Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 24

$
0
0
 

அத்தியாயம் - 15

அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி வைத்தியநாத ஷேத்திரத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் சில காலம் யாருடைய கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்தார்.  அதற்குக் காரணம் அவருடைய பெயரும் புகழும் பல இடங்களிலும் பரவி இருந்ததினால் அவரைக் காண பல பக்தர்கள் வரலாயினர்.  அவர்களில் பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தர்ம வழியில் நடப்பவர்கள், தீய வழியில் செல்பவர்கள், பலதரப்பட்ட மக்களும் வந்தவண்ணமே இருந்ததினால் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமியினால் தாம் செய்ய வேண்டிய சில முக்கியமான தபஸ்களை செய்ய முடியாமல் இருந்தது. இப்படிப்பட்ட சங்கடமான நிலை முன்னர் பரசுராமருக்கும் இருந்தது. அவரும் சில காலம் யாருடைய கண்ணிலும் புலப்படாமல் தனிமையில் எங்கோ சென்று தமது கடமைகளை செய்தார். அதை நினைவு கொண்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி தாமும் அப்படிப்பட்ட நிலையில் இருக்க முடிவு செய்து அனைத்து சீடர்களையும் அழைத்து அவர்களை  புண்ணிய தலங்களுக்கு தீர்த்த யாத்திரை  சென்று விட்டு வருமாறு கூறினார்.

ஆனால் அதைக் கேட்டு துயரம் அடைந்தார்கள் அவருடைய சீடர்கள்.  அவர்கள் அவரிடம் கூறினார்கள் 'குருவே, இந்த உலகிலேயே புனித இடமும், புண்ணிய தீர்த்தங்களும் ஒரு குருவின் காலடியே என்பதும் அவர் காலை அலம்பி விட்டப் பின் அதில் இருந்து விழும் நீரே புனித தீர்த்தம் என்றும்  சாஸ்திரங்கள் கூறுகின்றனவே.  ஆகவே கல்ப விருத்ஷம் போன்ற உங்களை விட்டு விட்டு நாங்கள் வேறு எந்த புனித இடத்தை தேடித் போக வேண்டும்?'என்று கண்ணீர் மல்கக் கூற ஸ்வாமிகள் கூறினார் 'சீடர்களே, நீங்கள் ஒரு உண்மையை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு சன்யாசியும் ஒரே இடத்தில் ஐந்து நாட்களுக்கு மேல் தங்கலாகாது, ஒரு இடத்து நீரும் நிலமும் அவர்களுக்கு ஐந்து நாட்களே சொந்தமாகும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவேதான் அவர்கள் ஒரே இடத்தில் தங்காது புனித இடங்களையும், புனித தீர்த்தங்களையும் தேடிக் கொண்டே சென்றவாறு இருக்க வேண்டும். அதனால்தான் உங்களை புனித இடங்களுக்கு சென்றவாறு இருந்தும், அங்குள்ள புனித தீர்த்தங்களில் குளித்து விட்டு  நித்ய கடமைகளை செய்தப் பின் பதினைந்து வருடத்துக்குப் பிறகு ஸ்ரீசைலத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று கூறுகிறேன். நீங்கள் அவற்றை முடித்துக் கொண்டு வருவதற்குள் எனக்கு விதிக்கப்பட்டு உள்ள சில கர்மாக்களை நான் செய்து முடிக்க வேண்டி உள்ளது. ஆகவே மறுப்பு கூறாமல் கிளம்பிச் செல்லுங்கள்'என்றார்.

அவரது கட்டளையை சிஷ்யர்களினால் மீற முடியவில்லை. ஆகவே அவர்கள் அவரிடம் பணிவோடு கேட்டார்கள் 'குருதேவா, குருவின் கட்டளையை மீறுவது நரகத்தில் கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள். ஆகவே நீங்கள் ஆணையிட்டது போல தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்று நீங்கள் கூறியபடி உங்களை 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீசைலத்தில் வந்து தரிசிக்கிறோம். ஆனால் குருதேவா, நாங்கள் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை மட்டும் எங்களுக்கு அறிவுரையாகக் கூறினால் உங்கள் கட்டளைப்படி நடப்போம். தயவு செய்து எங்களுக்கு வழிகாட்டி உதவுங்கள்'என்று கேட்டார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட ஸ்வாமிகள்  மெத்த மகிழ்ச்சி  அடைந்து அவர்களிடம் கூறினார் 'சிஷ்யர்களே நீங்கள் இங்கிருந்து கிளம்பி காசிக்கு சென்று அங்குள்ள கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்தப் பின்னர் அன்னபூரணியையும் தரிசியுங்கள். கங்கை அறுபது யோசனை தூரமானது. அதன் கரையில் நடந்தவாரே வழிகளில் உள்ள புனித தலங்களில் தரிசனம் செய்தபின் அலஹாபாத் சங்கத்தை அடைந்து அங்கும் நீராடி வழிபட்டப் பின் அங்கிருந்துக் கிளம்பி வழியில் உள்ள புண்ணியத் தளங்களையும் தரிசித்து, பிரயாகைக்குச் செல்ல வேண்டும்.  வழி நெடுக உங்கள் வாய் மட்டும் முடிந்த அளவு காயத்ரி மந்திரத்தை ஓதியபடி இருந்தவாறு செல்ல வேண்டும். அது உங்களுக்கு மன வலிமையைத் தரும். செல்லும் வழிகளில் உள்ள சிறு நதிகளான வருணா, குஷாவர்த்தி, சரஸ்வதி, மருத்வித்தா, அசைகி, மதுமதி, ரேவதி, சராயு, கௌதமி, வேதிகா, அருணா போன்றவற்றிலும் ஸ்நானம் செய்ய வேண்டும்.

கயாவுக்குச் சென்று அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின்னர் அங்கிருந்துக் கிளம்பி புஷ்கர், ரங்கபத்மனாப், புருஷோத்தமா, நைமிஷாரண்யம், குருஷேத்திரம்,  பித்ருதீர்த்தம், பத்ரி, சங்ககர்ணம், அயோத்தியா, கோகுலா, மதுரா, துவாரவடி, மாயாவடி, ஹரிஹரா, தேவகன்யகா, கந்தர்வபுரம், ஸ்ரீரங்கம், கோகர்ணம், ஸ்ரீசைலம்,  ஷாலிக்ராம், ஷம்பல்கிராம், சேது பந்தனம், ராமேஸ்வரம் போன்ற அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும்.

வழிநெடுக காணப்படும் புண்ணிய நதிகளான கங்கை, ஸரஸ்வதி, அர்காவதி, கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா, துங்கபத்ரா பீமா, உத்தானி, மருத்ருதா, விதாஸ்தா, சிக்கிணி, சந்திரபாகா, பாயஸ்வானி, ஸ்ராவதி, மதுமதி, ரேவா, ஷிப்ரா, தாபி, வேதிகா, சர்மான்யதி, மற்றும் கந்தகி போன்ற நதிகள் அனைத்திலும் மறக்காமல் ஸ்நானம் செய்தபடி செல்ல வேண்டும். எங்கெல்லாம் இரண்டு அல்லது மூன்று நதிகள் வந்து சங்கமிக்குமோ அங்கெல்லாம் நீராடுவதை தவிர்க்கவே கூடாது. அவை மிக புண்ணியமான இடங்களாக கருதப்படும். எந்த இடங்களில் உள்ள  நதிகளில் திடீர் என மழை பெய்யுமோ அன்றைய தினம் அந்த நதியில் குளிக்கலாகாது. அதன் காரணம் பெண்கள் மாதவிலக்கு பெறுவதைப் போல புனிதமற்ற நதியாக அன்று அந்த நதியின் நிலை இருக்கும்.

குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும்போது அனைத்து நதிகளும் பாகிரதி நதியுடன்  மனபூர்வமாக சங்கமிக்கும்.  குருபகவான் கன்யா ராசியில் பிரவேசிக்கும்போது பாகிரதி கிருஷ்ணா நதியுடன் வந்து சங்கமிக்கும்.  அப்போது அந்த நதிகளில் சென்று குளித்தப் பின் அங்கு தங்களுடைய முன்னோர்களுக்கு சடங்குகள் செய்பவன் பெரும் புண்ணியம் செய்தவன் ஆகி விடுவான். அது போல கிருஷ்ணா மற்றும் பீமா நதிகள் கலக்கும் இடத்தில் குளிப்பவன் அறுபது ஜென்மங்கள் பிராமணனாகப் பிறப்பான் என்பது நியதி. அது போல   பாதாள கங்கா  நதியில் குளித்துவிட்டு மல்லிகர்ஜுனரை தரிசிக்க வேண்டும். அப்படி செய்வதின் மூலம் அடுத்த பிறவி எடுப்பதை தடுத்துக் கொள்ள முடியும். கிருஷ்ணா நதிக் கரையில் உள்ள இன்னுமொரு தீர்த்தம் பிலாவடி. அங்கு உள்ள அம்பிகையை கனகதுர்கா என்பார்கள். அவளையும் தரிசிக்க வேண்டும். அதன் அருகிலேயே அமராபுரம் என்ற மாபெரும் புனித இடத்தில் ஐந்து நதிகள் சங்கமிக்கின்றன.அங்கும் சென்று ஸ்நானம் செய்ய வேண்டும். தத்தாத்திரேயர் வசிக்கும் இடமான பீடாபுரத்தில் சப்த ரிஷிகளும் தபத்தில் உள்ளதாக ஐதீகம் உண்டு. ஆகவே அங்கும் சென்று தரிசனம் செய்தபின் அகோபலம் என்ற இடத்தில் உள்ள நரசிம்மரை சென்று அவரையும் தரிசனம் செய்ய வேண்டும்'. இப்படியாக  புனித இடங்கள் பற்றி  குருதேவர் கூறியதும், அவர் அறிவுரையை ஏற்றுக் கொண்ட சிஷ்யர்கள் யாத்திரைக்குக் கிளம்பிச் சென்றார்கள். ஆனால் குருதேவர் என்னை மட்டும் அவருடன் தங்கி இருந்து கொண்டு அவருக்கு பணிவிடை செய்ய அனுமதித்ததினால் நான் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பணிவிடை செய்தவாறு அங்கிருந்தேன்''என்று கூறி முடித்தார் சித்த முனிவர் (இத்துடன் அத்தியாயம்- 15 முடிவடைந்தது ) .
........தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>