Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan -19

$
0
0
'இதென்னடா மீண்டும் அவனைக் காணோம் . எங்கே மாயமாகி விட்டான்?'என எண்ணியவாறு அனுமார் அவனைத் தேடத் துவங்க தூரத்தில் தெரிந்த ஒரு வனத்தில் சில காரியங்கள் நடைபெறுவதைப் பார்த்தார். ஒரு பெரிய ஆலமரம் தெரிந்தது. அதன் அடியில் பத்து பதினைந்து புரோகிதர் போன்ற உருவில் இருந்த ராக்ஷச பிராம்மணர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். கையில் பூக்கூடை, எண்ணை, நெய், சமித்துக்கள், சின்ன சின்ன மரக்கட்டைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்த மரத்தில் அருகில் இருந்த பொந்துக்குள் அவசரமவசரமாக நுழைவதைக் கண்டார். 'ஓஹோ...எதோ விசித்திரம் அங்கு நடக்குது. ...அதுவும் மயில் ராவணனின் அரண்மனைக்கருகில் அவனுக்கு தெரியாமல் நடக்க இயலுமா?'என நினைத்தவர் தன்னை சிறு பிராணியாகிக் கொண்டு தானும் ஓடோடிச் சென்று அந்த பொந்துக்குள் என்ன நடக்கிறதெனப் பார்க்கலானார்.

அத பொந்துக்குள் சில யாக காரியங்கள் நடந்து கொண்டிருந்ததைக் கண்டார். முக்கோண வடியில் யாக குண்டம். யாக குண்டத்தின் அனைத்து மூலையிலும் எருமை மாட்டின் கபாலம் தொங்கியது. யாக குண்டத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. கபாலத்தின் மூலம் நெய்யும் ஊற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது. யாக குண்டத்தின் எதிரிலே இடுப்பிலே ஈர வஸ்திரத்துடன் மயில் ராவணன். யாக குண்டத்திலே நவதானியங்களையும் நெய்யையும் ஊற்றிக் கொண்டு 'ப்லீம்...க்லீம் ...ஓம்...ப்லூம்ம்...பும்.......பும்...ப்ரும்......கிலும் 'என சப்தமிட்டபடி எதோ மந்திர உச்சாடனயையும் செய்து கொண்டிருந்தான். தன்  கையில் வாளினால் வெட்டிக் கொண்டு அதில் இருந்து வழிந்த ரத்தத்தையும் அதிலே வழிய விட்டான். புஸ்ஸ்....பூச்ச்ஸ்.. ஓஹ்ஹாக்கோ.......... ஒஹூஒ....ஒஹோ என எதோ கத்தியவாறே அந்த அக்னி குண்டத்தில் இருந்து பெரிய பூதம் ஒன்று வெளி வந்தது. அந்த பூதத்திடம் மயில் ராவணன் கூறலானான் 'ஹே பூதமே....நானுன்னை இப்போ படைத்திருக்கேன். நீ எனக்கு சேவகன். அதனால தாமதிக்காம போய் யென்னயழிக்க வந்த வானரத்தை அழித்து விட்டு வா...நானுனக்கு விடுதலை தருவேன்'என்று கூறவும் பூதமும் கொக்கரித்தது 'மன்னா....நானுனக்கு அடிமையே....உம்மை வதம் செய்ய வந்துள்ள அந்த அனுமன் எனும் வானரத்தை இதோ போய் நொடிப் பொழுதில் வதம் செய்து அதன் தலையைக் கொண்டு வந்து இந்த குண்டத்தில் போடுகிறேன்....பார்த்துக் கொண்டேயிறும்'என்று கூவி விட்டு வெளியே ஓடியது.

'அடே பூதமே, என்னய்யா கொல்ல வந்தாய்?...... நானுன்னை முதலில் கொல்வேன்'என சூளுரைத்த அனுமான் ஓடோடி வெளியில் வந்து பூதத்துடன் சண்டையிடலானார். அந்த பூதமோ நெருப்பை வாயில் இருந்து கக்கத் துவங்க அந்த அக்னியின் சுவாலை தாங்க முடியாமல் தவித்த அனுமார் அக்னி தேவனை தோத்திரம் செய்யத் துவங்கினார் '

அக்னி பகவானும் அனுமானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அருள்புரிய அனுமானின் உடல் சூடு குறைந்து அமைதியாயிற்று. அனுமான் உடனே கிளம்பி மீண்டும் தூரதண்டியை சந்தித்து அவளிடம் தற்போது அவருக்குள்ள பிரச்னைக்கு வேறேதும் உபாயம் கூற முடியுமா என்று கேட்க அவளும் தனக்கேதும் அது குறித்து தெரியாதே என்று கை விரித்து விட்டு அதைக் குறித்து தர்ம தேவதைகளிடம் ஆலோசனை பெறுமாறு சொன்னாள். ஆகவே அனுமானும் தரும தேவதையிடம் அந்த பூதத்தை அழிக்க ஏதேனும் உபாயம் உள்ளதா என்று கேட்க அவள் கூறினாள் 'ராமபக்தனே, உம்மால் முடியாததில்லை எனும் அளவு இந்நாள்வரை நீரும் உம்மால் ஆன அனைத்து உக்திகளையும் கைகொண்டு அரக்கர்களை அழித்துள்ளீர். ஆனால் இப்போதுள்ள இந்த பூதமானது மயில் ராவணனால் அக்னியில் இருந்து பெறப்பட்ட பூதம் என்பதால் அவன் தற்போது செய்து வரும் அக்னி யாகத்தை அழிப்பது மூலமே அந்த பூதத்தையும் அழிக்க முடியும். அந்த யாகம் அழியும்வரை நீரும் அந்த பூதத்தைக் கொல்ல முடியாது. அப்படியொரு வரம் அதுக்குள்ளது. அதை வேறெந்த உபாயத்தாலும் அழிக்க முடியாது. ஆனா நாம் ஒரு மர்மத்தை மட்டும் இப்போ உமக்கு சொல்ல முடியும். இப்போ மயில் ராவணனும் தங்கக் கோட்டைக்கும் வெள்ளிக் கோட்டைக்கும் இடையிலே உள்ள பகுதியில் ஒரு மரப்பொந்தில் வீரணா என்ற யாகம் ஒண்ணு செய்யறான். அதுல அதர்வண வேதத்தையும் ஓதிக்கொண்டிருக்கான். அதனால்தான் இப்படி ஒரு பயங்கர பூதத்தையும் அவனால படைக்க முடிந்தது. இப்போவும் அந்த யாகத்தை அவன் தொடர்ந்து கொண்டிருக்கான். அவன் அதை முடிக்கும் முன் அங்கு சென்று அதில் விக்னத்தை  எற்படுத்துவீரானால் இந்த பூதமும் தன்னால அழிந்து விடும். வேறேதும் இதுக்கு வழியில்லை சுவாமி'என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட அனுமானும் ஆகாயம் மூலமாக உடனே கிளம்பிச் சென்று அந்த இடத்தை தேடத் துவங்கினார். மாயாஜாலன் மயில் ராவணனும் தான் யாகம் செய்யும் முன் பல்லாயிரம் இடங்களை ஒரே மாதிரி தோற்றம் தருமாறு பிரமிக்க வைத்திருந்தான். அதானால் அவனை கண்டு பிடிப்பது அனுமாருக்கு கடினமாயிற்று என்றாலும் தனது விடா முயற்சியினால் வாயு பகவானின் அருளைக்  கொண்டு அந்த நிஜ யாக சாலையைக் கண்டு பிடித்து அந்த யாக குண்டத்தை விக்னப்படுத்தி விட பூதமும் அழிந்து போயிற்று. மயில் ராவணனும் அனுமான் தன் தந்திரங்கள் அனைத்தையும் எப்படியோ தவிடு பொடியாக்கி விட்டு வந்துடராரே என பயந்து அங்கிருந்து மாயமாகிப் போனான். அனுமானுக்கு இப்போ மயில் ராவணனை கண்டு பிடிக்க வேண்டியது அடுத்த வேலையும் ஆயிற்று. மீண்டும் மீண்டும் மாயமாகிக் கொண்டே இருப்பவனை எப்படி பிடிப்பது என்பதே கவலையாயிற்று. அங்கிருந்து மாயமாகிப் போன மயில் ராவணன் அனுமான் தன்னைக் கண்டு பிடிக்க முடியாதபடி வெகு தூரத்துக்கு இருந்த மலை பகுதியிலே வெள்ளியாங்கிரி எனும் மலையை உருவாக்கி கொண்டு அதற்குள்ளே பதுங்கிக் கொண்டான்.

ஊர்பூரா தேடியும் மயில் ராவணனைக் காணாத அனுமானும் இப்பவும் தூரதண்டியிடம் சென்று யோசனைக் கேட்டார். அவளும் சொன்னாள் 'ராம பக்தரே, மயில் ராவணன் ஒரு மாயாவி என்று நானும் முன்னர் சொன்னேனே. அது போலத்தான் அவனும் ஏதாவது மாய சொரூபத்தில் இருப்பான்'.

'சரி இப்போ என்ன செய்யலாம்?'என அனுமானும் கேட்க  இருவரும் சற்றே சர்ச்சை செய்தப்பின் அனுமார் கூறினார் 'அம்மணி அப்போது எனக்கோர் காரியத்தை நீ செய்யோணும். பழசும் புதுசுமான இடம் அனைத்தும் உனக்கு அத்துப்படி என்பதானால நீ அறியாத புது இடம் கண்டால் எனக்கு காட்டோணும். அதுக்கு நீ எனக்கு வழிகாட்டியபடி வந்து இந்த ஊரிலுள்ள அனைத்திடங்களையும் எனக்கு காட்டோணும். அப்படியொரு புதுயிடமிருந்தா அங்கதான் அவனிருப்பான்னு நெனைக்கறேன்.'என்று கூறி அவளை துணைக்கழைத்துக் கொண்டு இடமிடமாக சென்றார். மயில் ராவணனும் வெள்ளியான்கிரி மலைக்குள்ளே இருந்து கொண்டு ராம லஷ்மணர்களை அழிக்க வேத மந்திரத்தையும் ஓதிக் கொண்டிருந்தான்.

இப்படி இருக்கையில் தூரத்தில் இருந்த வெள்ளியான்கிரி மலையைக் கண்ட தூரதண்டி சந்தேகம் கொண்டு அனுமானிடம் கூறினாள்'சுவாமி, இதுக்கு முன்னால நானிந்த மலைய என்னிக்குமே காணலையே. இப்போது புதிசாயுள்ள இதென்ன தகதகன்னு தகிக்குதூன்னு புரியலையே'என்று சந்தேகம் கூறவும், அதனருகில் சென்ற அனுமானும் அது யாருமில்லா சுவடோடு இருக்குதே என சந்தேகம் கொண்டு அதன் அருகில் சென்று பார்க்க அதிலிருந்து வந்துகொண்டிருந்த மந்திர ஒலியைக் கேட்டு அதுக்குள்ளே யாரோ ஒருவன் இருக்கார்ன்னு முடிவு பண்ணினார். சரி வரட்டும் பார்க்கலாம்னு அதன் மீது தனது முஷ்டியினால் ஓங்கிக் குத்து ஒன்றை விட தவிடு பொடியான அந்த மலை உள்ளிருந்து மயில் ராவணனும் வெளிப்பட்டு அனுமானைக் கண்டு பயந்து தப்பி ஓடத் துவங்கினான். இப்போ மயில் ராவணனையும் அனுமார் கண்டு பிடித்து விட்டார். அவனை பிடிக்க அவனை துரத்திக் கொண்டு அவன் பின்னால ஓடினார்.
..........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>