Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Tirupathi Sree Venkateswarar - 21

$
0
0
சாந்திப்பிரியா  

விஷ்ணு குபேரரிடம் கடன் வாங்கியக் கதை 

மன்னனிடம் இருந்து திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் ஸ்ரீனிவாசருக்கும் வகுளா தேவிக்கும் ஆனந்தம் ஆகி விட்டது. அது போல பத்மாவதியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் . இனி அடுத்தக் காரியமாக திருமணத்துக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
ஆனால் ஸ்ரீனிவாசரின் திருமணம் நடைபெற உள்ள செய்தி கிடைத்ததும் வைகுண்டத்தில்  இருந்த நாராயணன் கவலையோடு அமர்ந்து இருந்தார். அப்போது நாரதர் அங்கு அவரைக் காணச் சென்றார். அவர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர் ' நாராயணா நீங்கள் ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள்? பூலோகத்தில் மனித உருவில் ஸ்ரீனிவாசராக உள்ள நீங்கள் விரைவில் லஷ்மியை திருமணம் செய்து கொண்டு உங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் வைகுண்டத்துக்கு திரும்பி வர உள்ளீர்கள். ஆகவே இப்போது ஏன் வினசத்துடன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதைக் கேட்ட நாராயணனோ ' நாரதரே இப்போது  வைகுண்டத்தில் லஷ்மி தேவி இல்லாததினால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான செல்வம் இல்லை. தேவலோகத்தில் உள்ள அனைவரும் என் திருமணத்துக்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரிப்பது என்றால் எத்தனை பணம் தேவையாக இருக்கும். ஆகவேதான் எப்படி அதற்கான ஏற்பாடுகளை செய்வது என யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்' என  விஷ்ணு பகவான் கூறினார். இங்கு செல்வம் இருந்தால்தானே அங்கு பூமியிலும் ஸ்ரீனிவாசனின் கையில் பணம் புழல ஏற்பாடு செய்ய முடியும். அதற்கு என்ன செய்வேன் என்றுதான் யோசனை செய்கிறேன்' என்று கூறினார்.

 விஷ்ணு தனது கவலையை நாரதரிடம் தெரிவித்தார் 

இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். அவ்வப்போது  விஷ்ணுவையும் லஷ்மியையும் சம்மந்தப்படுத்தி கதை செல்வதினால், இந்தக் கதை நிகழ்ந்தது பூமியிலா இல்லை தேவ லோகத்திலா என்ற சந்தேகம் எழக் கூடும்.  கதை நடந்தது பூமியில்தான். ஆனால் அதில் இரண்டு தெய்வங்கள்  ஸ்ரீனிவாசர் உருவிலும், பத்மாவதி உருவிலும் சம்மந்தப்பட்டு உள்ளனர்.  அவர்கள் இருவரும் மனித உடலில் பிறந்து சாப விமோசனம் அடைகிறார்கள் என்பது மட்டும் அல்ல கலி யுகத்தைக் காக்க விஷ்ணுவிற்கு  தொண்டைமான் எனும் மன்னன் மூலம் ஒரு ஆலயம் அமைவதும் அவர்கள் கதை மூலமே நடைபெறுகிறது, அவர்கள் மூலமே விஷ்ணுவும், லஷ்மியும் பூமியில் உள்ளவர்களுக்கு தரிசனம் தந்துள்ளார்கள் என்பதெல்லாம் உண்மை என்பதினால் பூலோகக் கதை  மற்றும் தேவலோகக் கதை என இரண்டுமே அவ்வப்போது கலந்தே வருகிறது.
வைகுண்டத்தில் விஷ்ணுவிற்கு செல்வம் வந்தால்தான் பூவுலகிலும்  ஸ்ரீனிவாசராக மனித உருவில் உள்ளவருக்கும் யார் மூலமாவது செல்வம் கிடைக்கும்.   வேடராக உள்ள அவரை நம்பி யார் பெரும் அளவிலான பணத்தைக் கடன் கொடுப்பார்கள்? ஆகவே ஸ்ரீனிவாசருடன் பத்மாவதிக்கு திருமணம் ஆகும் வேளையில் தேவ லோகத்திலும் பெரும் அளவிலான திருமண வைபவம் நடைபெறும், அப்போது அனைவரையும் அங்கு விஷ்ணு பகவான் திருப்திபடுத்தி அனுப்ப வேண்டும் என்பதை இப்படிக் குறிப்பிட்டு உள்ளார்கள். உண்மையில் பூலோகத்தில் ஸ்ரீனிவாசருடன் பத்மாவதிக்கு நடந்த திருமணத்தில் அப்படிப்பட்ட செலவுகள் நடைபெறவில்லை. ஸ்ரீனிவாசருடன் சம்மந்தப்பட்டவர்களும், பத்மாவதியுடன் சம்மந்தப்பட்டவர்களும் பூலோகவாசிகளாக இருந்தார்கள். பூமியில் விஷ்ணுவின் அவதாரப் புருஷனான ஸ்ரீனிவாசருக்கு திருமணம் நடந்த அதே வேளையில் மேலுலகில் விஷ்ணுவிற்கும் லஷ்மியின் அவதாரமான வேதவதிக்கும் திருமணம் சம்பிரதாயமாக நடைபெற்றது. அதன் பின் விஷ்ணுவின் ஆலயம் திருப்பதி வெங்கடேசர் என்ற பெயரில் எழுகிறது என்பதே திருப்பதி ஏழுமலையானின் கதை. இனி கதை தொடர்கிறது.
 

குபேரனிடம் திருமால் கடன் பத்திரம்  
எழுதிக் கொடுத்து  கடன்  வாங்கினார் 

விஷ்ணுவின் கவலையைக் கண்ட நாரதர் கூறினார் 'நாராயணா....இதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? திருமணத்துக்கான செலவை சமாளிக்க குபேரனை சந்தித்து அவரிடம் நாம் ஏன் கடனாக பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது? அவர்தானே லஷ்மி தேவியின் செல்வத்தைக் காத்து வருகிறார்?' என்று கூற அது நல்ல யோசனையாகத் தெரிய உடனே இருவரும் இணைந்து குபேரரை  பார்க்கச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல குபேரர் லேசுப்பட்டவர் அல்ல. அவர் பணம் தருவதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதில் ஒரு நிபந்தனை போட்டார். தான் தரும் பணத்திற்கு  திருமால் வட்டியும் சேர்த்துத் தர வேண்டும். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட  திருமால் அவருக்கு ஒரு பத்திரமும் எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்று. மூவாயிரத்து முன்னூற்று அறுபத்தி நான்கு ராம தங்க நாணயத்தை  கடனாக பெற்றுக் கொண்டு, இனி தான் பூமியில் குடி கொண்டப் பின் தனக்குக் கிடைக்கும் அனைத்துக் காணிக்கையிலும் வட்டியாக ஒரு பகுதியை செலுத்திக் கொண்டும், தான்  வட்டியை மட்டும் முதலில் செலுத்திக் கொண்டு இருப்பதாகவும், கலியுக முடிவில் வட்டியையும் முதலையையும்  சேர்த்துத் தருவதாகவும்  பத்திரம் எழுதிக் கொடுத்து கடனைப் பெற்றுக் கொண்டார்.
கடவுளும் வட்டியை வாங்கிக் கொள்வாரா என்று ஒருவர் நினைக்கலாம்.  குபேரனிடம் ஏன் விஷ்ணு  வட்டிக்கு  பணத்தைப் பெற்றுக் கொண்டார்  என்பதற்கும் ஒரு தத்துவார்த்தமான, ஆழமான அர்த்தம் உள்ளது. லஷ்மி தேவியானவள் வைகுண்டத்தை விட்டுச் சென்று விட்டதும் அவளோடு  செல்வமும் சென்று விட்டது.  மிச்சம் இருந்ததை மட்டும் குபேரன் பாதுகாத்து வந்தார்.  அதே நேரத்தில் செல்வம் இல்லாவிடில் பூமியில் உள்ளவர்கள் எப்படி வாழ முடியும்?  ஆகவே பூலோகத்தில் உள்ளவர்கள் செல்வம் (லஷ்மி) இல்லை என்பதினால் தவிக்கக் கூடாது. தன்னால் காணாமல் போய் விட்ட லஷ்மியைக் தேடிக் கண்டு பிடிக்கும் வரை  பூமியில் உள்ளவர்கள் செல்வம் இல்லாமல்  தவிக்கக் கூடாது என்பதை உணர்ந்த விஷ்ணு லஷ்மியின் செல்வத்தைப் பாதுகாத்து வந்திருந்த குபேரனிடம் சென்று  தன் பெயரில் உத்திரவாதத்துடன் கடன் வாங்கிக் கொண்டு பூவுலகில் அதைக்  கொடுக்கச் சென்றார்.
அதே நேரத்தில் செல்வத்தைத் தரும் அவருடைய மனைவியையும் மக்கள் மறக்கக் கூடாது. அவளது செல்வத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு பூமிக்குச் சென்று மக்களுக்குக்  அதைக் கொடுத்தால் அந்த செல்வத்தை  தான் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு தன்னிடம் நன்றி காட்டி காணிக்கை தருவார்கள். லஷ்மியை மறந்து விடுவார்கள். அவர்கள் தரும் அந்த காணிக்கை லஷ்மியின் செல்வத்தினால் கிடைத்ததாக கருத வேண்டுமே தவிற தனக்காக கிடைத்ததாகக் கருத முடியாது.
ஆகவே  செல்வத்தை லஷ்மியின் சார்ப்பில் தான் கொடுத்தாலும் அதைக் கொடுப்பவள்  லஷ்மியே என்பதை மக்கள் நினைவில் நிறுத்திக்  கொள்ள வேண்டும்.  தமக்கு  செல்வம் கிடைக்க அருள் புரியும்  அவளையும் மறக்காமல் அவளிடம் பக்தி செலுத்தி  அவ்வப்போது அவளுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படும்  காணிக்கை என்பதே  பக்தியை வெளிப்படுத்தும்  வட்டி என்பது.
பக்தி  எனும் வட்டியை செலுத்த  பணத்தைத் தந்தவரிடம் நேரிடையாக சென்றே ஆக வேண்டும். நேரிலே சென்று தெய்வத்தை தரிசிக்கும்போது பக்தியும் பெருகும். பக்தி பெருகும்போது ஆன்மீகமும் அவர்கள் உள்ளத்தில் தானாகவே வளரும். ஆன்மீக உணர்வு பெருகும்போது  ஒருவருக்கு நல்ல குணங்கள் தன்னால் ஆழமாக வேர் ஊன்றும். நற்குணங்கள் வேர் ஊறும் போது தீமைகள் குறையும். பாவ எண்ணங்கள் அழியத் துவங்கும்.  மேன் மேலும் அதிக மக்கள் கடவுளை வணங்கித் துதிக்கும்போது  நல்லவை தானாகப் பரவும்.  இதுவே கலி காலத்தில் நிகழ உள்ள  தீமையைக்  குறைக்கும் வழி முறை.


நற்குணங்களும், பக்தியும், நல்ல பண்புகளும் 
நிறவி  உள்ள  இடத்தில் லஷ்மி தேவி 
நிரந்தரமாகக் குடி இருப்பாள்

ஆகவே இதையெல்லாம் மனதில் ஏந்திக் கொண்டுதான்  விஷ்ணு பகவான் நற்குணம் எனும் செல்வத்தை மக்களிடையே பரப்ப ஸ்ரீனிவாசர் எனும் பெயரில் ஒரு கடனாளியாக மாறி செல்வத்தை பூமிக்கு கொண்டு வருகிறார்.  நற்குணங்களும், பக்தியும், நல்ல பண்புகளும் நிறவி  உள்ள  இடத்தில் லஷ்மி தேவி  நிரந்தரமாகக் குடி இருப்பாள்.  இங்கு கடனாளி எனும் வடிவிலான விஷ்ணு  மக்களைப் பிரதிபலிக்கும் ஒரு உதாரணப் புருஷர். கடனாளி என்பது தன்னைப் படைத்த கடவுளுக்கு கடமைப்பட்டவன் என்பதாகும். வட்டி செலுத்துவது என்பது குறைவின்றி வாழ தனக்கு வழி செய்த  அந்தக் கடவுளுக்கு கடமைப்பட்டவன் அவ்வப்போது வெளிக் காட்டும் பக்தி  என்பது  ஆகும்.
 அசலுடன் கூடிய வட்டியும் சேர்ந்து செல்வத்தைப் பெருக்குவதைப்  போல லஷ்மியின் கருணையை தன் மூலம் பெறுபவர்கள், தன்னிடம் வந்து காணிக்கையாக பக்தி எனும் வட்டியை செலுத்த வரும்பொழுது, அவர்களுக்குள் நற் குணங்களையும் தன்னால் மேன் மேலும்  பரப்ப முடியும். செல்வத்தை தருபவர் என நினைத்து தன்னிடம் சிறுவர் முதல் வயதான வரையிலான   பலகோடி மக்கள் வரும்போது,  அவர்களிடையே உள்ள தீமைகளை அழித்து  அவர்கள் உள்ளத்தில் பக்தியைப் பரப்பினால்  கலியுகத்தின்  தீமைகள் குறையும். ஆகவேதான் கலியுகம் பிறக்கும் முன்பே பூமியில் பக்தியும், நல்லொழுக்கமும் பெருக வேண்டும் என்பதை ஒரு தத்துவார்த்தமாக கூறவே மக்களைப் பிரதிபலிக்கும்  விஷ்ணுவை  வட்டி தரும் கடனாளியாகக் காட்டி உள்ளார்கள்.
 ...... தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>