Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 42

$
0
0
 

அத்தியாயம் -33
 
''மீண்டும் உயிர் கிடைத்து எழுந்த கணவருடன் சேர்ந்து சாவித்திரி மறுநாளும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்தாள். அந்த தம்பதியினர் குருவின் முன் சென்று பவ்யமாக அமர்ந்தனர். சாவித்ரி கேட்டாள் 'ஸ்வாமிகளே நேற்று நான் இங்கு வரும் முன்   ஒரு சன்யாசி என்னிடம் வந்தார். அவர் எனக்கு ருத்திராட்சத்தைக் கொடுத்தார். அதை என் கணவரது இறந்து கிடந்த சடலத்தின் மீது காதிலே போட்டப் பின் உங்களையும்  சந்தித்து தரிசனம் பெறுமாறு கூறினார். அவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் கொடுத்த அறிவுரையினால்தான்  நான் மனதை திடமாக்கிக் கொண்டு இறந்து கிடந்த என் கணவரை எடுத்துக் கொண்டு உங்களிடம் ஆசி பெற்றுக் கொண்டு உடன்கட்டை ஏறலாம் என்று எண்ணி இங்கு வந்தேன். அவர் யார் என்பது தெரியவில்லை என்பதினால் அவர்  குறித்து நீங்கள் விளக்க முடியுமா? '

'மகளே, உன்னுடைய பதிபக்தியை சோதிக்க நான்தான் உன்முன் அந்த உருவில் வந்தேன். உனக்கு ருத்திராட்சத்தைக்  கொடுத்தவனும் நானேதான். ருத்திராட்ச மாலை பெரும் பயன்களை அளிக்கும். சிவபெருமானையே பிரதிபலிக்கும் ருத்திராட்சத்தை அணிபவன் சிவ அம்சமாகவே கருதப்படுவான். ருத்திராத்ஷத்தை அணிவதற்கும் ஒரு நெறி முறை உண்டு. சாதாரணமாக ஒருவனது சரீரத்தில் 1000 ருத்ராக்ஷ மணிகளைக் கொண்ட மாலையை அணிவது பெரும் பயனைத் தரும்.  அது முடியாதவர்கள் கழுத்தில் 108 ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலை அல்லது தலையில் தொப்பியைப் போல 40 ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலை அல்லது 12 ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலையை காதுகளிலும் போட்டுக் கொள்ளலாம். அது போல 16 ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலையை இரண்டு மணிக்கட்டிலும் வளையல் போல போட்டுக் கொள்ளலாம்.  ருத்ராக்ஷ மணிகளைக் கொண்ட மாலையை அணிந்து கொண்டு சிவபெருமானை பூசிப்பது நல்ல பயனைத் தரும்.

ருத்ராக்ஷம் பல முகங்களைக் கொண்டது. எந்த முகத்தை அணிந்து கொள்வது சிறந்தது என்பதை அவரவர் ஜாதகத்தைப்  பார்த்து பண்டிதர் கூறுவார்கள். ருத்ராக்ஷத்தை அணிந்து கொள்வது மறு ஜென்மத்தில் மோட்சம் கிடைக்க வழி வகுக்கும்.  இந்த ஜென்மத்திலேயே புண்ணியத்தையும் தரும் மகிமைக் கொண்டது. ருத்திராட்சத்தை அணிந்து கொண்டு குளிப்பது கங்கையில் குளித்ததிற்கு சமம் ஆகும்'.

இப்படியாக குருதேவர்  கூறியதைக் கேட்ட தம்பதியினர் ருத்திராக்ஷ மகிமையைக் குறித்து வேறு  கதை  ஏதும் உண்டா எனக் கேட்க ஸ்வாமிகள் அதையும் கூறத் துவங்கினார். 'முன் ஒரு காலத்தில் பத்திரசேனா என்றொரு மன்னன் காசியை ஆண்டு வந்தான். அவனுக்கு 'சுதர்மா'என்ற பெயருடைய மகன் இருந்தான். பத்திரசேனாவின் மந்திரி ஒருவருடைய மகன் 'தாரக்'என்பது. 'சுதர்மா'வும், 'தாரக்'கும் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தவர்கள். அவர்கள் இருவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அத்தனை பணம் பவிசு என அனைத்தும் இருந்தும்,  இருவருமே ஆன்மீக மனநிலையில் இருந்து கொண்டு ருத்திராக்ஷ மாலையை போட்டுக் கொண்டும், பட்டை பட்டையாக வீபுதியை பூசிக் கொண்டும் இருப்பார்கள். ராஜ வம்சத்தினர் என்றாலும் இருவருக்கும் நகைகள் மீது ஆசையே கிடையாது.

ஒருமுறை பராசர மகரிஷி மன்னனின் அழைப்பின் பேரில் அரண்மனைக்கு வருகை தந்தார். வந்த மகரிஷிக்கு அர்க்ய பாதம் கொடுத்து தக்க மரியாதையுடன் அவரை மன்னன் வரவேற்றான். அதன் பின் 'சுதர்மா'மற்றும் 'தாரக்'கை அழைத்து அவர்களை குருவந்தனம் செய்யுமாறு கூறினான். அவர்கள் மகரிஷியை முறைப்படி வணங்கி எழுந்தவுடன் மன்னன் பராசர மகரிஷியிடம் கேட்டார் 'மாபெரும் முனிவரே, இவர்கள் இருவருமே சிறுவர்கள் என்றாலும் கூட ராஜபோக சுகங்களில் அதிகம் மனதை செலுத்தாமல் வீபுதியை இட்டுக் கொள்வதிலும், ருத்திராக்ஷ மாலைகளை அணிந்து கொள்வதிலுமே அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் காரணம் என்ன என்பதை எமக்கு விளக்குவீர்களா?'எனக் கேட்டார்.

அதைக் கேட்ட பராசர மகரிஷி மன்னனிடம் கூறினார் 'மன்னா இந்த இவருடைய பூர்வ ஜென்மக் கதையும் சுவையானது. அதனால்தான் இந்த இருவருமே இந்த  மனநிலையைக்  கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அதற்குக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. முன்னர் நந்திக்கிராமம்  என்று ஒரு கிராமம் இருந்தது.  அங்கு ஒரு விலை மாது வசித்து வந்தாள். அவள் விலை மாதாக இருந்தாலும் அவளுக்கென்று சில நியமங்களைக் கொண்டு வாழ்ந்து வந்தாள். சாதுக்கள், சன்யாசிகள் போன்றவர்களை பெரிதும் மதித்து வந்தாள்.  நன்கு குளித்து விட்டு ஆசாரமாகச் சென்று அவர்களுக்கு தானமும் செய்வாள். அவளைக் கேட்டால் அவள் கூறுவாள் 'என்னிடம் வரும் வாடிக்கையாளர்களினால் களங்கப்படுவது என் உடல்தானே ஒழிய என் மனம் அல்லவே. ஆகவே  களங்கப்படும் உடலை தூய்மைப்படுத்திக் கொண்டு களங்கம் அற்ற தூய மனநிலையில் இருந்தல்லவா நான் சாதுக்கள், சன்யாசிகளுக்கு தானம் செய்கிறேன்'என்பாள். அதனால் அவள் கொடுத்த தானங்களை அவர்கள் ஏற்றார்கள் என்பது  அவள் வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கு   எடுத்துக் காட்டாக இருந்தது.

அவள் தனது வீட்டின் பக்கத்திலேயே ஒரு நடன சாலையை அமைத்து இருந்தாள். அதில் தனக்கு துணையாக இருக்க ஒரு குரங்கையும், நாயையும்   வைத்துக் கொண்டு இருந்தாள்.  அதிலும் ஒரு வேடிக்கை என்ன என்றால் அந்த இருவருக்குமே கழுத்தில் ருத்திராக்ஷ மாலையை கட்டி வைத்து இருந்தாள். தன்னிடம் வந்து நடனம் பயிலுபவர்களும் சரி, சுகத்தை அனுபவிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கும்  சரி  அந்த நடனசாலையையே பயன்படுத்தினாள்.

ஒரு நாள் பெரிய வியாபாரி ஒருவன் அவளைத் தேடி  வந்தான். வந்தவன் சிவபக்தன். அவன் உடலில் போட்டு இருந்த நகைகளைத் தவிர கையில் விலை உயர்ந்த பல ரத்தினங்கள் பதித்த சிவலிங்கத்தை அணிந்து கொண்டு இருந்தான்.   கழுத்தில் ருத்திராட்ச மாலை மற்றும் நெற்றியில் பட்டையாக வீபுதி அணிந்து கொண்டு  இருந்தான். வந்தவனிடம் இருந்த பளபளக்கும் சிவலிங்கத்தைக் கண்ட விலைமாது அந்த சிவலிங்கத்தின் மீது ஆசைக் கொண்டு அதை தனக்கு விற்க முடியுமா என்று கேட்க, அதற்கு ஒரு நிபந்தனையுடன் அவனும் ஒப்புக் கொண்டான். அந்த நிபந்தனையின்படி தொடர்ந்து மூன்று நாட்கள் அவள் இரவும் பகலும் அவனுடன் மனைவி போலவே இருந்தவாறு சுகம் தந்தபடி இருக்க வேண்டும். அந்த மூன்று நாட்களும் வேறு வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது. அந்த நிபந்தனையை அவள் ஏற்றாள் என்றாலும் அவள் அதில் தடம் புரளக்கூடாது என்பதினால் அவளிடம் அதற்கு சிவலிங்க சாட்சியாக சத்தியமும் பெற்றுக் கொண்டான்.

அதை ஏற்றுக் கொண்டவளுக்கு  அவன் சிவலிங்கத்தை தந்து விட்டான். அதை தரும் முன் கூறினான்  'இது விலை  மதிப்பு அற்றது.  நான் இங்குள்ளவரை இதற்கு ஏதும் நேர்ந்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.  இதன் மீது தீட்டும்படக் கூடாது.   ஆகவே இது நாம் உறவு கொள்ளும் அறையில் இருக்கக் கூடாது'என்றதும் அவள்  அதை உள்ளே கொண்டு சென்று  பத்திரமாக பூஜை அறையில் வைத்தாள். அதன் பின் அந்த வியாபாரிக்கு இன்பமூட்டியபடி அன்று முழுவதும் இருந்தாள்.

மறுநாள்  இரவு தற்செயலாக மின்சாரக் கோளாறு எதோ ஆகி அந்த வீடு  தீ பற்றிக் எரிந்தது.  அந்த தீயில் குரங்கு, நாய்  மற்றும் சிவலிங்கம் என அனைத்தும் அழிந்து விட்டது.  அந்த வியாபாரி சிவலிங்கம் தீயில் எரிந்து போனதை கண்டதும் அந்தக் காட்சியை தாங்க முடியாமல் தீ மூட்டி தானும் அதில் போய் விழுந்து மடிந்தான். அதைக் கண்ட விலைமாதுவிற்கு  தான் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது. அவன் இருக்கும் மூன்று நாட்களும் அவனுடைய மனைவி போலவே இருப்பதாக வாக்கு தந்து இருந்ததினால், தன்னுடன் தங்கி இருந்தவன் மூன்று நாட்களுக்குளேயே மரணம் அடைந்து விட்டதினால்  தன்னை அவனுடைய மனைவியாக   கருதிக் கொண்டு உடன்கட்டை ஏறுவது போல மனதில் எண்ணிக் கொண்டு அந்த தீயில் குதித்து தானும் அவனுடன் மடிந்தாள்.

அதைக் கண்ட சிவபெருமான் அவளை  தீயில் இருந்து காப்பாற்றி வெளியில் எடுத்து வந்து 'மகளே, உன் சத்தியத்தை சோதனை  செய்யவே நான் வியாபாரி உருவில் வந்தேன். நீயும் உண்மையான பதி பக்தியோடு இருந்தாய். ஆகவே உனக்கு என்ன வரம் வேண்டுமோ, கேள், அதை நான் தருகின்றேன்'என்றவுடன் அவள் கூறினாள் 'பரமேஸ்வரா உங்கள் தரிசனமே கிடைத்து விட்ட எனக்கு வாழ்க்கையில் வேறு என்ன இனி வேண்டும்? நான் என்றும் கைலாயத்தில் இருந்து உங்களுக்கு சேவை செய்ய அருள் புரிய வேண்டும். அதைக் கேட்ட அவரும் அவளை கைலாயத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த தீயில் கருகி உயிரிழந்த குரங்கு இந்த ஜென்மத்தில் உன்னுடைய மகனாகவும், நாய் மந்திரியின் மகனாகவும் பிறந்து உள்ளதினால் அவர்களின் மனநிலை பூர்வ ஜென்ம வாசனையுடன் உள்ளது'என்று கூறினார்  (இப்படியாக அத்தியாயம் -33 முடிவடைந்தது).
..........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>