Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 37

$
0
0
 

அத்தியாயம் -28

அனைவர் முன்னிலையிலும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை  பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிராமணணாக மாறிய சண்டாளன் கேட்டான் 'மகாத்மா, பூர்வ ஜென்மத்தில் அத்தனை உயர்வான பிராமணனாக இருந்த நான் ஏன் இந்த ஜென்மத்தில் சண்டாளனாகப் பிறந்தேன்?'
 
அதைக் கேட்ட ஸ்வாமிகள் கூறினார் 'மகனே, இந்த பூமியிலே பிறந்து விட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் குறிப்பிட்ட பிறப்புக்களை எடுத்துள்ளார்கள். அதில் நீயும் விலக்கு  அல்ல. நீ ஏன் சண்டாளனாக  பிறந்தாய் என்பதை தெரிந்து கொள்ளும் முன்னர் ஒரு மனிதப் பிறவி எடுத்தவன் மற்றும்  ஒரு பிராமணன் கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அதை எல்லாம் நீ செய்திருப்பாயா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். முதலில் இந்த மண்ணிலே பிறந்தவர் செய்ய வேண்டிய, கடை பிடிக்க வேண்டிய நியமங்கள் என்னென்ன என்பதை கூறுகிறேன் கேள், அதன் பின் உன் பிறப்பின் காரணத்தைக் கூறுகிறேன்'என்று கூறிவிட்டு அவனுக்கு சொல்லத் தொடங்கினார்.
 
'ஒவ்வொருவரும் ஒவ்வொரு குலத்திலே  பிறப்பை எடுக்கிறார்கள். அவர்கள் அந்தந்த குல  வழிப்படி அவர்கள் நடக்க வேண்டும். தவறான மார்கத்தில் செல்பவர்கள் சண்டாளனாகவே    பிறப்பை எடுக்க வேண்டும் என்பது பிரும்ம நியதி. யார் யார் எல்லாம் சண்டாளர்களாக  பிறப்பு எடுப்பார்கள் என்றால் பெற்றோர்களை மதிக்காதவர்கள், மனைவியை தவிக்க விட்டு ஓடியவர், மாற்றான் மனைவியை அபகரித்தவர், குலதெய்வத்தை நிந்தனை செய்தவர்கள், தெய்வங்களை ஆராதிக்காதவர்கள், பொய்யையே கூறிக் கொண்டு பிறரை ஏமாற்றி வாழ்கையை ஓட்டுபவர்கள், தீயவர்களுக்கு உதவுபவர்கள், நேர்மை அற்ற வாழ்க்கையில் நடப்பவர்கள், மற்றவரின் சொத்தை அபகரிப்பவர்கள், சிவ பூஜையை தடுப்பவர்கள், இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள், பொதுச் சொத்துக்களை அழிப்பவர்கள், சூரிய உதயத்தின் பின்பு எழுந்து சூரியன் அஸ்தமிக்கும் முன் உறங்குபவர்கள், விதவையுடன் சல்லாபம் செய்பவர்கள், மூதோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை செய்யாதவர்கள், பண்டிகை மற்றும் புனித நாட்களிலும் மனைவியுடன் சல்லாபம் செய்பவர்கள், தனக்குத் தானே பெருமை அடித்துக் கொள்பவர்கள் என அனைவருமே அடுத்தடுத்த பிறவிகளில் நிச்சயமாக சண்டாளர்களாகவே  பிறப்பார்கள்.

அது போலவே குருவை நிந்திப்பவர்கள், வேத சாஸ்திரங்களை நிந்திப்பவர்கள், பிறரை வேண்டும் என்றே அவமதிப்பவர்கள், பிராமணர்களை நிந்திப்பவர்கள் போன்றவர்கள் பிரும்ம ராக்ஷசனாக பிறப்பை எடுப்பார்கள். அவ்வளவு ஏன் தங்கத்தை திருடுபவர்கள் குருடர்களாகப்  பிறப்பார்கள், உணவை திருடுபவர்களுடைய குடலில் தீராத நோய் வந்து அவதிப்படுவார்கள், பசுவின் பாலில் தண்ணீரைக் கலந்து விற்பவர்கள் நாயாகப் பிறப்பார்கள்,  மற்றவர்களின் சொத்தை அபகரிப்பவர்கள், துணிகளை திருடுபவர்கள் எல்லாம் தொழுநோயாளிகளாகப்  பிறப்பார்கள். பிராமணர்களைக் கொல்பவர்கள் அதே ஜென்மத்தில் காச நோயினால் அவதிப்பட்டு  அடுத்தடுத்து பன்னிரண்டு ஜென்மமும் பிரும்ம ராக்ஷசர்களாகவும்  பிறப்பார்கள். அடுத்தவன் மனைவியுடன் சல்லாபிப்பவன் கண்கள் அற்றக் குருடனாகவும், பாம்பாகவும், நாயாகவும் பல பிறவிகளை எடுப்பார்கள். பெண்களில் யார் கரு சிதைவு செய்து கொள்வார்களோ  அவர்களுக்கு ஏயேழு ஜென்மங்களில் புத்திரபாக்கியம் கிடைக்காது. அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தாலும் அவை  மரணம் அடையும்'. இப்படியாக குருதேவர் கூறியதைக் கேட்ட திருவிக்ரமபாரதி பேச்சின் இடையே கேட்டார்  'குருவே, இதற்கெல்லாம்  பிராயசித்தம்  செய்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியாதா?'
 
அதைக் கேட்ட ஸ்வாமிகள் கூறினார் 'திருவிக்ரமா, எந்த ஒன்றைக் குறித்தும் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளும்போது அவற்றின் கடுமைக் குறையும். ஒன்றை தெரிந்து கொள். வேண்டுதல்கள் மூலம் குற்றத்திற்கான தண்டனையின் அளவும் கடுமையும் குறையலாமே தவிர ஓரளவு தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். அது தவறு செய்பவர் தெய்வத்திடம் எந்த நிலையில் இருந்து கொண்டு, பரிபூரண தூய்மையான மனதுடன் வேண்டிக் கொள்கிறார்கள் என்ற  நிலையைப் பொறுத்து மாறுபடும். அதோடு தண்டனையின் கடுமை அவர்கள் பரிகாரத்துக்காக மேற்கொள்ளும் விரதங்களையும் பொருத்தும் அமையும்.  மூன்று நாட்கள் முழுப் பட்டினி கிடந்து அந்த  நாட்களில் பால் மட்டுமே அருந்திக் கொண்டு கிர்ச எனும் விரதம் இருக்கலாம். நல்ல வலிமையான உடல்வாகைக் கொண்டவர்கள் பால் கூட அருந்தாமல் அத்தி மர இலை, தர்பை, கரிகா என்ற ஒரு வகைப் புல் அல்லது தாமரைப் பூ போன்றவற்றைப் போட்டு ஊற வைத்த  தண்ணீரை பருகி பர்ண கிச்சரா எனும் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.  பொர்ணமியின் முதல் நாள் அன்று பட்டினி விரதம் இருந்து அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு கைப்பிடி உணவாக அதிகரித்துக் கொண்டே போய்  அம்மாவாசையில் முழு அளவு உண்டப்  பின் அடுத்தடுத்த நாட்களில் இருந்து ஒவ்வொரு கைப்பிடி உணவாக குறைத்துக் கொண்டே வந்து பௌர்ணமிக்கு  முதல் நாள் முழு பட்டினி கிடந்து விரதத்தை நிறைவு செய்யலாம். அதை சந்திரமாயன விரதம் என்பார்கள். அது போல பிரும்மஹத்தி தோஷம் பெற்றவர்கள் அதை ஒரு நல்ல குருவின் மூலமும்  அதை விலக்கிக் கொள்ள   முடியும் 'என்றார்.
 
அதன் பின் பிராமணனாக மாறிய சண்டாளனிடம் கூறினார் 'மகனே பூர்வ ஜென்மத்தில் ஒரு பிராம்மணனாக இருந்த நீ உன்னுடைய பெற்றோர்களை உதாசீனப்படுத்தி கொடுமைப்படுத்தியதினால்தான் இந்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறப்பை எடுத்தாய். ஆகவே நீ ஒரு மாதம் இங்கு தங்கி இருந்து இங்கு சங்கமிக்கும் நதியில் தினமும் மூன்று வேளைக் குளித்து வந்தால் உன் பாபங்கள் விலகும். அடுத்தப் பிறவியில் மீண்டும் பிராமணணாகப் பிறப்பாய்'என்று கூறியதும் அதற்கு அந்த சண்டாளன் கூறினான் 'குருதேவா எப்போது உங்களுடைய தரிசனத்தைப் பெற்றேனோ அப்பொழுதே நான் பிராமணன் ஆகி விட்டேன் அல்லவா ? ஆகவே என்னை பிராமணனாகவே இருக்க விட்டப் பின் பிற பிராமணர்களும் என்னை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்'என்று கூறினான்.

அதற்கு குருதேவர் கூறினார் 'மகனே, நீ சண்டாளனாக பிறப்பு எடுத்து பிராமணன் கற்றுள்ள அனைத்தையும் பூர்வஜென்ம வினைப் பயனினால் பெற்று உள்ளாய். ஆகவே நீ இந்த பிறப்பை அப்படியே வாழ்ந்தபடி வாழ்வைக் கழித்து விட்டு அடுத்த ஜென்மத்தில் மீண்டும் பிராமணனாக பிறப்பை எடு'

அதை ஏற்க மறுத்த சண்டாளன் கூறினான் 'ஸ்வாமி, உங்கள் கருணையினால் நான் மனதார பிராமணனாக மாறி விட்டேன். ஆகவே நீங்கள் என்னை  பிராமணனாகவே  இருக்க அனுமதிக்க வேண்டும்'.

அதற்கு குருதேவர் அவனுக்கு  ஒரு கதையைக் கூறினார் 'மகனே இதைக் கேள். முன் ஒரு காலத்தில் ஷத்ரிய  வம்சத்தை சேர்ந்த காதி என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவருடைய மகனே விஸ்வாமித்திரர்.  விஸ்வாமித்ரர் பிரும்ம ரிஷியாக விரும்பினார். அதற்காக கடுமையான தவங்களையும் மேற்கொண்டு வந்தார். அப்போது அவர் முன் தோன்றிய  பிரும்மா 'உங்களை வசிஷ்ட முனிவர் பிரும்ம ரிஷி என்று ஏற்றுக் கொண்டால் மட்டுமே நாங்களும் பிரும்ம ரிஷியாக உங்களை ஏற்றுக் கொள்வோம்'  என்று கூறினார். ஆகவே வசிஷ்டரிடம் சென்று தன்னை பிரும்ம ரிஷியாக அங்கீகரிக்கும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் வசிஷ்டரோ அவர் ஷத்ரியராக பிறந்து விட்டதினால் அதை தம்மால் செய்ய முடியாது என மறுத்து விட்டார்.

அதனால் கோபமடைந்த விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் நூறு குழந்தைகளையும் கொன்று விட்டார். ஆனாலும் வசிஷ்டர் தனது நிதானத்தை இழக்காமல் அமைதியுடன் இருந்து தவத்தில் அமர்ந்தார். வசிஷ்டரின் அமைதியைக் கண்ட விஸ்வாமித்திரருக்கு கோபம் இன்னும் அதிகமாகி விட வசிஷ்டரைக் கொல்வதற்காக  பெரிய கல்லை எடுத்துக் கொண்டு சென்று அவர் தலை மீது போட முயன்றபோது ஒரு கணம் யோசனை செய்தார். அடடா, இவரைக் கொன்று விட்டால் பிரும்மஹத்தி தோஷம் அல்லவா நம்மை பற்றிக் கொண்டு விடும் என்று எண்ணியபடி அவரைக் கொல்லாமல்  சென்று விட்டார்.  அப்போது அவரைப் பார்த்த வசிஷ்டர் கூறினார்  'முனிவரே நீங்கள் ஷத்ரியராகப் பிறந்து விட்டதினால்தான் இத்தனை கோபதாபங்களில்  சுழன்று உள்ளீர்கள். ஆகவே நீங்களும் ஒரு பிராமணரைப் போலவே பூணூல் தரித்து, அவர்களைப் போலவே வாழ்ந்து வந்தவாறு கடுமையான தவத்தை மேற்கொண்டால்  பிரும்ம ரிஷி ஆகலாம்'என்றார். அதைக் கேட்ட விஸ்வாமித்திரரும் கடுமையான தவத்தில் இருந்து உடலை வருத்திக் கொண்டு, தனது பழைய உடலை  தவத்தாலேயே எரித்துக் கொண்டு புதிய உடலைப் பெற்றார். அதற்குப் பிறகே அவருக்கு பிரும்ம ரிஷி என்ற பட்டம் கிடைத்தது.  விஸ்வாமித்திரரைப் போலவேதான் நீயும் இருக்க வேண்டும்'என்றார்.

ஆனால் அதை ஏற்க அந்த சண்டாளன் தயாரில்லை. அவரிடம்  வேண்டாத வேண்டுகோளை வைத்தபடி இருந்தபோது அவனுடைய மனைவி அவனது குழந்தைகளை அங்கு அழைத்து வந்து அவனிடம் கூறினாள் 'நாதா, நீங்கள் என்னையும் குழந்தைகளையும் தவிக்க விட்டு வந்து விட்டீர்களே, தயவு செய்து வீடு திரும்புங்கள். நாங்கள்  பட்டினியினால் வாடுகிறோம்'என்று கெஞ்சினாள். ஆனால் அவள் எத்தனையோ கெஞ்சியும் அந்த சண்டாளனோ எதையும் ஏற்க மறுத்து அவளை அங்கிருந்து  துரத்தத் துவங்கினான். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்தவன் அவளைக் கழுத்தை நெரித்து கொல்ல அவள் கழுத்தை அமுக்கக் சென்றபோது அதற்கு முன்னரே அதை எதிர்பார்த்திருந்த ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய ஒரு சீடரை அழைத்து அந்த ஊரில் இருந்த பாபம் செய்த பிராமணன் ஒருவரை அழைத்து வரச் செய்து அவரை அந்த சண்டாளன் மீது தண்ணீரை கொட்ட ஏற்பாடு  செய்திருந்தார்.

 தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்ல கிளம்பியவன் மீது சரியான நேரத்தில் வந்து சேர்ந்த பாவம் செய்த பிராமணன் தண்ணீரைக் கொட்டிவிட  அந்த சண்டாளனின் உடம்பில் இருந்த வீபுதி தண்ணீரில் கரைந்து அவன் உடம்பில் இருந்து வெளியேற அவனது பழைய நினைவுகள் அனைத்தும் அந்த நிமிடமே மறைந்தன. அப்படியே சென்று தனது மனைவியைக் கட்டிக் கொண்டு 'அடடா, நான் எங்கு இருக்கிறோம்? எப்படி நான் நனைந்து விட்டேன்'என்று கூறியபடி தன்னுடைய மனைவியை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான். அவனுடைய பழைய நினைவுகள் அனைத்தையும் எப்படி நொடிப் பொழுதில்  ஸ்வாமிகள் முதலில் வரவழைத்தார் பின்னர் எப்படி  அதை நீக்கி விட்டார்  என்பதைக் கண்ட அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். எப்படி மறைந்தது அந்த சண்டாளனின்  நினைவு? ஸ்வாமியின்  மகிமைதான் என்னே!
.........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>