Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Tapkeshwar mahadev temple, Dehradun

$
0
0
மகாபாரத யுத்தம் துவங்குவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது.  மனதில் அமைதி இல்லாமல் துரோணாச்சாரியார் தனது மனைவி கிரிபீயுடன் ஹிமயமலை அடிவாரங்களில் இருந்த காட்டில் சுற்றி அலைந்து கொண்டு எப்படியாவது சிவபெருமானின் அருளைப் பெற்று தான் வில் வித்தையில் சிறந்தவராக விளங்க வேண்டும் என துடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் அனைவருமே தேவ புருஷர்கள் என்பதினால் தெய்வங்களை வேண்டிக் கொண்டு அவர்களை நேரடியாக தரிசிக்க முடியும். அப்போது ஒருநாள் அவர் வனப் பகுதியில் ராஜ ரிஷி விஸ்வாமித்திரரை சந்தித்தார். அவரை வணங்கித் துதித்தப் பின் தனக்கு எப்படியாவது சிவபெருமானின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு அவர் தனக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் அவரிடம் கேட்டார். அதைக் கேட்ட விஸ்வாமித்திரரும் துரோணாச்சாரியாரிடம் அங்கிருந்து தொலை தூரத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ரிஷி கேசத்தில் ஒரு இடத்தில் கங்கையும் யமுனையும் கலந்து பாய்ந்தோடும் நதி இருக்கும் என்றும், அதன் பக்கத்தில்  கிளை நதியான தாம்ஸா எனும் நதி உள்ளதாகவும் (தற்போது டேராடூன் உள்ள இடம்)அதன் அருகில் ஒரு குகை உள்ளது என்றும் அதில் ஸ்வயம்புவாக சிவபெருமான் லிங்க உருவில் எழுந்து  உள்ளார் என்றும்,  தேவலோகத்தினர் அந்த குகைக்கு வந்து சிவபெருமானை வழிபட்டுச் செல்கிறார்கள் என்றும், அவர்களுக்கு சிவபெருமான் தரிசனம் தருவதாகவும், அங்கு சென்று தவத்தில் இருந்தால் சிவபெருமானின் ஆசிகள் கிடைக்கும் என்றும் அறிவுரைக் கூறினார். அதைக் கேட்டு மனம் மகிழ்ச்சி அடைந்த துரோணாச்சாரியார் தனது மனைவி கிரிபீயுடன் ராஜ ரிஷியை வணங்கித் துதித்தப் பின் உடனடியாக அங்கிருந்துக் கிளம்பி விஸ்வாமித்திரர் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார்கள்.

அற்புதமான சூழ்நிலையில் தாம்ஸா நதி ஓடிக் கொண்டு இருக்க அதன் அருகில் இருந்த குகையைக் கண்டு பிடித்து அதில் சென்று சிவலிங்கத்தை  பூஜித்து வணங்கிய பின் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவத்தை மேற்கொண்டார்கள். அந்த குகையை சுற்றி பல குகைகள் இருந்தன. அவற்றில் பல ரிஷி முனிவர்கள் அமைதியாக கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தார்கள். துரோணாச்சாரியார் பக்தியினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமானும் அவருக்கு  காட்சி தந்து  அவர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். துரோணாச்சாரியார் தான் வில் வித்தை பயில ஆசைக் கொண்டு உள்ளதினால், இந்த பூமியிலேயே மாபெரும் வில் வித்தையாளராக  ஆகவேண்டும் என்று வரம் கேட்டார். அதனால் தனக்கு வில் வித்தையை கற்றுக் கொடுக்க யாராவது தக்க ஆசானை அடையாளம் காட்டி  சிவபெருமான் அருள்  புரிய வேண்டும் என்றும் வேண்டினார்.

துரோணாச்சாரியார் வேண்டிக் கொண்டதை கேட்ட சிவபெருமானோ தானே துரோணாச்சாரியாருக்கு வில் வித்தை பயிற்சி தருவதாக வாக்கு தந்தப் பின் தினமும் அங்கு மனித உருவில் வந்து துரோணாச்சாரியாருக்கு வில் வித்தைப் பயிற்சி தந்தார். அதனால்தான் சிவபெருமானே ஆசானாக வந்து வில்வித்தையில் துரோணாச்சாரியாருக்கு பயிற்சி தந்ததினால் துரோணாச்சாரியாருக்கு இணையான வில் வித்தையாளர் யாருமே இந்த பூமியில் இல்லை என்பதாயிற்று.

 துரோணாச்சாரியார் வில் வித்தை பயிற்சி பெறச் செல்கையில் அவருடைய மனைவி   தனிமையில்  அமர்ந்து கொண்டு இருப்பார்.  சில நாட்கள் கழிந்ததும் அவளுக்கும் மனதில் சோகம் ஏற்பட்டது. இன்னும் எத்தனைக் காலம்தான் தனிமையில் இருக்க வேண்டும், நமக்கு என வாரிசு எதுவுமே இல்லையே  என வருந்தி  தனக்கு உள்ள துயரத்தை சிவபெருமானிடம் கூறி அழுதாள். அவள் மன நிலையை புரிந்து கொண்ட சிவபெருமானும் அவளுக்கு விரைவில் மகன் ஒருவன் பிறப்பான் எனவும், அதன் மூலம் அவளது  தனிமை விலகி விடும் என்றும் ஆறுதல் கூறினார். காலப்போக்கில் துரோணாச்சாரியார் தம்பதியினருக்கு அழகிய ஒரு ஆண்   குழந்தைப் பிறந்தது. அது பிறக்கும்போதே  குதிரைப் போலக் கனைத்துக் கொண்டே பிறந்ததினால் அதன் பெயரை அஸ்வத்தாமா என வைத்தார்கள். அஸ்வம் என்றால் குதிரை என்று அர்த்தம்.

அஸ்வத்தாமா சிறுவனாக இருந்தபோது அவன் வனத்தில் சென்று நண்பர்களுடன் விளையாடுவது உண்டு.  ஒருநாள் அவனுடைய நண்பன் (சிறுவன்) விளையாட தாமதமாக வந்தான். அதற்கான காரணத்தை அஸ்வத்தாமா அவனிடம் கேட்டபோது அந்த சிறுவனும், தனது தாயார் வீட்டில் சாணம் பூசிக் கொண்டு இருந்ததினால் அதை செய்து முடித்தப் பிறகுதான் தனக்கு அவளால் பாலைக் கொடுக்க முடிந்தது என்பதினால் பாலைக் குடித்து விட்டு வர தாமதமாகி விட்டது என்றான்.


 ஆனால் அஸ்வாதாமாவின் தாயாருக்கு மார்பில் பால் சுரக்கவில்லை என்பதினால் அவளால் அவனுக்குப் பால் கொடுக்க முடியவில்லை. (அந்த காலங்களில் சிறுவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயதுவரைக் கூட தாய்மார்கள் தனது மார்பில் இருந்து பாலைக் கொடுப்பது பழக்கம்). அதைக் கேட்ட அஸ்வத்தாமா ஆச்சர்யம் அடைந்தான். இன்னொரு நாள் அச்வதாமாவின் இன்னொரு நண்பன் தனது வீட்டில் இருந்து சூடான பாலைக் கொண்டு வந்தான். அதை அவன் அஸ்வதாமாவுக்கும் தர அதைக் குடித்தவன் அதன் சுவையில் மயங்கினான். அன்று வீடு திரும்பிய அஸ்வத்தாமா தனது தாயாரிடம் தனக்கும் பால் தருமாறு கேட்க அவளால் ஒன்றும் கூற முடியாமல் போய் அவனிடம் உண்மையைக் கூறி அழுதாள். அவர்கள் வீட்டில் பசுவும் கிடையாது என்பதினால் பசுவின் பாலைக் கூட தர முடியாமல்  சங்கடப்பட்டாள்.

அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்ட அவனுடைய  தந்தையான துரோணாச்சாரியார் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று அரசனிடம் இருந்து ஒரு பசுவை தானமாக பெற்றுக் கொண்டு வரச் சென்றார். ஆனால் அவருடைய அதிருஷ்டமோ வேறாக இருந்தது.  அரசன் அவருக்கு ஒரு பசுவை தானமாகத் தர மறுத்து விட மனம் ஒடிந்து போன துரோணாச்சாரியார் வனத்துக்கு திரும்பினார். அவர்க் கூறியதைக் கேட்ட அஸ்வத்தாமா துக்கம் அடைந்து  இனி தனக்கு தெய்வம் மட்டுமே உதவ வேண்டும் என்பதை புரிந்து கொண்டு  குகைக்குள் ஓடிச் சென்று அங்கு சிவலிங்கம் முன்னால் ஒற்றைக் காலில் நின்று அவர் அருளை வேண்டி தவம் இருக்கலானான். தன்னிடம் வந்து வேண்டிக் கொள்பவன் ஆறு வயது   கூட ஆகாத சிறுவன் என்றாலும் அவனுடைய மன உறுதி மற்றும் பக்தியைக் கண்டு வியந்து போன சிவபெருமானும் பார்வதியும் அவனுக்கு கருணைக் காட்ட   அந்த குகையின் மேல் கூரையில் இருந்து  லிங்கத்தின் மீது பால் வழிந்து ஓட விட்டார்கள். அஸ்வத்தாமா ஆனந்தத்துடன் அந்த பாலை எடுத்து வயிறு நிறைய குடித்தான்.  அது முதல் அந்த லிங்கம் மீது இருந்த மேல் கூரையில் இருந்து  பால் கொட்டி ஓடலாயிற்று. ஆகவே அது முதல் அந்த சிவபெருமானை (சிவலிங்கம்) தூதேஸ்வரர் அதாவது பாலை கொடுப்பவர் என்ற பெயரால் அழைக்கலானார்கள்.

இப்படியாக சில காலம் அந்த மூவரும் அங்கு இருந்தபோது ஒருநாள்  துரோணாச்சாரியார்  தங்களுக்கு மீண்டும் சிவபெருமான் காட்சி தர வேண்டும் என்று சிவபெருமானையே  துதித்து  வேண்டினார். அவர்களுடைய  வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர்கள் முன் காட்சி தர துரோணாச்சாரியார் அவரிடம் கூறினார் 'பெருமானே, எங்களுக்கு நீங்கள் இத்தனை நாட்கள் பலவாறு அருள் புரிந்து வந்துள்ளீர்கள். எனக்கு வில் வித்தையை கற்றுக் கொடுத்தீர்கள்.  எங்களுக்கு நல்ல மகனையும் பிறக்க வைத்தீர்கள். என் பிள்ளைக்கு அவன் விரும்பிய பாலைக் கொடுத்து  அவனுடைய மனதுக்கும் மகிழ்ச்சி தந்தீர்கள். எங்களுக்கு நீங்கள் இப்படியே நீங்காத அன்பை செலுத்தி வர வேண்டும்'  என்று கூறி அவருக்கு பால் அபிஷேகம் செய்து பூஜிக்க சிவபெருமான் கூறினார் 'துரோணாச்சாரியாரே, உங்களுடைய மனது புரிகிறது. ஆனால்  இனி  கலிகாலம் வெகு வேகமாக வந்து கொண்டு  இருக்கிறது.  ஆகவே நான் இனியும் இது  அபிஷேகத்தை இங்கு ஏற்கப்போவது இல்லை. இங்கு வந்து என்னை துதிக்கும் மக்கள் என் மீது  தண்ணீரை ஊற்றி அபிஷேகித்து பூஜிப்பார்கள். உங்களுக்கு என்னுடைய  ஆசிகள்  நிறைய இருக்கும்'என்று கூறி விட்டு மறைந்து போனார்.

 
அதற்கு சில காலத்துக்கு பிறகு துரோணாச்சாரியார் தன்  மனைவி மற்றும் மகனுடன் ஹஸ்தினாபுரத்துக்கு திரும்பிச் சென்று விட்டார். அந்த குகையின் மேல் பகுதியில் இருந்து லிங்கத்தின் மீது பால் ஊற்றிக் கொண்டே இருந்தது. ஆனால் அங்கு வந்த மக்கள் அந்தப் பாலை எடுத்துப் போய்  விற்கத் துவங்கினார்கள். ஒருநாள் பார்வதி இதைப் பார்த்துவிட்டு  சிவபெருமானிடம் அவசரம் அவசரமாகப் போய்  மக்கள் செய்யும் தவறை எடுத்துக் காட்ட அடுத்த வினாடியே பால் ஊற்று நின்று நீர் மட்டுமே விழலாயிற்று.  இப்படியாக அந்த குகையில் உள்ள சிவலிங்கத்தின் மீது மேல் கூரையில் இருந்து நீர் ஊற்றிக் கொண்டு உள்ளது.

இப்படிப்பட்ட வரலாற்றை கொண்டுள்ள  அந்த குகைதான் தப்கேஸ்வரர் எனும் சிவன் ஆலயம் ஆகும்.  உத்திராகண்ட்  மானிலத்தில் டேராடூன் நகரில் உள்ள  தப்கேஸ்வரர் ஆலயத்தின் குகையை  துரோண  குகை என்கிறார்கள். இந்த ஆலயம் நகர மையத்தில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர்  தொலைவில்தான் உள்ளது.  சிவராத்திரி பண்டிகையில் இந்த ஆலயத்துக்கு  செல்வது கடினம் எனும் அளவிற்கு கூட்டம் கூடுகிறது. மகாபாரத யுத்தம் நடைப்பெற்ற காலத்துக்கும் முற்பட்ட காலத்தை சார்ந்த  இந்த ஆலயம் துரோணாச்சாரியார் வில் வித்தை பயின்ற இடம். அஸ்வதாம பிறந்த இடம் . அவர்களுக்கு அருளிய ஸ்வயம்பு சிவலிங்கத்தின் காலத்தை  யாராலும் கணிக்க முடியவில்லை. குகையில் உள்ள சிவலிங்கத்தின் மீது தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கும்   நீர் உடனடியாக பூமியில் ஊடுருவி மறைந்தும் விடுகிறதாம். 

Slide 4

Slide 6

Slide 5

Slide 7
படங்கள் நன்றிதப்கேஸ்வரர் ஆலயஇணைத்தளம் 

ஆலய விலாசம்
Jangam Shivalaya
Paltan Bazar , 
Dehradun - 248001 

Contact Persons

( 1 ) Digambar Krishana Giri Ji
Telephone - +91-135-2650466
Mobile : +91-9412053466 

( 2 ) Bharat Giri Ji
Telephone - +91-135-2557837
Mobile : +91-9719141214

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>