Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Thirupoovana Mahathmiyam - 3

$
0
0

தன் வீட்டிற்கு வந்து உள்ளது சிவபெருமானே என்பதை அறியாதவளாக பொன்னையாள் அவரிடம் மனம் உருகிக் கூறினாள்  'சித்தர் பெருமானே உங்களிடம் நான் எதை, என்ன என்று கூற.  எனக்கு மனதில் தீராத ஆசை ஒன்று  உள்ளது.  நான் பூஜிக்கும்  சிவபெருமானுக்கு தங்கத்திலான சிலையை செய்து அவரை அழகு பார்க்க வேண்டும் என்று மனது நினைக்கின்றது. ஆனால் மனதில் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள வசதியும் வேண்டும் அல்லவா.  நானோ நடன மாது. நான் என் சம்பாத்தியத்தைக் கொண்டு அதை எப்படி நிறைவேற்ற முடியும் ?  ஆகவே நடக்க முடியாத அந்த காரியத்தை  மனத்தால் மட்டும் எண்ணி  மகிழ்ந்து கொண்டு  வேறு எந்தப் பிறவியிலாவது  அதை செய்யும்  பாக்கியம் பெற்றவளாக இருப்பேன் என்ற மனக் கனவுடன் வாழ்ந்து வருகிறேன். ஆகவே குறைந்த பட்ஷம் சிவன் அடியவர்களான உங்களைப் போன்றவர்களுக்காவது  இந்த ஜென்மத்தில் சேவை செய்யலாம் என்பதை  என் கடமையாக  செய்து  வருகிறேன். ஆகவே பெரியவரே நீங்கள் சிவபெருமானிடம்  எனக்காக வேண்டினாலும் அது எங்கே நடக்கும்? உங்களுக்கு சேவை செய்வதையே பெரிய பாக்கியமாகக் கருதி என் கனவை முடித்துக் கொள்கிறேன். என் மனம் மாறாமல் நான் இப்படியே வாழ்ந்து கொண்டு இருக்க நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்வதோடு மட்டும் நின்று விடாமல், இந்த அபலைக்கு ஆசிகளையும் வழங்கி விட்டுப் போனால் அதுவே போதும்' எனக் கண்களில் நீர்மல்க கூறினாள்.
அதைக் கேட்ட சித்தர் உருவில் இருந்த சிவபெருமானோ அவளைப் பார்த்துக் கூறினார் '' பெண்ணே, நீ வருத்தப்பட வேண்டியது இதில் எதுவுமே இல்லை. நீ செய்யும் சேவை அத்தனை எளிமையானது என்று  நினைத்து விட்டாயா?  இதைக் கேள் பெண்ணே, மனதில் மனத் தூய்மை மற்றும் மன உறுதி இல்லாமல் ஆயிரம் பசுக்களை கங்கைக் கரையிலோ அல்லது காவிரி தீர்த்ததிலோ கொடுத்தாலும் கூட நீ செய்யும் இந்த காரியத்துக்கு அது ஈடாகாது.  கொடுப்பவனும் சரி அதைப் பெறுபவரும் சரி, இருவருமே மனத் தூய்மையோடும், மன நிறைவோடும் கொடுத்தாலும் பெற்றாலும் மட்டுமே நல்லது நடக்கும். புண்ணியம் கிட்டும். அப்படி மனபூர்வமாக  தானம் செய்பவர் யாராக இருந்தாலும், அதுவும் முக்கியமாக சிவனடியார்களுக்கு தானம்  செய்பவர் யாராக இருந்தாலும்  அவர்கள் வேண்டுவது நிச்சயம் நடக்கும் என்பதே சத்தியமான உண்மை .
ஒருமுறை தன்னிடம் வந்து சந்தேகம் கேட்ட கருடனுக்கு திருமால் என்ன கூறினார் தெரியுமா? 'கருடா, கிருதே யுகத்தில் மகா  தவத்தை செய்வதே மனிதப் பிறவியில் பிறந்து உள்ளவர்கள்  செய்யும் மிகச் சிறந்த காரியமாகும். திரேதா யுகத்திலோ அந்த மனிதப் பிறவிகள் தியானம் செய்வது அதி உத்தமமானது.  அது போலவே துவாபர யுகத்தில் யாகங்களை செய்வதும்  மிகச் சிறந்தது.   இவற்றைப்  போலவேதான் கலி யுகத்திலே யார் ஒருவர் மனத் தூய்மையோடும், மன நிறைவோடும் அன்ன தானங்களை செய்து கொண்டு தெய்வ சேவையில் ஈடுபட்டு வருவாரோ   அதை விட உத்தமமான புண்ணியக் காரியம் உலகில் வேறு எதுவுமே இருக்காது' என்றார். அதை நினைத்துப் பார். நீ அனாவசியமாக  உன் சேவையை குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதே.  நீ  செய்யும் இந்த புண்ணியக் காரியம் அடுத்த  எட்டு யுகத்திலும் உன்னை தொடர்ந்து  காப்பாற்றும் ''.
இப்படியாகக் கூறியப் பின் அந்த சித்தர் அவள் வீட்டு பின் புறம் சென்று ஒரு இடத்தில்  ஒரு யந்திரக் கோலமிட்டார். அதை போட்டப் பின் அவளிடம் கூறினார் 'மங்கையே, இந்த யந்திரம் மீது ஒரு அடுப்பை எரிய வை. அதன் பின்  உன் வீட்டில் உள்ள உலோகப் பாத்திரம் சிலவற்றைக் கொண்டு வந்து அவற்றை அந்த அடுப்பில் உள்ள எரியும் தணலில் இரவு முழுவதும் வைத்து விடு. காலையில் அந்த உலோகத்தை  எடுத்துப் போய் உருக்கி சிவபெருமானின் சிலையை செய்து வைத்தால் அதையே அவர் பொன்னாலான சிலையாக பாவிப்பார்.  அதை மனதார ஏற்றுக் கொண்டு, வேறு  எந்தப் பிறவியிலாவது நீ விரும்பியதை அடைய உனக்கு கருணைப் புரிவார்' என்று அர்த்த புஷ்டியோடு கூறினார்.
இப்படியாக அந்த சித்தர் கூறியதைக் கேட்ட பொன்னையாள்  அவர் கூறியதை அப்படியே செய்வதாக உறுதி கூற , சித்தர் உருவில் இருந்த சிவபெருமானும்  தாமதிக்காமல் மதுரைக்கு கிளம்பிச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார்.
அவர் கிளம்பிச் சென்றதும் பொன்னையாள்  அன்று இரவு மறக்காமல்  அந்த யந்திரத்தின் மீது ஒரு அடுப்பைப் மூட்டி  வைத்து தன் வீட்டில் இருந்த உலோகப் பாத்திரங்களை எடுத்து அதில் இரவு முழுவதும் போட்டு வைத்தாள் . மறுநாள் அவற்றை எடுத்து உருக்கி தான் வைத்து இருந்த சிவபெருமானின் உருவைக் கொண்ட வார்ப்பில் அதை ஊற்றி வைத்தாள். அந்த உலோகம் ஆறிய  பின் அந்த வார்ப்பை திறந்து பார்த்தவள் திக்கிட்டு நின்றாள். வாய் பேச முடியாமல் திக்கெட்டது. ஏன்?.....ஏன் தெரியுமா...அந்த சிலை தங்கத்திலான சிலையாக மாறி  இருந்தது.  அது மட்டும் அல்ல அதன் அழகும் கண்களை விட்டு அகல மறுக்க அந்த சிலையை பல முறை பல விதத்திலும் சோதனை செய்து பார்த்தவள், அந்த சிலை முழுவதுமே தங்கத்தினாலானது  என்பதை உறுதிப்படுத்திக்  கொண்டப் பின் ஆலயத்துக்குள் ஓடிச் சென்று மனமுருகி இறைவன் முன்  நின்று கொண்டு கதறி அழுதாள் .
'ஐயனே சித்தர் உருவில் வந்தது நீதானோ? எனக்குப் புரியவில்லை. அது இல்லை என்றால் சித்தர் பெருமானே நீர் வரைந்த யந்திரம் மந்திர சக்தி வாய்ந்ததோ? அதுதான் அலுமினியப் பாத்திரங்களை தங்கமாக மாற்றி விட்டதோ? என்ன ஆனாலும் சரி, நான் செய்ய விரும்பியதை இந்த ஜென்மத்திலேயே செய்து  விட்டேன்.  இனி எனக்கு இந்த ஜென்மத்தில் வேறு எதுவுமே தேவை இல்லை. இனிமேல் உங்கள் பாதங்களை நான் சரணடைய நீங்கள் அருள் புரிந்தால் அதுவே போதும்.   சிவபெருமானே, என்னே அழகாக நீ இந்த சிலையில் இருக்கிறாய்' என்று ஆனந்தம் தாங்காமல் ஆலய சன்னதியில் கதறியவள்  தன்னை மறந்து  அந்த சிலையின் கன்னத்தை செல்லமாக  கிள்ளி  விட்டப் பின் அதில் முத்தமிட்டாள். அதன் விளைவாக அவள் முத்தமிட்ட அந்த முகத்திலான கன்னப் பகுதி சற்றே பள்ளமாக ஆயிட்று (இன்றும் அந்த சிலையின் முகத்தில் அந்தப் காயம் போன்ற பள்ளம் உள்ளது). இப்படியாக ஒரு நடன மாதுவினால் ஏற்பட்ட சிலையைக் கொண்டு திருப்பூவண ஆலயம் எழுந்தது''.  
இப்படியாக அந்த ஆலயத்தில் உள்ள சிலை தோன்றியக் கதையைக் கூறிய சூதகர் அந்த ஆலய மகிமைகளை பற்றி மேலும் எடுத்துரைக்கலானார் .

......தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>