கிராம தேவதைகள் - 16
சலுப்பை மேல் அழகர் ஆலய முகப்பு
சலுப்பை
சலுப்பை
துறவு மேல் அழகர்
[ Original Article in English by : P.R. Ramachandar
Translated into Tamil by : Santhipriya ]
கும்பகோணத்தில் இருந்து 37 கிலோ தொலைவில் உள்ளது பெரம்பலூர். பெரம்பலூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே சலுப்பை எனும் கிராமம். துறவு என்றால் உள்ளூர் பாஷையில் அழகு எனவும் துறவு மேல் அழகர் என்றால் மலை மீது உள்ள அழகான ஆண் என்று அர்த்தம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இடத்தில் பிராமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு கிணறும் அங்கு இருந்தது. அதில் இருந்துதான் பிராமணக் குடும்பத்துப் பெண்கள் நீரை எடுத்துச் செல்வார்கள். ஒரு முறை அந்த கிராமத்துக்கு ஒரு துறவி வந்தார் . அங்கிருந்த மலை மீது அமர்ந்து கொண்டு அவர் தவத்தில் இருந்தார். அதை அறியாமல் அங்கு வந்த இரண்டு பெண்கள் கிணற்று நீரில் இருந்து தண்ணீர் எடுத்தபோது சிறிது தண்ணீர் துறவி மீது கொட்டி விட்டது. அதனால் கோபம் அடைந்தவர் அவர்களை உருவமில்லாமல் போய்விடுவார்கள் என சபித்து விட அவர்கள் உருவமில்லாமல் ஆகிவிட்டார்கள். அதன் பிறகு அவரும் மாயமாகிவிட்டார்.
அது முதல் அந்த கிராமத்தில் இருந்தவர்கள் அந்த முனிவரை துறவு மேல் அழகர் என அழைத்து அவரை வணங்கலாயினர். கிணற்றையும் மூடிவிட்ட பின்னர் அந்த துறவிக்கு உருவம் இல்லை என்பதினால் ஒரு கல்லை மூடிய கிணற்றின் மீது வைத்து அதையே அந்த முனிவர் என நினைத்து வணங்கி வரலாயினர். அந்த ஆலயத்தில் சிவனுடைய அனைத்து சின்னங்களும் வைக்கப்பட்டு அவரை சிவனாகவே வழிபடலாயினர். அழகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பதினால் அவரை நேரில் பார்த்தவாறு இருக்காமல் நந்தி வேறு இடத்தில் தள்ளி வைத்து விட்டார்கள். அழகர் ஆலயத்தின் இரு புறமும் வினாயகர் ஆலயங்கள் உள்ளன. அதில் உள்ள ஒரு வினாயகர் பெண்களைப் பாதுகாக்கும் வினாயகராக கருதப்படுகிறார்.
காலம் மாறியது. பிராமணர்கள் இருந்த இடங்கள் அழிந்தன. ஆகவே அங்கிருந்த பிற மக்கள் உள்ளூரில் இருந்த விஷ்ணுவின் ஆலயத்தை அந்த ஆலயத்துக்குள் மாற்றி விட்டனர். முனிவருடைய தவத்தை இரண்டு பெண்கள் கலைத்து விட்டதினால் அந்த ஆலயத்தில் இளம் வயதுப் பெண்கள் வருவது இல்லை. ஆனால் குழந்தைகளும் வயதான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அழகர் ஆலயத்தில் இருந்து அறுபது அடித் தள்ளி ஒரு கூடம் உள்ளது. அதுவரைதான் பெண்கள் செல்ல முடியும். அந்த கூடத்தின் அருகில் உள்ள இடத்தில் வீரபத்திரசாமியின் சிலை உள்ளது. அவரே அந்த அழகர் ஆலயத்தைப் பாதுகாப்பவர். அங்கு பல திரி சூலங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு வரும் பக்தர்கள் தமது வேண்டுகோட்களையும், எவர் மீதும் புகார் கூற எண்ணினால் அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி அந்த காகிதத்தை அர்ச்சகரிடம் தர அதை அவர் அந்த சூலங்கள் மீது குத்தி வைப்பார். வீரபத்திரசாமி எவர் மீது தன்னிடம் புகார்கள் வந்துள்ளதோ அவர்களுடைய கனவில் யானை அல்லது குதிரையாக காட்சி தருவார். அடுத்த நாள் அவர்கள் பயந்து போய் ஆலயத்துக்கு வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்பார்கள்.
வீரபத்திரரைத் தவிர அங்கு மதுரை வீரன், எட்டுக் கைகளைக் கொண்ட செல்வ மாகாளியும் உள்ளனர். காளி பெண்களுக்கான வியாதிகளை குணப்படுத்துவளாம். ஆலயத்தில் வீரலி மரம் உள்ளது. அதில் பதினெட்டாம்படி கருப்பன் உள்ளதாக நம்புகிறார்கள். மதுரை வீரனுக்கும், பதினெட்டாம்படி கருப்பனுக்கும் மிருக பலிகள் தரப்படுகின்றன.
அழகருக்கு பெரிய விழா எடுப்பது இல்லை. தைபூச தினத்தன்று மட்டும் அவரை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். ஒரு விளக்கை மட்டும் அவர் முன் ஏற்றி வைப்பார்கள். ஆலயத்துக்கு அருகில் வீடுகள் கட்டப்படுவது இல்லை. காரணம் தியானத்தில் உள்ள முனிவரை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.
-------------------------------------
பின் குறிப்பு:-
ஒருபுறத்தில் கும்பகோணம் இருந்தாலும் மறுபுறத்தில் மீன்சுருட்டி சலுப்பை கிராமம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது - சாந்திப்பிரியா