Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Thirupoovana Mahathmiyam - 5

$
0
0

நவக்கிரகங்களுக்கு தலைவர் சூரியப் பெருமான். அவரே அனைத்து நவக்கிரங்களையும் தன்னிடம் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார். அப்போது ஒருமுறை பிரபஞ்சத்தில் ஏற்பட்டக் குழப்பங்களினால் நவக்கிரகங்களும் சூரியனின் ஆணையை சரிவர நிறைவேற்ற முடியாமல் திணறினார்கள். அவருக்கு தமது முழு ஒத்துழைப்பையும் கொடுக்கவில்லை. அதனால்  நவக் கோள்கள் மீது சூரியன் கோபம் அடைந்தாலும் அவர்களை ஒரு அளவிற்கு மேல் கட்டுப்படுத்த இயலாது, அவர்கள் உதவி இல்லாவிடில் மனிதர்களின் கோள்களைக் கட்டுப்படுத்த இயலாமல் போய் விடும் என கவலைக் கொண்டு அதற்கு என்ன நிவாரணம் செய்யலாம் என யோசனை செய்யலானார்.
அந்த நிலையில் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சிவலிங்கங்களுமே திருப்பூவணத்தில் எழுந்தருளுகிறது என்பதை நாரதர் மூலம் அறிந்து கொண்டார். மேலும் அங்குதான் பார்வதி தேவியும் சிவபெருமானை பாரிஜாத மலர்களினால் அர்ச்சனை செய்து சாப விமோசனம் பெற்றதினால் அது விஷேசமான தலமாக உள்ளது என்பதையும் அறிந்து கொண்டார். ஆகவே அங்கு சென்று சிவபெருமானை பூஜை செய்து தமக்கு ஏற்பட்டு உள்ள இக்கட்டான சூழ்நிலையை மாற்றிக் கொள்ள வேண்ட வேண்டும் என முடிவு செய்தார். (இதென்ன புதிய செய்தியாக உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள சிவலிங்கங்கள் அனைத்தும் திருப்பூவணத்தில் எழுந்தருளுகிறது என்றால் என்ன அர்த்தம்? அத்தனை சிவபெருமான் உலகில் உள்ளாரா என ஒருவர் நினைக்கலாம். அந்த குழப்பம் தேவை இல்லை. பல முறை என் முந்தையக் கட்டுரைகளில் நான் இது பற்றி விளக்கம் அளித்துள்ளேன். 
 பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளினாலும் ஒரே நேரத்தில் பல்வேறு மாய அவதாரங்களை எடுக்க முடியும். வெவ்வேறு அவதார தோற்றத்தை அந்த மாய உருவங்கள் வெளிப்படுத்தினாலும், அனைத்து அவதாரங்களும் அவர்களின் பிம்பங்களே. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை போல இடங்களிலும்  எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை விட்டு மற்ற அனைத்துமே துணை அவதாரங்களாக இருப்பார்கள். அந்த துணை அவதாரங்களுக்கு அதிக காலம் ஒதுக்கப்படுவது இல்லை. இருப்பது போல காணப்பட்டு, அப்படியே மறைந்தும் விடுவார்கள்.  அப்படி அவற்றை மறைய வைக்கும் முன் அந்தந்தக் கடவுள் தனது அனைத்து மாய அவதாராங்களையும்  ஒவ்வொரு இடங்களிலும் சென்று சந்திப்பார்கள். அங்கு சென்று , யார் யாரை வைக்கலாமோ அவர்களை வைத்து விட்டு மற்ற மாய பிம்பங்களை மறைத்து விடுவார்கள்.
இதே போலத்தான் பல இடங்களிலும் உள்ள சக்தி வாய்ந்த   சிவபெருமானின் மாய உருவங்களும்  ஒரு கட்டத்தில் தம்மை அனுப்பிய சிவபெருமான் எங்கு அழைக்கிறாரோ அங்கு சென்று ஒன்றாகக் கூடி அவர் எடுக்கும் முடிவிற்காக காத்திருப்பார்கள். மற்ற கடவுட்களின் மாய பிம்பங்களுக்கும் துணை அவதாரங்களுக்கும்  சிவலிங்கங்களுக்கும்  உள்ள  வித்தியாசம்  என்ன என்றால் மேலே குறிப்பிட்டது போல மற்ற கடவுட்கள் தமது மாய பிம்பங்களை ஒரே இடத்தில் அழைப்பது இல்லை. சிவலிங்கங்கள் மற்றும் சாலிக்கிராமங்கள்  மட்டுமே சிவனார் அல்லது விஷ்ணு பெருமான் அழைக்கும் இடத்துக்கு ஒரே நேரத்தில் சென்று  அவர்கள்  கூறும்வரை அங்கிருந்தபடி  தவம் செய்து கொண்டு இருக்கும். அதனால்தான் எங்கெல்லாம் அதிக அளவு சிவலிங்கங்கள்  மற்றும் சாலிக்கிராமங்கள்  உள்ளனவோ  அவை எல்லாமே  சக்தி வாய்ந்த பூமிகளாக உள்ளன.  சிவபெருமானைக் குறிக்கும் சிவலிங்கம் போல, விஷ்ணுவை குறிக்கும் சாலிக்கிராமங்கள் போல வேறெந்த கடவுட்களுக்கும் தனிப்பட்ட  கற்களினால் ஆன  அடையாள சின்னங்கள்  எதுவுமே இல்லை என்பது ஒரு விசேஷம்.   - சாந்திப்பிரியா).
இப்படியாக சிவபெருமானின் அனைத்து சிவலிங்கங்களும் (மாய உருவங்கள்) திருப்பூவணத்தில் வந்து கூடுவது உண்டு.  அங்கு வந்து அவை சிவபெருமானை துதித்து தியானம் செய்யும்போது அந்த மண்ணின் மகிமை மேலும் அதிகமாகிறது. அப்படிப்பட்ட இடம் மிக சக்தி வாய்ந்த இடமாக இருக்கும். அங்கு சென்று வேண்டியது கிடைக்கும். ஆகவேதான் அடுத்து வந்த சித்தரை மாத சித்திரை நட்ஷத்திரத்தில் சூரியன் திருப்பூவணம் சென்று அங்கிருந்த  நதிக் கரையில் மணலினால் ஆன சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு உரிய பூஜை செய்து ஆராதித்தார். அங்கு சென்ற சூரியனார் தன் கையினாலேயே ஒரு குளத்தை வெட்டி அந்த நீரிலே தாமரை மலரையும் தோற்றுவித்து சிவாய நமஹா என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் வழிபட்டார். அதனால் மகிழ்ச்சி அடைந்து  அவர் முன் சிவபெருமான் தனது மனைவி உமாவுடன் சேர்ந்து காட்சி தந்து அவர் வேண்டிய வரத்தை அருளினார். அதனால் மீண்டும் சூரியன் முழு அதிகாரத்தைப் பெற்றிட அனைத்து நவக்கிரகங்களின் ஒத்துழைப்பும் சூரியனுக்கு மீண்டும் கிடைத்தது. அது மட்டும் அல்ல அன்று முதல் நவக்கிரகங்களை அடக்கும் வகையில் சூரியனாரின் சக்தியும் அதிகரிக்க நவக்கிரகங்களின் கர்வபங்கமும் குறைந்தது. சூரியனாரும் மீண்டும் சூரிய மண்டலத்தின் முழு அதிகாரியானார்.  சூரியன் அமைத்த தீர்த்தத்திற்கு மணிக் கங்கை என்ற பெயர் அடைந்தது.  அதில் குளித்துவிட்டு சிவபெருமானின் நாமத்தை பலமுறை உச்சரித்து அவரை வணங்கினால் சிவப் பிராப்தி பெறுவார்கள். அந்த தீர்த்தத்தின் மகிமை என்ன தெரியுமா?  பெரும் முனிவரான அகத்திய முனிவரும் கூட மணி கன்னிகைத் தீர்த்தத்தில் மூழ்கித் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்துத் திருப்பூவணநாதரை வணங்கியதினால்தான் சமுத்திர  தண்ணீர் முழுவதையும்  குடிக்கும் வல்லமையைப் பெற்றார். அதன் மகிமை குறைவானதா? மேலும் அதன் மகிமையையும் கேளுங்கள் '' என்று சூதகர் கூறி விட்டு கதையை மீண்டும் தொடரலானார்.
................தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>