கிராம தேவதைகள் - 15
அறியக்குறிச்சி வெட்டுடையார் காளி
(படம் நன்றி : K Senthil Sivan, Blue Chip Technologies
Pvt Ltd & Lite Technology Trainers Pvt Ltd.)
அறியக்குறிச்சி
வெட்டுடையார் காளி
(படம் நன்றி : K Senthil Sivan, Blue Chip Technologies
Pvt Ltd & Lite Technology Trainers Pvt Ltd.)
அறியக்குறிச்சி
வெட்டுடையார் காளி
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
சிவகங்கை நகரில் இருந்து 15 கிலோ தொலைவில் உள்ளது அறியக்குறிச்சி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள ஆலயம் பற்றியக் கதை இது. ஒரு காலத்தில் அந்த இடத்தை சுற்றி நிறைய காடுகளே இருந்தன. ஒருமுறை கருப்ப வேலர் மற்றும் கரி வேலர் என்ற இரண்டு சகோதரர்கள் காட்டில் கிழங்குகளை பிடுங்கி வரச் சென்றார்கள். அவர்கள் ஒருமுறை தோண்டிய இடத்தில் அவர்களுக்கு ஒரு ஐய்யனார் சிலை கிடைத்தது. அதை அவர்கள் வெட்டுடைய ஐய்யனார் எனப் பெயரிட்டு அங்கேயே பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர். பின்னர் கரி வேலர் கேரளாவுக்குச் சென்று மந்திரக் கலையை கற்று அறிந்து வந்தார். வந்தப் பின் ஐயனாருக்கு முன்னால் பூமியில் எதோ எழுதி உள்ளதைக் கண்டார். அவை காளியை ஆராதிக்கும் மந்திரங்கள் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே தனது மந்திர சக்தியினால் அவர் அங்கேயே ஒரு காளியின் உருவை படைத்து ஐயனாருக்கு அருகில் வைத்தார். அவளை வெட்டுடைய காளி என அழைத்தார்.
அந்த ஆலயம் பற்றிய இன்னொரு கதை இது. சிவகங்கை ஆண்டு வந்த மன்னனான முத்து வடக நாதர் என்பவர் ஆங்கிலேய அரசர்களால் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி வேலு நாச்சியார் என்பவர். கொல்லப்பட்ட தனது கணவருக்கு இறுதிக் காரியங்களை செய்தப் பின் அவளைப் பிடிக்க வந்த ஆங்கிலேயப் படையினரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தாண்டவராயன் என்ற மந்திரியுடன் காட்டிற்குத் தப்பி ஓடினாள். காட்டில் ஒளிந்து கொண்டாள். ஆனால் அவளைத் துரத்தி வந்த ஆங்கிலேயப் படையினர் அறியக்குறிச்சிக்கு வந்தபோது அவர்கள் உடையால் என்ற பெயரைக் கொண்ட இடைசிப் பெண்ணை சந்தித்தார்கள். அவளிடம் ராணி ஒளிந்துள்ள இடத்தின் விவரத்தைக் குறித்துக் கேட்டபோது அவள் அதை கூற முடியாது என்றாள். ஆகவே அவர்கள் கோபமடைந்து அவளை அங்கேயே சிரச்சேதம் செய்தனர். அவர்கள் சென்றதும் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்த அரசி அவளுக்கு வெட்டுடையார் காளி என்ற பெயரில் அங்கேயே ஆலயம் எழுப்பினாளாம். அவள் எட்டு கைகளுடன் காணப்படுகிறாள். அவளுக்கு தன்னுடைய அனைத்து நகைகளையும் ராணி போட்டு விட்டாளாம். எவர் தவறு செய்தாலும் அவர்களை அந்த காளி கடுமையாக தண்டிப்பாளாம் . அங்கு வருபவர்கள் அவளுக்குப் பின்புறத்திலுள்ள கூண்டில் பணங்களைப் போட்டு அவளிடம் தமக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு வேண்டிக் கொள்வார்களாம். அது போலவே அங்கு வந்து வேண்டிக்கொள்ளும் காதலர்கள் ஒன்று சேர்வார்களாம். எவர் மீதாவது புகார் வந்தால் அதை காளியிடம் வந்து கூறி நியாயம் கேட்கும் மக்களுக்காக அந்தக் காளி எட்டு நாட்கள் தவணை தருவாளாம். எவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதோ அவர் அந்த எட்டு நாட்களுக்குள் வந்து தம்முடைய வாதத்தை எடுத்து வைத்தால் அல்லது தமது தவறுக்கு மன்னிப்புக் கேட்டால் அனைத்தையும் ஆராய்ந்து அதற்கான நியாயமான தீர்ப்பை காளி தருவாளாம்.
ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் சோனை கருப்பசாமி காளிக்கு உதவி செய்பவராகவும், அவளுடைய பாதுகாவலராகவும் உள்ளார். இந்த ஆலயம் காளிக்கே மகத்துவம் வாய்ந்தது என்றாலும் அந்த ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் வெட்டுடைய ஐயனாரைதான் வணங்க வேண்டும். அந்த ஆலயத்துக்குள்ளேயே சோலட்டுக் காளி, கறுப்பர் மற்றும் பைரவருக்கும் சிறு ஆலயங்கள் உள்ளன. காலை ஆறு முதல் மாலை ஆறுவரை ஆலயம் திறந்து உள்ளது. பங்குனி மாத திருவாதரையில் இருந்து பங்குனி மாதம்வரை பத்து நாட்கள் ஆலயத்தில் விழா நடைபெறுகின்றது. வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆலயத்தில் கூட்டம் அலை மோதுமாம்.
--------------------
பின்குறிப்பு:-
இந்த கிராமம் குறித்தோ, ஆலயம் குறித்தோ மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த கிராமத்துக்கு செல்ல சிவகங்கை ரயில் நிலையம், நாட்டரசன் ரயில் நிலையம் மற்றும் பன்னான்குடி ரயில் நிலையங்களில் இறங்கிச் செல்லலாம். இந்த கிராம ஆலயம் எழும்பிய காலம் தெரியவில்லை என்றாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என கிராமத்தினர் கருதுகிறார்கள் - சாந்திப்பிரியா