Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

குல தெய்வ வழிபாடு / Kula Theiva Worship - 5

$
0
0
5
பிரும்ம நியதி புரிந்து கொள்வது கஷ்டமானது அல்ல. ஆனால் இந்தகால கணணி போல அவர் அந்த காலத்திலேயே சில கணக்குகளை வகுத்திருந்தே படைப்புக்களை ஏற்படுத்தி இருந்தார். அதாவது இன்னென்ன இடத்தில் இன்னின்ன தெய்வம், அல்லது தேவதை அல்லது தெய்வ கணம் அல்லது தெய்வமாக்கப்பட்ட ஆத்மாக்கள் அவதரிக்க வேண்டும். அந்த இடத்தில் தம்மை தெய்வமாக ஏற்றுக் கொண்ட பரம்பரையினருக்கு அருள் புரிந்து கொண்டும், ஆறுதல் தந்தவரும், அவர்கள் குலத்தைக் காத்துக் கொண்டும் இருக்க வேண்டும். அந்த இடத்தில் அந்த குறிப்பிட்ட தெய்வ மற்றும் தேவதைகளை வணங்க வேண்டிய பரம்பரையினர் அந்த தெய்வங்களை மதிக்காமல் வேறு ஏதாவது  தெய்வத்தையோ, அல்லது தேவதையையோ அல்லது தெய்வ கணம் அல்லது தெய்வமாக்கப்பட்ட ஆத்மாக்களையோ ஆராதித்தாலும் அங்கு பாத்யை  உள்ள தெய்வ அல்லது தெய்வ கணங்களைத் தவிர வேறு எந்த தெய்வமும்  அந்தப் பரம்பரையினருக்கு  அருள் புரியலாகாது என்ற கண்டிப்பான நியமங்கள் வரையுறுக்கப்பட்டு  இருந்தன. இதை மீறும் தேவகணங்களும், தெய்வங்களும் நாளடைவில் தமது சக்தியை இழக்கும். பெயரளவில் மட்டுமே தெய்வமாக தோற்றம் தந்தாலும் அவர்களுக்கு உண்மையான சக்தி இருக்காது.  இது பிரும்ம நியதியாகும்.


உதாரணமாக சேந்தமங்கலம் எனும் கிராமம் மேல் காணும் Sr No-1 என வைத்துக் கொள்வோம். அதில் 200 அல்லது 300 குடும்பங்கள் உள்ளது எனவும் பிரும்ம  நியதிப்படி அந்த கிராமத்தில்  ஐந்து தெய்வங்கள், நான்கு கிராம தெய்வம் அல்லது தேவதைகள், நான்கு ஆத்மாக்கள் அல்லது பூத கணங்கள் அவதரிக்க  வேண்டும் என்பது நியதி என்றும் உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அந்த  அனைவருமே ஒரே காலத்தில் அங்கு  எழுந்தருள வேண்டும் என்ற நியதி   இருக்கலாம். ஒன்றன் பின் ஒன்றாக தோன்ற வேண்டும் என்ற நியதியும் இருக்கலாம்.  அவற்றில் ஏதாவது ஒன்று முதலில் அங்கு சென்று வசிக்கத் துவங்கலாம். அதன் பின் இத்தனைக் காலம் பொறுத்து இன்னொன்று, இத்தனைக் காலம் பொறுத்து இவை இவை, அடுத்து இத்தனைக் காலம் பொறுத்து இவை இவை என தெய்வங்கள் வரிசைக்கிரமமாக அவதரிக்க வேண்டிய நியதி வரையுறுக்கப்பட்டு இருக்கும்.  அதற்கேற்ப அவை அந்த எல்லைக்குள், அதாவது Sr No-1   என்பதில் எங்கு வேண்டுமானாலும் எழுந்தருளும். ஆனால் Sr No-1 எல்லையைத் தாண்டி அவை அடுத்த பகுதிக்குள்(Sr No 2, 3, 4)  அவதரிக்காது.  அவ்வப்போது Sr No 2, 3, 4 போன்ற இடங்களுக்குச் சென்று தன்னை சேர்ந்த பரம்பரையினர் அங்கிருந்தால் அவர்களை வழி நடத்தி வரலாம்.

அடுத்து அந்த கிராமமான Sr No-1 என்பதில் இத்தனை மக்கள்  இருப்பார்கள். அவர்களில் இன்னின்னாருக்கு இன்னென்ன தெய்வங்கள், கிராம தேவதைகள் அல்லது வீர மரணம் புரிந்தவர்களின் தெய்வகணமாகி விட்ட ஆத்மாக்களே குல தெய்வமாக அமையும் என்றெல்லாம் நியதி வைக்கப்பட்டு இருக்கும்.

 உதாரணமாக குப்புஸ்வாமி என்பவரின் பரம்பரையினருக்கு Sr No-1 என்பதில் உள்ள தெய்வம் No 8 என்பதே குல தெய்வமாக இருக்கும் என்பதான விதியாக இருக்கும். சின்னகருப்பன்  என்ற பரம்பரையினருக்கு Sr No-1 என்பதில் உள்ள தெய்வம் No 9 என்பதே குல தெய்வமாக இருக்கும் என்பதான விதி இருக்கும். அவர்கள்  Sr No-1 என்பதில் உள்ள மற்ற   தெய்வங்கள் அல்லது தெய்வகணங்களை வணங்கி வந்தால் கூட அவரவருக்கு விதிக்கப்பட்டு உள்ள குல தெய்வத்தைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு அவர்களுடைய ஏழேழு வம்சத்தினரையும் பாதுகாத்து அருள் புரியும் சக்தி இருக்காது. அவர்களுக்கு பொதுவான அருள் மட்டுமே தர இயலும். இதை விதிப் பயன் அல்லது பூர்வ ஜென்ம வினைத் தொடர்ப்பு என்பார்கள்.

இப்படியாக Sr No-1 என்பதில் உள்ள ஒவ்வொரு தெய்வமும், கிராம தேவதையும், வீர மரணம் புரிந்தவர்களின் தெய்வ கணமாகி விட்ட ஆத்மாக்களும்  அவரவருக்கு  தரப்பட்டுள்ள  பரம்பரையை பாதுகாக்கும், அருள் பாலிக்கும். அவற்றை மீறி அவை செயல்படாது.  அதுவே அந்தந்த தெய்வங்களின் சக்தி பீடம் ஆகும்.  இது மாற்ற முடியாத நியதியாகும்.


இந்த நிலையில் Sr No-1 என்பதில் உள்ள தெய்வங்கள், கிராம தேவதைகள் அல்லது வீர மரணம் புரிந்தவர்களின் தெய்வகணமாகி விட்ட ஆத்மாக்கள் தமது எல்லையான  Sr No-1ணை  தாண்டி Sr No 2, 3, 4 என்ற இடங்களில் எல்லாம்  சென்று தற்காலிகமாக வசித்தாலும்  அங்கு  அவற்றுக்கு பொதுவான அருள் தரும் சக்தி  மட்டுமே இருக்கும்.   மற்ற பரம்பரையை பாதுகாக்கும், அருள் பாலிக்கும் சக்திகள் இருக்காது.

சில நேரத்தில்  தெய்வங்கள், கிராம தெய்வம் அல்லது தேவதைகள்,  ஆத்மாக்கள் அல்லது பூத கணங்கள் இரண்டு அல்லது மூன்று இடங்களிலும் கூட சென்று தங்கி  (Sr No 1, 2 அல்லது Sr No 1, 2, 3 அல்லது Sr No 1, 3, 4 போன்ற இடங்களில்)அங்குள்ளவர்களுக்கு அருள் பலிக்கும் வகைக்கு ஏற்ப அவற்றின் படைப்புக்கள் இருக்கலாம். அதற்கேற்ப அவற்றுக்கு சக்தி தரப்பட்டு இருக்கும். இதைப் புரிந்து கொள்ள கீழ் காணப்படும் அட்டவணைப்  பார்க்கவும்.


இதை இப்படியாக விளக்க முடியும். ஒரு இடத்தில்  அவதரிக்க வேண்டிய தெய்வம் என்பதில் 1 முதல் 19 வகைகளில் உள்ள ஒரு சில தெய்வங்கள் மட்டுமே  என வைத்துக் கொள்வோம். அவர்களில் 8 என்ற தெய்வத்தின் அதிகார வரம்பு கிராமம்  No 1 என்பதில் உள்ள ஒரு ஆலயம் என்ற நியதி உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  அங்குதான் அதனுடைய சக்தியும் இறக்கி வைக்கப்பட்டு இருக்கும்.  அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில்  உள்ள மண்ணில்தான் அதன் அருள் புரியும் மூல சக்தியும் அடங்கி இருக்கும். அந்த தெய்வம் Sr No 1 எனும் இடத்தைத் தவிர Sr Nos  2,3,4 என மற்ற இடங்களில் உள்ள சில ஆலயத்தில் குடி இருந்தாலும்  அவற்றுக்கு அந்த ஆலயங்கள் சக்தி பீடங்கள் இல்லை என்பதினால் அங்கெல்லாம் அவற்றுக்கு   சங்கல்ப சக்தி மட்டுமே இருக்கும். அந்த சங்கல்ப சக்தி கொண்ட தெய்வத்தின் நிலை எவ்வாறாக இருக்கும் ?

உதாரணமாக  குப்புஸ்வாமி என்ற குடும்பத்தின் பரம்பரையினர்  கிராமம் Sr No 1 என்பதில் தெய்வம் Sr No 8 என்பதை வணங்கி வந்துள்ளார்கள். அதுவே அவர்களது குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது என்று வைத்துக் கொள்வோம். குப்புஸ்வமியின் பரம்பரையினர் சிலர் பிற்காலத்தில் பணிகள் காரணமாக   Sr No 1 என்பதைத் தவிர  Sr No 2 அல்லது Sr No 3 அல்லது Sr No 4 என்ற பல இடங்களில் சென்று வசித்து வந்தாலும் அவர்களது குல தெய்வ ஆலயம் அதன்  அதிகார வரம்பில் உள்ள கிராமம் 1 என்பதுதான்.  Sr No 2 அல்லது Sr No 3 அல்லது Sr No 4 என்ற இடங்களில்   அந்த 8 எனும் எண் தெய்வத்தின் ஆலயங்களும் இருக்கலாம். அவர்கள் Sr No 8 என்பதைத் தவிர Sr Nos 1,4,5,6,7 என்ற  தெய்வத்தையும் கூட வணங்கி வரலாம். ஆனால் அந்த குப்புஸ்வாமி  பரம்பரையின் குல தெய்வம் Sr No 8 என்பது  மட்டுமே.

இந்த நிலையில்  Sr No 2 அல்லது Sr No 3 அல்லது Sr No 4  கிராமங்களில் குடி இருக்கும் குப்புஸ்வாமி குடும்பத்தின்  பரம்பரையினர் நமது குல தெய்வம்தான்  அதே அவதாரத்துடன் இங்கு ஆலயத்தில் உள்ளதே என நினைத்துக் கொண்டு இனிமேல் நாம் ஏன் Sr No 1 என்ற இடத்துக்குச் சென்று அந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?  இங்கேயே நம் குல தெய்வ பிரார்த்தனை ஏன் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணலாம். தெய்வ நியதிப்படி அப்படி செய்ய முடியாது. அப்படி அவர்கள் அங்கெல்லாம் குல தெய்வ வழிபாடு  செய்தாலும் அந்த குல தெய்வம் அதை ஏற்காது. ஏன் என்றால் இடங்கள் Sr Nos 2,3,4 என்பவை அதன் சக்தி பீடங்கள் அல்ல. ஆகவே குப்புஸ்வாமி பரம்பரையினர் தமது குல தெய்வ பிரார்த்தனையை கிராமம் Sr No 1 எனும் இடத்தில் உள்ள தெய்வம் Sr No 8 என்பதின் ஆலயத்தில்தான் சென்று பிரார்த்தனையை செய்ய வேண்டும்.

அதற்கு மாறாக அவர்கள் குடியுள்ள கிராமங்களில் உள்ள அவர்களது குல தெய்வ அவதாரம் கொண்ட ஆலயத்திலேயே  குல தெய்வத்தை வணங்கித் துதிக்கலாமே என நினைத்து அவர்கள் வழிபட்டால் அதை அந்த குல தெய்வம் ஏற்க மறுத்து  அவர்களுக்கு எடுத்துரைக்கும் 'பக்தனே, இப்போதைக்கு உன்னுடைய  நலத்தை இந்த இடத்தில் நான் தற்காலிகமாக மட்டுமே பாதுகாக்க முடியும். ஆனால் என்னை குல தெய்வமாக கொண்டுள்ள நீ என்னை என்னுடைய மூல சக்தி பீட  ஆலயத்துக்கு வந்து எனக்கு கொடுக்க வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்றினால் மட்டுமே அதை நிரந்தரமாக வைத்திருக்க முடியும்.  இல்லை எனில் இங்கெல்லாம் உள்ள உனக்கு பல தொல்லைகளும், தடங்கல்களும், தொல்லைகளும் வந்து சேரும்போது என்னால் உன்னை பாதுகாக்க முடியாது. உன்னுடைய பிற்கால குடும்பத்தினரான பிள்ளைகளும், பெண்களும் அவர்கள் குடும்ப வாழ்வில் மன அமைதியோடு இருக்க மாட்டார்கள்'. இதைதான் சங்கல்ப சக்தியுடன் செயல்படும் குல தெய்வத்தின் நிலை என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். குல தெய்வ பிரார்த்தனை என்பதை  வாழ்க்கையில் குறைந்த பட்ஷம்  நான்கு முறை முறை செய்தால் நல்லது என்பார்கள்.

அதாவது அந்தணர்களுக்கு  பூணூல் வைபவம், தத்தம் திருமணம் முடிந்ததும், ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும்  முதல் குழந்தைப் பிறந்து அதற்கு ஒரு வயது வரும்  முன்னர் அல்லது முதலாம் வயது தோன்றும்  நட்ஷத்திர மாதத்தில் (ஆண்டு  நிறைவு மாதத்தில்)அல்லது  முதல் குழந்தையின் முடி இறக்கும் வைபவத்தில் என்கிறார்கள். அதன் பின் அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு அது கட்டாயம் இல்லை. அந்தணர்கள் அல்லாதவர்களுக்கு பூணூல் வைபவம் இருந்தால் அந்த நேரம், திருமணம் முடிந்ததும், மற்றும் ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும் முதல் குழந்தைப் பிறந்து அதற்கு ஒரு வயது வரும்  முன்னர் அல்லது முதலாம் வயது தோன்றும்  நட்ஷத்திர மாதத்தில் (ஆண்டு  நிறைவு மாதத்தில்)அல்லது  முதல் குழந்தையின் முடி இறக்கும் வைபவத்தில் என்கிறார்கள்.  இன்னும் சில பண்டிதர்கள் பெண்ணுக்கு வயது வந்தப் பின் ஒரு வருடத்துக்குள் அவளை ஒருமுறை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்கள். அப்படி அந்தந்த காலத்தில் செல்ல முடியாவிடில் அந்தந்த வைபவத்தில் குலதெய்வத்துக்கு காணிக்கையை முடிந்து வைத்து விட்டுச் செய்வது குல தெய்வத்தை திருப்திப்படுத்தும். அதன் பின் முடிந்தபோது அந்த காணிக்கையை எடுத்துக் கொண்டு போய் குல தெய்வ ஆலயத்தில் பிரார்த்தனையை முடித்துக் கொள்ளலாம் என்பார்கள். ( இது பற்றிய மேலும் பல விவரங்களை  பின்னர் எழுத உள்ளேன்)

அந்த கால கிராம ஆலயங்களில் தனி அர்ச்சகர்கள் அல்லது பண்டிதர்கள் இருக்க மாட்டார்கள். ஊரில் உள்ள அந்தணர் அல்லது வேறு யாராவது ஆலயத்துக்கு தினமும் காலையில் சென்று ஆலயத்தை சுத்தம் செய்து பூஜித்து வழிபடுவார்கள். அவர்களில் யார் முதலில் அங்கு செல்வார்களோ அவர்களே அந்த சிலைக்கு பூஜை செய்து விட்டுப் போவார்கள். எனவே வழிபாட்டு முறை எளிதாக இருந்து வந்தது. இதனால் கிராமங்களில் இருந்த ஆலயங்கள் ஆகம வழியிலான, ஆசார முறையிலான பூஜை முறைகளைக் கொண்டு அமைந்து இருக்கவில்லை.

ஆனால் அந்த நிலைமை வெகு காலத்துக்கு நீடித்து இருக்கவில்லை.  முன்னரே நான் கூறி இருந்தவாறு அந்தணர்கள் வணங்கி வந்திருந்த ஆலயங்களில் மெல்ல மெல்ல வேத முறையிலான வழிபாடுகளைத் துவக்கினார்கள்.  மந்திரங்களை ஓதினார்கள். ஆசாரங்களைக் கடைப் பிடித்தார்கள். உடை விஷயங்களில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள்.  அந்தணர்களைத் தவிர மற்றவர்களை சன்னதிகளில் நுழைந்து சுத்தம் செய்யக் கூட  அனுமதிக்கவில்லை.  அந்தணர்களைத் தவிர வேறு யாரையும் பூஜைகளை செய்ய அனுமதிக்கவில்லை. அப்படி பூஜைகளை செய்ய வேண்டும் என்றால் வேதம் படித்திருக்க வேண்டும், மந்திரங்களை ஓதத் தெரிந்து இருக்க வேண்டும், குளித்து விட்டு இன்னென்ன முறையில் உடையை அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள்.   இப்படி எல்லாம் மெல்ல மெல்ல மாறத் துவங்கிய நிலைமையினால் சில பிரச்சனைகள் எழுந்தன.


நான் முன் பாகம் 4 ல் குறிப்பிட்டு இருந்தபடி இப்படிப்பட்ட நிலைமை அந்தணர்கள், அந்தணர்கள் அல்லாதவர்கள் வணங்கிய ஆலயம், சைவ ஆலயம், அசைவ ஆலயம் மற்றும் ஆரியர்   ஆலயம் மற்றும்  திராவிடர் அல்லாதவர் ஆலயம் என்ற பிளவுகளை மேலும் அதிகமாக்கியது. கிராமங்களில் நிலவி வந்திருந்த சமூக ஒற்றுமைக் குறைந்து அந்தணர்கள் வாழ்ந்திருந்த பகுதிகள் அக்ரஹாரங்கள் எனக் கூறப்படலாயின. அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் இடையே நிற்கும் இடத்தின் தூரம் கூட  குறைந்த பட்ஷம் இத்தனை இருக்க வேண்டும் என்றெல்லாம் தமகுத்தானே  வரையுறுத்திக்  கொள்ள அவரவர் இருந்த ஜனத் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப மற்றவர்கள் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து செல்லத் துவங்கினர். அந்தந்த கிராமங்களில் விலை நிலமற்ற அந்தணர்கள்  பிழைப்பை நாடி நகரங்களை நோக்கிச் செல்லத் துவங்கினார்கள்.

பல  கிராம ஆலயங்களில் இருந்த தெய்வங்களை அந்தணர்கள் மற்றும் அந்தணர்கள் அல்லாதவர்கள் என்ற இரு பிரிவினரும் தமது குல தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு கூட்டாக வணங்கி வந்திருந்த காலம் மாறி ஆலயங்களில் செல்வதை தவிர்த்து வரத் துவங்கிய பின் வழிப் வம்சத்தினர்  தமது குல தெய்வத்தை மறக்கலாயினர். அவர்கள் பின் வழி பரம்பரையினருக்கு அவர்களுடைய சொந்த ஊரும் தெரியவில்லை, அவர்களது குல தெய்வமும் யார் என்பது  தெரியாமல் போகலாயிற்று.  குல தெய்வம் என்ற கருத்தையே மறந்தார்கள்.   வேறு பல தெய்வங்களை வழிபடத் துவங்கி அந்த தெய்வங்களை தமது குல தெய்வம் போல வழிபடலாயினர். பின் நாட்களில் அவர்களுக்கு இன்னென்ன கிராமத்தில் இருந்த தெய்வங்களே தமது குல தெய்வம் எனத் தெரிய வந்தபோதிலும் அதை ஏற்க மனமில்லாமல் இருந்தார்கள். 

இந்த நிலையில் முக்கியமாக பாதிக்கப்பட்டது அந்தணர் சமூகத்தினரே அன்றி அந்தணர்கள் அல்லாதவர்கள் அல்ல.  அந்தணர் சமூகத்தினர் பலரும் படித்து விட்டு வெளி இடங்களில் வேலைத் தேடிச் செல்லத்  துவங்கியதும், அந்தக் குடும்பங்களின் பின் வழி வம்சத்தினர் குக்கிராமங்களில் மற்றும் நகர எல்லைகளில்  இருந்த ஆகம விதி முறையில் பூஜிக்கப்படாத ஆலயங்களில்  உள்ள தெய்வங்கள் நமக்கு எப்படி குல தெய்வமாக இருந்திருக்கும்  என்ற அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்கள். மந்திர பூஜைகளை செய்திராத அந்த தெய்வங்களுக்கு என்ன சக்தி இருக்கும், அந்தந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் அல்லவா, தெய்வ கணம் மட்டும்தானே, இந்தக் கடவுளைவிட அந்தக் கடவுள் அதிக சக்தி கொண்டவர் அல்லவா என்ற எண்ணங்களைக் கொண்ட குதர்க்கம் மனதில் தோன்றியது. மந்திரங்கள் மட்டுமே சக்தியே ஏற்றும் வல்லமைப் படைத்தது என்பதாக எண்ணலானார்கள்.

அவர்கள் ஒன்றை நினைத்துப் பார்க்க மறந்தார்கள்.  ஆலயங்களில் பிளவு வெகு காலத்துக்கு பின்னரே தோன்றி உள்ளது. அதற்கு முன்னர் அனைவருமே ஒற்றுமையோடு இருந்தல்லவா வழிபாட்டு இருந்துள்ளார்கள். ஆலயத்தில் ஏற்பட்ட ஆரிய, திராவிட பிளவுகளும் வழிபாட்டு முறையினால் ஏற்பட்ட பிளவே. அவை  செயற்கையாக தோன்றிய பிளவே தவிர மற்றபடி எதுவும் இல்லை. தெய்வங்கள் அனைத்துமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. அவை படைக்கப்பட்டபோதே  பரப்பிரும்மனிடம் இருந்து அவை சக்தி பெற்று வந்தவை. ஆகவே அதிக சக்தி மற்றும் குறைந்த சக்தி பெற்றக் கடவுட்கள் என்ற பேதத்தை ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? (தெய்வங்களின் சக்தி , அவற்றின் தத்துவம் என்பது குறித்தும் விளக்கமான கட்டுரை ஒன்றை எழுத உள்ளேன்).

ஆகம மற்றும் ஆகம வழிமுறையில் இல்லாத ஆலயங்களுக்கு செல்வது அவரவர் விருப்பம். ஆனால் தெய்வங்களில் ஏன் வேற்றுமைப்படுத்திப் பார்க்க வேண்டும்? தெய்வங்கள் கிராம தேவதை என்ற பெயரில் இருந்தால் என்ன, தெய்வம் என்ற பெயரில் இருந்தால் என்ன, எந்த உருவத்தில் இருந்தால்தான் என்ன என்ற எந்த சிந்தனையுமே செய்யாமல் இருக்கத் துவங்கிய அந்தணர்கள் வணங்காத மனமில்லாத தெய்வங்களில் கிராம தேவதைகளான சுடலை மாடன், காத்தவராயன், பேச்சாயி, கருப்பஸ்வாமி, சீதளமாதா, காவேரியம்மன், ஐயனார், அங்காளம்மன், முனீஸ்வரன் மற்றும் தெய்வங்களில் வீரபத்திரர், பத்ரகாளி, மாரியம்மன்,  முருகன், வள்ளி தேவி போன்ற பல தெய்வங்களும் அடக்கம் ஆயின. இத்தனைக்கும் அவர்கள் அனைவருமே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் படைப்புக்கள், அவதாரகணங்கள் . தத்தம் பரம்பரையினருக்கு அருள் புரிவதில் ஒரே அளவிலான சக்தியுடன் வெளியானவை.
........................தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles