Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all articles
Browse latest Browse all 460

Temples in Malwa Region -17

$
0
0
சாந்திப்பிரியா                                                       -  17 -


கோபால் மந்திர் (ஆலயம்)
 
உஜ்ஜயினியில் நகர மையத்தில் உள்ளது கோபால் மந்திர் எனப்படும் கிருஷ்ணர் ஆலயம். இது 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். இங்குள்ள சன்னதியில் காணப்படும் கிருஷ்ணர் இரண்டு அடி உயரமானவர். அவர் சிலை முழுவதுமே வெள்ளியினால் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்தின் முக்கியமான ஒரு செய்தி என்ன என்றால் முன்னர் முகலாய படைஎடுப்பின்போது குஜராத்தில் இருந்த சோமனாத் ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்ற முகமது கஜனி அந்த ஆலயத்தில் இருந்த வெள்ளிக் கதவுகளையும் கொண்டு சென்றான். அதன் பின் அப்கான் நாட்டின் மீது படையெடுத்த இன்னொரு மன்னன் அதை பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கு கொண்டு சென்று விட்டான். ஆனால் பின்னர் மராட்டிய மன்னர் வம்சத்தை சேர்ந்த மகாராஜா சிந்தியா அதை மீட்டு வந்ததும் அல்லாமல் அவை பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக இந்த கோபால் மந்திரின் ஆலயக் கதவுகளாக பொருத்தி விட்டார்.

கோபால் ஆலயம் முழுவதுமே கருப்பு நிற சலவைக் கல்லினால் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது. அதன் அழகே தனியாக உள்ளது. இந்த ஆலயத்தின் மிக முக்கியமான தின நிகழ்ச்சி இரவில் நடைபெறும் சயன ஆரத்தி என்பது. இரவு ஒன்பது மணிக்கு தினமும் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் குட்டி கிருஷ்ணரை ஒரு சிறிய தேரில் ஏற்றி வைத்து அதை அவர் உறங்கும் அறைக்கு ஒரு ரத்தினக் கம்பளத்தின் மீது மெல்ல இழுத்துச் செல்கிறார்கள். அங்கு சென்று அவரை படுக்க வைத்ததும், அவருக்கு குடிக்கப் பாலைக் கொடுத்தப் பின் (சம்பிரதாயமாக அவர் வாயில் சில சொட்டுப் பாலை ஊற்றுகிறார்கள்) ஆரத்தி எடுக்கிறார்கள். மண்டபத்தில் உள்ள பெண்கள் தாலாட்டுப் பாட்டுப் பாட உறங்கத் துவங்கும் கிருஷ்ணரின் அறையின் கதவும் மூடப்படுகிறது.  இரவு நேரத்தில் நடைபெறும் அந்த ஆரத்தியை பார்க்கவே பரவசமாக உள்ளது. நாங்கள் இத்தனை ஆண்டுகளும் பார்த்திராத அந்த ஆர்த்தியை பார்ப்பதற்காகவே இரவு உஜ்ஜயினியில் தங்கி அந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.

சன்னதியில்  அலங்கரிக்கப்பட்ட 
குட்டி  கிருஷ்ணர்

ஆலய  முகப்புத்  தோற்றம்

 மகாகாளீஸ்வரர்ஆலயம் 

அதன் பின் நாங்கள் சென்றது அருகில் இருந்த சிவபெருமானின் மகாகாளீஸ்வரர் ஆலயத்தின் இரவு ஆர்த்தியைக் காண்பதற்கு. நாங்கள் சென்ற அன்று எங்களுக்கு விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஏற்பாட்டின்படி VIP கேட் வழியே நேரடியாக ஆலயத்து சன்னதிக்குச் சென்று அங்கு நடைபெற்ற ஆரத்தியைக் கண்டு களித்தோம். அந்த நேரத்தில் ஆலயத்தில் சவாரி எனும் சடங்கை அதாவது சிவபெருமானின் ராஜாவை பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு ஆலயத்துக்குள் வருவார்கள். வந்தப் பின் அந்த சிலையையும் சன்னதியில் வைத்து அங்கு சிவபெருமானுக்கும் அந்த சிலைக்கும் பூஜைகள் செய்து ஆரத்தி எடுப்பார்கள்.  அது மிகவும் பிரசித்தி பெற்ற ஊர்வலம் ஆகும். அதில் கலந்து கொள்ள கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்பார்கள். ஏன் என்றால் அந்த நேரத்தில் ஆலயத்தின் அனைத்து கதவுகளையும் மூடிவிடுவார்கள். ஆலயத்துக்குள் உள்ளவர்கள் வெளியில் செல்ல முடியாது, வெளியில் இருந்தும் யாருமே உள்ளே வர இயலாது. நாங்கள் சன்னதியில் இருந்து வெளியில் வந்ததுமே ஆலயத்தின் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டார்கள். சவாரி எனும் பல்லக்கு ஆலயத்துக்குள் நுழையும் வரை அதை திறக்க மாட்டார்கள்.

அந்த சவாரி எனும் ஊர்வலத்தை வழியெங்கும் சாலை ஓரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று வழிபடுவார்கள். அந்த பல்லக்கை மாற்றி மாற்றி பலரும் (குறிப்பிட்ட பூசாரி குழுவினர் ) தூக்கிக் கொண்டு வருவார்கள். அதன் முன்னால் காதைப் பிளக்கும் வகையில் உடுக்கைகளை வெறியோடு அடித்துக் கொண்டு பலரும் வருவார்கள். 'போலோ பும்ம்பும்ம்', 'போலோ பும்ம்பும்ம்'என்ற கோஷம் காதுகளை பிளக்கும். ஊரெங்கும் பல்லக்கை தூக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டு வரும் பக்தர்கள் வியர்வையினால் முற்றிலும் நனைந்து இருந்தாலும் ஆர்வத்துடன் அதில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சியை நாங்கள் ஆலயத்துக்குள் இருந்தபடி கண்டு களித்தோம். அதற்கு முன்னால் நாங்கள் அப்படி ஒரு காட்சியைக் கண்டதே இல்லை.

இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான் மூன்று அடுக்குகளில் உள்ளார். மூல ஆலயத்தின் கீழே மஹாகாளிஷ்வரராக அமர்ந்து உள்ளார். அதன் மேலுள்ள மண்டபத்தில் ஒம்காரீஸ்வரராகவும், அந்த மண்டபத்தின் மேல் பகுதியில் நாகசந்ரேஸ்வரராகவும் காணப்படுகிறார். நாகசந்ரேஸ்வரர் சன்னதி வருடத்துக்கு ஒருமுறை அதாவது நாக பஞ்சமி அன்று மட்டுமே பக்தர்களுக்கு திறந்து விடப்படுகிறது. மற்ற நாட்களில் அது மூடப்பட்டே உள்ளது. மஹாகாளிஷ்வரராக உள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கம் ஆகும்.

இங்கு சிவபெருமான் எழுந்தருளிய வரலாறு சுவையானது. முன்பொரு முறை சிவபெருமானின்  பகுதியையும், கால் பகுதியையும் காண பிரம்மாவும்  விஷ்ணுவும் விண்ணுலகுக்கும், பாதாளத்துக்கும் போன போது சிவபெருமான் அவர்களுக்கு ஜ்யோதி வடிவமாக ஆரம்பமும் முடிவுமில்லா நிலையில் தோன்றி தன்னைக் வெளிப்படுத்தினார். அப்படி அவர் ஜ்யோதி லிங்க வடிவமாக பன்னிரண்டு இடங்களில் காட்சி தர அவையே ஜ்யோதிர் லிங்க ஆலயங்களாயின  அவறில் ஒன்றே  மகாகாலீஸ்வரர் ஆலய  இடமுமாகும். அது புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.

அது மட்டும் அல்ல இந்த ஆலயத்து புராணக் கதையின்படி முன்னொரு காலத்தில் உஜ்ஜயினி அவன்திகா என அழைக்கப்பட்டு வந்தது. அதை சந்திரசேனா எனும் சிவபக்தனான மன்னன் ஆண்டு வந்தார். அவர் எப்போதுமே சிவபெருமானின் நாமத்தை ஸ்மரித்தபடி இருப்பார். ஒருநாள் அந்த அரண்மனை வழியே சென்று கொண்டு இருந்த சிறுவன் சிவபெருமானின் நாமத்தை உரக்க உச்சரித்துக் கொண்டு இருந்த மன்னனின் குரலைக் கேட்டு அவரைக் காண உள்ளே சென்றான். ஆனால் அவனை காவலாளிகள் தடுத்தார்கள். அவனோ அவர்களை மீறி உள்ளே நுழைய முயன்றபோது அவனை பிடித்துக் கொண்டு போய் சிப்ரா நதிக்கரையில் விட்டு விட்டுத் திரும்பினார்கள். அங்கு தனியே விடப்பட்ட அந்த சிறுவன் அங்கும் இங்கும் சுற்றி அலைந்தபோது பக்கத்து நாட்டின் இரு மன்னர்கள் அவந்திகா மீது படையெடுத்து அந்த நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிக்க வந்து கொண்டு உள்ளார்கள் என்பதைக் கேட்டறிந்தான். உடனடியாக அவன் ஓடோடி அவந்திகாவுக்கு வந்து அதை ஆலய பூசாரியிடம் கூறினான். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படையெடுத்து வருபவர்களை தடுத்து   நிறுத்த சிவபெருமானை வேண்டிக் கொண்டு பூஜை செய்யலானார்கள்.
 
ஆனால் அதற்கு இடையே பக்கத்து நாட்டு மன்னர்கள் அவன்திகா மீது படையெடுத்து வந்து செல்வத்தை கொள்ளையடிக்கத் துவங்கினார்கள். அதே நேரத்தில் தனது பக்தர்கள் தன்னை வேண்டிக் கொண்டு அவன்திகாவைக் காப்பாற்ற பூஜைகளை செய்யத் துவங்கியதும் மகாகாள் அவதாரத்தை எடுத்த சிவபெருமான் அவர்களைக் காக்க ஓடோடி வந்து படையெடுத்து வந்த மன்னர்களை முறியடித்து துரத்தி அவன்திகாவைக் காத்தார். அதன் பின்னர் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் சிப்ரா நதியின் கரையிலேயே மஹாகாளிஷ்வரராக தங்கி விட்டார். அதுவே இந்த ஆலயம்.

இந்த ஆலயமும் தாந்த்ரீக சக்தியைக் கொண்ட ஆலயம் ஆகும். ஒரு காலத்தில் (சில வருடங்களுக்கு முன்னர்வரை)இங்கு விடியற்காலை இரண்டு மணிக்கு சுடுகாட்டில் இருந்து இறந்த பிணங்களின் எரிந்து போன உடலின் சாம்பலை எடுத்து வந்து சிவலிங்கத்தின் மீது அதை தூவி பஸ்மார்த்தி எனும் விடியற்கால ஆரத்தியை செய்வார்கள். அதை பல வருடங்களுக்கு முன்னர் இரு முறை கண்டு களிக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்று இருந்தோம். பஸ்மார்த்தி ஆரத்தியில் தற்போது சம்பிரதாயமாக சிறிதளவு சுடுகாட்டு சாம்பலையே பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள் என்றாலும் அந்த பஸ்மார்த்தியைக் கண்டு களிக்க இன்றும் பக்தர்கள் செல்கிறார்கள். ஆனால் தற்போது ஆலயத்தின் பாதுகாப்பைக் கருதி அனைவரையும் பஸ்மார்த்தி ஆரத்தியைக் காண்பதற்கு அனுமதிப்பது இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்னரே அதைக் காண முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதிலும் அனைவருக்கும் அனுமதி கிடைப்பது இல்லை. சுமார் இருபது அல்லது இருபத்தி ஐந்து பக்தர்களை மட்டுமே அதாவது முதலில் பதிவு செய்து கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

அந்த  பஸ்மார்த்தியைக் காண மத்திய தொழில் பாதுகாப்புப் படை மூலம் எங்களுக்கு விசேஷ ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு இருந்தாலும் நாங்கள் முன்னரே இருமுறை அதை பார்த்திருக்கிறோம் என்பதினாலும் உடல் நிலை ஒத்துழைக்காததினாலும் இம்முறை பஸ்மார்த்தியைக் காணச் செல்லவில்லை. சவாரி மற்றும் மாலை ஆரத்தியைக் கண்டு கழித்தப் பின் ஒய்வு எடுக்கத் திரும்பினோம். மறுநாள் மேலும் சில இடங்களுக்கு செல்ல இருந்ததினால் ஓட்டலுக்குச் சென்று விட்டோம்.
சன்னதியில்  அமைதியாக மகாகாளேஸ்வரர் 
 
 சவாரியில் (பல்லக்கில்) வரும்  
மகாகாளேஸ்வர மன்னன்
 
மகாகாளேஸ்வர ஆலயம். இந்த மண்டபத்தின் 
கீழே உள்ள சன்னதியில் மஹாகாளிஷ்வரராகவும்,  
நடு மண்டபத்தில் ஒம்காரீஸ்வரராகவும்,  மண்டபத்தின் 
மேல் பகுதியில் நாகசந்ரேஸ்வரராகவும் சிவபெருமான் அமர்ந்துள்ளார் 
.......  தொடரும் 

Viewing all articles
Browse latest Browse all 460

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>