சண்டி சப்த சதி -1
சாந்திப்பிரியா
சண்டி சப்தசதி என்பது என்ன? தேவி உபாசனைகளைக் குறிக்கும் தேவி மகாத்மியம் எனும் மந்திர நூலாகும். 400- 500 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய முனிவரால் இயற்றப்பட்டது. பதிமூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு உள்ள இந்த பாராயண நூலில் உள்ள 700 ஸ்லோகங்களில் காணப்படும் ஒவ்வொரு சொல்லும் சக்தி மிக்கது. மந்திர சக்தி வாய்ந்தது. சப்த சதி என்பதற்கு எழுநூறு என்ற அர்த்தம் உண்டு. சப்தசதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும். இதை முறைப்படி துதித்து ஸ்தோத்திரம் செய்தால் வேண்டியப் பலனை அடையலாம் என்ற நம்பிக்கை உண்டு.
இந்த ஸப்த சதியை முறைப்படி படித்து பாராயணம் செய்தால் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும், பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் தம்மையே அறியாமல் ஏற்படும் பீதி மற்றும் அச்சம் விலகும்.
தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு ஒன்பது நாட்கள் ஊசி மீது தவத்தில் இருந்த பராசத்தியானவள் தானே மஹிஷாசுரமர்தினியாகவும் அடுத்த மூன்று நாட்கள் மகாலஷ்மியாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் இருந்து தவம் புரிந்து அசுரர்களைக் கொன்று அழித்தாள்.
தேவி உபாசனைக்கு உரிய அனைத்து நூல்களிலும் சிறந்ததே தேவி சப்த சதி என்பதாகும். பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம், மத்தியம சரிதம் மற்றும் உத்தம சரிதம் என மூன்று பாகங்களாக உள்ளது.
முதல் பாகத்தில் முதல் அத்தியாயம் (1) மட்டுமே உள்ளது. அது பிரும்மாவினால் படைக்கப்பட்ட இரண்டு அசுரர்களான மதுகைடபர் வதத்துடன் முடிவடைகின்றது.
அடுத்த பாகத்தில் அத்தியாயம் இரண்டு முதல் நான்குவரை (2-4) உள்ளது. இதில் மகிஷாசுரமர்தனின் வதம் உள்ளது.
மூன்றாவது பாகத்தில் அத்தியாயம் ஐந்து முதல் பதிமூன்றுவரை (5-13) உள்ளது. இது அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.
இந்த பாராயணத்தில் உள்ள மூன்று வடிவு கொண்ட பராசக்தியின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரிலும் அவளை அழைப்பார்கள்.
இந்த சரிதத்தை பாராயணம் செய்வதின் மூலம் மூன்று வேதங்களான ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தை பாராயணம் செய்தப் பலனைத் தரும் என்பது மட்டும் அல்ல அக்னி, வாயு மற்றும் சந்திரன் என்ற மூன்று தத்துவங்களையும் குறிப்பதாகும்.
சப்த சதி என்பது ஏழு சதி எனும் தேவதைகளையும் குறிக்கும் என்பதாக நம்பப்படும். அந்த ஏழு தேவிகள் யார் என்பதை விவரமாக தெரிவிக்கவில்லை. அது குறித்து இரண்டு அபிப்பிராய பேதங்கள் உள்ளன. ஒரு சாரர் அந்த ஏழு சதிகள் நந்தா, சாகாம்பரி, பீமா, ரத்த தந்திகா, துர்கா, பிராம்மரி மற்றும் சதாக்ஷி என்று நம்பினாலும் அந்த சதிகள் பிராம்மி, வராஹி, வைஷ்ணவி, சாமுண்டா, மகேஸ்வரி, கௌமாரி மற்றும் இந்திராணி என்பவர்களே என்பதை விவரம் அறிந்தவர்களும் பெரும் பண்டிதர்களும் கூறுகிறார்கள். அதுவே சரியானதாகவும் இருக்கலாம்.
தேவி சப்த சதி என்பது ஏதோ செளந்தர்யலஹரி போன்றது அல்ல. இதனை பாராயணம் செய்யத் துவங்கும் முன் அதை நல்ல குருவிடம் இருந்தே முறைப்படி தீக்ஷை எடுத்துக் கொண்டு துவங்க வேண்டும்.
.........தொடரும்