Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Moral Story- 6

$
0
0
திக்குவாய் முனிவர் சொன்ன நீதிக் கதை -6
சாந்திப்பிரியா



பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் இருந்த ஒரு கதையைக் கூறி  நீதி வாக்கு சொன்னார் திக்குவாய் முனிவர். முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தை சோழ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான் . அவன் விஷ்ணுவிடம் மிக்க பக்தி கொண்டவன் .அடிக்கடி ஆலயத்துக்குச் சென்று பூஜைகளை செய்துவிட்டு வருவான்.அப்படி பூஜைகளை செய்யும்போது அவன் நிறைய தங்க மற்றும்  வெள்ளி அணிகலன்களையும்  பூக்களைப் போலவே போட்டு அர்ச்சனை செய்வான்.  வந்துள்ள பக்தர்களுக்கு  அவற்றை  பிரசாதமாக வினியோகித்து விடுவான். ஆகவே அவன் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி இருந்தது.

அவன் நாட்டில் விஷ்ணுசர்மா என்ற பண்டிதர் இருந்தார். அவர் ஏழை. ஆனால் அவரும் பெரும் விஷ்ணு பக்தரே. அவரும் ஆலயத்துக்கு வந்து பூஜை செய்வது உண்டு. ஒரு நாள் அவர் மன்னன் ஆலயத்தில் பூஜைகளை செய்யும்போது வந்தார். மன்னனின் பூஜை முடிந்ததும் தாம் கமண்டலத்தில் கொண்டு வந்த தண்ணீர் மற்றும் துளசிச் செடி இலைகளைப் போட்டே பூஜித்தார். அன்று என்னவோ தெரியவில்லை மன்னனின் பூஜைகளை எவரும் ரசித்துக் கூறவில்லை. விஷ்ணு சர்மாவின் பூஜை முடிந்ததும் அவரிடம் சென்று பிரசாதமாக தீர்த்தம் பெற்றுக் கொண்டு துளசி இலைகளை வாங்கிக் கொண்டு சென்றனர். அரசன் நினைத்தான் 'என்ன இது நான் எத்தனை அணிகலன்களை போட்டு பூசித்தேன். ஆனாலும் அனைவரும் விஷ்ணு சர்மாவிடம் அல்லவா சென்று பிரசாதம் பெற்றுக் கொண்டு சென்றனர். அவர் செய்யும் பூஜை நான் செய்வதை விடவா   உயர்ந்தது?'. எப்படியாக மனதில் கோபம் அடைந்தவர் என்னும் சில தினங்களில் அதே நிலை இருப்பதைக் கண்டார்  . கோபம் ஆத்திரமாக மாறிவிட்டது. அரசவையைக் கூட்டி அதற்கு ஒரு முடிவு கேட்டார். அரசவை பண்டிதர்  அரசன் செய்யும் பூஜை சிறந்ததா இல்லை அந்த ஏழைப் பண்டிதர் செய்யும் பூஜை சிறந்ததா எனப் பார்த்து விடலாம் என முடிவு செய்ய அரசரும் அந்த பண்டிதரும் ஒரு மண்டலம்  தினமும் அந்த ஆலயத்துக்குச் சென்று   பூஜை செய்ய வேண்டும். ஒரு   மண்டலத்துக்குப் பின் விஷ்ணு பகவான்  எவர் முன் பிரசன்னம் ஆவாரோ அவருடைய பூஜையே சிறந்தது என தெரிந்து கொள்ளலாம் என யோசனைக் கூற அதன்படி இருவரும் விஷ்ணுவின் முன் சென்று சங்கல்பம் செய்து கொண்டு அவரிடம் போட்டிக்கான பிராத்தனைகளையும் வைத்தப் பின்  பூஜைகளை மறுநாள் முதல் துவக்கினார்கள்.

தினமும் பூஜைகள் நடந்தன. மன்னன் விஷ்ணுவிற்கு பிடித்தமான விதவிதமான ஹோமங்களையும், பூஜைகளையும் செய்து பூஜைக்கு வந்த அனைவருக்கும் வேண்டிய அளவு பிரசாதம் கொடுத்து உணவும் போட்டு அனுப்பினார். மன்னன் பூஜைகள் செய்வத்தில் எந்த குறையும் வைக்கவில்லை. மனம் லயித்து, முழு மனதுடன் பூஜைகளை செய்தார். வந்தவர்கள் அனைவரும் திருப்தியுடன் உண்டப் பின்   மன்னனை வாழ்த்தி விட்டுச் செல்லலாயினர்.  ஆனால் மிகவும் கந்தலான அழுக்கான உடைகளை உடுத்தி நாட்ற்றமடித்துக் கொண்டு வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. விஷ்ணு சர்மாவோ வீட்டில் தான் சமைத்து விட்டு அங்கு வந்து எப்போதும் போல பூஜையை செய்தது விட்டுச்  தன் வீட்டுக்குத்தான் சாப்பிடச் சென்றார். ஆனால் அவருடைய பிரசாதத்தை வாங்கிக் கொள்ள நன்கு உணவு அருந்திய பின் எவர் காத்து இருப்பார்கள்?  ஆனால் அதுவரை மன்னன் காத்திருந்து அந்த நிலையை பார்த்தப் பின் மனதில் திருப்தியுடன் வீடு செல்வார்.  விஷ்ணு சர்மா வீட்டில் சென்றதும் தினமும் தான் செய்தது வைத்திருந்த உணவை  எவரோ அருந்தி விட்டுச் சென்று இருந்ததைக் கண்டார். ஆகவே காலை பூஜை முடிந்ததும் பட்டினி, இரவு மட்டுமே சமைத்து சாப்பிட்டார். அந்த நிகழ்ச்சி தினமும் தொடர்ந்தது. ஒரு மண்டலம் ஆயிற்று. கடைசி நாள் பூஜை முடிந்தது.  அனைவரும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கடைசி நாள் என்பதினால் மன்னனும் அனைத்தும் முடியும்வரை அங்கயே தங்கி இருந்தார். விஷ்ணு சர்மாவும் சற்று முன்னதாகவே பூஜைகளை முடித்து விட்டார். தன் வீட்டுக்கு சென்றவர் யாரோ ஒரு  தீண்டத்தகாதவன் போல இருந்தவன் வீட்டுக்குள் நுழைந்து  சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போவதைக் கண்டு அவரை நிற்குமாறு  கூவி அழைத்தார். வந்தவர் ஓடினார். விஷ்ணு சர்மா அவரை துரத்தினார். வந்தவன் ஆலயத்தின் முன்னாள் சென்று விழுந்தான். மன்னனோ மற்ற எவருமோ அவனிடம் சென்று என்ன ஆயிற்று எனக் கேட்கவில்லை. தூரத்தில் நின்றபடி விழுந்தவனை பார்த்தார்கள். துரத்தி வந்த விஷ்ணு சர்மாவோ ஓடிச் சென்று அவனை தூக்கி உட்கார வைத்தார். என்னும் பசிக்கின்றது என்றால் வீட்டுக்கு வா இன்னும் உணவு தருகிறேன் என்றார்.

அடுத்தகணம் அங்கு திருமால் அவர் முன் ஜொலித்தபடி  நின்று இருந்தார். அவரைக் கண்டதும் விஷ்ணு சர்மா அவர் முன் விழுந்து வணங்கினார்.  மன்னரும் மற்றவர்களும்  ஓடி வந்தனர். விஷ்ணுவை வணங்கினார்கள். விஷ்ணு கூறினார் 'மன்னா உன் பூஜையில் எந்தக் குறையும் இல்லை. அவற்றை நான் மனதார நிறைவாகவே ஏற்றுக் கொண்டேன். ஆனால் இங்கிருந்து சென்றதும் மற்ற வேளைகளில் அதை மறந்து விட்டேன்.  ஆனால் விஷ்ணு சர்மா செய்த பூஜை என் மனதில் அமைதியை ஏற்படுத்தியது, மனதில் என்னை மீறிய மகிழ்ச்சியை தந்தது. நாள் முழுவதும் அவர் செய்த பூஜையின் ரீங்காரம் என்னை தொடர்ந்தது. ஆகவே இருவரின் பூஜைகளுமே என்னை வந்தடைந்தாலும்,  அவற்ற்றை நான் ஏற்ற்றுக் கொண்டாலும் விஷ்ணு சர்மாவின் மந்திர ரீங்காரம் என்னை விட்டு அகல மறுக்கின்றது என்பதே உண்மை'எனக் கூறி அனைவரையும் ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.  மன்னன் வெட்கமடைந்தான். உண்மையை புரிந்து கொண்டான். விஷ்ணு சர்மாவுக்கு நிறைய பொருள் தந்து  தன் நாட்டு ஆலயங்களின் முதன்மை பண்டிதராக நியமித்துக் கொண்டான்.
நீதி  :    ஆண்டவனுக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றேதான்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>