Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 3

$
0
0
-3-

இந்த மலைக்கு வந்து வாயுபகவான் சாபவிமோசனம் பெற்றதை அறிந்திட்ட ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவிடம் சென்று தனக்கு  முன்னொரு ஜென்மத்தில் சகோதரர்களைக் கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தையும், மேரு மலையை உடைத்ததற்கு காரணமாக தானும் இருந்ததினால் அதனால் பெற்ற சாபத்துக்கும்  விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க அவரும் அதே மலைக்குச் சென்று சிவபெருமானை வேண்டித் தவம் இருக்குமாறும் அப்படி செய்து சிவபெருமானின் அருளைப் பெற்றால் மட்டுமே சாபவிமோசனம் பெற முடியும் என்றதும், ஆதிசேஷனும் அங்கு சென்று ஒரு தீர்த்தம் அமைத்து,  அதில் தினமும் நீராடி சிவபெருமானை துதித்து பல காலம் தவமிருந்து சாப விமோசனம் அடைந்தார்.

ஆதிசேஷனின் இந்த நிலைக்குக் ஒரு பின்னணிக் காரணம் உண்டு. கிருஷ்ண பகவானின் முடிவு காலம் நெருங்கியபோது யாதவர்கள் தமக்குள்  தாமே சண்டை இட்டுக் கொண்டு யாதவ வம்சத்தை அழித்துக் கொண்டபோது அதில்  கிருஷ்ணருடைய சகோதரரான பலராமர்  பங்கேற்று பல யாதவர்களை  கொல்ல நேரிட்டது.  ஆகவே சகோதரர்களைக் கொன்ற தோஷம் ஏற்பட்டு இருந்தது.  ஆகவே அவர் வாழ்க்கையில் வெறுப்புற்று  ஆதிசேஷனாக மாறி விஷ்ணுவிற்கு ஆசனமாக மாறினாலும் அந்த தோஷம் அவரைத் தொடர்ந்தது. விஷ்ணுவே கிருஷ்ணராக  அவதரித்து  இருந்தார்.  அவரால்தான்  பலராமரும் இந்த தோஷத்தைபெறக் காரணமாக இருந்தார் என்பதினால் அந்த சாப விமோசனத்தை அவரால் தரமுடியாது. ஆகவே விஷ்ணு பகவான்  ஆதிசேஷன் அவதாரத்தில் இருந்த பலராமரை   வாயுவுடன் போர் புரிய வைத்து  அதன் மூலம்  இன்னொரு சாபம் பெற்று, அதற்கு சாப விமோசனம்  பெறுவதின் மூலம் பாலராமராக இருந்தபோது பெற்ற சாபத்தையும் விலக்கிக் கொள்ள வழி வகுத்தாராம்.  இதெல்லாம்  வாய் வழியாக கூறப்பட்டு வரும் கதைகளே.

அது போலவே தொண்டை நாட்டில் இருந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த சிவபதியில் முதலியார் இனத்தில் பிறந்த வைராக்கியப் பெருமாள் எனும் பக்தருக்கு வெகு காலம் குழந்தைப் பிறக்காமலேயே இருந்தது. ஆகவே அவர் பல தலங்களுக்கும் சென்று தமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டி வந்தார். அப்படி தலம் தலமாக சுற்றிக் கொண்டு இருந்தவர்  எங்கு சென்றும் தமக்கு குழந்தைப் பாக்கியம் பெறும் பாக்கியம் கிடைக்கவில்லையே என நொந்து போய் முடிவாக இந்த இடத்துக்கும் வந்தார். மலை  மீது இருந்த சிவலிங்கத்தை  'ஈசனே, நான் பல இடங்களுக்கும் சென்று பல காலம் வேண்டியும் எனக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை என்பதினால் மனம் சோர்ந்து விட்டேன்.  முடிவாக உன்னிடம் சரண் அடைந்து உள்ளேன். எனக்கு  குழந்தைப் பாக்கியம் கிடைத்தால் இங்கேயே வந்து என் தலையையே உனக்கு காணிக்கையாகத் தருகிறேன்'மனதார வேண்டிக் கொண்டார். தினமும் இப்படியே வேண்டியவாறு சில காலம் அங்கு தங்கி இருந்தவர் கனவில் ஒரு நாள் சிவபெருமான் தோன்றி அவர் வேண்டியது நிறைவேறும் என ஆசி கொடுத்தார்.  அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன  பெருமாள் வீடு திரும்பினார். அடுத்த வருடமே அவருடைய மனைவிக்கு குழந்தையும்  பிறந்தது.

தன்னுடைய  வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றித் தந்ததினால் அவர்  தனது  குடும்பத்தை அழைத்துக் கொண்டு ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு சென்றார். அங்கு பூஜைகளை செய்தப் பின் கீழிறங்கி வந்து  தான் சிவபெருமானிடம் கூறியது போல சற்றும் தயங்காமல் தனது கையில் கொண்டு வந்திருந்த வாளினால் தனது தலையை துண்டாக்கிக் கொண்டு காணிக்கையை செலுத்தினார். அந்தத் தலை அப்படியே பறந்து போய் மலை மீது விழ,  உடல் பூமியில் விழுந்தது. அவர் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவனார் அவருக்கு காட்சியைத் தர, தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது தமது தலையை கொய்து கொண்ட அந்த பக்தரின் பக்தியால்  மகிழ்ந்து போன தேவர்கள் தேவலோகத்தில் இருந்து பூமாரி பொழிந்தனர்.


அவர் பக்தியை மெச்சிய சிவபெருமான் அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அந்த ஆலயத்தில் சில விதிமுறைகளை ஏற்படுத்தினார்.  அதன்படி அந்த சன்னதியின் அடுத்து அமைந்துள்ள சன்னதியில் உள்ள வைராக்கியப் பெருமாளுக்கே  இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில்  சூட்டப்படும். அடுத்து  இறைவனுக்கு  கற்பூர ஆரத்தி எடுத்தப்  பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் கல்பூர ஆரத்தி காட்டப்பட வேண்டும். அது போலவே  இறைவனுக்கு படைத்த நெய்வித்தியமும் இவருக்கே முதலில் தரப்படும். அது மட்டும் இல்லாமல்  மலையின் அடிவாரத்தில் இவர் உடம்பின் அடிப்பாகம் ஒரு சன்னதியாகவும், நடுப்பாகம் மலைக்கு செல்லும் நடு வழியில் ஒரு சன்னதியாகவும், அவருடைய தலை பாகம் மலைமேல் இறைவன் சன்னதிக்கு மிக அருகில் ஒரு சன்னதியாகவும் அமைந்துள்ளது.

கீழிருந்து மலை மீது ஏறிச் செல்லும்போது வழியில் ஆங்காங்கே இருபத்தொரு மண்டபங்கள் காணப்படுகின்றன. அவை பல்வேறு காலங்களில் அமைந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணக் கதையும் உள்ளது. அவற்றில் குறிப்பிட வேண்டியவை இலட்ச தீப மண்டபம், காக்கை மண்டபம், வசந்த மண்டபம், சகுனக்குன்று, பொன்னிடும்பாறைமற்றும் பதினெட்டாம் படி போன்றவை ஆகும்.
 
காக்கை மண்டபத்தின் மீது காகங்கள் பறப்பதில்லை, காகங்கள் அங்கு வந்து அமர்வதும் இல்லை. ஒருவிதத்தில் பார்த்தால் காகம் என்பதே இல்லாத பகுதியாக அந்த மண்டபம் உள்ளது.  அதன் காரணம் ஒன்று உண்டு.  ஒருமுறை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஒரு பக்தர் ஒருவர்ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய அதைக் கீழே வைத்தபோது,  அதைக் கவ்வி  எடுத்துச்  வேகமாக பறந்து வந்த ஒரு  காக்கை அந்தக் கிண்ணத்தை கவிழ்த்து விட்டு பறந்து ஓடிவிட, அடுத்த சில அடி தூரத்திலேயே தீ மூட்டி வைக்கப்பட்டிருந்த  ஒரு அடுப்பில் அந்தக் காக்கை நிலைக் குலைந்து போய் விழுந்து தீப்பற்றி  எரிந்து விட்டதாக ஒரு கதை உண்டு. அதனால்தான் காகங்களுக்கு அந்த இடத்தில் நுழையக்கூடாது என்கின்ற சாபம் ஏற்பட்டு அவை அங்கு நுழைவதில்லை என்கிறார்கள்.


இன்னொரு கதையின்படி அபிஷேகத்துக்காக கொண்டு வந்திருந்த பாலுடன் இருந்த கிண்ணத்தை ஒரு காக்கை கொத்தி கவிழ்த்து விட்டதினால் அந்த பாலைக் கொண்டு வந்திருந்த பக்தரின் மனம் வேதனை அடைய, அவர்   ஈசனிடம் இனி அந்த இடத்தில் காகங்கள்  பறக்கக்கூடாது என சாபம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்ள இறைவனும் அந்தகக் காக்கைக்கு அந்த பக்தர் வேண்டியபடியே சாபம் கொடுக்க, அதனால்   அந்தப் பகுதியில் இயற்கையாகவே காகங்கள் நுழைவதே இல்லை என்கிறார்கள்.  எந்தக் கதை உண்மையோ ஆனால் அங்கு காகங்கள் பறப்பதில்லை என்பது ஓர்   அதிசய நிலையாகவே உள்ளது. அதனால் அங்கு கட்டப்பட்டுள்ள மண்டபத்தை காக்கை மண்டபம் எனப் பெயரிட்டு அந்த மலைப் பகுதிக்கு காகம் பறவா மலை என பெயர் வந்துள்ளது.

அந்த மலை ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் தாம் எண்ணிய  காரியம் நிறைவேறுமா என்பதை தெரிந்து கொள்ள அந்த குன்றின் மீது உள்ள சகுனக் குன்று எனும் இடத்தில் நின்று கொண்டு நாம் என்ன காரியம் நிறைவேற வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதை மனதில் நினைக்க வேண்டுமாம்.  நினைத்தக் காரியம் நிறைவேறும் என்றால்  அங்கு எங்காவது ஒளிந்து கொண்டு இருக்கும் பல்லி ஒலி எழுப்பி சப்தமிடுமாம். அப்படி பல்லி  கத்தினால் நினைத்த காரியம் கைகூடும் என்றும், பல்லி கத்தாவிடில் காரியம் நிறைவேறாது என்பதும் காலம் காலமாக நம்பிக்கையாக உள்ளது.  ஆகவே சகுனம் பார்க்கும் இடமாக உள்ள அந்த பகுதியை சகுனக் குன்று என்றே அழைக்கிறார்கள்.

பதினெட்டாம் படி எனும் இடம் உள்ளது.  அந்த இடத்தை நாட்டாமையார் என்று கூறுவார்கள். அந்த காலத்தில் கிராமங்களில் நாட்டாமையார் முன்னிலையில் நடைபெறும் பஞ்சாயத்தில் உண்மையை கண்டறிய சத்தியம் செய்து உண்மையைக் கூறுமாறு கூறுவார்கள். அல்லது ஒரு ஒரு கடவுளின் படத்தின் முன்  கற்பூரத்தை ஏற்றி அதன் முன் சத்தியம் செய்யுமாறு கூறுவார்கள். அப்படி செய்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தவறு செய்தவன் பயந்து கொண்டு போய் சத்தியம் செய்யமாட்டார்கள் என்பது ஒரு நம்பிக்கையாகவே இருந்தது.   அது போலவே ஒருகாலத்தில் இந்த இடத்தில் சச்சரவுகளை தீர்த்து வைக்க  இருதரப்பினரையும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யுமாறு கூறுவார்கள். சச்சரவுகளைத் தீர்ப்பார்கள். அந்த முறையை இன்றும் சிலர் கடைப் பிடிக்கிறார்களாம். ஆகவே பல காலமாக பதினெட்டாம்படி ஒரு  நாட்டாமை  இடமாகவே கருதப்படுகிறதாம்.
..........தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>