Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 48

$
0
0
 

அத்தியாயம் -39

சித்த முனிவர் கூறினார் ''அது போலவே சொர்ணக கோத்திரத்தை சார்ந்த சோமநாத் என்ற ஒரு பிராமண தம்பதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய மனைவியின் பெயர் கங்காதேவி என்பது. அவளுக்கு அறுபது வயது ஆயிற்று. கணவனும் மனைவியும் வாழ்நாள் முழுதும் பகட்டு இல்லாமல் தர்ம நெறிகளைக் கடைபிடித்தபடி நேர்மையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை அனுதினமும் சென்று தரிசித்து வணங்குவார்கள். ஒரு நாள் எப்போதும் போல அவரை சந்தித்தப் பின் பூஜைகளை செய்து விட்டு கிளம்பியபோது  அவர்களை அழைத்த ஸ்வாமிகள் கேட்டார்  'அம்மணி, தினமும் நீங்கள் இருவரும் சிரத்தையுடன் இங்கு வந்து என்னை வணங்கிய பின் பூஜையையும் செய்து விட்டுப் போவதைக் கண்டு மனம் மகிழ்கிறேன். உனக்கு ஏதேனும்  மனதில் குறை இருந்தால் அதைக் கூறு. நான் அதை நிவர்திப்பேன்'என்று நேரடியாகவே கூறினார். ஸ்வாமிகளுக்கு அவர்களது மனக் கவலை அவர்கள் கூறாமலேயே தெரியாதா என்ன? ஆனாலும் வேண்டும் என்றேதான் அப்படிக் கேட்டார். அவர்கள் தம் வாயாலேயே தமது குறைகளை கூற வேண்டும் என்றே விரும்பினார்.

அதைக் கேட்ட அந்தப் பெண்மணி அவரிடம் கூறினாள் 'ஸ்வாமி மழலை  அற்ற பெண் பாலைவனத்தில் வசிப்பதைப் போல உணருவாள். அதை நான்  கூறி என்ன பயன்? நாங்கள் பலவாறாக வேண்டியும் எங்களுக்கு குழந்தைப் பிறக்கவே இல்லை. அடுத்த ஜென்மத்திலாவது எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும் என்று  நீங்கள் அருள் புரிந்தால் நாங்கள் அந்த அருளை நினைத்துக் கொண்டு இந்த ஜென்மத்தின் மிச்ச காலத்தையும் மன அமைதியோடு கழிப்போம்'.

அதைக் கேட்ட குருதேவர் கூறினார் 'அம்மணி, அதோ தெரிகிறதே சங்கம், அதில் சென்று குளித்து விட்டு நான் கருநெல்லி மரத்தின் அடியில்தான் அமர்கிறேன். கருநெல்லி மரத்தை வணங்கித் துதித்தவர்கள்  வேண்டியதைப் பெறாமல் இருந்தது இல்லை. ஆகவே நீ தினமும் இங்கு வந்து நான் அமர்ந்து உள்ள இடத்தில் இருக்கும் கருநெல்லி மரத்தை பிரதர்ஷணம் செய்து வா. உனக்கு நல்லதே நடக்கும். உன் குறைகள் விலகும்.

கருநெல்லி மரத்தை ஞாயிற்றுக் கிழமைகளிலும் சங்கராந்தியன்றும் தொடக்கூடாது. இந்த மரத்தின் அடியில் உள்ள தரையை பசுவின் சாணத்தினால் தினமும் மெழுகி,  கோலம் போட்டு, வணங்க  வேண்டும். இதில் திருமூர்த்திகளும் வசிக்கிறார்கள். இந்த மரத்தின் தென்பக்கக் கிளைகளில் சிவபெருமானும், வலப்புறக் கிளைகளில் பிரும்மாவும், கிழக்குப் பக்கத்தில் உள்ள கிளைகளில் விஷ்ணுவும் வசிக்க அதன் மேற்குப் பக்கக் கிளைகளில் இந்திரனும் பிற தேவர்களும் குடி உள்ளதாக ஐதீகம் உள்ளது. மேலும் இந்த மரத்தின் வேர்களில் காமதேனு எனும் தேவலோகப் பசுவும், புனித நதிகளும் ஓடுவதாக ஐதீகம் உண்டு.  இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு  மிருத்தும்ஜய  ஹோமம் செய்தாலோ அல்லது எவர் ஒருவருடைய வீட்டில் கருநெல்லி மரத்தை வளர்த்து அதை பூஜிப்பார்களோ  அவர்களுடைய குடும்பத்தில்  நாற்பத்தி இரண்டு வம்சாவளியினர்  மோட்ஷம் பெறுவார்கள். அது போலவே அந்த மரத்தின் கிளைகளை வெட்டுபவர்களது  அடுத்த நாற்பத்தி இரண்டு வம்சாவளியினரும் தீராத சாபத்தைப் பெறுவார்கள். அவ்வளவு மகிமைப் பெற்ற மரமே கருநெல்லி மரமாகும்.

பிரும்மாண்ட புராணத்திலும் கருநெல்லி மரம் குறித்துக் கூறப்பட்டு உள்ளது. அது மிகவும் மகிமை வாய்ந்தது என்பதற்கு கதையும் உள்ளது. ஆகவே நீ நம்பிக்கையுடன்  விரதம் இருந்து இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்து வா. உனக்கு இந்த ஜென்மத்திலேயே  ஆணும், பெண்ணும் என இரண்டு குழந்தைகள்  பிறக்கும்'என்றதும் அந்த பெண்மணி அவரிடம் 'ஸ்வாமி,  நீங்கள் கூறிய வார்த்தைகள் எங்களுக்கு அமுதத்தை உண்டது போல உள்ளது. நங்கள் உங்கள் அறிவுரையை ஏற்று அப்படி செய்கிறோம்'என்று கூறி விட்டு அவரை நமஸ்கரித்து விட்டுச் சென்றார்கள்.

குருதேவர் கூறியது போலவே பக்தியுடன் தினமும் அங்கு வந்து  கருநெல்லி மரத்தை பிரதர்ஷனம் செய்தப் பின் அதற்கு பூஜையும் செய்து விட்டுச் சென்றார்கள். ஆனால் அந்த ஊரில் இருந்தவர்கள் அதை நம்பவில்லை. மாதவிலக்கே நின்று போய்  விட்ட அறுபது வயதான மூதாட்டிக்கு எப்படி குழந்தைப் பிறக்கும்? அவளுக்கு ஆறுதல் தருவதற்காகவே குருநாதர் அவர்களுக்கு அப்படிக் கூறி அனுப்பி உள்ளார் என்றே எண்ணினார்கள். ஆனால் மற்றவர்கள் கூறியதை  செவி கொடுத்துக் கேளாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்  மீது முழு நம்பிக்கை  வைத்து  தம்பதியினர்  ஸ்வாமிகள் கூறியதை சிரத்தையுடன் செய்து வந்தார்கள்.

அந்த பூஜையைத் துவக்கிய மூன்றம் நாள்  அதிகாலையில் அவள் கனவில் ஒரு பிராமணர் தோன்றி 'ஸ்வாமிகள் கூறியது உனக்கு நிச்சயம்  நடக்கும். நாளைக் காலையில் பிரதர்ஷணம் செய்து முடித்தப் பின் ஸ்வாமிகளை  தரிசித்து   அவர் கொடுப்பதை வாங்கிக் கொண்டு அதை  நீ உண்ண  வேண்டும். அதன் பின் நீ விரும்பியது கிடைக்கும்'என்று கூறி விட்டு மறைந்தார்.

அதிகாலையில் கண்ட கனவு என்பதினால் அந்த மூதாட்டி அதை சத்திய வாக்காக எடுத்துக் கொண்டாள். காலையில் எழுந்து குளித்தப் பின் எப்பொழுதும் போல கருநெல்லி மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின், பூஜையையும் செய்தாள்.  அதன் பின் நேராக ஸ்வாமிகள் இருந்த இடத்துக்குச் சென்று அவரை வணங்க அவர் அவளிடம் இரண்டு வாழைப் பழங்களைத் தந்து அதை உண்ணுமாறும் அதன் பின் விரைவில் அவளுக்கு ஒரு மகன் பிறப்பான் எனவும் ஆசிர்வதித்தார். அவளும் மன நிறைவோடு வீடு திரும்பினாள்.  அன்றுடன் அவளுடைய அந்த விரதமும் முடிவடைந்தது.

அன்று இரவே அதிசயமாக அவள் மாதவிலக்கு அடைந்தாள்.  அதைக் கேட்டு பல வருடங்களுக்கு முன்னரே நின்று போன மாதவிலக்கு மீண்டும் எப்படி திரும்பி வந்தது என அனைவரும் அதிசயித்தார்கள். இன்னும் சிறிது வாரங்கள்  சென்றது. திடீர் என ஒருநாள் அவள் தான் கர்ப்பம் அடைந்ததை உணர்ந்தாள். அதைக் கண்டு அந்த நகரமே வியந்து நின்றது. அவள் கர்பமுற்றதின் காரணம் குருதேவரின் கிருபையே என்று நம்பினர்.

அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற அவள்  ஒரு அழகிய குழந்தையை பெற்று எடுத்தப் பின் முறைப்படி பதினோராம் நாளன்று புண்ணியாவசனம் செய்தனர். அந்த குழந்தையை குருதேவரிடம் எடுத்தச் சென்று ஆசிர்வாதம் பெற்று அதற்கு  ஸ்ரஸ்வதி என நாமகரணம் செய்தார்கள். அந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த கண்ட பண்டிதர்கள் அந்தப் பெண்  குழந்தை வரும் காலத்தில் தீர்க சுமங்கலியாக இருப்பாள் எனவும் பெரும் செல்வம் பெற்று  நல்ல கணவன் மற்றும் பேரக் குழந்தைகள் அடையப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பாள் எனவும் கூறினர். அவர்கள் கூறியது போலவே பிற்காலத்தில் அவளுக்கு திக்ஷித் என்ற நல்ல செல்வந்தர் கணவராக கிடைத்தார்.

 குருதேவரின் ஆசி பெற்று வீடு திரும்பிய அந்தத் தம்பதியினருக்கு அடுத்த சில ஆண்டுகளில் அவர் கூறியது போலவே இன்னொரு ஆண் குழந்தை பிறக்க அந்த குழந்தையையும் குருதேவரிடம் எடுத்துச் சென்று ஆசி பெற்று வீடு திரும்பினர். அந்தக் குழந்தை  திருமணம் ஆனபின் ஐந்து  குழந்தைகளுக்கு பெற்றோர் ஆக வேண்டும் என ஸ்வாமிகளிடம் ஆசிகளை பெற்றுக் கொண்டார்கள். அவரும் அப்படியே ஆசி புரிந்தார். பிற்காலத்தில் அந்தக் குழந்தையும் பெரியவனாகி, திருமணம் செய்து கொண்டப் பின் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவற்றை எல்லாம் கண்ட அந்த ஊரார் என்னே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமை என்று காலம் காலமாக பேசிக் கொண்டார்கள். இப்படியாக ஸ்வாமிகள் அங்காங்கே மகிமைகளை செய்தவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார்''. இப்படியாக கதையைக் கூறி முடித்தார் சித்த முனிவர் (இத்துடன் அத்தியாயம்- 39 .முடிவடைந்தது).
.....தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles