சண்டி சப்த சதி -4
சாந்திப்பிரியா
கீலகம் என்றால் கொடுத்துப் பெறுதல் என்பது பொருளாகும். எதற்காக கீலகம் என்ற பெயரில் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டியது அவசியம் என்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும் தேவியிடம் தந்து விட்டு அவளை சந்தோஷப்படுத்தி தன்னை பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவளும் நமக்கு தேவையானதைத் தருவாள். 'தன்னிடம் உள்ள அனைத்தையும் தேவியிடம் தந்து விட்டு' என்று கூறுவது செல்வத்தை குறிக்க அல்ல. தன்னையே என்பது முழுமையான சரணாகதி என்ற தத்துவத்தையே இங்கு குறிப்பிடுகிறது. சப்த சதியை பாராயணம் செய்யத் துவங்கும் முன்னர் கீலகம் எனும் மந்திரத்தை ஓதி தேவியை தியானிக்க வேண்டும். (அந்த ஸ்லோகங்களைநான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா).
ராத்திரி ஸூக்தம்
உலக இயக்கம் அனைத்தும் தற்காலிகமாக மறைந்து இருக்கும் காலமே இரவு என்பது. அதுவே ஜீவராத்திரி அல்லது ஈஸ்வர ராத்திரி எனப்படும். அதாவது உயிருள்ள ஜீவன்கள் ஓய்வெடுக்கும் காலம் அந்த நேரம். அப்போது பரம்பொருள் மட்டுமே விழித்த நிலையில் இருக்கும். ஈஸ்வர ராத்திரி எனப்படும் இது இந்த சந்தியா காலத்தில்தான் ராத்திரி ஸூக்தம் பாராயணம் செய்யப்படுகிறது. ராத்திரி சுக்தம் ஏன் படிக்கப்படுகிறது என்றால் இரவு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கும். பகல் என்றால் ஞானத்தைக் குறிக்கும். ஸூக்தம் என்றால் பிரார்த்தனை அல்லது பாராயணம் என்று பொருள்படும். ஆகவேதான் மனதில் உள்ள அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தைத் தர வேண்டும் என்பதற்காக அது இரவு தேவதையை வேண்டிக் கொண்டு படிக்கப்படுகிறது. அதாவது 'என்னுடைய அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தைக் கொடு' என்பதான தத்துவம்.
சப்த சதியை படிப்பதற்கு முன்னால் ராத்திரி ஸூக்தமும் சப்த சதிக்கு பின்னால் தேவி ஸூக்தமும் படிக்கப்பட வேண்டும் என்பது நியதி. உலகில் உள்ள ஒவ்வொரு இயக்கமும் தற்காலிகமாக ஒய்வு எடுத்தாலும் அந்த வேளையிலும் சக்தியின் இயக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆகவேதான் காலை மாலை என்ற இரண்டையும் ஆட்கொண்டு உள்ள இரண்டு தேவதைகளை ராத்திரி தேவதை என்றும் காலை தேவதையை உஷை என்றும் அழைப்பார்கள். உஷை என்பவள் சூரியனின் மகள். இருவருமே சகோதரிகளே. (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
நவாக்ஷாரி
நவா என்றால் ஒன்பது என்று அர்த்தம். அந்த ஒன்பது அட்ஷரங்களை கொண்ட மந்திரத்தை, ஒன்பது ரூபங்களைக் காட்டும் துர்கா தேவியை துதிப்பதையே சண்டி காயத்திரி என்பார்கள். நம்முடைய மனதில் உள்ள மாயையை ஒழித்திட தினமும் இருபது முறை சண்டி காயத்திரியை படிக்க வேண்டும் என்பார்கள். இதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும்போதுதான் ஒருவர் பிரும்மன் என்ற நிலையை அடைவார். அங்கிருந்தே மாயையை விளக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். அந்த நிலையே ஆனந்தம் என்பது. அந்த நிலைக்கு அதிபதியானவளே ஆனந்தி எனும் தேவி. அவளே மாயையை அழிக்கும் சாமுடா தேவி என்பவள். இந்த நவாக்ஷாரி மந்திரத்தின் தேவதைகள் யார் தெரியுமா? அவர்களே மகா காளி, மகா லஷ்மி, மற்றும் மகா சரஸ்வதியானவள். சப்த சாதியின் முக்கிய மந்திரமே நவாக்ஷாரி மந்திரம். நவாக்ஷாரி மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சப்த சதியை படித்தால் அதற்க்கு பூரண பலன் கிடைக்காது. (அந்த ஸ்லோகங்களை நான் பிரசுரிக்கவில்லை- சாந்திப்பிரியா ).
...............தொடரும்