பிரதோஷம்
- சாந்திப்பிரியா -
பிரதோஷம் என்பது என்ன என்பதை பலரும் அறிந்ததே என்றாலும் அதன் சுருக்கம் இது. ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதியன்று துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகம் கக்கிய கொடிய விஷத்தினால் தோன்றிய வெப்பத்தினால் அனைவரும் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவிக்க, அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின் மீண்டும் அனைவரும் பாற்கடலை கடையத் துவங்க மறுநாள் அதாவது பன்னிரண்டாம் நாளான துவாதசியன்று அமிர்தம் கிடைத்தது. பின்னர் நடைபெற்ற பிற காட்சிகளினால் தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்க அதை உண்டவர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். சிவபெருமானையே மறந்து விட்டார்கள். மறுநாள், பதிமூன்றாம் நாள் திரியோதசியாகும். அன்றுதான் அனைவரையும் காப்பாற்ற சிவபெருமான் விஷத்தை உண்ட நிகழ்ச்சி அனைவருக்கும் நினைவில் வர ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனைவரையும் மன்னித்தப் பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது. அது முதல் ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதசியில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவபெருமான் நடனம் ஆடிய தினம் சனிக்கிழமையில் வந்திருந்த திரியோதசி தினம் என்பதினால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை தனி பிரதோஷம் என கருதி விஷேசமாக வழிபடுவார்கள்.
வழிபாட்டுப் பலன்கள்
அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்களை நெய்வித்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக் கொண்டு பூசிப்பதும், சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்றவை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவ்வியங்களினால் அபிஷேகம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்களில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்துக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.
- திங்கள் கிழமை :- மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
- செவ்வாய் கிழமை :- உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பார்கள்.
- புதன் கிழமை :-புத்திர பாக்கியம் கிடைக்கும். இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும்.
- வியாழன் கிழமை :- வித்தைகள் கை கூடும் (வித்யா பாரம் என்பது). சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைத்து கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
- வெள்ளிக் கிழமை :-பகை விலகும். குடும்ப பாசம் கூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்த தினத்தில் சக்கரையினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜிப்பதின் மூலம் அனைத்து எதிர்ப்புக்களும் குறையும்.
- சனிக் கிழமை :-சனிப்பிரதோஷம் என்பது தனிப் பிரதோஷம் ஆகும். அன்று சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்தால் முக்தி அடையும் வழி கிடைக்கும்.
- ஞாயிற்றுக் கிழமை :-வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
பிரதோஷத்தன்று சிவன் சன்னதியில் செய்யவேண்டிய பிரதர்ஷண முறை
எந்த ஸ்வாமி சன்னதியையும் மூன்று முறை பிரதட்சிணம் அதாவது வலம் வந்து துதிக்க வேண்டும் என்பதும் ஐதீகம். அது போலவே பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை சோம சூத்திரப் பிரதட்சணம் என்ற முறையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் பலனே மிகப் பெரியது. இதை சிலர் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்றும் கூறுவது உண்டு.
முதலில் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து சன்னதிகளிலும் ஸ்வாமி மீது செய்யப்படும் அபிஷேக ஜலங்கள் வெளியேற தனி வழி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த தீர்த்தங்கள் அனைத்தும் சன்னதியின் வெளியில் சன்னதியுடன் இணைந்தே உள்ளபடி ஒரு தொட்டிப் போல அமைந்துள்ள இடத்தில் சென்று விழும். அதை கோமுகம் என்பார்கள். பசுவின் முகத்தைப் போன்ற புனிதத் தன்மையைக் கொண்டதே நீர் வெளியேறும் தொட்டி போன்ற அந்த அமைப்பாகும். இதை எதற்காக கூறுகிறேன் என்றால் பிரதோஷ காலத்தில் சிவன் சன்னதியை வலம் வரும் காலத்தில் இந்த கோமுகத் தொட்டி முக்கியப் பங்கை வகிக்கின்றது.
பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய பிரதட்சிண முறை என்ன? ஆலயத்தில் நுழைந்து கணபதியை வணங்கியப் பின், சிவனை நந்தி தேவர் கொம்புகளின் இடைவழியே பார்த்து வணங்க வேண்டும். அதன் பிறகு அந்த சன்னதியை சுற்றி வலம் வர வேண்டும். ஆனால் எப்போதும் செய்வது போல அந்த பிரதர்ஷணம் முழுமையாக இருக்கக் கூடாது. வலம் வரும்போது கோமுகத்தின் அருகில் சென்றவுடன் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். அதன் பின் மீண்டும் பிரதர்ஷணமாக சென்று கோமுகத்தின் அருகில் சென்றப் பின் மீண்டும் அப்பிரதர்ஷணமாக திரும்பி வந்து சிவனை தரிசிக்க வேண்டும். அப்போதும் நந்தியின் கொம்புகள் வழியே சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.
இப்படியாக பிரதட்சிணம் செய்யும்போது ஒவ்வொரு முறையும் சண்டிகேஸ்வரர் சன்னதிக்கும் சென்று அவரை வணங்க வேண்டும். அவர் சன்னதியின் முன்னால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு அல்லது மெல்லியதாக கையைத் தட்டி சப்தம் எழுப்பி விட்டு வர வேண்டும். அப்போதுதான் அவர் நீங்கள் எத்தனை முறை சிவனை வலம் வந்துள்ளீர்கள் எனும் கணக்கை அவருக்கு தெரிவிப்பாராம். இதுவும் ஐதீகம்தான். இப்படியாக மூன்று முறையும் சன்னதியை சுற்றி முழு வலமும் வராமல், அரைப் பகுதி வலம் வந்து சிவபெருமானை நந்தியின் கொம்புகள் வழியே தரிசிக்க வேண்டும். இந்த பிரதர்ஷண முறையை பிரதோஷ தினத்தன்று மட்டுமே செய்ய வேண்டும்.