Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Guru Charithram - 7

$
0
0
 

.............அத்தியாயம் -3 (i)

மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு  சென்ற  துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாமல் தாமதப்படுத்திக் கொண்டு இருக்க அரண்மனையிலோ இன்னும் ஏன்  முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.

தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி கால நேரம் முடிவதற்கு முன்னரே தவறாமல் தன் விரதத்தை முடித்துக் கொண்டு வந்திருந்த மன்னன் சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை என்பதால் விரதத்தை எப்படி முடிப்பது என்பது தெரியாமல் குழம்பினான். வீட்டுக்கு வந்த விருந்தாளி அதுவும் ஒரு மாமுனிவர்  சாப்பிட வந்தால்  அவர் வருவதற்கு முன் தான் உண்டு விட்டு அமர்ந்திருப்பது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி கால நேரம் கடக்கும் முன் முடிக்க வேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வருவதற்கு முன்னர் உணவு உண்ணக் கூடாது.  என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு உண்பதற்கு சமம் அல்ல என்பதினால் சிறிது தண்ணீரை அருந்திவிட்டு தனது விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை.... தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாக கருத முடியாது என்பதினால் அதை செய்த பின் முனிவர் வரும்வரை காத்திருந்தான்.

தனது தினக் கடமைகளை முடித்துக் கொண்ட துர்வாச முனிவர்  அரண்மனைக்கு வந்தார். வந்தவர் நேரமாகி விட்டதினால் மன்னன் தனது விரதத்தை முடித்துக் கொண்டு விட்டதை தெரிந்து கொண்டார்.  தன்னுடைய சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். துவாதசி கால நேரம் முடியும் முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டது  உணவு உண்பதற்கு  சமமாகாது என்ற தர்ம சாஸ்திரம் அவருக்கு தெரியும். ஆனாலும் அவருடைய முன் கோபம் அவரை மீறி வெளி வந்தது.

அம்பாரிஸாவை பார்த்துக் கோபமாக  கத்தினார் ''நான் வருவதற்கு  முன்னரே  நீ உண்டுவிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டாய். நீ செய்யக் கூடாத பாவத்தை செய்து விட்டாய். இதோ பிடி சாபம்''என கத்தியவாறே அந்த அரசனுக்கு சாபம் கொடுக்க கையை உயர்த்தினார். மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவை விஷ்ணுவினால் மட்டுமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தவன்  முனிவர் சாபம் தரத் துவங்கும் முன்பே மனதில் விஷ்ணுவை வேண்டிக் கொண்டு  தியானம் செய்யத் துவங்கினார்.  துர்வாசம் துவாதசி தினத்தன்று அங்கு செல்லும்போதே அவர் எதோ தீய எண்ணத்துடன் செல்கிறார் என்பதை அறிந்து கொண்டிருந்த விஷ்ணு பகவானும் மேலிருந்தவாறு அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனால்தான் மன்னன் தியானம் செய்யத் துவங்கியதுமே முனிவருக்கும் மன்னனுக்கும் இடையில் வந்து தானே நின்று கொண்டு விட்டார்.

துர்வாச முனிவர் சாபம் தரும் முன் தன்னை காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அம்பாரிஸா விஷ்ணுவை கெஞ்சத் துவங்க துர்வாச முனிவரை நோக்கி விஷ்ணு பகவான் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிஸா  என்னுடைய தூய பக்தன். அவனை நீங்கள் வேண்டும் என்றே அவமானப்படுத்த நினைத்ததினால் நீங்கள் கொடுக்கும் எந்த சாபமும் அவனிடம் போய் சேராது. அது என்னையே அது வந்தடையும்.  என்னிடம் தஞ்சம் அடைந்த என் பக்தர்களை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவர்களைக் காப்பது என் கடமை. ஆகவே நீங்கள் நீங்கள் இந்த மன்னனுக்கு என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்''.

அதைக் கேட்ட துர்வாச முனிவருக்கு தான் செய்த தவறும் புரிந்தது. உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை தன் மூலம் வந்திருக்கின்றது என்பதும் புரிந்தது. ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்ட முனிவர் மனித குலத்தின் நலனை மனதில்  கொண்டு விஷ்ணு பகவானுக்கு தான் கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே அமைவதாக இருக்கட்டும் என எண்ணி தான் உயர்த்திய கையினால் ''இப்படி என்னை சங்கடத்தில் ஆழ்த்தி என்னை மற்றவர்கள் முன்  தலைகுனிய வைத்ததினால் நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்க வேண்டும்''என்று வேண்டும் என்றே கூறி விஷ்ணுவிற்கு சாபம் கொடுத்தார்.  அப்படி பொது நன்மையை மனதில் கொண்ட வண்ணம் துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.

பொது நன்மையை மனதில் கொண்டு துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாக விஷ்ணுவும் பூமியில் பல அவதாரங்கள்  எடுத்து புவியைக் காக்க நேரிட்டது. அவர் மொத்தம்  பத்து அவதாரங்களை எடுத்தார். அவை அனைத்தும் புராணங்களில் விவரமாக கூறப்பட்டு உள்ளன. அந்த பத்து அவதாரங்களை தவிர விஷ்ணு பகவான் எடுத்த மற்ற அவதாரங்களை குறித்து பிரும்ம வித்யாவை கற்று அறிந்திருந்த பண்டிதர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வித்தையை கற்றுக் கொள்ளும் பண்டிதர்கள் மகா புருஷர்களாக இருப்பார்கள். அதை எளிதில் கற்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல  அனைவரும் கூற கற்றுக் கொள்ள முடியாத பிரும்ம வித்தை அது.  அதில் உள்ள ஒரு கதையை உனக்குக் கூறுகிறேன். கேள் என்று நமத்ஹரகாவிடம் அந்த சித்த முனிவர் கூறினார் (இத்துடன் அத்தியாயம்-3 முடிந்தது).
..........தொடரும்

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>