Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Neelamadhava-Puri Jagannathar - 2

$
0
0

2
இதற்கிடையில் வடக்கு நோக்கி சென்று கொண்டு நீலமாதவாவை தேடி அலைந்த வித்யாபதி, 'நீலாத்ராரி'எனும் மலைப் பகுதியை அடைந்தார். அங்கு சென்று மலை அடிவாரத்தில் தங்கியவர் மேல் பகுதி மலை மீது வினோதமான காட்சியில் இருந்த மக்களை காண நேரிட்டது. அவர்கள் அனைவருக்கும் நான்கு கைகள் இருந்தன. ஒரு கையில் சங்கு, இன்னொன்றில் சக்கரம், மூன்றாவதில் தாமரை மலர் மற்றும் நான்காவதில் கதை போன்றவை இருந்தன. அதில் இருந்தே அவர்கள் வைஷ்ணவர்கள் என்பதும் தெரிந்தது. தாம் ஒருவேளை நீல மாதவா தங்கி உள்ள தேவலோகத்தில் நுழைந்து விட்டோமா என்று எண்ணியபடி மலை மீது ஏறி செல்லத் துவங்கினார். நேரம் ஆக ஆக பசியாலும் தாகத்தினாலும் களைத்துப் போன அவர் சென்ற வழியில் விஸ்வாசு என்பவரை சந்திக்க நேரிட்டது. வித்யாபதியின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்ட விஸ்வாசு அவர் வந்த நோக்கத்தைக் கேள்விப்பட்ட பின், தானும் நீல மாதவாவை குறித்துக் கேள்விப்பட்டு உள்ளதாகவும், ஆகவே தன்னுடன் வந்து தன் வீட்டில் தங்கி இருந்து கொண்டு நீல மாதவாவை தேடுமாறும், அவருக்கு ப்ராப்தம் இருந்தால் நீல மாதவாவை அவர் சந்திக்க முடியும் என்றும் கூறி விட்டு அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

விஸ்வாசு குடிலில் தங்கி இருந்த வித்யாபதி தினமும் அந்த மலை மீதே அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தவாறு நீல மாதவாவை தேடினார். அதற்கு இடையில் அந்த குடிலில் இருந்தபோது விஸ்வாசுவின் மகளும் வித்யாவதிக்கு நெருக்கம் ஆகி விட அவரும் அங்கு இருந்த சில நாளிலேயே அவளை மணந்து கொண்டு அங்கேயே தங்கி இருந்தார். காலம் கடந்தது. அப்போது தினமும் நடு இரவில் வீட்டில் இருந்து விஸ்வாசு எங்கேயோ கிளம்பிச் சென்று விட்டு விடியற் காலையில் திரும்பி வருவதை கவனித்த வித்யாபதிக்கு சந்தேகம் வந்தது. எதற்காக விஸ்வாசு தினமும் இரவு அனைவரும் ஒய்வு எடுக்கச் சென்ற பின் வெளியில் செல்கிறார் என்ற சந்தேகம் எழ அவர் தனது மனைவியிடம் அது குறித்துக் கேட்கத் துவங்கினார். முதலில் அவள் எதை எதையோ கூறி மழுப்பத் துவங்கினாலும், முடிவாக வித்யாபதியின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் தனது தந்தை தன்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு கூறிய செய்தியை வித்யாபதியிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு கூறினாள்.  அவளுடைய தந்தை தினமும் மலை உச்சிக்குச் சென்று, அங்கு உள்ள ஒரு குகையில் தங்கி உள்ள நீல மாதவாவை தரிசனம் செய்து விட்டு வருவதாக கூறியதும், தான் வந்த நோக்கம் நிறைவேறும் கட்டம் வந்து விட்டதை உணர்ந்த வித்யாபதியும் நீல மாதவா தங்கி உள்ள இடத்துக்கு எப்படி செல்வது என அவளிடம் ஆலோசனைக் கேட்டார். பதிபத்தினியாகவே வாழ்ந்து கொண்டிருந்த அவளும் தனது கணவர் கேட்கின்றாரே என்பதினால் அவருக்கு ஒரு ஆலோசனைக் கூறினாள்.

அவள் கூறியபடியே வித்யாபதியும் தன்னுடைய மாமனாரிடம் தான் தன்னுடைய மன்னன் இந்ரதைய்யுமாவின் ஆணைப்படியே நீல மாதவா இருக்கும் இடத்தைப் பார்க்க வந்ததாகவும் தனக்கும் அவரை தரிசிக்கும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தருமாறும் கெஞ்சிக் கேட்க, அவரும் வித்யாபதியின் கண்களைக் கட்டி நீலமாதவா தங்கி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை தரிசிக்க வைத்தார்.

ஒரே ஒரு கணம்தான். அடுத்தகணம் அனைத்து காட்சிகளும் மறைந்தன. அங்கு நீல மாதவா காணப்படவில்லை. முதலில் வித்யாபதி கண்ட நான்கு கைகளுடன் கூடிய மனிதர்களே தென்பட்டார்கள். அவர்கள் வித்யாபதியிடம் தாம் அனைவருமே தேவலோக மனிதர்களே என்றும், அதுவரை தமக்கு அங்கு காட்சி தந்து கொண்டிருந்த நீல மாதவா திரும்பிச் சென்று விட்டார் என்றும், போகும் முன்னால் அவர்களிடம் இன்னும் சில காலத்தில் பூமியை ஆண்டு வரும் மன்னனான இந்ரதைய்யுமா தன்னைத் தேடி அங்கு வர உள்ளதாகவும், அவர் அங்கு வந்து விட்டு திரும்பி தன் நாட்டுக்கு சென்றதும் தனக்கு ஒரு ஆலயம் எழுப்ப உள்ளதாகவும், வரும் காலத்தில் அனைவருக்கும் அங்கேயே தான் தரிசனம் தர உள்ளதாகவும் கூறி விட்டு மறைந்து போனதாகவும், ஆகவே தாங்களும் இந்ரதைய்யுமா அங்கு வந்து நீல மாதவாவை சந்திக்கும்வரை தங்கி இருக்க உள்ளதாகவும் கூறினார்கள்.

அதைக் கேட்டு வியந்து போன வித்யாபதியும் இனியும் தாமதிக்கலாகாது, நாட்டுக்குச் சென்று மன்னரிடம் அனைத்தையும் கூற வேண்டும் என முடிவு செய்து உடனடியாக விஸ்வாசு மற்றும் தனது மனைவியிடம் விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்று மன்னனிடம் நீல மாதவாவின் செய்தியைக் கூறினார். வித்யாபதி நல்ல செய்தியுடன் வந்ததைக் கேட்ட மன்னனும் மன மகிழ்ந்து போய் தானும் நீல மாதவாவை சந்திக்க ஆவல் கொண்டுள்ளதாகக் கூறி விட்டு நீல மாதவாவை தரிசிக்க வித்யாபதியுடன் உடனடியாகக் கிளம்பி நீலாத்ராரி மலைப் பகுதியில் நீல மாதவா தங்கி இருந்த இடத்தை சென்றடைந்தார். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நீல மாதவா மட்டும் அல்ல, நான்கு கைகளைக் கொண்ட மனிதர்கள் கூட அங்கு காணப்படவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடம் மனிதர்களுடைய நடமாட்டமே இல்லாத சூனியமான பிரதேசமாகவே காட்சி அளித்தது.

அங்கு எவரையுமே காணவில்லை என்பதினால் வித்யாபதியும் கலக்கம் அடைந்தார். தான் பொய்யைக் கூறியதாக மன்னன கோபமடைவாறே என கவலைப்பட்டுக் கொண்டு நின்று இருந்தபோது, அங்கு பெரும் புயல் அடித்தது. மலையில் புழுதி வாரி இறைத்தது. எவரும் எவருடைய கண்களுக்கும் தெரியவில்லை. நீல மாதவாவைக் காண முடியாத துயரத்தில் ஆழ்ந்த இந்ரதைய்யுமா அங்கேயே மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ய முயன்றார். அப்போது   வானத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அந்தக் குரலில் இருந்து அசீரி கூறியது 'மன்னா நீ இங்கிருந்து கிளம்பி நீல மலைக்குச் சென்று அங்குள்ள மலை மீது எனக்கு ஒரு ஆலயம் அமைப்பாய். அதில் ஜகன்னாதரின் உருவில் என் பரிவாரத்துடன் மரக்கட்டையில் செதுக்கிய சிலையாக அமர்ந்து கொண்டு நான் அனைவரையும் ரட்ஷிப்பேன்.  அந்த ஆலயத்துக்குள் பிரும்மாவைக் கொண்டு மரத்திலான உருவில் இருக்க உள்ள என்னை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை புனிதப்படுத்துவாய்'என்று கூறிவிட்டு அந்த ஆலய அமைப்பையும் எடுத்துரைத்தது .

அதைக் கேட்ட இந்ரதைய்யுமாவும் மற்றவர்களும் சற்றே அதிர்ந்து போனாலும் தான் செல்ல வேண்டிய இடம் எது, அங்கு எப்படிப் போவது, ஆலயத்தைக் கட்ட என்னென்ன செய்ய வேண்டும், அதில் விஷ்ணுவை எப்படி வடிவமைப்பது என்பதெல்லாம் தெரியாமல் குழம்பினார். ஆகவே வேறு வழி இன்றி மீண்டும் அங்கேயே விஷ்ணுவை மனதார ஆராதனை செய்தபடி அமர்ந்திருந்தபோது அவரை யாரோ எழுப்புவது போல உணர்ந்தார். கண்களை திறந்து பார்த்தபோது அவர் எதிரில் நாரத முனிவர் நின்று கொண்டு இருந்ததைக் கண்டார். நாரத முனிவரைக் கண்ட மன்னன் உடனடியாக எழுந்து  அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து பல முறை அவரை வணங்கிய பின் தான் நீல மாதவாவை தரிசிக்க ஆசைப்பட்ட விஷயம் முதல் அனைத்து செய்திகளையும் கூறிய பின் தான் எத்தனை துரதிஷ்டசாலியாக இருந்திருந்தால் நீல மாதவாவைக் காண முடியாமல் திரும்பிப் போக உள்ளது என்பதைக் கூறி வருந்தினார்.

அதைக் கேட்ட நாரத முனிவர் கூறினார், 'மன்னா கவலைப்படாதே. இங்கு நடந்தவை அனைத்தையும்  நான் அறிவேன். நீ மனதார வழிபடும் விஷ்ணு பகவான், நீ நீல மலையில் கட்ட உள்ள ஆலயத்திலேயே நீல மாதவராக அவதரிக்க உள்ளார். அதுவும் புருஷோத்தம ஷேத்திரத்தில் நீ கட்ட உள்ள ஆலயத்தில் அவர் தனது பரிவாரங்களுடன் பிரதீஷ்ய தெய்வமாக பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரிய உள்ளார். அந்த ஆலயத்தை நிர்மாணிக்கும்போது பிரும்மாவே நேரிலே வந்து அதைக் மேற் பார்வையிட உள்ளார். அது மட்டும் அல்ல மன்னா, அந்த ஆலயத்தைக் கட்ட தேவலோகத்தில் இருந்து விஸ்வகர்மாவும் தனது பரிவாரங்களுடன் வந்து உனக்கு உதவி செய்வார். இதை பிரும்மாவே எனக்குக் கூறி, உன்னிடம் இந்த செய்தியை தெரிவிக்க என்னை இங்கே அனுப்பி உள்ளார். ஆகவே என்னுடன் கிளம்பி வா...நாம் புருஷோத்தம ஷேத்திரத்துக்கு செல்வோம்'என்று கூற அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னனும் அவர் கால்களில் மீண்டும் விழுந்து வணங்கிய பின்னர் அவரை அழைத்துக் கொண்டு பரிவாரங்களுடன் தன் நாட்டுக்கு திரும்பினார்.

வழியில் நாரத முனிவரிடம் 'மா முனிவரே, புருஷோத்தம ஷேத்திரம் எங்குள்ளது? அதை நான் எப்படி கண்டு பிடிப்பது? நீல மாதவரின் சிலைக்கான மரத்தை எங்கு போய் எப்படித் தேடுவது? என்னை நீல மலைக்கு போகுமாறு அசீரி கூறி மறைந்து விட்டதே. அனைத்துமே எனக்கு குழப்பமாகவே உள்ளதே'என்று கேட்க நாரத முனிவர் கூறினார் 'மன்னா நீலை மலையின் உச்சிதான் புருஷோத்தம ஷேத்திரம் என்பது. அங்கு சென்றவுடன் அது நிலப்பரப்பாகி விடும். அதன் அருகில் உள்ள கடலில்தான் நீல மாதவர் தன் உருவத்தை வடிவமைக்க உள்ள மரத்தின் அடிப்பகுதியையும் உனக்கு தர உள்ளார். ஆனால் அதற்கு முன்னால் அங்கு நீ ஆயிரம் குதிரைகளைக் கொண்டு யாகமும் செய்ய வேண்டும். ஆகவே கவலைப் படாமல் என்னுடன் வா ... நாம் முதலில் நீல மலைக்கு செல்வோம் '.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட மன்னன் நாரத முனிவர் அருளாசியுடன் நீல மலையின் உச்சியை சென்றடைந்தார். அவர்கள் அங்கு சென்றதும் அங்கு ஒரு பெரிய மரம் தென்பட்டது. அதைக் காட்டிய நாரத முனிவர் அந்த மன்னனிடம் அந்த மரம்தான் விஷ்ணு பகவான் அமர்ந்திருந்த இடம் என்றும், அதன் நிழலில் சென்று அமர்பவர்களுக்கு மோட்ஷம் கிட்டும் என்றும் கூற, அடுத்தகணமே அந்த மரத்தின் அடியில் ஹிரண்யகசிபுவின் உடலைக் கிழித்தபடி உக்ரஹமான சிங்க முகத்துடன், கைகளில் ரத்தம் கொட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் விஷ்ணு பகவான் காட்சி தந்தார். ஆனால் அந்த காட்சி நடக்க உள்ளதை நாரத முனிவர் ஏற்கனவே கூறி இருந்ததினால் மன்னனும் அவர் பரிவாரங்களும் சற்றும் பயப்படாமல் அப்படியே சாஷ்டாங்கமாக பூமியிலே விழுந்து நரசிம்மரை வணங்கித் துதித்து அவர் தாம் அனைவருக்கும் அருள் பாலிக்கும் விதத்தில் அங்கேயே சாந்தமாக எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அவர்கள் பூமியிலே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டு எழுந்ததும் அவர்கள் கண்ட ஹிரண்யகசிபுவின் வதம் குறித்த நரசிம்ம அவதாரக் காட்சி அப்படியே மறைந்துவிட்டது. மீண்டும் அங்கு ஒரு அசிரீயின் குரல் கேட்டது. 'மன்னா நீ உடனே கிளம்பிச் கடற்கரைக்கு செல். அங்கு நான் மரத்தின் அடிப்பாகமாக என்னை வடிவமைக்க வருவேன்'  என்று கூறி விட்டு மறைந்தது.
...........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>