கிராம தேவதைகள் - 18
மேலாரப்பனூர்
தவசி ஆண்டி
தவசி ஆண்டி
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
மதுரை அருகில் உள்ளதே திருமங்கலம் என்கிற கிராமம். ஒரு காலத்தில் தவசி ஆண்டி என்பவர் உயர் ஜாதியினரால் வணங்கப்பட்டு வந்திருந்தார். ஆனால் இன்றோ அவரை தலித்துக்களே வணங்குகின்றனர். அந்த தேவதைக்கு ஆலயம் இல்லை. அலங்கரிக்கப்பட்டு உள்ள ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள கல்லையே தவசி ஆண்டி என வணங்குகின்றனர். அவர் சக்தி வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையும் உள்ளது. தவசி ஆண்டி அந்த ஊருக்கு எப்படி வந்தார் என்பதோ அல்லது அந்த ஆலயத்தின் பண்டிதரும், ஆலயத்தின் சாமியாடியும் ஏன் தலித்துக்களாகவே உள்ளனர் என்பதோ யாருக்கும் தெரியவில்லை. அவருடைய அருளினால்தான் தம் நிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்படுகின்றது என கிராமத்தினர் நம்புகின்றனர். ஆகவே தமது விளைச்சலில் ஒரு பகுதியை அவருக்கு காணிக்கையாக அர்பணித்து விடுவார்கள். யார் எவ்வளவு கொடுத்தனர் என்ற விவரம் எழுதி வைக்கப்பட்டு விடுகின்றது.
கார்த்திகை மாத மூன்றாம் வெள்ளிக் கிழமையில் ( நவம்பர்- டிசம்பரில்) தவசி ஆண்டியின் விழா நடைபெறும். அந்த ஆலையத்துக்கு தரப்பட்ட தானியங்கள் விற்கப்பட்டு அந்தப் பணத்தில் வாழைப்பழங்கள் வாங்கி வரப்படும். சாதாரணமாக ஐம்பதாயிரம் வாழைப் பழங்கள் வாங்கப்படும். அந்த பண்டிகை தினத்தன்று ஆலய பூசாரியும் சாமியாடியும் உணவு அருந்தாமல் விரதம் இருப்பார்கள். இரண்டு கறவை மாடுகள் ( பெண் மாடுகள்) கொண்டு வரப்பட்டு அங்கு கட்டி வைக்கப்படும் . காலை முதல் அதன் பாலை சுரக்க விடாமல் அதன் காம்பின் மீது எதோ மந்திரித்த வீபுதியை தூவுவார்களாம். அதன் கன்று கூட பாலை அருந்தாது.
உள்ளூரில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ள தவசி ஆண்டியின் ஆபரணங்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் எடுத்துச் செல்லப்படும். அவர்கள் அதை வணங்குவார்கள். கிராம எல்லைவரை அதனுடன் பெண்களும் செல்வார்கள். ஆனால் ஆலயத்துக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதினால் அதன் பின் அவர்கள் அவரவர் வீட்டுக்குத் திரும்பி விடுவார்கள். நாடு இரவில் மாட்டின் பாலைக் கறந்து அதனுடன் சிறிது பழத்தைக் கலந்து அபிஷேகம் செய்வார்கள்.
அதன் பின் அனைத்து ஆண்களும் அங்கு தேவதை முன் கூடி நின்று ஊரில் '' மழையும் தண்ணீரும் வேண்டும். எங்களுக்கு நல்ல விளைச்சல் வேண்டும். அதற்கு நீ அருள் புரிந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் . இதன் அடையாளமாக ஏதாவது ஒரு சமிக்கையை எங்களுக்குக் காட்ட வேண்டும் '' என அவரிடம் வேண்டுவார்கள். அந்த ஆலயத்தின் பக்கத்தில் உள்ள ஆல மரத்தில் இருந்து பல்லி கத்தினால் அவர் அருள் கிடைத்து விட்டது என்று அர்த்தம். அந்த சப்தம் வர நேரமானால் கிராமத்தில் எதோ தவறு நடந்து விட்டதாகக் கருதுவார்கள். அந்த சப்தம் வரும் வரை இரண்டு நாளானாலும் அங்கேயே காத்துக் கிடப்பார்கள். சப்தம் வந்த பின்னரே அங்குள்ள சாமியாடிக்கு அனைவரும் நமஸ்காரம் செய்வார்கள். எத்தனை நேரம் ஆனாலும் பல்லியின் சப்தம் வராமல் விழாவை விட்டுப் போக மாட்டார்கள்.
அது போலவே ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர் பிரச்சனைக்கும் பதில் கேட்டு காத்திருப்பார்கள்.
விழா முடிந்தப் பின் வாழைப் பழங்களை அவரவர் கொடுத்த காணிக்கைக்கு ஏற்ப கிராமத்தினருக்கு பகிர்ந்து கொடுப்பார்கள்.
--------------
பின்குறிப்பு:-
மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பாதையில் உள்ளது மேல் உரப்பனூர் கிராமம். இந்த கிராமத்திலும் மதுரையிலும் தவசி ஆண்டி எனும் காவல் தெய்வத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது என்பதே உண்மை. அதன் காரணம் ஒரு காலத்தில் ஜாதி பேதம் இன்றி அனைவராலும் வணங்கப்பட்ட காவல் தெய்வம் அவர்.
தவசி ஆண்டி யார், அவர் எங்கிருந்து வந்தார், எப்படி கிராமக் காவல் தெய்வமானார் என்பதைப் பற்றிய விவரம் யாருக்கும் தெரியவில்லை. அவருடைய உருவப் படமும் கிடைக்கவில்லை. ஆனால் தவசி ஆண்டியைப் பற்றி கூறப்பட்டு வரும் கிராமிய வாய்மொழிக் கதைதான் மேலே கூறப்பட்டுள்ள கதை.
அவரைப் பற்றி கிராம மொழி ஒன்று உண்டு . அது - கண்மாய் கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்திருந்து, கழனியை (நிலம்) செழிக்க வைத்து, பசியில்லாது இருக்க கஞ்சி ஊற்றுகிறார். -சாந்திப்பிரியா