Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Thirupathi Sree Venkateswarar - 25

$
0
0
சாந்திப்பிரியா 
 
லஷ்மி தேவி ஷேஷாசலத்தை அடைந்தபோது  ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அங்கு அவர்கள் நின்று கொண்டு இருந்த சமயத்தில் லஷ்மி கோபத்துடன் உள்ளே நுழைய  அவளைக் கண்டதும் ஸ்ரீனிவாசரும் பத்மாவதியும் நிலை குலைந்தார்கள். பத்மாவதியோ இவள் யார் நாம் உள்ள இடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் உள்ளே வந்த லஷ்மியோ ' பெண்ணே நீ யார் என் கணவருடன் சல்லாபித்துக் கொண்டு நிற்கிறாய்' என்று கோபமாகக் கேட்க, பத்மாவதியோ ' அடியே பெண்ணே...என்னய்யா யார் என்று கேட்கிறாய்? நான்தான் இவருடைய மனைவி. எங்களுக்கு இப்போதுதான் திருமணம் ஆகி உள்ளது. நீ என்னடா என்றால் என் கணவர் என்கிறாய். என்ன என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?' என்று முறைக்க இருவரும் நீ...நான் என வாதம் செய்து கொண்டு அடிக்காத குறையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட ஸ்ரீனிவாசர் அவர்கள் இருவருமே தனது மனைவிகளே என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்த முயல, இருவரும் அவருடன் சண்டை போடத் துவங்கினார்கள்.
ஆகவே அதை சமாளிக்க முடியாமல் போனவர் சற்று பின்னே சென்று  நின்று  அப்படியே அங்கு சிலையாக மாறி விட்டார். அவர் சிலையானதும் பெரிய  சப்தம் கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிய இருவரும் ஸ்ரீனிவாசர் சிலையாக நிற்பதைக் கண்டு அந்த சிலைக்கு அருகில் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலையில் இருந்த ஸ்ரீனிவாசரான விஷ்ணு கூறினார் ' அம்மா லஷ்மி, நான் இப்போது இங்கு திருமணம் செய்து கொண்டுள்ளது வேறு யாருமல்ல. பத்மாவதி  எனும் இவளும் உன் துணை அவதாரமே.  நீ பெற்றிருந்த ஒரு சாபத்தினால் நீ இரு அவதாரங்களை எடுத்து இங்கு வந்து என்னை அடைய வேண்டி இருந்தது.
 ஒரு அவதாரத்தில் நீ சீதையாகப் பிறந்து இருந்தபோது, உன்னுடைய பல்வேறு அவதாரங்களில் ஒன்றான வேதவதி என்பவள் வந்து உன்னைக் பாதுகாக்க வேண்டிய அவசியம்  வந்தது.    உன்னைப் பாதுகாத்துக் கொள்ள  நீயே  ஏற்படுத்தி இருந்த வேதவதி எனும்  துணை அவதாரம் குறித்து நீ அக்னிப் பிரவேசம் செய்தபோதுதான் உனக்கும் தெரிந்தது. அப்போது உன்னை சாட்சியாக வைத்துக் கொண்டு அல்லவா அந்த துணை அவதாரத்திடம் அவளை நான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் மணம் செய்து கொள்வதாக வாக்கு தந்தேன் என்பது உன் நினைவுக்கு இப்போது வருகிறதா? அதைக் காப்பாற்றவே இப்போது இவளை மணக்க வேண்டி இருந்தது' என்று கூறவும் லஷ்மியும் பத்மாவதியும் ஒருவருடன் ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு தாம் அனாவசியமாக சண்டை போட்டுக் கொண்டதற்கு விஷ்ணுவிடம் மன்னிப்பைக் கோரினார்கள்.

லஷ்மி தேவி 

அவர்களைப் பார்த்த விஷ்ணு லஷ்மியிடம் கூறினார் ' லஷ்மி,   கலியுகம் பிறக்கும் முன்னால் உன் மூலம் சில காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதினால்தான் இங்கு உன்னையும் வரவழைத்தேன்.  இங்கு நீ என்னுடன் லஷ்மியாக இருந்து கொண்டு மக்களுக்கு போக பாக்கியத்தை கொடுக்க வேண்டும். அதை அனுபவிப்பவர்கள் பல தவறான காரியங்களை செய்து கொண்டு இருந்தவண்ணம் அதற்கு பரிகாரம் தேட  என்னிடம் வேண்டும்போது பணமும் பொருளும் பல்வேறு பிரார்த்தனைகளையும் செய்வார்கள்.  அதைக் கொண்டு உன்னை மணப்பதற்காக நான் குபேரனிடம் இருந்து பெற்ற கடன்களை திரும்ப செலுத்திக் கொண்டே இருப்பேன். அவர்கள் பணமும் கொடுப்பார்கள். காணிக்கையாக பொருட்களையும், ஏன் தமது தலை முடியைக் கூட  கொடுப்பார்கள். நான் பெரும் அனைத்து காணிக்கைகளிலும் ஒரு பகுதியை வட்டியாகக் குபேரனிடம் கொடுப்பதாகக் கூறி உள்ளேன்.  அந்தக் கடன் தீர கலிகாலம் ஆகிவிடும். ஒருபுறத்தில் நீ செல்வத்தைக் கொடுக்கக் கொடுக்க, மக்கள் செய்யும் தவறுகளும் பெருகிக் கொண்டே போகும். அப்போது  தாம் செய்யும் தவறுகளுக்கு பயந்து அதற்கு பிராயசித்தம்  தேட இங்கு வந்து என்னை வணகுவார்கள். இங்கு வருபவர்களின் அனைத்து துயரங்களையும் நான் தீர்த்துக் கொண்டே இருப்பேன் என்பதினால் அப்படி தவறு செய்பவர்கள் இங்கு வந்து இந்த இடத்தையே பூவுலக வைகுண்டமாகக் கருதி அதே செல்வத்தை நம்மிடம் காணிக்கை என்ற பெயரில் திருப்பித் தருவார்கள் என்பது மட்டும் அல்ல, அவர்களின் கஷ்டங்கள் அதனால் குறைவதைக் கண்டு பூவுலகில் பக்தி பெருகும். அதற்கு நானும் நீயும் காரணமாக இருக்க ஸ்ரீனிவாச அவதாரம் எடுத்த காரணமும் நிறைவாகும். ஆகவே நீயும் வந்து என் வலது மார்பில் அமர்ந்து கொண்டு இந்த காரியத்தை செய். பத்மாவதி என் இடது மார்பில் அமர்ந்து இருப்பாள். இப்படியாக நீ மீண்டும் உன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு என்னை சுற்றி இரு புறத்திலும் இரு அவதாரங்களாகவே இருப்பாய்.

 வெங்கடாசலபதி 

அதே சமயத்தில் பக்தர்களைக் காப்பாற்ற  நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப பத்மாவதியும்  பத்மசாரோவரத்தில் சென்று ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொள்வாள்.  நான் தினமும் இரவு அங்கு வந்து உன்னோடு - உன் அவதாரத்தோடுதான் -  தங்கி இருப்பேன்.  மற்ற நேரத்தில் இங்கிருந்தபடி பக்தர்களுக்கு நீ கொடுக்கும் செல்வத்தை கொடுத்துக் கொண்டும், மீண்டும் அதை அவர்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டவண்ணம் அவர்களின் குறைகளை களைந்து கொண்டு இருப்பேன். இப்படியாக நீ தரும் செல்வம் உன்னிடமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டு மீண்டும் மக்களிடையே ஒரு முடிவற்றப் பயணமாக தொடர்ந்து கொண்டு செல்லும். இங்கு வரும் மக்கள் காணிக்கையாக எதை வேண்டுமானாலும் கொடுக்கக் கூறுவேன். ஏன் அவர்கள் தலை முடியைக் கூட காணிக்கையாகப் பெற்றுக் கொள்வேன். தலை முடியைக் கொடுப்பது ஒரு இழிவான செயல் அல்ல. மனிதர்களுடைய  அழகை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான உடல் பாகம் ஆகும் அது. ஒன்று தலை முடியை அழகு செய்யாமல் முனிவர்கள், ரிஷிகளைப் போல அதை அப்படியே விட்டு விட வேண்டும்.  அப்படி விட்டு விடப்படும்  தலை முடி அடையாக, சிக்காக மாறி  விட்டாலும் சரி அதற்க்கு முக்கியத்துவம் தராமல் அப்படியே விட்டு  விட வேண்டும். அல்லது கடவுளுக்கு முன் வரும்போது  அதை துறந்து விட்டு வர வேண்டும்.   ஆகவேதான்   தலை முடியை கொடுப்பதை ஒரு பக்தியை வெளிப்படுத்தும் சடங்காக  காட்டி என்னிடம் வரும் வேளையில் தமது  வெளித் தெரியும் அழகினையும் ஆசைகளையும்  அழித்துக் கொண்டு  தமது  பக்தியை மட்டும் வெளிப்படுத்தும் ஒரு  அடையாளமாக  அந்த சடங்கை செய்து கொண்டு வர வேண்டும் என்பதை காட்டும்  சடங்காக்கி ஆலய மகிமையை பிரபலப்படுத்திக் கொண்டு இருப்பேன். அந்த தலைமுடி கழித்தல் கூட பூவுலகில் உள்ள செல்வத்தை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் ஒரு கருவியாக அமையும். தேவி இதற்கு நீ உடன்பட வேண்டும்' என்று ஸ்ரீனிவாச அவதாரத்தில் இருந்த விஷ்ணு கூறவும், அதைக் கேட்ட பத்மாவதியான லஷ்மி தேவியும் மேல்மங்காபுரத்தில்  உள்ள ஆலயத்தில் சென்று அங்கு சிலையாக அமர்ந்தாள். அதனால்தான் ஸ்ரீனிவாசப் பெருமான் மேல்மங்காபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் திரும்புகிறார்.

 பத்மாவதி அம்மையார் 
இதற்கு இடையில் மகனைத் தேடி வந்த வகுளாதேவியை தனது கழுத்தில் தொங்கும் துளசி  மாலையாக மாற்றிக் கொண்டார் ஸ்ரீனிவாசர். தனது சகோதரர் கோவிந்தராஜரையும் தன்னுடன் இருக்கும் வகையில் அதே இடத்தில் கீழ் திருப்பதியில் சென்று வசிக்குமாறு கூறினார். இப்படியாக விஷ்ணுபிரான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் திருப்பதியில் தனது மனைவி லஷ்மியுடன் பல்வேறு ரூபங்களில் இருந்து கொண்டு கலியுகத்தில் மக்களைக் காத்து வருகிறார்.


வராஹா ஸ்வாமி 

ஏழு மலைகளைக் கொண்ட திருப்பதி மலை முழுவதுமே வராஹ ஸ்வாமியின் கட்டுப்பாட்டில் உள்ளதினால் மலையில் ஏறி வெங்கடாசலபதியைக் காண்பவர்கள் முதலில் வராஹா ஸ்வாமியை  தரிசித்த  பின்னரே மேலே செல்ல வேண்டும்.  அதற்குக் காரணம் அங்கு வசிக்க திருப்பதியான் வந்தபோது அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். அதன்படி அவருக்கு அங்கு தங்க வாடகை கொடுக்க வேண்டும். அதற்கு இணையாக முதலில் வராஹ ஸ்வாமிக்கு  நெய்வித்தியம் செய்த பின்னரே வெங்கடாசலபதியாக உள்ள தனக்கு நெய்வித்தியம் செய்வார்கள்  என்பதே வாடகை பணம்  ஆகும்.  அது போலவே திருச்சானூரில் குடி அமர்ந்துள்ள பத்மாவதியை தரிசிக்காமல் திருப்பதிக்கு மட்டும் சென்று விட்டு வந்தால் வெங்கடாசலபதியின் பூரண அருள் கிடைக்காது.
திருப்பதி மலையைக் கட்டிய விவரம் சரிவரத் தெரியவில்லை அதை முதலில் கட்டியவர் சோழ  மன்னனான தொண்டைமான் என்பது சரியான செய்தி அதற்குப் பிறகு பல மன்னர்களும் விஜயநகர  மன்னர்கள் வரை அதை மேலும் கட்டி சிறப்பித்து உள்ளார்கள் திருப்பதி வெங்கடேஸ்வரர்  ஏழு மலைகளுக்கு உள்ளே அமைந்துள்ளதினால் அவரை ஏழு மலையான் என்று அழைக்கிறார்கள். அவரை வேண்டித் துதிப்பவர்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை.
 ஸ்ரீனிவாசர் மகிமையான அவருடைய ஜீவ சரித்திரம் நிறைவுற்றது 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>