Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Mayil Ravanan - 20

$
0
0
மயில் ராவணன் மாய உருவங்களை எடுத்து கடைசி கட்டமாக சிவபெருமான் தனக்களித்திருந்த மந்திர சக்தி வாய்ந்த தன்னுடைய அஸ்திரங்களை எல்லாம் வீசத் துவங்கினான். அனுமானும் சளைக்கவில்லை, அவரும் பதிலுக்கு தன்னிடம் இருந்த ஆயுதங்களுக்கு தூப தீப ஆராதனைக் காட்டி இன்னொரு சிவாஸ்திரத்தையும் கஜாஸ்திரத்தையும் செலுத்தி மயில் ராவணனின் அனைத்து அஸ்திரங்களையும் தவிடு பொடியாக்கினார். இப்படியாக இருவரும் மாறி மாறி பல நாழிகையாக அஸ்திரங்களை ஏவிக் கொண்டிருக்க இருவரும் களைத்தார்கள். அப்போது அனுமானின் காதில் ஆகாசவாணி கூறிற்று 'வாயு புத்திரனே இனியும் தாமதிக்காதே அவன் தப்பிக்கும் முன் அவனை தீர்த்துக் கட்டு' .

அவ்வளவுதான் அதைக் கேட்ட அனுமானின் இருபுஜங்களும் துடி துடிக்க, பற்களை நரனரவெனக் கடித்துக் கொண்டு மயில் ராவணன் அமர்ந்திருந்த தேருக்கு அருகில் சென்று அதன் மீது ஏறி அதை அப்படியே கீழே தள்ள சுக்கு நூறாக பொடிப்பொடியாக்க தேரில் இருந்த மயில் ராவணன் கீழே விழுந்தான். அதை அவன் சற்றும் எதிர்பாராத நிலையில் இருந்தபோது தாமதிக்காமல் அவன் மீது தன் காலை வைத்து அவனை பூமியோடு அழுத்தி தன் விஸ்வரூபத்தை எடுத்து அவன் உயிர் நிலைகள் இருந்த மலையின் குகையில் கையை விட்டு ஐந்து வண்டுகளையும் எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவற்றை நசுக்கிக் கொல்ல மயில் ராவணனும் உயிர் துறந்தான்.

அப்போது அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அவன் வாயும் தன்னை அறியாமலேயே அனுமானை தோத்திரம் செய்யத் துவங்கிற்று.'ஆஞ்சனேயா, வாயுபுத்ரா, ராமதூதா, கருணாகரா....அறியாமையால் செய்த எம் பிழையை மன்னித்து எம்மைக் காத்தருள் ஸ்வாமி'எனப் பலவாறு அவரை துதித்தான். அடுத்த சில நாழிகையில் தேவலோகத்தில் இருந்து ஒரு புஷ்ப விமானம் ஒன்று அங்கு வந்திறங்க அதிலேறிக் கொண்ட மயில் ராவணனும் ஆஞ்சனேயரை வணங்கி விட்டு தேவலோகத்துக்குச் சென்றான்.

வந்த காரியம் முடிந்ததும் அனுமார் ஓடோடி ராம லஷ்மணர்களை எவ்விடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தாரோ அங்கே சென்று பூமாதேவியிடம் அவர்களை தமக்கு திருப்பித் தருமாறு கேட்டார். பூமாதேவியும் பூமியைப் பிளந்து தன்னிடம் பத்திரமாக வைத்திருந்த ராம லஷ்மணர்களை அனுமாரிடம் ஒப்படைத்தாள். அந்த பெட்டியை பாதாளத்தை விட்டு வெளியில் சென்ற பின்னரே திறக்க வேண்டும், அப்போதுதான் மாயக்கட்டும் விலகும் என அறிந்திருந்ததினால் அனுமானும் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு அவசரமவசரமாக அதே தாமரைத் தண்டின் வழியே பாதாளத்தை விட்டு வெளியேறிச் சென்றார். சமுத்திரக் கரையை அடைந்ததும் வாயு பகவானின் முன்னிலையில் அந்தப் பெட்டியை அவர் திறந்தவுடன் அதற்குள் இருந்த ராம லஷ்மணர்கள் தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தார்கள்.

அவர்களைக் கண்ட அனுமானும் ஓடி வந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார். அவர்களை விடுவிக்க பாதாள இலங்கைக்கு அனுமான் சென்றபோது அவருடைய புத்திரன் மச்சவல்லபன் ராம லஷ்மணர்கள் விடுதலை ஆகி செல்லும்போது அவர்களது ஆசிகளை தமக்கும் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என விரும்பி இருந்தான். அவனும் அங்கே அவர்கள் தரிசனத்தைப் பெறுவதற்காக அங்கே காத்திருந்தான். ராம லஷ்மணர்கள் பெட்டியை விட்டு வெளியில் வந்ததும் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டு மீண்டும் தன்னுலகத்துக்குச் செல்லக் கிளம்பினான்.

அவனையும் தம்மோடு வருமாறு அழைக்க மச்ச வல்லபன் சொன்னான் 'நான்தான் வாயு புத்திரனின் பிள்ளையின் பிள்ளை என்பதை யாருக்கும் தெரிவிக்க விரும்பவில்லை. அதைக் கேட்டால் தனக்கு அது பற்றி அனுமான் கூறவில்லையே என்று அவர் மீது சுக்ரீவரும் கோபம் கொள்வார். பரியாசமும் கேலியும் செய்வார். மேலும் அனுமானின் வியர்வையை விழுங்கி என்னை பெற்றேடுத்தவளை அனுமான் பார்த்தது கூட இல்லை என்பதால் மணம் செய்து கொண்ட பாத்தியதையும் இல்லை. ஆகவே பிரும்மச்சாரியான அனுமானின் புகழை நான் யார் என்பதை வெளியில் காட்டி கெடுக்க விரும்பவில்லை. ஆகவே நான் உங்கள் அனைவரது பூரண ஆசியுடன் என்னுலகம் சென்று அங்கு ஆனந்தமாக உங்களையும் துதித்தபடி வாசம் செய்வேன். என்னை ஆசிர்வதியுங்கள்'என்று கூறிவிட்டு அனுமானின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இனியும் தாமதிக்கலாகாது என்று எண்ணியவர்கள் அனைவரும் இலங்கைக்கு சென்றார்கள். அவர்கள அனைவரும் திரும்பி வருவதை ஒற்றர் மூலம் அறிந்து கொண்ட ராவணன் கர்ஜித்தான் 'ஐயகோ...என்ன காரியம் ஆகிவிட்டது? அத்தனை கோடிக் கோடிலட்சம் படையினரையும், மாயா ஜாலத்தையும் வைத்திருந்த தாயாதி மயில் ராவணனையுமா வதம் செய்து விட்டு இங்கு வருகிறார்கள்? இதை நானெப்படி தாங்குவேன்? என் துயரத்தை யாரிடம் சொல்வேன்? போகட்டும், போனதெல்லாம் போகட்டும். எனக்குள்ளதும் ஒரு உயிர்தானே. என் சந்ததியினர் அனைவரையும் இழந்து நிற்கும் நானே இப்போ யுத்தத்துக்குப் போய் என்னால் முடிந்ததைப் பார்க்கிறேன். ஒன்று ராம லஷ்மணர்கள் வதமாக வேண்டும். இல்லை நானும் என் சந்ததியினரிடம் போய் சேர வேண்டும். கொண்டு வாங்கடா என் தேரையும் ஆயுதங்களையும்.....நடந்கடா என்னோட'என கர்ஜித்துக் கொண்டே தேரில் ஏறி ராமனுடன் யுத்தம் செய்யக் கிளம்பிச் சென்றான்.

கடுமையான யுத்தமும் நடந்து முடிய ராவணனும் வதம் ஆயினான் . அடுத்து அவனுக்கு பதிமூன்று நாள் கருமாதியையும் விபீஷணன் செய்து முடித்தவுடனேயே ராமனும் தனது மனைவி சீதையை மீட்டுக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டும் தம்மை புனிதம் படுத்திக்கொண்டும், அங்கிருந்து அனைவரும் கிளம்பி வனத்துக்குச் சென்று பரதனை அழைத்தார்கள். அங்கு வந்த பரதனும் அவர்களை முறையோடு நாட்டுக்கு அழைத்துச் செல்ல அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அனைவருக்கும் கூறினார்கள். ராமனும் அனுமாரைக் கட்டிப் பிடித்து 'இனி நீ எங்களுடனேயேதான் இருக்கோணும்'என்று கூற ஆகாயத்தில் இருந்து தேவர்கள் புஷ்பமாரிப் பொழிந்தார்கள்.

மயில் ராவணனின் சரித்திரமும் முடிந்தது

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>