கிராம தேவதைகள் - 24
சுந்தரபாண்டியம் ஆலயத்தில் உள்ள சிலை
சுந்தரபாண்டியம்
வைகுண்டமூர்த்தி
சுந்தரபாண்டியம்
வைகுண்டமூர்த்தி
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் மதுரையில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் உள்ளதே சுந்தரபாண்டியம் எனும் கிராமம். அந்த இடத்தை மூன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாரவர்ம பாண்டியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒரு முறை அந்த ஊரின் அருகில் இருந்த காட்டின் வழியே ஒரு வயதான தம்பதியினர் நடந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களது எதிரில் திடீரென ஒரு எரும்புப் புற்று தோன்றியது மட்டும் அல்லாமல் அது வளரவும் துவங்கியது. ஆகவே ஆவலினால் அதற்குள் என்ன உள்ளது என்பதைப் பார்க்க அந்த வயதானவர் தனது வாளை புற்றில் நுழைத்துப் பார்க்க அது ஒரு கல்லில் மோதி அதில் இருந்து ரத்தம் வந்ததாம். ஆகவே ஊருக்குள் சென்று கிராமத்தினரை அழைத்து வந்து அந்த புற்றை விலக்கி விட்டுப் பார்த்தபோது அங்கு வைகுண்ட மூர்த்தி அவர் மனைவிகளுடன் சிலையாக இருந்தார். அதை வெளியில் எடுத்தப் பின் அது குறித்து மன்னனிடம் கூற அவரும் அங்கு வந்து அதைப் பார்த்துவிட்டு அங்கு ஆலயம் எழுப்பினார் . அதன் பின் அதன் அருகில் இருந்த மலையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியால் அந்த மலை மீது இருந்த பெரிய கருப்பச்சாமி ஆலயத்தில் இருந்த பெரிய கருப்பச்சாமியின் சிலை அடியோடு வெளி வந்து அந்த ஆலயத்தின் முன் விழுந்தது. ஆகவே வைகுண்ட சாமியின் அனுமதியோடு அவருக்கும் அங்கு ஒரு ஆலயம் அமைத்தனர். அது முதல் பெரிய கருபச்சாமி வைகுண்ட சாமிக்கு உதவி வருகிறார். மணப்பாறை கிராமத்தில் மாமுண்டிக் கறுப்பர் என்பவருக்கும் ஆலயம் இருந்தது. அவர் சுந்தரபாண்டியத்துக்கு அடிக்கடி வருவது வழக்கம். ஆகவே அவரையும் பெரிய கருப்பச்சாமி மூலம் வைகுண்டர் அங்கு வந்து தங்குமாறு அழைத்தார். அங்கு வர சம்மதித்த மாமுண்டி கருப்பரோ தான் வரத் தயாராக உள்ளதாகவும், ஆனால் பெரிய கருபச்சாமி தனது உத்தரவையும் மதிக்க வேண்டும் என்று கூற அதற்கு ஒப்புக் கொண்டவுடன் அவரும் அங்கு வந்தார்.
அந்த காலத்தில் ஒரு சமயம் மந்திரக் கலை தெரிந்து இருந்த பக்கத்து நட்டு கேரளத்து அரசன் தனது சக்தியினால் சுந்தரபாண்டியத்தில் மழை பெய்யாமல் மழையை கட்டி வைத்து விட்டான். ஆகவே மாமுண்டி கருப்பு கேரளாவுக்குச் சென்று சொல்ல முடியாத வயிற்று உபாதையை மன்னனின் மனைவிக்குத் தர மன்னன் தனது மனைவியின் உபாதையைத் தீர்க்க மாமுண்டிக் கருப்பின் உதவியை நாடினார். அவரோ மன்னன் மந்திரத்தினால் கட்டி வைத்து இருந்த மழையையும் நீரையும் அவிழ்த்து விட்டால் தான் அதை தீர்ப்பதாகக் கூற மன்னனும் அதை செய்ய சுந்தரபாண்டியத்தில் பெரும் மழை பெய்து நாடு செழிப்படைந்தது.
இன்னொரு முறை அந்த ஆலயத்தின் வழியே சென்ற ஆங்கிலேயன் அந்த ஆலயத்தை அவமதிக்க பெரிய கருப்பச்சாமி அவன் குதிரையை ஆகாயத்தில் தூக்கி அடித்தார். அந்த ஆங்கிலேயன் ஆலயத்தின் சக்தியை அறிந்து கொண்டு தன் குதிரையை அந்த ஆலயத்துக்கே தந்து விட்டுச் சென்றான். அதை குறிக்கும் வகையில் ஆலயத்தில் பதினைந்து அடி உயர குதிரையின் சிலை காணப்படுகிறது.
அந்த ஆலயத்தில் அவர்களைத் தவிர பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன், லாட சன்யாசி, ஏழு கன்னிகைகள், பூ மாலை ராஜா, மாடத்தி, மாடசாமி, இருளப்பசாமி , வீரபத்ரன், மீனாக்ஷி, உத்திரகாளி, பத்ரகாளி மற்றும் மாரியம்மன் போன்றோரின் சிலைகளும் உள்ளன. அவர்களைத் தவிர அந்த ஆலயத்தைக் கண்டு பிடித்த வயதான தம்பதியினர்களுடைய சிலையும் உள்ளது.
ஆலயத்தின் வெளியில் உள்ள வேப்ப மரத்தடியில் சுந்தர மகாலிங்கம் உள்ளது. ராக்சி அம்மனையும் பேச்சியம்மனையும் குழந்தை வரம் கேட்டு வணங்குகிறார்கள். வைகுண்ட மூர்த்தியை பேய் பிசாசு தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்க வணங்குகிறார்கள். பெரிய கருப்பணச்சாமிக்கு ஆடு வெட்டப்பட்டு அதன் ரத்தம் ஒரு பாத்திரத்தில் பிடிக்கப்படுகின்றது. அதனுடன் அரிசியை கலந்து அவருக்கு படைக்கின்றார்கள். அதன் பிறகு சாமியாடிகள் அதை எடுத்து அருகில் உள்ள புளியமரத்தின் மீது உள்ளதாக கருதப்படும் பேய் பிசாசுகளுக்கு என தூக்கி எறிவார்கள். அப்படி போடப்படும் அரிசி உருண்டைகள் பூமியில் திரும்ப விழுவது இல்லையாம். தமிழ் புது வருடப் பிறப்பன்று விழா நடைபெறும்.
-----------------------------
பின் குறிப்பு :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராம ஆலயமான சுந்தரபாண்டியத்தில் பெரியகோயில் என்றழைக்கப்படும் வைகுண்ட மூர்த்தி ஆலயத்தில் - ஒரே ஆலயத்தில் - தர்மசாஸ்தாவாகவும் (ஐயப்பனாகவும்), அய்யனாராகவும் இருவேறு உருவங்களில் எழுந்தருளி அப்பகுதி மக்களை காத்து வருகிறார். இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள குதிரை பீடத்தில் வைகுண்டமூர்த்தி அமர்ந்து கொண்டு ஐயப்பன் உருவில் பரிவேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. வைகுண்டவாசியான வைகுண்டமூர்த்தியினர் பூலோக உயிர்களை காப்பதற்காக பூலோகத்தில் வந்து நிலை கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை.
மதுரையில் இருந்து சுந்தரபாண்டியத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன - சாந்திப்பிரியா