Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Irettaip Pillaiyaar ( Two Vinayagas ) - 3

$
0
0
III
சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்) தட்டில் பிடித்து வைத்து அதையே பிள்ளையாராக பாவித்தே பல பூஜைகளும் செய்யப்படுகின்றன. ஆகவே ரெட்டைப் பிள்ளையாரை உடனடியாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் ஒரு செய்வாய் கிழமையில் ஏதாவது ஒரு இடத்தில் உள்ள (ஆலயம் சிறப்பானது) அரச மரத்தின் அடியில் கெட்டியான சந்தனத்தால் அல்லது மஞ்சளினால் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து தமக்குத் தேவையான வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு ரெட்டைப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு அந்த இரு கூம்புகளையும் இரண்டு பிள்ளையார்களாக பாவித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மரத்துடன் இரண்டு பிள்ளையாரையும் பிரதர்ஷனம் செய்து விட்டு வந்து விட வேண்டும். இப்படியாக ஐந்து செய்வாய் கிழமை பூஜை செய்ய வேண்டும். இடையில் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டாலும் அதை தொடரலாம். ஆனால் மொத்தம் ஐந்து செய்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது நியமம்.

அரச மரம் இல்லாத இடத்தில் எப்படி பூஜை செய்வது? அரச மரம் பிள்ளையாருக்கு பிடித்தமான மரம் என்பதால்தான் எளிதில் அங்கு தோன்றி கோரிக்கைகளை ஏற்பார் என்பது ஐதீகம். அரச மரம் இல்லாத ஊர்களில் அங்குள்ள வினாயகரின் சன்னதியில் சந்தனத்தில் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து பூஜை செய்தப் பின் அந்த ஆலயத்தை சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம். பிள்ளையாருக்கு தனி சன்னதி இருந்தால் அதை மட்டும் சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிடித்து வைத்து
பூஜை செய்ய வேண்டிய பிள்ளையார்

அடுத்த கேள்வி அப்படி பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு என்ன மாதிரியான பூஜையை செய்வது? இதுவும் மிக எளிதானது. பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் இட்டு, மலர்கள் தூவி (அருகம் புல் விஷேசம்) உங்கள் கோரிக்கையை மனதார கூறி அவரை வேண்டிக் கொண்டு உங்களுக்கு தெரிந்த வினாயகர் தோத்திரத்தைக் கூறி பூஜிக்க வேண்டும். வினாயகர் மந்திரங்கள் தெரியாதவர்கள் வினாயகர் அகவலை படித்தால் போதும். அதுவே வினாயகரை பூஜிக்கும் சிறந்த ஸ்துதி ஆகும்.

ஐந்து வாரமும் புதியதாக சந்தானம் அல்லது மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தப் பின் அதை அப்படியே அரச மரத்தடியில் அல்லது பிள்ளையார் சன்னதியில் வைத்து விட்டு வந்து விடலாம். தோஷம் எதுவும் இல்லை. அரச மரத்தடியில் பூஜை செய்தப் பின் ஏதாவது ஒரு கோவிலில் உள்ள வினாயகரின் சன்னதிக்குச் சென்று தம்முடையக் கோரிக்கையை அவரிடம் வைத்து அங்கேயே அவரிடம் வேண்டிக் கொண்டு, அது நிறைவேறினால் ரெட்டைப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். ஐந்தாவது வார பூஜை முடிந்ததும் நீங்கள் எந்த ஆலயத்தில் சென்று பிள்ளையாரை வழிபடுகிறீர்களோ அங்கு உள்ள ஏதாவது ஒரு பண்டிதருக்கு வெற்றிலைப், பாக்கு, தேங்காய், பழம் சகிதம் உங்களால் முடிந்த அளவு பணத்தைத் தந்து (இருபத்தி ஒன்று, ஐம்பத்தி ஒன்று அல்லது நூற்றி ஒன்று என்ற கணக்கில்) அவரை நமஸ்கரித்து விட்டு வர வேண்டும். ஐந்து செய்வாய் கிழமைகளிலும் அப்படி செய்யத் தேவை இல்லை. ஐந்தாவது வார இறுதிப் பூஜைக்குப் பிறகே அதை செய்ய வேண்டும். ஐந்து வார பூஜை செய்தப் பின் மீண்டும் அதை செய்ய வேண்டியது இல்லை. பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகத் துவங்கும் என்பது நம்பிக்கை. ஆனால் நிச்சயமாக அதீதிப் பயன் இதில் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

ஐந்து செய்வாய் கிழமைகள் பூஜை முடிந்தப் பிறகு எப்போது முடிகிறதோ இதற்குக் காலக் கெடு கிடையாது , நீங்கள் செல்லும் எந்த ஊரிலாவது உள்ள ரெட்டை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று உங்களுடைய அதே கோரிக்கையை அவரிடம் மானசீகமாகக் கூறி அவருக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்து விடலாம். கூடுமானவரை அதையும் செய்வாய்க் கிழமை அன்று செய்வதில்தான் அதிகப் பலன் உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்து வார பூஜையையும் செய்வாய் கிழமையில்தான் செய்ய வேண்டும்.


 திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள
 இரெட்டை பிள்ளையார் 

மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் பெயர் சங்கல்ப வினாயகர் என்பது. அவரை ஆதி வினாயகர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தி திதி, திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் விஷேசமான தினங்களாகக் கருதப்படுகிறது. இந்தப் பிள்ளையாருக்கு திருவோண நட்சத்திரத்தில் மாம்பழங்கள் நெய்வித்தியம்  செய்து ஏழைத் தம்பதிகளுக்கு தானம் செய்தால், கணவன்-மனைவி உறவு பலப்படுவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். திருவாதரை நட்ஷத்திரத்தன்று அதற்கு வில்வ மாலை போட்டு வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும், உடல் ஆரோக்கியம் சீர்படும். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று பலவிதமான பூக்களால் தொடுத்த மாலையைப் போட்டு துதித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்பார்கள் . அது மட்டும் அல்ல பெற்றோர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் இங்கு வந்து சங்கல்பம் செய்து கொண்டு பூஜித்தால் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பதும் உண்டு.

இது போல திருவையாறு ஐயாரப்பன் ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் முன்னால் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் . பொதுவாகவே திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சங்கட ஹர சதுர்த்தியில் வழிபட கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

திருவண்ணாமலையில் மிக பழமை வாய்ந்த கோயில்களில் இரட்டை பிள்ளையார் ஆலயமும் ஒன்று. கிரி வலம் செல்லும் வழியில் இந்த ஆலயத்தைக் காண முடியும். இந்த ஆலயம் உள்ள சாலையை இரட்டை பிள்ளையார் கோயில் தெரு என அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை .

மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர். அது போலவே திருவான்மியூரில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர் .

கடலூரில் உள்ள புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் ஆலயமும் மகத்துவமானது . அது போலவே திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் சிறப்பானவர் அவர்களை வலம்புரி வினாயகர் மற்றும் பாதிரி வினாயகர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இவர்களை வணங்கினால் நவக்கிரகங்களினால் ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் வெகு விரைவில் விலகும் என்பது ஐதீகம் .


தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ள இருநூறு ஆண்டுக்கும் மேற்பட்ட ஆலயத்தில் காணப்படும் தாமோதர வினாயகர் எனும் பெயரில் உள்ள இரட்டைபிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார் .

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனாராயனர் ஆலயத்தின் பின்புறத்தில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான வேலைப்ப தேசிகர் ஆலயத்திலும் இரட்டைப் பிள்ளையார் சன்னதி உள்ளது. மேலும் சில இடங்களில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயங்கள் வருமாறு:
  • திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிற்ரூரான திருப்பனதாளில் இருந்து சீர்காழிக்குச் செல்லும் வழியில் உள்ள மரத் துறை எனும் சிறு கிராமத்தில் உள்ளது ஒரு இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ள சிற்றூரான கொத்துக் கோவில் எனப்படும் இடத்தில் உள்ளது சுந்தர மற்றும் ராஜ விநாயகர் என அழைக்கப்படும் இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூர், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வினாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதிகள் உள்ளன.
  •  மதுரை தல்லாக்குளத்தில் உள்ளது  இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம். 
  • சென்னையில்  பம்மலில் பசும்பொன்  ஆலயத்திலும் உள்ளது இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம்.  
  • திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலய  தனி சன்னதியிலும் இரட்டைப் பிள்ளையார் உள்ளார்.
  • திருவான்மியூரில் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
  • சென்னையில் மடிப்பாக்கத்தில் உள்ள இன்னொரு இரட்டைப் பிள்ளையார் ஆலயத்தின் கதையும் சுவையானது.  சென்னை-மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வினாயகரின்  பக்தர் ஒருவர் சுமார் நூறு வருடங்களுக்குமுன் தன் வயலில் கிணறு வெட்டுவதற்காக பூமியை தோண்டிக் கொண்டு இருந்தபோது பூமியின் கீழேயிருந்து ஒரு கல் தெறித்துச் சிதறியதாம். அதன் தோற்றம் கிட்டத்தட்ட பிள்ளையாரைப் போல இருந்ததினால் அதையே சுயம்பு வினாயகராக  கருதி, அது பள்ளத்தில் இருந்து கிடைத்ததினால்  அதற்கு பாதாள வினாயகர் எனப் பெயரிட்டு ஆலயத்தை அமர்த்தி அதை பிரதிஷ்டை செய்தாராம்.  ஆனால் முழுமையான விநாயகரின் சிலையாக அது இல்லை என்பதினால்  இன்னொரு வினாயகரின் சிலையை வைத்து பக்தர்கள் வணங்கத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அனைவரும் அதிசயிக்கும் வகையில் முதலில் அமைத்த பாதாள வினாயகரின் வடிவம் மாறி வினாயகரின்  முழு உருவைப் பெற்றது என்கிறார்கள். அது முதல் கருவறையில் இரட்டை வினாயகர்கள் அமர்ந்துள்ளார்கள். 
மடிப்பாக்கம் இரட்டைப் வினாயகர் ஆலயத்தில் 
உள்ள இரண்டு வினாயகர்கள்  
  • கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை செல்லும் மார்கத்தில் வரும் கயித்தாறு (கட்டபொம்மனை தூக்கில் போட்ட இடம்) அருகில் உள்ளது ஒரு ரெட்டைப் பிள்ளையார் கோவில்.   
  • திருப்பத்தூரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திலும் ரெட்டை வினாயகர் சன்னதி உள்ளது. 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>