நான்காவதுதூண்
விழுந்தால்
உலகம்அழியுமா ?
ஹரிஸ்சந்திர ஆலயத்தை சுற்றி பல குளங்களும், குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றான கேதாரீஸ்வர் என்ற குகையில் ஐந்து அடி உயர சிவ லிங்கம் உள்ளது. அது கழுத்தளவு நீரின் நடுவில் வைக்கப்பட்டு உள்ளதாம். அந்த சிவலிங்கத்தை சுற்றி உள்ள தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல குளிராக இருப்பதினால் அதன் அருகில் சென்று பூஜிக்க முடிவது இல்லை என்கிறார்கள். ஆனால் சமீப காலமாக அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்க்கும் வகையில் அந்த தண்ணீர் மீது நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த பாதையும் நீரில் மூழ்கி இருப்பதினால் சிவலிங்கத்தின் அருகில் சென்று யாராலும் பார்க்க இயலவில்லையாம்.
மழைக் காலங்களில் அந்த மலை மீது செல்லவே முடியாத அளவில் நீர் நிறைந்து இருக்குமாம். அந்த சிவலிங்கம் உள்ள கூடத்தில் பல சிற்பங்கள் சுவர்களில் செதுக்கப்பட்டு உள்ளன. சிவலிங்கத்தின் மீது காணப்படும் மேற்கூரையை நான்கு தூண்கள் தாங்கிப் பிடித்துள்ள நிலையில் உள்ள அமைப்பில் அவற்றில் மூன்று தூண்கள் உடைந்து கிடக்கின்றன. அவை கடந்து போன மூன்று யுகங்களைக் குறிப்பதாகவும், நான்காவது யுகமான கலியுகத்தைக் குறிக்கும் நான்காவது தூண் எப்போது இடிந்து விழுமோ அப்போது உலகம் அழிந்து விடும் என்பதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
அந்த சிவலிங்கத்தை முழுக வைத்துள்ள தண்ணீர் அந்த கூடத்தின் நான்கு பக்க சுவர்களில் இருந்தும் வழிந்து வரும் நீர் என்றும், ஆனால் மழைக் காலத்தில் அந்த கூடத்தில் தண்ணீரே இல்லாமல் காட்சி தருவதாகவும் இருக்கும் என்ற அதிசயமான காட்சியை குறிப்பிடுகிறார்கள்.
இந்த கோட்டை கல்ச்சூரி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் ஹரிஸ்சந்திர காட் பற்றிய செய்தி ஸ்கந்த புராணம் மற்றும் மத்சய புராணங்களில் காணப்படுவதாகவும் கூறுகிறார்கள். ஆகவே இந்த குகையில் உள்ள சிவலிங்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்க வேண்டும் என்றும், அங்கு முனிவர்கள் தவம் செய்து இருக்க வேண்டும் என்றும் நம்ப முடிகிறது. அனைத்துமே வாய் வழிச் செய்திகள்தான் என்பதினால் உறுதியாக எதையும் கூற இயலவில்லை. ஆனால் அத்தனை உயர மலையில் கோட்டையும், ஆலயமும் எழுப்பப்பட்டதில் இருந்து அங்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாரேனும் ஆட்சியில் இருந்திருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.
இந்த குகைக்குள் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணுவின் சிலை உள்ளது. ஆனால் இந்த மலை உச்சிக்கு செல்வது எளிதல்ல. மலை மீது நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கு நன்கு வழி தெரிந்த யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். மலை மீது ஏற ஆசைக் கொள்ளும் இளைஞர்கள் அதற்காகவே இங்கு வருகை தருகிறார்கள். இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு பூனாவில் இருந்து எளிதாக செல்ல முடியுமாம்.
இந்த கோட்டையும், ஆலயமும் யாரால் எப்போது கட்டப்பட்டது என்ற விவரம் குறித்து எவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. சிறு கற்களால் கட்டப்பட்ட பண்டையக் கால நினைவுச் சின்னங்களையுடைய சிலைகள் சில காணப்படுகின்றன. இந்த இடத்தில்தான் ராஜா ஹரிச்சந்திரன் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.
End note: I am thankful to Shri Abhijeet http://www. harishchandragadinfo.com/p/ fascinating-spots.html whose two photographs were helpful to this article. He readily consented to use the photos.
My sincere thanks are also due to chenni trekkers blogspot.com and other sites for the photos