Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 59

$
0
0
 
அத்தியாயம் - 50

சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ''தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை முன்னமே கூறினேன் அல்லவா, அவன் மரணம் அடைந்தப் பின் அதற்க்கு அடுத்த ஜென்மத்தில் பீதார் எனப்படும் இடத்தில் ஒரு  முஸ்லிம் அரசனாகப் பிறந்தான்.

பீதாரை ஆண்டுவந்த அந்த முஸ்லிம் மன்னன் பூர்வ ஜென்மத்தில் ஸ்வாமியின் பக்தனாக இருந்ததினால் நேர்மையான வாழ்க்கையை மேற்கொண்டு அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்துக் கொண்டு நடு நிலையாக ஆட்சி செய்தான்.  ஆனால் சில  முஸ்லிம் பிரிவினர் அந்த மன்னன் இந்துக்களையும் முக்கியமாக பிராமணர்கள் மற்றும் குருமார்களையும் தம் சமயத்தினருடன் சேர்த்து பாரபட்ஷம் இல்லாமல் நடத்துவதை  ஏற்றுக் கொள்ள முடியாமல் அதைப் பற்றி குறை கூறினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து எதையுமே அந்த மன்னன் ஏற்கவில்லை. தன்னைப் பொருத்தவரை அனைவரும் ஒன்றே என்ற கொள்கையில் இருந்து தடம் புரண்டு ஆட்சி செய்ய விரும்பவில்லை. 

தம்மிடம் குறைக் கூறியவர்களிடம் மன்னன் கூறினார் 'என்னைப் பொருத்தவரை அவரவர் தர்மத்தைக் கடைபிடிக்க அவரவருக்கு  உரிமை உண்டு என்பதை நம்புபவன் நான். அவரவர் நம்பும் தெய்வ நம்பிக்கை என்பது நல்  வழிப்பாதைக்கு செல்ல அவரவர் தேர்ந்தெடுக்கும் வழி முறையே தவிர யாரும் யாருக்கும் மேலானவர்களோ இல்லை கீழானவர்களோ கிடையாது. அதற்க்கு உதாரணமே நமக்கு பால் தரும் பசுவையோ அல்லது  எருது ஆகும். அவை தரும் பாலானது வெண்மையாக உள்ளதே தவிர ஒவ்வொரு  மதத்தினருக்கும் ஏற்ப அது பாலின் நிறத்தை மாற்றியா தருகிறது என்பதில் இருந்தே இயற்கை அனைவரையும்  ஒன்று போலவே கருதுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.   ஆகவே எந்த ஒருவன் விவேகம் கொண்டு இருப்பானோ அவன் மத ரீதியாக எதையும் அணுக மாட்டான்.  கடவுள் படைத்துள்ள உலகில் அவரவர் நம்பிக்கையின்படி அவரவர்களை வாழ விடுவான்'. ஆனாலும் அதை முஸ்லிம் மதத்தினரால் ஏற்க முடியவில்லை. ஆனால் அரசனையும்  எதிர்த்து எதையும் செய்யவும் முடியவில்லை.

இந்த நிலையில் அந்த மன்னனுக்கு  திடீர் என ஒருநாள் கால் தொடையில் ஒரு புண் வந்து அது ஆறவே இல்லை. என்ன வைத்தியம் செய்தும் அது ஆறவே இல்லை. நாளாக நாளாக அதன் வலி அதிக வேதனை தந்தது. எத்தனை வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. ஆகவே அந்த மன்னன் பிராமணப்  பண்டிதர்களை அழைத்து தன்னுடைய ரணம் தீர ஏதாவது உபாயம் உள்ளதா எனக் கேட்டான். அதைக் கேட்டவர்கள்  'மன்னா நாங்கள் இதற்கு பதில் கூறினால் உங்களுக்கு கோபம் வர வாய்ப்பு உள்ளதே'எனக் கூறி மெளனமாக நிற்கையில் அந்த மன்னன் அவர்களிடம் கூறினான் 'பண்டிதர்களே, என் குணத்தை நீங்கள் அனைவரும் முற்றிலும்  அறிந்தவர்கள். ஆகவே தயங்காமல் எனக்கு என்ன உபாயம் செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள். என்னை நம்புங்கள்'என்றார்.

அதைக் கேட்ட பண்டிதர்களும் மன்னனிடம் கூறினார்கள் 'மன்னா இப்படிப்பட்ட சங்கதிகளுக்கு எல்லாம் மருந்து மட்டுமே பயன் தராது. பூர்வ ஜென்ம பாபமும் சேர்ந்து இருந்திருக்கும் என்பதினால் அதற்கு பரிகாரம் செய்தால் ஒழிய வியாதி குணமாகாது என்பார்கள். ஆகவே நீங்கள் அந்த வழியையும் யோசனை செய்யலாமே'என்று கூறினார்கள். மன்னன் அவர்களிடம் கேட்டான் 'பண்டிதர்களே, நான் உங்கள் வார்த்தைகளை முற்றிலும் நம்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தயங்காமல் கூறுங்கள். நான் செய்கிறேன்'என்றார். அவரைப் பொருத்தவரையில் தன்னால் தாங்க முடியாமல் உள்ள நோயின் தாக்கத்தை  குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

அதைக் கேட்ட பிராமண பண்டிதர்கள் 'அரசனே, அப்படி என்றால் நீங்கள் பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் ஷேத்திராடனம் செய்து அங்கெல்லாம் வேண்டிக் கொள்ள வேண்டும். மகா புருஷர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை சந்தித்தும் அவர்களது அருளைப் பெற்றும் வியாதியை குணப்படுத்திக் கொள்ளலாம். மஹாபுருஷர்களை  சந்தித்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொண்டால் அறுபது வருட பாபங்கள் கூட விலகும் என்பார்கள்'என்று கூறினார்கள். அரசன் அவர்களிடமே யாராவது மகா புருஷர் இருக்கின்றாரா என்று கேட்க அவர்களும் அவரை பாபவினாசி தீர்த்ததுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி  ஸ்வாமிகளை சந்திக்குமாறு ஆலோசனைக் கூறினார்கள்.

அவர்களது யோசனையை உடனடியாக ஏற்றுக் கொண்ட மன்னனும் சற்றும் நேரத்தை வீணடிக்காமல் மறுநாளே அங்கிருந்துக் கிளம்பி பாபவினாசி தீர்த்ததுக்குச் சென்று ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து கொண்டு மனதார தெய்வத்தை ஆராதனை செய்தார். அவருடைய சைனியங்களை சற்று தூரத்தில் யாருக்கும் இடைஞ்சல் தராமல்  அமர்ந்து கொண்டு இருக்குமாறு கட்டளை பிறப்பிக்க அவர்களும் அந்த இடத்தில் இருந்து சற்று தொலைவான இடத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார்கள்.

அவர் அங்கு அமர்ந்து இருக்கையில் ஒரு யதி புருஷர் அந்த பக்கமாக சென்று கொண்டு இருந்தார். மன்னன் தனிமையில் அமர்ந்து கொண்டு இருந்ததைக் கண்டவர் அவரிடம் சென்று அவர் ஏன் சோகமாக அமர்ந்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டார். மன்னனும் வந்துள்ளவர் யார் என்பதைக் கூட விசாரிக்காமல் தன்னுடைய சங்கடத்தை அவரிடம்  கூறி தனது காலில் இருந்த கொப்புளத்தைக் காட்டி அதனால் தான் தாங்க முடியாத உபாதையுடன் உள்ளதாகவும் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து தனக்கு நிவாரணம் கொடுக்க யாராவது சத் புருஷர்கள் கிடைப்பார்களா எனத் தேடிக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.  அப்படி யாராவது சத்புருஷர்கள் கிடைத்தால் அவருடைய அருளைப் பெற்று அதை குணமாக்கிக் கொள்ளலாம் என்று தாம் தனக்கு பண்டிதர்கள் அறிவுறித்தி உள்ளபடி அங்கு வந்துள்ளதாகக் கூறிவிட்டு அப்படிப்பட்ட சத்புருஷர்  யாரையேனும் சந்திக்க அவரால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.

அதைக் கேட்ட அந்த யதி புருஷர் 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் ஒரு சத்புருஷரைக் காட்டுகிறேன்'என்று கூறிவிட்டு உண்மையான சத்புருஷர்களைக்  கண்டாலே வியாதி விலகும் என்று கூற அவர் 'அதெப்படி, சத்புருஷர்களைக்  கண்டாலே வியாதி உடனே விலகுமா?'என்று மன்னன் கேட்க அந்த யதி புருஷர் அவருக்கு  ஒரு கதையை கூறினார்.

'சுவன்தி என்ற இடத்தில் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பல கெட்ட பழக்கங்களைக் கைகொண்டு இருந்தான். அது மட்டும் அல்ல அவன் பிங்களை  என்ற  விலை மாதுவின் வீட்டிலேயே தங்கி இருந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் அந்த வேசியின் வீட்டின் முன் வந்து நிற்க அவரை அவன் உள்ளே அழைத்துச் சென்று அவருக்கு பாத பூஜை செய்து தான் குளித்து விட்டு வந்து அவருக்கு தனியாக உணவை  சமைத்து போட்டப் பின் அவர் அன்று இரவு அங்கு தங்கிக் கொள்ள தனியான ஒரு அறையும் தந்தாள். நடந்து வந்த கால்களின் வலிக்கு இதமாக இருக்க இரவு முழுவதும் அவருடைய கால்களையும் பிடித்து விட்டபடி அமர்ந்து இருந்தாள். மறுநாள் அவர் எழுந்து சென்று விட்டார். காலம் கடந்து சென்றது.  அந்த பிராமணனும் பிங்களை  என்ற விலைமாதுவும்   இறந்து விட்டனர்.
 
அந்த பிராமணன் ஒரு அரசனின் மூத்த மனைவியான  சுமதி என்ற பெண்ணின் கருவில் புகுந்து கொள்ள வேண்டிய விதி வந்தது. அந்த மன்னனின்  இளைய மனைவியோ அவளுடைய மூத்தவள் மீது பொறாமைக்  கொண்டு அவளுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்துக் கொடுத்து விட்டாள். ஆனால் அந்த விஷம் அந்த அரசியையோ அவள் கருவில் இருந்த குழந்தையையோ கொல்லவில்லை. அதற்கு மாறாக  அந்த விஷத்தை உண்டவளுக்கு உடம்பு முழுவதும் ரணகளமான கொப்புளம் ஏற்பட்டது. ஒன்பது மாத முடிவில் அவள் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தாள். அவளுக்கு எத்தனை வித வைத்தியம் செய்தும் அவளுடைய  வியாதி குணம் ஆகவில்லை. அது அந்தக் குழந்தையையும் பாதித்து அதற்கும் அதே ரணம் வந்தது.

அதனால் அரசனும்  அவர்களை தனி இடத்தில் தங்க வைத்து இருந்தான். நாளாக நாளாக அவளுக்கும் அந்தக் குழந்தைக்கும் வியாதி முற்றியது. உடல் கறுத்து  இருவரும் அகோர தோற்றத்தைப் பெற்றார்கள். ஆகவே அகோரமான தோற்றத்தைத் தந்து கொண்டு கிட்டவே நெருங்க முடியாமல் இருந்த அவர்களை தம்மோடு அரண்மனையில் வைத்திருக்க அரசனுக்கு விருப்பம் இல்லை என்பதினால்  அவர்களை வண்டியில் ஏற்றி காட்டில் விட்டு விட்டு வந்து விடும்படி அரசன் கூறி விட்டான். ஆனால் அரசனை சார்ந்தவர்கள் அரசனுடைய அந்த செயலை விரும்பவில்லை. இப்படி கருணை இல்லாமல் இத்தனைக் காலமும் தர்ம பத்தினியாக ஒழுக்கமாக அவனுடன் வாழ்ந்து வந்திருந்த மனைவியையும் அவள் குழந்தையையும் ஈவு இறக்கம் இல்லாமல் காட்டுக்கு துரத்தி அடிக்கிறானே என கோபமடைந்தார்கள். ஆனால் அரசனின் இளைய மனைவியோ அரசன் எடுத்த அந்த  நடவடிக்கையை பாராட்டினாள்.
 
காட்டில் கொண்டு விடப்பட்ட சுமதி பல துன்பங்களை சந்திக்க வேண்டி இருந்தது.  காட்டில் கிடைத்தவற்றை உண்டு வாழ வேண்டி இருந்தது. ஒரு நாள் அவளுக்குக் குடிக்கக் கூட நீர் கிடைக்கவில்லை.  அதனால் தாகம் எடுக்க மெல்ல மெல்ல நடந்து சென்று காட்டின் வெளியில் வந்தாள். அந்த வழியாகப் போய்க் கொண்டு இருந்த ஆட்டு இடையர்களிடம் சிறிது தண்ணீர் தருமாறு கெஞ்சினாள். அவர்களும் அவளுடைய நிலையைப் பார்த்து பரிதாபப்பட்டு அவளை பக்கத்தில் இருந்த தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அந்த கிராமத்தில் கருணை மனம் மிக்க ஒரு நல்ல செல்வந்தனும் வாழ்ந்து கொண்டு இருந்தான். அவளது நிலைமையைக் கண்டு அவள் மீது பச்சாதாபப்பட்டு அவளுக்கு தன்னுடைய இல்லத்திலேயே  தங்க இடம் தந்து தன்னுடைய சகோதரி போலவே நடத்தி வந்தான். ஆனால் விதி விளையாடியது.  ஒருநாள் சுமதியின் குழந்தை இறந்து விட்டது. அவள் அந்த துக்கத்தினால் தானும் தற்கொலை  செய்து கொள்ள முடிவு செய்ய அந்த வீட்டில் இருந்தப் பெண்கள் அவளைத்  தடுத்தனர். ஆனால் துக்கத்தினால் பீடிக்கப்பட்டு இருந்தவளினால் அதை ஏற்க முடியவில்லை.

அந்த சமயத்தில் அந்த கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்தார். அவரை அந்த செல்வந்தன் அன்புடன் வரவேற்று உபசரித்தான். வந்தவர் மாமுனிவர் என்பதினால் வந்த உடனேயே தன் ஞானக் கண்களினால் அங்கு நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்த சுமதியை அழைத்து வரச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறினார் 'அம்மணி நீ ஏன் வருத்தம் அடைகிறாய்? பிறப்பதும், மரணம் அடைவதும் காலச்சக்கரத்தின் நியதி அல்லவா. பிறந்த சிலர் நீண்ட ஆயுளோடு உள்ளார்கள்.  சிலர் அல்பாயுசில் மரணம் அடைந்தும் விடுவார்கள். அது பூர்வ ஜென்மத்தின் பாப புண்ணியங்களுக்கு ஏற்ப நேரிடுகிறது. ஒரு ஜீவனுக்கு என்றுமே அழிவில்லை. அது தேவ கணமாகவோ, மனிதப் பிறவியாகவோ, மிருகம், செடி கொடிகளாகவோ பல ஜென்மங்களை எடுத்துக் கொண்டு இருந்தவாறு  பிரும்மனின் நியதிப்படி முடிவில் மேலுலகிலேயே அழியும். மீண்டும் பிறப்பை எடுப்பது இல்லை. ஆகவே நடக்க முடியாததை கற்பனை செய்து கொண்டு மனதை வருத்திக் கொள்வதை விட நமக்கு வந்துள்ள துன்பங்களின் காரணம் பூர்வஜென்ம வினைபயனாகவே  இருக்கும் என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டு அடுத்த பிறவியிலாவது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஈஸ்வரனிடம் சரண் அடைந்துவிடு. அதுவே நான் உனக்குக் கூறும் அறிவுரை'என்று பல்வேறு விதங்களில் அந்த முனிவர் அவளை தேற்றினார்.

சுமதியோ தன்னுடைய துயரத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் தனக்கு வந்து வியாதியையும் கூறி தான் அனுபவித்த துன்பங்களைக் கூறினாள். அவள் முனிவரிடம் 'மாமுனிவரே, எனக்கென இருந்த ஒரே ஜீவனும் என்னை விட்டு விலகிய பின்னர் நான்   எதற்காக உயிர் வாழ வேண்டும்? தயவு செய்து எனக்கு ஆசி கூறி  துர்பாக்கியசாலியான  என்னை மரணம் அடைய விடுங்கள்'என்று  அவரை  வேண்டினாள். அதைக் கேட்ட அந்த முனிவரும்  அந்த இறந்து கிடந்த குழந்தை  மீது சிறிது வீபுதியைத் தூவினார். அடுத்த நொடியில் இறந்து கிடந்த அந்தக் குழந்தை மீண்டும் உயிர் பெற்று எழுந்து வந்தது.  அதைக் கண்ட அனைவரும் நடந்தவற்றை அதிசயத்துடன் பார்த்தவண்ணம் நின்றார்கள். உயிர் பெற்று எழுந்த அந்தக் குழந்தை அதி அற்புத அழகுடன் விளங்க சுமதியின் வியாதியும் விலகி அவளும் அற்புதமான உடலழகைப் பெற்றாள். அவளுக்கு வந்திருந்த வியாதியும் மறைந்தது.

அவளும் மீண்டும்  நாடு திரும்ப அவளை அன்புடன் வரவேற்ற மன்னன் நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டான். அவளிடம் மன்னிப்பைக் கோரி, தன் இளைய மனைவியை நாடு கடத்திவிட்டு  சுமதியின் மகன் பெரியவனானதும் ராஜ்ய பரிபாலனத்தை அவனிடம் ஒப்படைத்தார். இப்படியாக சத்புருஷர்களால் மட்டுமே அற்புதங்களை செய்து ஒருவருடைய துன்பங்களை தீர்க்க முடியும்'என்று யதி புருஷர் அந்த முஸ்லிம் மன்னனுக்குக் கூற அவரும் அவருடைய கால்களில் விழுந்து வணங்கி தனக்கு அப்படி ஒரு சத்குருவை அடையாளம் காட்டுமாறு அவரிடம் வேண்டிக் கொள்ள அந்த  யதி புருஷரும் அவரை கனக்பூரில் பீமா நதிக்கு அருகில் இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து  அவரிடம் வேண்டிக் கொள்ளுமாறும் கூறினார்.

அதைக் கேட்ட அந்த மன்னனும் சற்றும் தாமதிக்காமல்  தன்னுடைய பரிவாரங்களுடன் கிளம்பி  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை தேடி கனக்பூருக்கு சென்றான். ஸ்வாமிகளை காண்பதற்கு  தொலை தூரத்திலேயே பல்லக்கில் இருந்து இறங்கிக் கொண்டு காலில் செருப்புக் கூட அணியாமல் அவர் இருந்த இடத்துக்கு நடந்து சென்றான். அவரைப் பார்த்ததுமே ஸ்வாமிகள் 'என்னப்பா உன்னைப் பார்த்தே பல காலமாகிவிட்டது. இன்னும் துணிகளை அந்த நதிக்கரையில்தான் துவைத்துக் கொண்டு இருக்கிறாயா?'என்று கேட்டதும் அந்த மன்னனுக்கு தன்னுடைய பூர்வ ஜென்ம வாழ்கை அப்படியே நினைவில் வந்து நிற்க அவன் அப்படியே ஸ்வாமிகளின்  கால்களில் விழுந்து வணங்கினான்.அவனே பூர்வ ஜென்மத்தில் வண்ணானாக இருந்தவன்.

நமஸ்கரித்து விட்டு எழுந்தவன் 'மகாத்மாவே, என்னுடைய இந்த ஜென்மத்தில் உங்கள் நினைப்பு எனக்கு இத்தனை நாளும் வராமல் இருந்ததின் காரணம் எனக்குத் தெரியவில்லை. நான் இத்தனை நாளும் செல்வத்தில் மிதந்து கொண்டு  இருந்த இந்த வாழ்க்கை அலுத்து விட்டது. இனி இது போதும் மஹானே. என்னால் என் உடலில் வந்துள்ள கொப்புலங்களினால் ஏற்பட்டுள்ள  வேதனையை தாங்க முடியவில்லை. எனக்கு அருள் புரிந்து எனக்கு வந்துள்ள வியாதியை குணப்படுத்தி இனி நான் எந்த நிலையில் பிறந்தாலும் உங்களுடைய நினைவிலேயே இருந்து கொண்டு, உங்களுக்கு சேவகம் செய்து கொண்டு  இருக்கும் வகையில் எனக்கு  முக்தி தர வேண்டும்'என அவரிடம் வேண்டிக் கொண்டான்.

அவன் கூறியதைக் கேட்ட  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி 'உனக்கு கொப்பளத்தினால்  ரணமா, எங்கே உன் உடலில் உள்ள கொப்புளத்தைக் காட்டு'என்று கேட்க அத்தனை நாளும் அவன் அனுபவித்த வேதனை மறைந்து போனது மட்டும் அல்ல உடலிலும் அந்த கொப்புளத்தை காணவில்லை. அதைக் கண்டவன் திகைத்து நின்றான். அவரை மீண்டும் வணங்கிய பின் தன்னுடைய நாட்டிற்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து விட்டு தான் அவருடைய சிஷ்யனாக விரும்புதாகவும் கூறினான்.

ஆனால் அவனது நாட்டில் நிறைய பசுக்கள் கொல்லப்பட்டு வந்ததினால் அவனது வேண்டுகோளை முற்றிலுமாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளால்  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை அவனிடமும் கூறாமல் தன் மனதில் ஒரு முடிவை எடுத்தார். 'இந்த பூமியில் கலியின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே போகின்றது. ஆகவே என்னால் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு மனித உருவில் நீண்ட  நாட்கள் பூமியில் வாழ இயலாது. கௌதமி நதிக்கு யாத்திரை செல்வதாகக் கூறிவிட்டு புஷ்கர மாதத்தில் பிரஹஸ்பதி சிம்ம ராசியில் புகும் பொழுது நான் சங்கமத்தில் குளிக்க இறங்கி விட்டு அங்கிருந்து மறைந்து விட வேண்டும்.  அதன் பின் மக்களின் கண்களுக்கு நான் புலப்படக் கூடாது. நான் சூஷ்மமாக இருந்து கொண்டு அவர்களை ரட்ஷிப்பேன்  '.

ஆகவே அந்த மன்னனின் வேண்டுகோளை ஏற்பது போல காட்டிக்  கொண்டு கோதாவரி நதி யாத்திரையை மேற்கொண்டார். அவரை பல்லக்கில் அமர வைத்து தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றபோது கனக்பூரில் தான் விட்டுச் சென்ற  அனைத்து  பக்தர்களையும்  தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். சங்கமத்துக்குச் சென்ற ஸ்வாமிகள் அங்கு ஒரு குதிரை மீது ஏறி மிகவும் லாவகமாக தானே அதை ஓட்டிச் செல்ல அரசனும் மற்ற சிஷ்யர்களும் இன்னம் பல குதிரைகளில் ஏறிக் கொண்டு அவருடைய குதிரையைத் தொடர்ந்து  சென்றனர். ஸ்வாமிகள் மன்னனின் அரண்மனைக்கு சென்றதும் மன்னன் அவரிடம் கூறினான் 'மகாத்மாவே இந்த நாட்டின் அனைத்து செல்வங்களும் உங்களுடையதுதான். நான் உங்கள் சேவகன். நான் என்றும் உங்களுக்குப் பணி செய்து கொண்டு சிஷ்யனாகவே இருக்க விரும்புகின்றேன். ஆகவே இவற்றை ஏற்றுக் கொண்டு தாங்கள் இங்கிருக்க வேண்டும்'.

ஆனால் அதை ஏற்க மறுத்த ஸ்வாமிகள் அவனை நாட்டை நல்ல முறையில் ஆண்டு கொண்டு இருக்குமாறும் அவனுடைய மகன் வளர்ந்து பெரியவன் ஆன பின் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு தன்னுடைய ஆசிரமத்திற்கு வருமாறும்  கூறினார். அதன் பின் அரண்மனையில்  இருந்த அனைவரையும்  தனித் தனியே சந்தித்து ஆசிகள் வழங்கிய பின் கனக்பூருக்கு கிளம்பிச் சென்றார்.

ஆஸ்ரமத்திற்கு திரும்பிய ஸ்வாமிகள் தன்னுடைய சிஷ்யர்களை அழைத்துக் கூறினார் 'இது கலிகாலம் என்பதினால் பாவத்தை அழித்துக் கொள்ள விரைவில் இந்த ஆசிரமத்திற்கு நிறைய மக்கள் வர இருக்கின்றனர். பாபம் செய்த பலரும் இங்கு வந்து என்னிடம் விமோசனம் கேட்பார்கள். ஆகவே  நான்  இனிமேல் எவர் கண்களுக்கும் புலப்படாமல் இருக்க முடிவு செய்து விட்டேன். சத்புருஷர்களுக்கு மட்டுமே காட்சி தருவேன். நான் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து விட்டாலும் என்னுடைய பக்தர்களை பாதுகாத்து வருவேன். நான் பல இடங்களுக்கும் சென்றபடி என்னுடைய பக்தர்களை ரட்ஷித்தபடியேதான்  இருந்து வருவேன்'(இத்துடன் அத்தியாயம்-50 முடிவடைந்தது).

.......தொடரும் . 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles