Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 20

$
0
0
 

அத்தியாயம் - 11

நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''ஸ்ரீ வல்லபாவின் அவதாரத்துடன்  தத்தாத்திரேயரின் அவதாரம் நின்று விட்டதா, அவர் செய்த மற்ற மகிமைகள் உள்ளனவா என்பதை எல்லாம் எனக்கு விளக்குவீர்களா ''என பவ்யமாக சித்த முனிவரிடம் கேட்டபோது அவர் கூறலானார்.

 ''நமத்ஹரகா, தற்கொலை செய்து கொள்ள முயன்ற அம்பிகா என்ற பெண்மணிக்கு ஆறுதல் கூறி அவளுக்கு நல்வாழ்வை ஸ்ரீ பாத வல்லபா  தந்தார் என்று நான் முன்னரே  கூறினேன் அல்லவா, அந்தப் பெண்மணி அம்பிகாவும் மனம் அமைதி அடைந்து தனது மகனுடன் கிளம்பிச் சென்றாள் . அவள் ஸ்ரீ பாத வல்லபாவின் அறிவுரைப்படி சனிப்பிரதோஷ தினங்களில் தவறாமல் ஆலயம் சென்று சிவபெருமானை வழிபட்டு வர அடுத்த ஜென்மத்தில் கராஞ்சா எனும் இடத்தில் அம்பா பவானி என்ற பெயரில் ஒரு பிறப்பை எடுத்தாள். அவளுக்கு திருமணம் ஆயிற்று. பூர்வ ஜென்ம தொடர்பினால் அவள் தனது கணவருடன் சேர்ந்தே சனி திரயோதசி  விரதத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தாள். சில நாட்களிலேயே அவர்களுக்கு  ஒரு மகன் பிறந்தார். ஆனால் பிறந்தது முதலேயே அந்தக் குழந்தை சாதாரணக் குழந்தையாக இல்லை. தாயின் வயிற்றில் இருந்து அது வெளி வந்ததுமே அதிசயமாக 'ஓம்'என்று கூறிக் கொண்டே வெளி வந்தது. அதைக் கண்ட குழந்தையின் பெற்றோர்கள் பண்டிதர்களை அழைத்து அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள் உடனடியாக கிரக நிலைகளைப் பார்த்து அதன் ஜாதகத்தைக் கணித்தார்கள். அந்தக் குழந்தையின் ஜாதகத்தின்படி அது தெய்வாம்சம் பொருந்தியக் குழந்தை என்றும், பிற்காலத்தில் மாபெரும் சித்தப் புருஷனாக மாறும் என்றும் உலகிலேயே மாபெரும் பாண்டித்தியம் பெற்ற மகானாக விளங்குவார் என்றும், அவருக்கு பெரும் புகழும் கிடைத்து பலரும் அவரை வழிபடுவார்கள் என்றும் ஜாதகத்தில்  காணப்படுவதாக கூற அதைக் கேட்டு அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மனமகிழ்ந்து போனார்கள். பெயர் சூட்டும் நாளன்று அந்தக் குழந்தைக்கு நரஹரி என்று நாமகரணம் செய்தனர். 

குழந்தைப் பருவத்தில் இருந்த நரஹரிக்கு பால் கொடுக்க அம்பா பவானியின் மார்பில் சிறிதளவும் பால் சுரக்கவில்லை. ஆகவே குழந்தையை பட்டினியா போட முடியும் என்பதால் உடனடியாக  அக்கம் பக்கத்தில் விசாரித்து பால் கொடுக்கும் வாடகைத் தாய் யாரேனும் இருப்பாளா எனத் தேடி அழைத்து வருமாறு அவள் தனது கணவரிடம் கூற அதைக்  மடியில் படுத்து இருந்தக் குழந்தை நரஹரி கேட்டது. உடனடியாக அதை புரிந்து கொண்டது போல அது தனது தாயாரின் ஸ்தனங்களை தன்  பிஞ்சுக் கையினால் தொட்டது. அவ்வளவுதான் அம்பிகா பவானியின் மார்பில் இருந்து பீறிட்டுக் கொண்டு பால் சுரக்கத் துவங்கியது. பிறந்த பிஞ்சுக் குழந்தை எப்படி கையை நீட்டி மார்பை தொட்டது என்ற அதிசயம் பெற்றோர்களுக்கு விளங்கவே இல்லை! அந்த மகிமையை கண்டு பிரமித்து நின்றனர் அந்தக் குழந்தையின் பெற்றோர்கள்.

குழந்தை வளர்ந்து பெரியவனாயிற்று. ஆனால் அதன் வாயில் இருந்து 'ஓம்'என்ற ஒரு வார்த்தையைத் தவிற வேறு எந்த வார்த்தையும் வெளி வரவில்லை. பெற்றோர்கள்  எத்தனை முயன்றும்  சிறுவன் நரஹரி   'ஓம்'என்று கூறுவதைத் தவிர வேறு எதையும் பேசவில்லை. அந்தக் குழந்தை ஊமையோ என நினைத்து வைத்தியரிடம் காட்டியும் அவர் சிறுவன் ஆரோக்கியமான சிறுவனே  என்றும்  அந்த சிறுவனால் மற்றவர்களைப் போல பேசவும் முடியும் என்று கூறி விட்டதினால் அந்த சிறுவனுக்கு வேறு  வைத்தியம் செய்ய எண்ணியதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் அதன் பின்னரும் நரஹரி  'ஓம்'என்ற வார்த்தையைத் தவிற வேறு எதையும் பேசவில்லை.  ஏழு வயதாயிற்று. பிராமணக் குல வழக்கப்படி சிறுவனுக்கு உபனயனம் செய்ய நினைத்தார்கள். ஆனால் ஊமைக்கு எப்படி உபனயனம் செய்வது? நமக்கு இப்படி ஒரு ஊமைக் குழந்தை  பிறக்க என்ன காரணம், நாம் என்ன பாபம் செய்தோம் என்று அந்த சிறுவனது பெற்றோர் கவலை கொண்டார்கள்.

ஒருநாள் எப்போதும் போல அவர்கள் வருத்தத்துடன் அதைக் குறித்துப் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த நரஹரி அவர்கள் முன் சென்று  அவர்கள் பக்கத்தில் கிடந்த ஒரு இரும்புக் கம்பியை தன் கையில் எடுத்தார்.  அதை  அவர் தன் கரங்களினால் தொட்டதுமே இரும்புக் கம்பி தங்கமாக மாறியது.  இது உண்மையிலேயே தங்கம்தானா என வியந்து போய் அவர்கள் நரஹரியை  பார்க்க,  அவர் இன்னொரு இரும்புத் துண்டை தன் கையில் எடுக்க அதுவும் தங்கமாக மாறியது. அதைக் கண்டவர்கள் நரஹரி குழந்தையா அல்லது தெய்வமா என புரியாது வியந்து நின்றனர். ஆகவே குழம்பிப் போன அவர்கள் அந்த சிறுவனிடமே கேட்டார்கள் 'நரஹரி  நீ உண்மையிலேயே யார்? நீ ஏன் 'ஓம்'என்ற ஒரு சொல்லைத்  தவிற வேறு எதையுமே பேச மறுக்கிறாய் ? அதன் காரணம் என்ன?'.  அனால் நரஹரியோ அவர்களிடம் பதில் ஒன்றும் கூறாமல் சைகை மூலம் தனக்கு கையில் கங்கணம் கட்டி விட்டு உபனயனம் மற்றும் பிரும்மோபதேசம் செய்யும்படி கூறினார். அதற்குப் பிறகு தன்னுடைய மௌனத்தைக்  கலைத்துக் கொள்வதாக மீண்டும் சைகை மூலமே கூறினார்.

ஆகவே  வாரமே ஏற்பாடுகளை செய்து அனைவரையும் அழைத்து வீட்டில் சிறுவனுக்கு குளிப்பாட்டிய பின் விநாயக பூஜை, புண்ணியாவசனம் போன்றவற்றை செய்த பின் கையில் கங்கணம் கட்டி பூணூல் மாட்டி பிரும்மோபதேசமும் செய்தனர். சம்பிரதாயமாக நரஹரி  தாயாரிடம் சென்று 'பவதி பிட்சாம் தேகி'என்று கேட்ட பின் தாயார் அவனுக்கு மூன்று முறை பிட்சைப் போட வேண்டும். அதுவே நல்ல தருமணம் என நினைத்த நரஹரியின் தாயாரும் கண்களில்  நீர் கொட்டியவாறு இருந்தபடி அவரிடம் கூறினாள்  'நரஹரி  நீ எனக்கு வந்தனம் செய்த பின் என்னிடம் வாயைத் திறந்து பிட்சை  கேட்டால் மட்டுமே நான் பிட்சைத் தருவேன்'.

அவ்வளவுதான், அதுவரை வாயைத் திறக்காமல் இருந்த நரஹரி ரிக் வேதத்தில் இருந்து  பல்வேறு மந்திரங்களை  ஓதிய பின்னர் 'பவதி பிட்சாம் தேகி'என தாயிடம் கேட்டார். அவர்கள் வாயடைத்து நிற்கையில் இரண்டாம் முறை பிட்ஷைக் கேட்கையில் யஜுர் வேதத்தில் இருந்தும் மூன்றாம் முறை பிட்ஷைக் கேட்டபோது சாமவேத மந்திரம் ஓதி  பிட்சைக் கேட்டார். அங்கு கூடி இருந்த அனைவருமே திக்கிட்டு நின்றனர். அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. நாம் காண்பது நிஜமா இல்லை கனவா என்றும் புரியவில்லை. இத்தனை நாளாக மெளனமாக, ஊமையாகவும் இருந்தவர்  இப்போது எப்படி இப்படி பேசுகிறார், அவர் இத்தனை வேதங்களையும் எங்கிருந்து கற்றார் என்று புரியாமல் வியந்துபோய்  பார்த்தனர். ஆனால் அவருடைய பெற்றோர்களைத்  தவிற வேறு எவருக்கும் அவர் ஒரு தெய்வப் பிறவி என்பது தெரியாது, அதை அவர்களால் வெளிப்படையாகவும்  கூற முடியாது என்ற நிலைமை.

காலம் சுயன்றது. ஒருநாள் நரஹரி தனது தாயாரிடம் சென்று கூறினார் 'அம்மா, நான் உன்னிடம் உபநயனம் செய்து  முடிந்ததும் பிட்ஷைக் கேட்டேன். அதுவே என் வாழ்கையின் முதல் கட்டதின் ஆரம்பம்.  இனி நான் பிறந்த காரணத்திற்கான  கடமையை செய்ய வேண்டும்.  நான் எடுத்த பிட்ஷையை உலக நன்மைக்காகவே எடுக்க ஆரம்பித்தேன் என்பதினால் அதை வீணடிக்க விரும்பவில்லை. ஆகவே நான் பிரும்மச்சரியத்தை மேற்கொண்டு சன்யாசி ஆகி உலகெங்கும் சுற்றிக் கொண்டு உலக மக்களின் நன்மைக்காக பிட்ஷை எடுத்தபடி  இருந்து வாழ வேண்டும்.  ஆகவே நான் இங்கிருந்துக் கிளம்பி தீர்த்த யாத்திரை சென்று பிட்ஷை எடுத்தபடி உலக மக்களின் நன்மைக்காக வாழ நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்'. அதைக் கேட்ட அவருடைய தாயார் அப்படியே மயங்கி விழுந்தாள் .

மயக்கம் தெளிந்து எழுந்த தாயாரை நரஹரி தேற்றினார்.  அவருடைய தாயார் கூறினாள் 'மகனே, நீ பிறந்தது முதல் ஊமைப் போல பேசாமல் இருந்து விட்டதினால் ஒரு ஊமை நமக்கு மகனாகப் பிறந்து விட்டதோ என எண்ணிய நேரத்தில் உபனயனம் செய்த பின் உண்மையை உணர வைத்தாய். என்னதான் நீ தெய்வப் பிறவியாக எங்கள் வயிற்றில் வெளி வந்தாலும் எங்களுடைய மகனான நீ  சன்யாசத்தை ஏற்கப் போகின்றேன் என்று கூறினால் அதை எப்படி தாங்கிக் கொள்வது என்று புரியவில்லை. எங்கள் நிலையை எண்ணிப் பார். வயதான காலத்தில் உன்னைத் தவிர எங்களைக் காப்பாற்ற வேறு யார் இருப்பார்கள் ? 'என்று கதறிய தாயாரை சமாதானப்படுத்தினார் நரஹரி.

அவர் சற்றும் பதட்டப்படாமல் கூறலானார் 'தாயே நான் தர்மத்தை நிலைநாட்டவே இந்த பூமியில் பிறந்தேன். நான் இங்கிருந்து சென்று விட்டால் என்ன? நான் சென்ற பின் உங்களுக்கு நான்கு மகன்கள் பிறப்பார்கள். நல்ல நிலையில் அவர்கள் இருப்பார்கள். உங்களுக்கு எந்தக் குறையையும் வைக்க மாட்டார்கள். ஆகவே அனாவசியமாக மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்'. இப்படியாகக் கூறியவர் தனது தாயாரின் தலையில் கையை வைத்ததும் அவளுக்கு பூர்வ ஜென்ம நினைவு அத்தனையும் மனதில் வந்தது. அந்த ஜென்மத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது ஸ்ரீ பாத வல்லபா வந்து தம்மைக் காப்பாற்றி, தானே அவளுடைய அடுத்த ஜென்மத்தில் மகனாகப் பிறப்பதாக அவளுக்கு உறுதி கூறியது என அனைத்தும் நினைவில் வந்து மறைந்தன. இப்போது தனக்குப்  பிறந்துள்ளது அந்த ஸ்ரீ பாத வல்லபா என்பது புரிந்ததும் அவளிடம் நரஹரி 'தான் யார் என்பதை தான் தெரியப்படுத்தும்வரை அவள் அதை இரகசியமாகவே வைத்துக் கொண்டு இருக்க வேண்டும்'என ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிச் செல்லும் முன்னர் தன்னுடைய தாயார் கேட்ட அனைத்து  சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தந்து தத்வோபதேசம் செய்தப் பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றார். (இத்துடன் அத்தியாயம் -11 முடிவடைந்தது )
..................தொடரும்

 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>