Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Siththar Gurusaami ammaiyaar

$
0
0

புதுவையில் உள்ள சித்தர் சமாதிகளில் குருசாமி அம்மையார் எனும் பெண் சித்தரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் மற்றும் அவருடைய வாழ்கைக் காலம் போன்றவை எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. அவருக்கு குருசாமி அம்மையார் என்று பெயர் வந்ததின் காரணமும் தெரியவில்லை.
அவர் எழுதி உள்ளதாக  கூறப்படும் ஒரு உயிலில் அவர் குருசாமி அம்மையார் என்று கையெழுத்து போட்டு உள்ளதினால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். அவர் காலம் 1800 ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என்கிறார்கள். அவர் புதுவைக்கு வந்த காலத்தில் அந்த மானிலம் பிரான்ஸ் நாட்டவர் ஆட்சியில் இருந்தது. அவர் புதுவையில் வந்து தங்கி இருந்து அற்புதங்களை நிகழ்த்தி சமாதியும் அடைந்துள்ளார் என்ற அளவில் மட்டுமே அவரைக் குறித்து அனைவரும் அறிந்துள்ளார்கள்.

இந்த பெண் சித்தரின் சமாதி ஆலயம் கண்டமங்கலம் மாவட்டத்தில் விழுப்புரம் செல்லும் நெடும்சாலையில் அரியூர் எனும் சிற்றூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்க கட்டிடத்தில் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மிளகாயை அரைத்து அதை தண்ணீருடன் கலந்து அந்த தண்ணீரை அந்த அம்மையாரின் சிலைக்கு அபிஷேகம் செய்வார்களாம். அதற்கான காரணக் கதையும் கீழே உள்ளது.

குருசாமி அம்மையார் சமாதி ஆலயம் உள்ள இடம் பாண்டி மற்றும் தமிழ்நாட்டின் எல்லையில் உள்ளது. ஒருவிதத்தில் பார்த்தால் இந்த ஜீவ சமாதி ஆலயம் தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லை போலவே இருந்து உள்ளது. பாண்டிச்சேரி அந்த காலத்தில் பிரெஞ்ச் நாட்டவர் ஆட்சியில் இருந்ததினால் இந்திய நாட்டை சேர்ந்த சாமியார்கள் அதிக விளம்பரம் பெற்றதில்லை. அப்படிப்பட்ட தெய்வீகப் பிறவிகளை இந்து மதத்தினர் வெளிப்படையாக ஆராதிக்க முடியாமல் மத கட்டுப்பாடுகள் தடுத்து வந்துள்ளன என்பதே அதன் காரணம்.  நாடு விடுதலைப் பெற வேண்டும் என்பதற்காக புரட்சியாளர்கள் பல்வேறு உருவங்களில் வந்து அரசாங்கத்துக்கு தொல்லைகளை தந்து வந்ததினால் சாமியார்கள் மற்றும் சாதுக்கள்  என யாரையுமே மக்கள் கூட்டமாக சென்று பார்க்க முடியாத நிலையை அன்றைய வெளிநாட்டு அரசு தோற்றுவித்து  இருந்தது.

குருசாமி அம்மையார் பாண்டிச்சேரிக்கு வந்து வாழ்ந்திருந்த காலத்தில் இந்தியா ஆங்கிலேய நாட்டவர் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களை எதிர்த்து இந்தியர்கள் ஆங்காங்கே புரட்சி செய்து கொண்டு இருந்தார்கள். தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்திருக்க பாண்டிச்சேரியோ பிரெஞ்ச் நாட்டவர் ஆதிக்கத்தில் இருந்தது. ஆகவே பிரெஞ்ச் நாட்டவரின் காவல் துறையினரும் ஆங்கிலேய அரசின் காவல் துறையினரும் அன்றைய மதராஸ் எனப்பட்ட இடத்திலும் மதராசை தொட்டபடி இருந்த பாண்டிச்சேரியின் எல்லை பகுதியாக இருந்த கண்டமங்கலத்திலும் காவலில் இருந்ததினால் இந்த ஆலயத்துக்கு வருவதற்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் பயந்திருந்தார்கள் என்றும் கூடக் கூறலாம்.

இந்த நிலைமையின் பின்னணியில் குருசாமி அம்மையார் பாண்டிச்சேரிக்கு வந்துள்ளார்கள். வந்தவர் உள்ளூர் மக்களைப் போன்ற ஜாடைகளைக் கொண்டவராக இல்லாமல் இந்தியாவின் வடநாட்டை சேர்ந்தவர் ஒருவரைப் போல வெளித் தோற்றத்தைக் கொண்டு இருந்ததினால் அவரை இந்தியாவின் வட பகுதியில் இருந்து அங்கு வந்துள்ள ஒருவர் என்றே நினைத்து இருந்துள்ளார்கள். அந்த அம்மையாரும் கண்டமங்கலத்துக்கு வந்தப் பின் அங்கேயே தங்கி இருந்து கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். தினக் கடமைகளையும், உணவையும் மறந்து, தன்னிலையையும் மறந்து வனப்பகுதியாக புற்களும், அடர்ந்த மரங்களும் சூழ்ந்து இருந்த ஒரு மரத்தடியில் நாள் முழுவதும் அமர்ந்திருந்தார்.

அவர் முகத்தில் ஒரு தெய்வீகக் களை இருந்துள்ளது. ஆகவே சாது போலவே தோற்றம் தந்து கொண்டிருந்த அந்த அம்மையாரிடம் அந்தப் பக்கத்தில் வந்து போகும் மக்கள் சென்று வணங்குவார்களாம். அந்த அம்மையாரும் அவர்களிடம் நலம் விசாரிப்பது உண்டு. நாளடைவில் மூதாட்டியாக உள்ளாரே என்று தம் வீட்டினரைப் போலவே கருதிக் கொண்டு அந்த அம்மையாரிடம் அந்தப் பக்கங்களில் செல்லும் சிலர் தமது மனக் குறைகளை இறக்கி வைப்பார்களாம். அவரிடம் தம் மனக் குறைகளைக் கூறியதும் அவரும் 'கவலைப்படாதே அனைத்தும் சரியாகிவிடும்'என்பதுபோல ஆசிர்வாதம் செய்து அனுப்புவார்.  அப்படி அங்கு வந்து அந்த அம்மையாரிடம் தமது தீராத மனக் குறைகளை கூறிவிட்டு சென்றதும், அவர்களது தீர முடியாத குறைகள் கூட விலகத் துவங்குமாம். அதனால் அந்த அம்மையார் ஒரு தெய்வப் பிறவி என எண்ணி அவரிடம் மக்கள் வரத் துவங்கினார்கள்.

மெல்ல மெல்ல அவரிடம் வந்து தம் பிரச்சனைகளைக் கூறிவந்த மக்களின் கூட்டம் அதிகரிக்க அந்த சித்தர் பெண்மணியும் அக்கம் பக்கங்களில் பிரபலமாகத் துவங்கினாராம். தம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தந்த அந்த அம்மையாருக்கு பலர் நிலங்களையும் தமது சொத்தின் ஒரு பாகத்தையும் கூட தானமாகக் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த சொத்துக்கள் எதையும் அந்த அம்மையார் தனக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லையாம். அதை எப்படி நிர்வாகிக்க வேண்டும் என அவர் உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளதான  (படத்தில் காணப்படுவது அந்த அம்மையார் எழுதிய உயிலின் பிரதி என எனக்கு ஒருவர் அனுப்பி வைத்திருந்த போடோ காப்பி ஆகும்)  செய்தியும் உள்ளது.   
  
அந்த சித்தப் பெண்மணியின் நடவடிக்கைகளும் விஜித்திரமாகவே இருந்தனவாம். முக்கியமாக பௌர்ணமி தினங்களில் அந்த அம்மையார் தன உடல் முழுவதும் அரைத்த மிளகாய் விழுதை தடவிக்கொண்டு அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்த கிணற்றில் குளிப்பது உண்டாம். அவர் கிணற்றில் இறங்கிக் குளிப்பதை வேறு யாரும் பார்க்கக் கூடாது என்றும் அப்படி அந்த விதியை மீறி அவர் குளிப்பதைப் பார்த்துவிட்டால் அந்த அம்மையாரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் ஒரு நம்பிக்கை இருந்தது. பல பெண்மணிகள் நான் நீ எனப் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த அம்மையாருக்கு அரைத்த மிளகாயை உடம்பெல்லாம் தடவி விடுவார்களாம். அப்படி செய்தால் அவர்களது பல குறைகள் விலகி அவர்கள் வேண்டியவை பலிக்கும் என்று நம்பினார்கள்.

குருசாமி அம்மையார்

ஒருமுறை அப்படி அந்த அம்மையார் குளிப்பதை அறிந்திடாமல் ஒரு பெண்மணி அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அந்த கிணறு முழுவதுமே தலை முடியினால் மூடப்பட்டு உள்ளது போலாக காணப்பட்டது என்றும் ஒரு செய்தி உள்ளது. கிணற்றில் இறங்க   படிகள் கூட சரியாக இல்லாத நிலையில் எப்படி அந்த அம்மையார் கிணற்றில் குளித்து விட்டு மேலே வருவார் என்பது மர்மமாகவே இருந்தாலும் சித்தர்களால் எதையும் செய்ய முடியும், ஏன் வானில் கூட பறவைகளைப் போலப்  பறப்பார்கள் என்ற உண்மை நிலை உள்ளபோது அது ஆச்சர்யப்படக் கூடிய செய்தி அல்ல. ஆனால் அந்த காலங்களில் அது அதிசயமாகவே பார்க்கப்பட்டது.   அந்தக் கிணறு இன்று சமரச சன்மார்கக் கட்டிடத்தில் பாழடைந்த நிலையில் காணப்படுகிறதாம். பாண்டியில் வில்லியனூரை சேர்ந்த குருசாமி அம்மையாருடைய  பக்தர் ஒருவர் கொடுத்த தகவல்கள் பெயரில் இவற்றை எழுதி உள்ளேன். அம்மையார் பல இடங்களுக்கும் கால் நடையாகவே பயணம் செய்வாராம்.

அந்த அம்மையாரின் ஜீவசமாதியும் செடிகளும், முட்களும் பரவிக் கிடந்த அடர்ந்த செடிகளின் இடையே மூடப்பட்டுக் கிடந்தது உள்ளது. பல காலம் அது வெளியிலேயே தெரியாமல் இருந்தபோது, அந்த அன்னையின் பக்தரான நடராஜ ஸ்வாமிகள் என்பவரால் அவர் ஜீவசமாதி அடைந்திருந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. பல காலம் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு ஆன்மீக நடைப் பயணத்தில் ஈடு பட்டுக் கொண்டு இருந்த துறவியான நடராஜ ஸ்வாமிகளுக்கு ஒருமுறை ஒரு குரல் அழைத்து அவரை குருசாமி ஆலயத்துக்குப் போகுமாறு ஆணையிட்டது. அப்போது நடராஜ ஸ்வாமிகள் புதுவை மானிலத்தில் இருந்தார். அவை அனைத்தும் அப்போது ஆங்கிலேயர் வசம் இருந்த பூமிகளாகும். சாமியார், சாதுக்களை அவர்கள் மதிக்காத காலம். அதனால் இந்துக்கள் தாம் வணங்கி வந்திருந்த சாமியார்களையும் சாதுக்களையும் அதிக விளம்பரம் இல்லாமல் சந்தித்து வந்திருந்தக் காலம் ஆகும். அந்த நேரத்தில்தான் நடராஜ ஸ்வாமிகளுக்குக் கிடைத்த அந்தக் குரலின் ஆணையை ஏற்று அந்தக் குரல் கொடுத்த செய்தியின் அடிப்படையில் அரியூரில் இருந்த ஜீவசமாதி இடத்தைக் கண்டு பிடித்தார். அங்கு சென்றதும் மீண்டும் அந்தக் குரல் தான் அங்கேயே சமாதி உள்ளதாகக் கூற நடராஜ ஸ்வாமிகளும் அந்த சமிக்கையைப் புரிந்து கொண்டு புதர்களை அகற்றிப் பார்த்தபோது அதற்குள் இருந்த ஜீவசமாதி தெரிந்தது. அதைக் கண்டு பிடித்ததும் முதலில் அவர் அங்கு சிறு சமாதியை அந்த அம்மையாருக்காக எழுப்பினாராம்.  இந்த சமாதி ஆலயம் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

அதன் பின் மெல்ல மெல்ல அன்னையாரின் புகழும் பெருமையும் வளரத் துவங்கியது.   அன்னையின் ஆலயமும் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. இன்று அந்த ஆலயத்தின் மேம்பாடுகளை வள்ளலார் ஆன்மிகப் பேரவை  கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின்  சமாதி ஆலயத்துக்கு வந்து பல பெண்மணிகள் தமது குடும்பத்தின் வேண்டுகோள்கள் நிறைவேற குருசாமி அம்மையாரின் (மூலவர்) விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது.

ஆலயத்தில் குருசாமி அம்மையாரின்
மூலவர் சிலை 
 
பல பெண் பக்தர்கள் பௌர்ணமி தினங்களில் வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத் தருவதை அந்த அம்மையாருக்கு ஒரு சேவையாகவே செய்கிறார்களாம். வியாழக்கிழமைகளில் பால், எலுமிச்சம்பழச் சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். வள்ளலார் ஆன்மிகப் பேரவையை சார்ந்த  குழுவினர் பக்தர்கள் தரும் காணிக்கையை ஏற்று அந்த சமாதி ஆலயத்தில் பௌர்ணமி மற்றும் விஷேஷ தினங்களில் அன்னதானம் செய்கிறார்களாம்.  

(பின் குறிப்பு:-இந்த கட்டுரையில் காணப்படும் அனைத்து செய்திகளும் எனக்கு அந்த அம்மையாரின் ஒரு பக்தர் மூலம் நான் கேட்டறிந்த வாய்வழிச் செய்தி ஆகும். அந்த பக்தர் நல்ல நிலையில் உள்ளவர்.  ஒரு பள்ளி ஆசிரியராக உள்ளார். அவரிடம் பேசியபோதே அவருக்கு உள்ள பக்தியும், நல்ல தன்மையும் வெளிப்பட்டது. அவர் மூலமே அம்மையார் எழுதி உள்ளதாக கூறப்படும் உயிலின் பிரதியும், ஆலயத்தின் படங்களும் கிடைத்தது. அவருடைய அனுமதியை கட்டுரை எழுதும்போது பெறவில்லை என்பதினால் அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. இதே போன்ற கட்டுரைகளும்  செய்தியும்  சில பத்திரிகைகளிலும் பத்து அல்லது அதற்கு முந்தைய வருடங்களில் வெளியாகி உள்ளன. நான் அந்த ஆலயத்துக்கு இன்னும் செல்லவில்லை என்றாலும் அந்த பக்தர் கொடுத்த தகவல்கள் சரியான தகவல்களே  என்பது வெளிப்படுகிறது.  அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். )

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>