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து பத்து நாட்களுக்குப்  பிறகு கிடைத்தால், அதாவது பதினோராம் நாள் விடியற் காலையில்  கிடைத்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு கிடையாது, ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.
    (-13) இதில் இன்னொரு சின்ன மாறுதல் உண்டு.  ஒருவர் மூன்று நாள் தீட்டுக் காலத்தை வரித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு  இன்னொரு பத்து நாள் தீட்டு பற்றிய செய்தி வந்து விட்டால் அந்த தீட்டும்   முதல் தீட்டு ஆரம்பித்த  மூன்றாவது நாள்  தீட்டோடு முடிந்து விடுமா?
    • மூன்று நாள் திட்டை விட பத்து நாட்கள் தீட்டு அதிகம் என்பதினால், மூன்று நாட்கள் தீட்டை வரித்துக் கொண்டு இருக்கையில், பத்து நாள் தீட்டைப் பற்றிய செய்தி அந்த குடும்பத்துக்குக் கிடைத்தால்,  அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு ஆரம்பித்த நாளில் இருந்து பத்தாவது நாள்தான் இரண்டு தீட்டு காலமும் முடிவுறும். அதாவது மொத்தம் பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டி இருக்கும். உதாரணமாக 1 ஆம் தேதி மூன்று நாட்கள் தீட்டு பெற்றிருந்த  நிலையில், 3 ஆம் தேதியன்று இன்னொரு பத்து நாள் தீட்டு பற்றிய செய்தி கிடைத்தால் அவர்கள் தீட்டு 13 ஆம் தேதியன்றுதான் போகும்.
        (-14)  ஒரு குழந்தை பிறந்த பின் பத்து நாட்களுக்குள் அந்தக் குழந்தை இறந்து விட்டால், அந்தப் பெற்றோர்களுக்கு இருக்கும் பிறந்த தீட்டான பத்து நாள் காலத்துடன் குழந்தையின் இறப்பு தீட்டும் பத்தாவது நாளே முடிவடைந்து விடும். அதாவது பதினோராம் நாள் காலையில் குளித்து விட வேண்டும்.

        (-15) ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணத்தினால் அந்தக் குடும்பத்தினர் வரிக்கும் தீட்டுக் காலத்தை அதே அளவில் தீட்டுக் காக்க வேண்டிய பங்காளிகள் என்பவர்கள் யார்?  பங்காளிகள் என்பவர்கள் ஒரு குடும்ப வாரிசை சேர்ந்த ஏழு  .தலைமுறையினர் ஆவார்கள்.

        (-16)  அதாவது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் (மகன்கள்), அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (பேரன்கள்), அந்த ஆண் பேரன்  குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (கொள்ளு பேரன்கள்), அந்த ஆண் கொள்ளுப் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக அவர்கள் சந்ததியில் பிறக்கும்  ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.

        (-17) இப்படியாக ஏழு தலைமுறை பங்காளிகளுக்கு - அதாவது ஒரு  குடும்பத் தலைவருக்கு பிறக்கும் ஆண்  பிள்ளைகள், அவர்களது ஆண்  பிள்ளைகள், அந்த ஆண்  பிள்ளைகளின் பிள்ளைகள் என ஏழு வம்சத்துக்கு பிறக்கும் ஆண் வழி குடும்பத்தை சேர்ந்த  யார் இறந்தாலும்  அந்த ஏழு வம்சத்தினருக்கும் தீட்டு உண்டு. எட்டாவது வம்சத்தை சேர்ந்தவர்  அவருக்கு முன் உள்ள  ஏழு வம்சத்தை சேர்ந்த  குடும்பத்தினரின்  பங்களிகளாக  இருப்பார்கள். ஆனால் அவர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள எட்டாவது குடும்பத்தினரின் பங்காளிகளாக ஆக  மாட்டார்கள்.



        (-18) தீட்டு உள்ளவர்கள் வீட்டில் தீட்டு இல்லாதவர்கள் உணவு உண்டால் அன்று  அவர்களுக்கும் தீட்டுக் காலம் இருக்கும். மறுநாள் காலையில் குளித்தப் பிறகுதான் அவர்களுக்கு அந்த தீட்டு போகும்.
           ............தொடரும் 

        மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 11

        $
        0
        0
         --சாந்திப்பிரியா --
        11
         

        (-19) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும், அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

        (-20)  அது சரி, 8 மணி 24 நிமிடங்கள் என்பது என்ன கணக்கு என்ற கேள்வி எழலாம்?  இந்த நேரம் மிக முக்கியமானது. அதை புரிந்து  கொள்ள முதலில் இவற்றை படியுங்கள்.  சாஸ்திரங்களின்படி ஒரு நாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதில் பகல் நேரம் 30 நாழிகை கொண்டதாகவும், இரவு நேரம் 30 நாழிகையையும் கொண்டதாகும். சாஸ்திர விதிப்படி அந்தகாலைப் பொழுதான 30 நாழிகை பொழுதை ஐந்து காலமாக பிரித்து வைத்து ஒவ்வொரு காலத்துக்கும் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் என பிரித்து வைத்து உள்ளார்கள். ஏன் என்றால் அந்த ஒவ்வொரு கால பிரிவிலும் சூரியனின் கிரணங்கள் சில தனித்தன்மைக் கொண்டவையாக உள்ளனவாம்.  அதனால்தான் ஐந்து தன்மைகளைக் கொண்டக் காலமாக பிரித்து வைத்துள்ளார்கள்.
         
        • தேவலோகத்தில் சூரியம் எழுவது  காலை 4 மணி 30 நிமிடம் ஆகும். அந்த தேவ கிரணங்கள் பூமிக்கு வந்து விழும்போது பூமியில் அப்போது  காலை 6 மணியாக இருக்குமாம்.  அப்படி வந்து விழும் கிரணங்கள் கண்களுக்கு தெஇர்யாமலும் இருக்கும், சில நேரங்களில் தெரியும். இதனால்தான் பூமியில் சூரியோதயம்  காலை 6 மணி என சாஸ்திரங்கள் கருதி  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கால கட்டத்தை ஐந்தாக பிரித்து வைத்தார்கள். 
        • காலை 6 மணியிலிருந்துகாலை 8 மணி 24 நிமிடம் வரை ப்ராதஹ் காலம் என்றும், 8 மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்றும், 10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி 12 நிமிடம் வரை மாத்யானிக காலம் என்றும், மதியம் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்னம் காலம் என்றும், 3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்கால காலம் என்றும் பெயரிட்டு உள்ளார்கள். 
        • அந்த ஐந்து கால கட்டத்தில் சூரியனின் கிரணங்கள் சில விசேஷ தன்மைகளைப் (சக்தியை) பெற்றதாக  இருந்தாலும் சில பிரிவில், முக்கியமாக மத்தியான வேளையில் இருந்து துவங்கி மாலை வரை அவற்றின் தன்மையில் சில தன்மைகளையும் அவை இழக்கின்றன. காலை 6 மணியிலிருந்துகாலை 8 மணி 24 நிமிட காலத்தில்  பூமியில் விழும் சூரிய கிரணங்கள் மிதமான தன்மைக் கொண்டவையாக, மனதுக்கு அமைதி தரும் கிரணங்களாக உள்ளன. அதாவது அந்த ஒளிக் கற்றைகள் நமது உடலுக்குள் ஊடுருவி, மனதில் அமைதியான காந்த அதிர்வலைகளை தோற்றுவிக்கின்றன. அந்த விசேஷ சக்தி கொண்ட சூரிய கிரணங்கள் நமது கண்களுக்கு புலப்படுவது இல்லையாம். விடியற்காலைப் பொழுதுகளில் மனம் அமைதியாக இருக்கும். ஆகவேதான் தபஸ்விகளுக்கும், யோகக் கலை மற்றும் தியானங்களை செய்பவர்களுக்கும்  அதை உகந்த நேரமாக வைத்து உள்ளார்கள்.  
        • அதைப் போலவே ஸங்கவ காலம் துவங்குகிறது எனக் கூறப்பட்டு உள்ள காலை நேரமான 8 மணி 24 நிமிடங்களுக்கு பூமியிலே விழும் கண்களுக்கு தெரியாத விசேஷ  சக்தி கொண்ட சூரிய கிரணங்கள்  நமது உடல் நலத்தைப் பேணும் வகையில் உள்ளதாம்.
            • முன்னரே கூறி உள்ளபடி தீட்டு காலத்தில் தினமும் கர்மா செய்து விட்டு வரும் இடங்களில் பல்வேறு காரணங்களினால், முக்கியமாக அங்கு உலவும் ஆத்மாக்களினால் படர்ந்திருக்கும் தீய அணுக்கள் நமது உடல்களிலும் தொற்றிக் கொண்டு இருந்திருக்கும்.  இரவில் நாம் படுத்திருக்கும்போதும், வீட்டில் உலவும்போதும் கூட அவை நம் உடலை விட்டு விலகுவதில்லை. ஆன்மீக எண்ணப்படி அந்த கணங்கள் உடல் பந்தத்தினால் நம்மை விட்டு வெளியில் செல்வதில்லை. ஆனால் அந்த கணங்கள்  சூரிய ஒளியின் ஒரு குறிப்பிட்ட தன்மையின் விளைவாக அழிந்து போகக் கூடியவை. ஆகவே குளித்தப் பின் சூரியனின் ஒளி உடலில் படும்போது அதன் கிரணங்களின் தன்மையினால் அந்த கணங்கள் ஓடி விடும், நமது உடலின் மீதுள்ள தோல் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை மனதில் கொண்டுதான் அந்த குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட சூரிய ஒளிக் கிரணங்கள் நம் மீது படவேண்டும் என்பதற்காகவே எந்த ஒரு தீட்டையும் விலக்கிக் கொள்ளும் உத்தமமான காலம் காலை 8 மணி 24 நிமிடங்களுக்கு அதாவது ஸங்கவ காலம்தான் என்பதாகவும், அதனால்தான் காலை 8 மணி 24 நிமிடங்களுக்குப் பிறகுதான் குளிக்க வேண்டும் என்பதான விசேஷ  நடைமுறை இருந்துள்ளது என்பதாகவும்  சாஸ்திரங்கள் கூறி உள்ளதான ஐதீகம் உள்ளது. 
            •  சூரியோதயம் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும்,  பூமியிலே அப்படிப்பட்ட தனித் தன்மைக் கொண்ட கிரணங்கள் விழும் காலம் காலை ஆறு மணிக்கு துவங்குவதால்தான் பூமியிலே சாஸ்திரப்படி சூரியன் ஆறு மணிக்கு உதயம் ஆவதாக கருதி உள்ளார்கள். சூரியோதயம் இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், பூமியிலே தனித்தன்மைக் கொண்ட சூரிய கிரணங்கள் (நமது பார்வைக்கும் தெரியாமல் உள்ளவை) ஆறு மணிக்குதான் விழத் துவங்குகின்றதாம். இவற்றை எல்லாம் விளக்கி எழுதி வைக்கப்படாவிடிலும், வாய் மொழி வாய்மொழியாக கூறப்பட்டு வரும்  நம்பிக்கையின் அடிப்படையில் இவை இருந்திருந்தாலும்,  நவீன கால விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள  அர்த்தங்களும்  காரணங்களும் மெல்ல மெல்ல தெரிய வருகின்றன. 
            (-21) மேலே தொடரும் முன் ஒரு விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தர்ம சாஸ்திர  நெறிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் நாம் பண்டைக் கால தேவ முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் போன்றவர்களின் அவரவர் தர்க்க வாதங்கள், மற்றும் அவர்களால் பிறருக்கு போதித்தவை மூலமே அறிகிறோம். அப்படிப்பட்ட மகரிஷி மற்றும் முனிவர்களில் மனு, கர்கர், கௌசிகர், கோபிகர், பராசரர், யாக்யவால்யகர், ஜமதக்னி, அன்கீரசர், ஆபஸ்தம்பர், அகஸ்தியர், போகர், வியாசர், தேவலர், காத்யாயனர், போதாயனர் போன்ற மாபெரும் புருஷர்கள் உள்ளதினால் அவர்களின் கூற்றுக்கள் அனைத்துமே காரணம் இன்றி இருந்திடாது என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அவற்றில் சில ஆன்மீகத்தின் அடிப்படையில், தர்ம நெறியை போதிக்க இருந்தாலும், பெரும்பாலானவை உள் அர்த்தம் கொண்டவையாக இருந்துள்ளன. அவை நமக்கு விளங்கவில்லை. அர்த்தம் அற்றதாக நாம் பல காலம் கருதி வந்திருந்த பல விஷயங்கள் தற்காலத்தில் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அர்த்தம் உள்ளதாக தெரிய வருகின்றன.

            (-22) இப்படி பல காலமாக போதிக்கப்பட்டு  வந்திருந்த தர்ம சாஸ்திர நெறி முறைகளை ஆராய்ந்து அவற்றை தொகுத்து அளித்திருந்ததில் காலம் காலமாக முன்னோடியாக காட்டப்படுவது கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும்  'வைத்தியநாத  தீக்ஷிதீயம்ஆசௌச  காண்டம்'என்பதாகும்.  அதைத் தவிர  17 ஆம் நூற்றாண்டில் தமிழாசுர முனிவர் என்பவர் எழுதி உள்ள 'ஆசௌச தீபிகை', 1882 ஆம் ஆண்டில் யாழ்பாணத்தை சேர்ந்த வண்ணை மா. வைத்தியலிங்கபிள்ளை வெளியிட்டு உள்ள 'ஆசௌச தீபிகை'மற்றும் எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட 'அகோர சிவ பத்ததி'என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூல் மற்றும் 1937 ஆம் ஆண்டில் வெளியாகி உள்ள முத்துஸ்வாமி  ஐயர் என்பவரால் வெளியிடப்பட்டுள்ள 'வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரம்'என்பதிலும் மரணத் தீட்டு மற்றும் அதன் சடங்குகள் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன. 
            ...........தொடரும் 

            மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 12

            $
            0
            0
             --சாந்திப்பிரியா --
            12


            (-23) அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும் என்பதாகும்? சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் அடங்கும். சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகை என்பது பூமியில்  இரவு 1 மணி 30 நிமிடத்தைக் குறிக்குமாம்.
            • ஆகவே ஒரு குடும்பத்தில் இரவு 1.30 மணி வரை நேரத்தில் யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேருமாம். பூமியில் மறுநாள் விடியற்காலை என்பது இரவு 12 மணிக்கு  பிறப்பதாக நாம் கணக்கிடுகிறோம் என்றாலும், சாஸ்திரங்களின்படி பூமியில் இரவு 12 மணி ஆகும்போது தேவலோகத்தில் அப்போதைய நேரம் இரவு 11.50 ஆக இருக்குமாம். ஆகவே தேவலோகத்தில் இரவு 12 மணியாக இருக்கும்போது பூமியில் அப்பொழுதைய நேரம் 1.30 மணியாகும்.
            • தேவலோகக் கணக்கின்படி காலை ஆறு மணி என்பது தேவலோகத்தில் விடியற்காலை 4 மணி 30 நிமிடமாகுமாம். அப்போது அங்கு எழுந்து பூமியைப் பார்க்கும் சூரியனின் ஒளிக் கற்றைகள் பூமியிலே ஆறு மணிக்கு வந்து சேர்கிறதாம்.  அதாவது தேவலோகம் மற்றும் பூமியின் நேரக் கணக்கில் சுமார் 1.5 மணி நேர வேறுபாடு உள்ளது.  அதனால்தான்  தேவலோகத்தில் நடு  இரவு 12 மணி ஆகும்போது பூமியில் அந்த நேரம் இரவு 1 மணி 30 நிமிடங்களாக உள்ளது. பூமியில் விடியற்காலை துவங்குவது இரவு 12 மணிக்கு  என்பது தேவலோகத்தில் இரவு 10 மணி 30 நிமிடம் ஆகும். ஆகவே தேவலோக நேரத்தையே  ஆசௌச காரியங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதினால் தேவலோகத்தில் மறுநாள் விடியும் நேரமான நடு இரவு12 மணியை பூமியில் மறுநாள் விடியும் நேரமாக கருத வேண்டி உள்ளது.  அதனால் பூமியில்  இரவு 1 மணி 30 நிமிடங்களாக உள்ள நேரத்தை விடியற்காலை விடியும் நேரமாக  ஆசௌச காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
            • சாஸ்திரங்களில் இரவு மரணம் அடைந்தவர்கள் மரண நேரத்தைக் குறிப்பிடுகையில்,  மரணம்  சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் என்றால் அது முதல் நாள் கணக்கே என்றும், அதன் பின் இறந்தால் மறு நாள் கணக்கு என்றும் கூறுகிறார்கள். அதன்படி  பூமியில் இரவில்  ஒருவர் 1.30 க்கு முன்னால்  இறந்து விட்டால் அவர் இறந்தது முதல் நாள் கணக்கில் சேர்ந்து விடும் என்று ஆகிறது.
            •  சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால் நாழிகைகளுக்கு முன்னர் என்பது முதல் நாள் கணக்கு  என்பது எப்படி ? தேவலோகக் கணக்கின்படி ஒரு நாழிகை என்பது பூமியில் 24நிமிடங்கள் ஆகும். ஆகவே கீழுள்ள கணக்கை பாருங்கள்.
            1. பதினொன்றே கால் நாழிகை  x 24 நிமிடங்கள் =270 நிமிடங்கள்
            2. 270நிமிடங்கள் என்பது  = 270 நிமிடங்கள் /60 நிமிடங்கள் = 4.30 மணி 
            3. பூமியில்  சூரியோதயம் = காலை 6.00 மணி
            4. ஆகவே சூரியோதயத்துக்கு முன்னால் பதினொன்றே கால் நாழிகை என்பது =சூரியோதயம் காலை 6 மணியில் இருந்து பதினொன்றே கால் நாழிகை 4.5 மணி நேரத்தைக்  கழித்தால் வருவது 1.30 நிமிடங்கள்.  அதாவது இரவு 1.30 நிமிடங்கள் என்பதாகும்.
            (-24) ஒரு கிரஹஸ்தர் சன்யாசி ஆகி விடுகிறார் என்றால் அவருடைய தாய் மற்றும் தந்தை அல்லது உறவினர் இறந்தால் அவருக்கு தீட்டுக் காலம் உண்டா என்றால் இல்லை என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சன்யாசியின் தாய் அல்லது தந்தை இறந்தால் ஸ்நானம் மட்டுமே உண்டு. தீட்டு கிடையாது. அதன் காரணம் அந்த சன்யாசியின் உடலை அவர்கள் ஈன்று எடுத்ததினால் அந்த உடலுக்கு தர வேண்டிய மரியாதை ஆகும் அந்த செயல்.


            (-25) சாஸ்திரத்தின்படி பத்து நாள் தீட்டு உள்ள ஆண் ஒருவர் நோயினால் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? அப்படிப்பட்ட நோயாளியை எவராவது ஒருவர் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் மீண்டும் தொட்டுவிட்டு குளிக்க வேண்டும். இப்படியாக பத்து முறை தொட்டு விட்டு தொட்டு விட்டு குளித்தால் நோயால் படுத்துள்ளவரின் தீட்டு விலகி விடுமாம். அதென்ன பத்து முறை தொட்டு விட்டு பத்து தடவை குளிக்க வேண்டும்? நோயால் படுத்திருப்பவருக்கு பதிலாக இன்னொருவர் பத்து முறைக் குளிப்பதின் மூலம் பத்து நாளைய கர்மாவில் நோயால் படுத்துள்ளவர் கலந்து கொண்டு விட்டதாக தேவர்கள் ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்ணியாஜனம் செய்ய வேண்டும். இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில் ஆன்மீக கண்ணோட்டத்தில் அமைந்த விதியாகும். விஞ்ஞான பூர்வமான காரணம் எதுவும் கிடையாது.


            (-26) அது போலவே சாஸ்திரத்தின்படி பத்து நாள் தீட்டு உள்ள பெண் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? இவரை யாராவது ஒரு பெண்மணி 12 முறை தொட்டு பன்னிரண்டு முறை குளித்து விட்டால் அவளது தீட்டு விலகி விடுமாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்ணியாஜனம் செய்ய வேண்டும்.

            (-27) ஒருவர் வீட்டில் சிரார்த்த காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த சிரார்தத்தை செய்பவருக்கு சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே இன்னொரு இறப்பு தீட்டு வந்துவிட்டது எனும் போது அந்த தீட்டு சிரார்த்தம் முடிந்த பின்னர்தான் துவங்கும்.

            (-28) எந்த ஒரு பிரும்மச்சாரிக்கும்  தீட்டு இல்லை.

            (-29) ஒருவருக்கு ஒரு குடும்ப உறுப்பினரால் மரணத் தீட்டு உள்ள காலத்தில் அவர்கள் முன்னர் செய்ய வேண்டிய குடும்ப உறுப்பினருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய தேதி வந்து விட்டால் அவர்கள் அந்த தீட்டு சமயத்தில் அவர்கள் சிரார்த்தம் செய்யக் கூடாது.

            (-30)  திருமணம் நடக்கும்போது, மணப்பெண் அல்லது மாப்பிள்ளையின்  பெற்றோர்கள் இறந்து விட்டால், அந்த திருமணம் முடிந்து, மணமக்களின் கிரஹப்பிரவேச சடங்கும் முடிந்து சுபமாக திருமண சடங்கை முடித்து வைக்கும் சேஷ ஹோமம் செய்யும்வரை அவர்களுக்கு தீட்டு கிடையாதாம்.

            (-31) சாதாரணமாக தீட்டு உள்ளவர்களின் வீடுகளில் உள்ள உணவு பண்டங்களை அந்த நாட்களில் வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள். காரணம் அந்த பொருட்களுக்கும் தீட்டு உண்டு என்பதே. ஆனால் அவர்கள் வீட்டில் உள்ள தயிர், பால், நெய், காய்கறிகள், உப்பு,  தேன், மற்றும் பழங்களுக்கு தீட்டு கிடையாது. அவற்றை அந்த வீட்டில் உள்ளவர்கள் யார் மீதும் படாமல் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்து உபயோகிக்கலாமாம்.

            (-32) எத்தனை நாள் தீட்டானாலும் சரி, அந்த தீட்டு உள்ள காலத்தில் கிரகணம் வந்தால் கிரகணம் துவங்கி முடியும்வரை அங்குள்ளவர்களுக்கு தீட்டுக் கிடையாதாம்.

            (-33)  ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பார்க்காமலும், எந்த  சம்மந்தமும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவருக்கொருவர் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தில் மற்றவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. அவர்களுக்கு பத்து, மூன்று, ஒரு நாள் தீட்டு போன்றவைக் கிடையாதாம்.


            (-34) குழந்தை பிறப்பினாலும் தீட்டு உண்டாகும். அதை விழுப்பு என்பார்கள். ஆனால் குழந்தைப் பிறப்பினால் பத்து நாள் தீட்டு உள்ள நேரத்தில் மரணத்தினால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டால் பிறப்பு தீட்டுடன் மரணத் தீட்டு போகாது.  செய்தி கிடைத்த நாளில் இருந்து பத்தாவது நாள் வரை மரணத் தீட்டு தொடரும். அதாவது ஒன்றாம் தேதி குழந்தைப் பிறப்பினால் பத்து தீட்டு வந்து விட்டது. ஐந்தாம் நாள்  மரணச் செய்தி ஒன்றினால் அவர்களுக்கு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அப்படி என்றால் பிறப்பு தீட்டு முடிவுறும் பத்தாம் தேதியுடன் மரணத் தீட்டு முடியுமா என்றால், கிடையாது என்பது பதில் ஆகும். அவர்களது தீட்டு பதினைந்தாம் தேதிதான் முடிவடையும்.  ஆனாலும் அடுத்த நாளும் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளைக்கு காலையில் குளித்ததும்தான் போகும்.


            (-35) அதைப் போல ஒருவர்  பத்து நாள் மரணத் தீட்டை அனுஷ்டித்துக்  கொண்டு இருக்கும்போது,  அவருக்கு குழந்தைப் பிறந்து அதனால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டது. அப்போது என்ன செய்வது? தீட்டு எப்போது விலகும்?  மரணத்தினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு உள்ள நேரத்தில் குழந்தைப் பிறப்பால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டாலும் அந்த தீட்டு மரணத் தீட்டுடன் போய் விடும்.   அதாவது ஒன்றாம் தேதி ஒரு மரணத்தினால் பத்து நாள் தீட்டு வந்து விட்டது. ஐந்தாம் நாள்  குழந்தைப் பிறந்ததினால் அவர்களுக்கு இன்னொரு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. அப்படி என்றால் மரணத்தினால் ஏற்பட்டு உள்ள தீட்டு முடிவுறும் பத்தாம் தேதியுடன் பிறப்பினால்  ஏற்பட்ட தீட்டு முடியுமா என்றால், முடியும் என்பது பதில் ஆகும்.  அவர்களது தீட்டு பத்தாம் தேதியுடன் முடிவடைந்து விடும். ஆனாலும் அடுத்த நாளும் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளைக்கு காலையில் குளித்ததும்தான் போகும்.


            (-36)  ஒரு பெற்றோருக்கு அவர்களுக்குப் பிறந்த குழந்தையினால் பத்து நாள் தீட்டு உள்ளது.  அதாவது ஒன்றாம் தேதி குழந்தைப் பிறக்க அவர்களுக்கு அந்தக் குழந்தை பிறந்ததினால் ஏற்பட்ட தீட்டு பத்தாம் தேதியுடன் அகலும். ஆனால் அதே குழந்தை பிறந்த பத்து நாட்களுக்குள், அதுவும் பத்தாவது நாளன்று காலை அந்தக் குழந்தை இறந்தும் விட்டது என்றால் அந்த குழந்தையின் மரணத்தினால் எத்தனை நாள் தீட்டு இருக்கும்?  அந்த நிலையில் இரண்டு தீட்டும் அதே குழந்தை மூலமே என்பதினால் இரண்டு தீட்டுமே பத்தாவது நாளிலேயே விலகி விடுகிறது. ஆனாலும் அடுத்த நாளும் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளைக்கு காலையில் குளித்ததும்தான் போகும். இதில் ஒரு சின்ன மாற்றம் உண்டு. பத்தாவது நாளன்று கடைசி நேரத்தில் அதாவது மறுநாள் பிறக்கும்  சில மணி நேரத்துக்கு முன்னால் குழந்தை இறந்து  விட்டது என்றால் அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு அதிகமாக மூன்று நாட்கள் தீட்டு உண்டு.  அதாவது அவர்களுடைய தீட்டு பதிமூன்றாம் நாள்வரை இருக்கும்.
            .................தொடரும்
            Viewing all 460 articles
            Browse latest View live


            <script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>