Quantcast
Viewing all articles
Browse latest Browse all 460

கூந்தலூர் முருகன்


சாந்திப்பிரியா  

சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம்.  அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12 கிலோ தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது கூந்தலூர் ஆலயம். நாச்சியார் கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் சாலையில் சென்றோ அல்லது நாச்சியார் கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவு பயணித்தோ இங்கு செல்லலாம். சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் பல பேருந்துகள் கூந்தலூர் வழியே செல்கின்றன.

கூந்தலூரில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான முருகன் ஆலயம் இது ஆகும்.  சனி மற்றும் செவ்வாய் கிரக தோஷங்களை நிவர்த்திக் கொள்ளும் பரிகாரத் தலம் இது. அருணகிரிணாதர் பாடியது போல 'சிலம்பு ஏந்தி, காலிலும் கையிலும் சலங்கையும் தண்டையும் கட்டி, வலிமையான தோளுடன் காட்சி தரும் முருகப் பெருமான் என் முன்  நின்றிருந்தால், நாளோ, பூர்வ ஜென்ம வினையோ அல்லது  கோளின் (கிரஹம்) தாக்கமோ, எதுதான் என்னை என்ன செய்ய முடியும்'என்று கூறியதைப் போல சனி பகவானின் கிரக தோஷங்களும் இங்கு வந்து முருகனை வணங்கித் துதித்தால் தூர விலகும் என்பது ஐதீகம்.

 முருகன் சன்னதி 

இங்குள்ள சிவபெருமான் மற்றும் பார்வதியை 'ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்'  என்று அழைக்கிறார்கள். ஜம்பு என்றால் நாவல் பழம் அல்லது நரி என்ற இரு அர்த்தம் உண்டு. இந்த ஆலயம் அமைக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதி முழுவதுமே நாவல் பழ மரங்களினால் சூழப்பட்டு இருந்ததினாலும், ஒருமுறை சாபத்தினால் நரி உருவெடுத்த முனிவர் ஒருவர் ஒன்று இங்கு வந்து சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சாபத்தை விலக்கிக் கொண்டதினாலும் இந்த ஆலயத்து இறைவனை  ஜம்புகாரணேசுவரர் என அழைக்கப்பட்டதாக செவி வழி வரலாறு உள்ளது.

இந்த ஆலயத்துக்கு சிறப்பு பலவும் உண்டு. அவை அனைத்தும் செவி வழி  வரலாறு என்பதாகவே  உள்ளன. இராமாயண காலத்தில் தசரத மன்னனின் கட்டளைப்படி ராமரும், சீதையும் வனவாசத்துக்கு சென்ற போது இந்த வழியே வந்து இந்த வனத்தில் சில காலம் தங்கி இங்கு எழுந்தருளி இருந்த ஜம்புகாரணேஸ்வரரை வழிபட்டு உள்ளார்கள். அவர்கள் தங்கி இருந்த குடிசையின் அருகில் தாம் குளித்து நீராட சீதா தேவி ஒரு நீர் நிலையை அமைத்தாராம். அந்த நீர் நிலையே சீதா தீர்த்தம் என்பதாகவும், அந்த தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து கொண்டு சீதா பிராட்டியார் தமது கூந்தலை வருடி விட்டுக் கொள்ளும்போது சீதையின் தலை முடிகள் அந்த நீருக்குள் விழுந்து அந்த தீர்த்தத்தை புனிதமாக்கிக் கொண்டே இருந்ததாம் என்பதாகவும் புராணக் கதை உள்ளது. உண்மையில் கூந்தல் என்பது தலை முடியல்ல, அது காரணப் பெயர் ஆகும். அந்த தலை முடிகள் என்பவை சீதையின்  உடலில் இருந்து வெளியேறிய தேவகணங்களே. சீதை லஷ்மியின் அவதாரம் என்பதினால் அந்த நீர் நிலையைக் காத்தபடி நின்றிருந்த தேவ கணங்கள் அங்கேயே வாசம் செய்தன. இதனால்தான் இந்த இடமே கூந்தல் காத்த ஊர் என்பதாக முன்னர் கூறப்பட்டு, கூந்தலூர் என பின்னர் மருவி உள்ளதாம்.

கூத்தப்பனை மரம் 
 
கூந்தலூர் என்ற பெயர் வர இன்னொரு காரணமும் உண்டு. நாவல் மரங்களைத் தவிர கூந்தப்பனை எனும் பெயரைக் கொண்ட பனை மரங்கள் நிறைந்த பகுதியாகவும்  இந்த இடம் இருந்ததால் இப்பகுதி கூந்தலூர் என்று பெயர் பெற்றது என்றும் செய்தி உள்ளது.  இந்த மரத்தை கூந்தல்பனை, இரும்பனை, திப்பிலிபனை என்றும் கூறுவார்கள். இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக் கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப் போலவும் தோன்றுவதால் இந்த மரங்கள் அடர்ந்திருந்த இந்தப் பகுதி கூந்தல்பனையூர்  என்ற பெயர் பெற்று இருந்திருக்கலாம் என்கிறார்கள். அதைத்தான் சீதையின் கூந்தல் என்றும், அதுவே பின்னர் மருவி கூந்தலூர் என்றாகிற்று என்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பு என்ன என்றால், இது சிவன் ஆலயம் என்றாலும் முருகப் பெருமானுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ஆலயமாக உள்ளது. அதனால்தான் முருகனின் சன்னதியும் ஆலயத்தின் முன்புறத்தில் முதலாவதாக அமைந்துள்ளது. அதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. சித்தர்களில் மேன்மையானவரும் மகா ரிஷியுமான ரோம ரிஷி என்பவர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து கூந்தலூர் ஆலய சிவபெருமானிடம் இருந்து அறிய ஆற்றலைப் பெற்றார். அந்த சக்தியின்படி அவரால் தனது தாடியில் இருந்து தங்கத்தை வரவழைக்க முடிந்தது. அந்த ஆற்றலைக் கொண்டு ரோம ரிஷி அவரை நாடி வந்த ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே பொன்னை  வரவழைத்து அவர்களுக்கு அளித்து வந்தார்.

இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்தவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருமுறை தாடியில் இருந்து பொன்னை வரவழைக்கும் அவருடைய சக்தியை தடுத்து நிறுத்தினார். சிவபெருமானின் திருவிளையாடல் காரணமாக ரோம ரிஷியின் தாடி வழியே பொன் வந்து கொண்டிருந்தது நின்று விட்டது. அதனால் அவரால் ஏழைகளுக்கு முன்னைப் போல உதவிட முடியவில்லை. என்ன காரணத்தினால் தான் சக்தியை இழக்க வேண்டியதாயிற்று என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் தவித்து  மனம் தளர்ந்து போன ரோம ரிஷி அடுத்த நாளே தனது தாடியை நீக்கி விட்டார். தாடியை எடுத்தப் பின் முடியை சுத்தப்படுத்திக் கொள்ள குளிக்கக் கூட மறந்து விட்டு தன்னை மறந்த நிலையில் சிவபெருமானை தரிசிக்க கூந்தலூர் ஆலயத்துக்குள் செல்லத் துவங்கினார்.

 ஆலயத்துக்குள் நுழைய வந்த 
ரோம ரிஷியை முருகனும், 
வினாயகரும் தடுத்து  நிறுத்தினார்கள்  

அப்படிப்பட்ட நிலையில் நீராடாமல் சிவனை தரிசிக்க ஆலயத்துக்குள் நுழைய வந்த ரோம ரிஷியை உள்ளே நுழைய விடாமல் வாயிலிலேயே வினாயகப் பெருமானும் முருகனும் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகே தன்  நினைவுக்கு வந்து தன் தவறை உணர்ந்த ரோம ரிஷியும் மனம் வருந்தி ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்கும் வகையில் தவம் இருந்தார். அவர் பக்தியையும், தவத்தையும் மெச்சிய சிவபெருமானும் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்த ரிஷிக்கு காட்சி தந்ததும் இல்லாமல் மீண்டும் அவருக்கு இன்னும் பல ஆற்றல்களையும் சக்தியையும் தந்தருளினார். வெளித் தூய்மையை விட மனத் தூய்மையே பெரியது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அந்த திருவிளையாடலை சிவபெருமான் நடத்தியதாக தல வரலாறு கூறுகிறது.

நடந்தேறிய அந்த நாடகத்தில் ரோம ரிஷியை ஆலயத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தப் பின் முருகப்பெருமான் அங்கேயே அமர்ந்து கொண்டார். அதனால் முருகப் பெருமான் அங்கு அமர்ந்திருந்த ஆலயத்தில் அதே முன் பகுதியில் அவருடைய சன்னதி  அமைந்தது.  அதற்கு முன்பாக தனக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள அங்கு வந்து சிவபெருமானை துதித்தபடி பல காலம் தவத்தில் இருந்த சனிபகவான் அன்றும்  நீர் நிலையில் குளித்தப் பின் உள்ளே நுழைய வந்தபோது அவரையும் முருகன் தடுத்து நிறுத்தி கூறினாராம் 'இனி இந்த தலத்தில் வந்து என்னை வழிபடுபவர்களின் அனைத்து சனி தோஷங்களையும் அந்த நிமிடமே விலக்கிக் கொள்ள நீங்கள் சம்மதித்தால் மட்டுமே உங்களை உள்ளே நுழைய விடுவேன்'என்று கோபத்துடன் கூற அதைக் கண்டு பயந்து போன சனி பகவானும் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக வேண்டும் எனில்  கூந்தலூர் ஜம்புகேஸ்வரரின் அருள் வேண்டுமே என்பதற்காக வேறு வழி இன்றி அந்த உறுதிமொழியை அனைவர் முன்னிலையிலும் முருகனுக்குத் தந்த பின்னரே சனி பகவானை உள்ளே நுழைய முருகன் அனுமதித்தாராம். அதன் பின் சனி பகவானும் முருகன் சன்னதிக்கு எதிர்புறத்தில் சென்று அமர்ந்து கொண்டு தமது தவத்தை தொடர்ந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெற்று  சாபத்தை விலக்கிக் கொண்டாராம்.  சனி பகவான் அமர்ந்திருந்த  இடத்திலேயே சனி பகவானுக்கும் சன்னதி அமைந்தது.
தேவ மயிலுடன் முருகன் 

இத் தலத்தில் முருகன் ஈசான்ய மூலையில் தனது இரு தேவியருடன் மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சூரசம்ஹாரத்திற்கு முன்பே முருகனுக்கு இருந்த மயில் வாகனம் இது என்பதினால்தான் இங்குள்ள மயில் தேவ மயில் என்ற பெயரைப் பெற்றது. ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவதும், ஈசான்யப் பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பதினாலும் சனிஸ்வரரின் தொல்லைகளை இந்த முருகனே களைவதாக ஐதீகம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் சனி மற்றும் செவ்வாய் கிரக சன்னதிகள் இந்த ஆலயத்தில் எதிர் எதிராக அமைந்துள்ளதால் இத்தலம் சனி-செவ்வாய் கிரக பாதிப்புகள் நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.


ஈசான்ய மூலை என்பது என்ன? எட்டு திசைகளில் வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் இடமே ஈசான்ய மூலை என்பதாகும். ஈசான்ய மூலை என்பது ஈசனானவர், அதாவது சிவபெருமான் வசிக்கும் இடம் என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். ஆகவேதான் வீட்டிலும் கூட ஈசான்ய மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அங்கு பூஜை அறையையோ அல்லது பூஜை அறை அமைக்க முடியாதவர்கள் தெய்வத்தின் படத்தையோ அங்கு வைத்து வணங்குவது சிறப்பு என்பதாக பண்டிதர்கள் அறிவுறுத்துவார்கள். வடக்கு திசையும், கிழக்கு திசையும் சந்திக்கும் ஈசான்ய மூலையில் தெய்வப் படத்தை வைத்து நமஸ்கரித்து வணங்கலாம். ஒருவர் வீட்டிலேயே கூட வடகிழக்கு மூலை ஈசன் உள்ள இடம் என்பதினால்தான் வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் தரும் இடம் என்பார்கள்.

  எட்டு பட்டைகள்  உள்ள  தாரா லிங்கம்

இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்றால் இங்குள்ள ஒரு சன்னதியில் பதினாறு பட்டைகள் (16) கொண்ட தாரா லிங்கம் அல்லது பாணப்பட்டை சிவலிங்கம்  எனப்படும் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது. சிவலிங்கங்களில் பலவகை லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டு. அவற்றில் ஒன்றே தாரா லிங்கம் என்பதாகும். பல்லவர் காலத்தை சார்ந்த அபூர்வமான தாரா லிங்கம் என்பது பாணப் பகுதியில் பட்டைகளோடு காட்சி தரும் லிங்கங்கள் ஆகும். அப்படிப்பட்ட லிங்கங்கள் அனைத்து ஆலயங்களிலும் இருக்காது. தாரா லிங்கங்களில் எட்டு பட்டை, பதினாறு பட்டை மற்றும் பன்னிரண்டு பட்டைகளைக் கொண்ட தாரா லிங்கத்தை வணங்கி வந்தால் பல செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

இது போன்ற மேலும் சில அபூர்வமான தாரா லிங்கங்கள் இலங்கையிலும்  அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.   அனைத்து சிவன் ஆலயத்து பிரகாரத்திலும் காணப்படும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் போன்றவர்கள் சன்னதிகள் இங்கும் அமைந்துள்ளன.

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>